மார்ச் 18 தொடங்கப்பட்ட மக்கள் கட்டுப்பாட்டு ஊரடங்கு கிட்டத்தட்ட 46 நாட்களுக்குப் பிறகு நாளையோடு எங்களுக்கு முடிவுக்குப் வரப்போகுது. கோவிட் 19 வைரஸ் தொற்று இன்னும் ஒரு முடிவுக்கு வராவிட்டாலும்கூட அரசு எந்த நோக்கத்திற்காக இந்த தளர்வை கொடுத்திருக்காங்க என்று முடிவுக்கு ஒரு வரமுடியவில்லை.
இனி காலத்தின் கையில் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு வருவது வரட்டும் என உடலை நகர்த்துவதைவிட வேறுவழியில்லை. வாழ்ந்து சாதிக்க ஏதும் இருப்பதாகவும் எனக்கு தோணல..
இந்த quarantine நாட்களில், என் நேரத்தை பல விஷயங்களுக்கு பெருமளவு செலவழித்திருக்கிறேன். என்னை அமைதியில் ஆழ்த்தி பரவசப்படுத்திய நேரங்கள் என் வீட்டுப் பின்கட்டில் இருக்கிறது. 2×2 அடி அளவு இருக்கும் அந்த இடத்தில் ஒரு வாளியை கவுத்துப்போட்டு வைத்திருப்பேன். சலவை இயந்திரம் இருக்கிறது. அந்த வாளிமீது நின்றுப்பார்த்தால் குப்பை கொட்டும் கிடங்கைப் பார்க்கலாம்..
அங்கே ஒரு தூங்கு மூஞ்சி மரம் இருக்கிறது. சில வேளை நான் அதை இலையுதிர் மரம் என்றும் சொல்வேன். பல ஆண்டுகாலமாக இலைகளை உதிர்ப்பது மட்டுமே அதன் வேலையாக இருந்தது. கொஞ்சம்கூட சிரிக்காத மரம் அது. அதில்தான் என் சாம்பல் பறவையும் எதையோ இழந்ததுபோல அமர்ந்துவிட்டுப்போகும்.
கடந்தாண்டு என நினைக்கிறேன். எப்போதுமே இலையை மட்டுமே உதிர்த்துவிட்டுப் போகும் அந்த மரத்தில் சரம்சரமாக அரும்புகள் காணமுடிந்தது. அடுத்த சில நாட்களில் அழகான ஊதா பூக்கள் மரம் முழுவதும் இருந்தது. அட இந்த மரத்திற்கு வாழவும் தெரிகிறதே என ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு அந்த மரம் பூக்கவே இல்லை. உனக்கு என்னதான் பிரச்சினை என அதை கேட்டாலும், அசையாது அது.
Quarantine தொடங்கிய இரண்டு வாரங்களில் ஊரே அடங்கிப் போயிருக்க, மரத்தில் ஊதா பூக்கள் மீண்டும் பூக்க தொடங்கியது. இதுவரை காணாத அளவுக்கு கொண்டாடியது மரம்.
அடுத்த சில நாட்களில் விருந்தாளிகளைப் பார்க்கனுமே!! இதுவரை வராத பலர், மரத்தைத் தேடி வந்து உரையாடிச் சென்றனர். தொடக்கத்தில் சலவை இயந்திரம் மீது உட்கார்ந்து அவைகளின் விளையாட்டை பார்த்துக்
கொண்டிருப்பேன். பின்புதான் ஏன் அவர்களை புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என தோன்றியது...
விருந்தாளிகள் மரத்திடம் விட்டுச்சென்ற இருப்பை நான் பத்திரப்படுத்த தொடங்கினேன்….
இந்தப் படத்தில் உள்ளவர் , தொடக்க இரு நாட்களுக்கு மட்டும் வந்தார். விரல் அளவுதான் இருந்தார். ஆனால், கரு நிறத்தில் அந்த ஆறஞ்சு நிறம் ரொம்ப அழகு.
எனக்கு பிடித்த ஒருநாள் அலைபேசியில் வெளியே நோட்டமிட்டப்படி பேசிக்கொண்டிருந்தபோது, இவர் வந்துவிட்டார். பேசிக்கொண்டே இவரை புகைப்படம் எடுத்தேன். அவரின் தோற்றத்தை என்னால் முழுமையாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவருடைய துறுதுறுப்பு மற்றும் போஸுக்கு நிற்கவே கூடாத என்ற அவருடைய திமிர் இரண்டுமே அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது.
இவருக்காகவே நான் சும்மா சும்மா அடுப்பாங்கறையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் தரிசனம் இன்றுவரை இல்லை. எனக்கு இது ஏமாற்றமில்லை. காத்திருப்பு..
இவர், தொடக்க இரு நாட்களுக்கு மட்டும் வந்தார். விரல் அளவுதான் இருந்தார். ஆனால், கரு நிறத்தில் அந்த ஆறஞ்சு நிறம் ரொம்ப அழகு.
எனக்கு பிடித்த ஒருநாள் அலைபேசியில் வெளியே நோட்டமிட்டப்படி பேசிக்கொண்டிருந்தபோது, இவர் வந்துவிட்டார். பேசிக்கொண்டே இவரை புகைப்படம் எடுத்தேன். அவரின் தோற்றத்தை என்னால் முழுமையாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவருடைய துறுதுறுப்பு மற்றும் போஸுக்கு நிற்கவே கூடாத என்ற அவருடைய திமிர் இரண்டுமே அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது.
இவருக்காகவே நான் சும்மா சும்மா அடுப்பாங்கறையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் தரிசனம் இன்றுவரை இல்லை. எனக்கு இது ஏமாற்றமில்லை. காத்திருப்பு..
சிரிக்காத அந்த இலையுதிர் மரம் வசந்தக்காலத்தில் தன்னைத் தேடி வந்த விருந்தாளிகளுக்கு இடம்மட்டும் கொடுக்கவில்லை கொஞ்சம் மழைச்சாரல்களையும் கொடுத்தது..
அழகிய மழைநேரத்தில் தனியாக வந்து ஈரத்தை அனுபவித்துப்போன விருந்தாளிகள் இவர்கள்தான்.
என் நல்ல நேரம், சந்தேகமாக குப்பைக் கிடங்கை நோக்கியபோது அருகில் இருந்த மரத்தில் இவர்களின் வருகையை அனுமானிக்க முடிந்தது. ஆனால், எத்தனை பேரை தவற விட்டேன் என மரத்திற்குதான் தெரியும்.. என்னைப் பார்த்து முதல் முறையாக மழையை அனுபவித்தபடியே சிரித்தது அந்த மரம் ...
சித்திரையின் வசந்த காலம் முடிகிறது என்பது மரத்தில் பூத்திருந்த ஊதா மலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தபோதுதான் எனக்கு விளங்கியது. பறவைகள் வருவது குறைந்துக்கொண்டே வந்தது. கிட்டதட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த பறவைகள் யாரும் திரும்ப வரவே இல்லை. மைனா ஒன்று அவ்வப்போது கூப்பிடுவதுபோல இருக்கும். ஆனால் கண்ணில் காண முடியவில்லை. புளியங்கொட்டைகளை புளியங்கொட்டைகளின்மேல் கொட்டினால் வரும் சத்தத்தைபோல ஒருவர் கத்துவார், அவரையும் நான் கண்டதில்லை.
தூக்குமூஞ்சி மரம் ச
ிரிப்பதை நிறுத்தி 10 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் கெமராவோடு விருந்தாளிகளை வரவேற்க காத்துக்கொண்டே இருக்கிறேன். மரம்
மீண்டும் சிரிக்குமா என்றும் காத்திருக்கிறேன்.
என் எதிர்பார்ப்புக்கு ஆயுள் இன்னும் ஒரு நாள்தான். இதோ என் Quarantine நாட்கள் முடிவுக்கு வரப்போகிறது. கொரானா தொற்று அபாயம் முழுதாக தீராவிட்டாலும், சில காரியங்களுக்காக நான் வெளியேற நினைக்கிறேன்.
இலையுதிர் மரத்து விருந்தாளிகள் வரலாம் - போகலாம். நான் அவர்களுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் அவர்களின் நினைவுகள் என் Quarantine நாட்களை எப்போதும் பேசும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக