புதன், 20 மே, 2020

முதலாளித்துவ எஞ்சினை செயலிழக்கச் செய்யவதே நமது பணி – அருந்ததி ராய்

மலேசிய சோசலிசக் கட்சியின்  தொழிலாளர்கள் செயற்பாட்டுகுழுவில்  நானும் உள்ளதால் சில விஷயங்களை அதன் ஆணிவேர் வரை உடுருவி பார்க்க முடிகிறது.  கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கும் முதலாளிகளின் முகதிரைகளில் மேலும் மேலும் கிழிசல்கள் விழுந்துக்கொண்டே இருக்கிறது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் கூட  மனிதாபிமானத்தை தொழிலாளிகளிடம்  விலைபேசிக்கொண்டிருக்கும் முதலாளிகளை நமது நாட்டிலும் பார்க்க முடிகிறது. இந்த காலக்கட்டத்தில் அருந்ததிராயின் இந்தக் கட்டுரை மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதற்காகவே   நான் எனது அகப்பக்கத்தில் இதை பதிவு செய்கிறேன். நன்றி.


-யோகி



முதலாளித்துவ எந்திரத்தின் ஓட்டத்தை மடக்கி நிறுத்தியிருக்கிறது கொரோனா வைரஸ் பெருந்தொற்று.

மனித இனமே தற்காலிகமாக சிறை வைக்கப்பட்டுள்ள சூழலில், ஆர்டிக் பகுதியின் ஓசோன் படலத்தின் மீது பிரம்மாண்டமானதொரு துளை விழுந்திருக்கும் சூழலில், தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் தனக்குண்டு என்பதை இந்த பூமி நமக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறது. நோயும் இழப்புகளும் நம்மை வாட்டுகின்ற இந்தச் சூழலிலும், இயற்கைத்தாய் அரங்கேற்றியிருக்கும் இந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியத்தில் நாம் விக்கித்து நிற்கிறோம்.

ஆனால் இச்சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் விரைந்து தயாராகி வருகின்றன. இந்தியாவில், ஒரு புலிகள் சரணாலயத்தின் பெரும்பகுதி, பல்லாயிரக்கணக்கான இந்து பக்தர்கள் கூடுகின்ற  கும்பமேளா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்படவிருக்கிறது. அசாமில், ஒரு யானைகள் சரணாலயம், நிலக்கரிச் சுரங்கமாக மாறவிருக்கிறது. அருணாசலப் பிரதேசத்திலுள்ள தூய இமயமலைக்காடுகள், ஒரு நீர்மின்சக்தி திட்டத்தின் பொருட்டு மூழ்கடிக்கப்படவுள்ளது. டிரம்ப், ஒரு படி மேலே சென்று சந்திரனிலிருந்து கனிம வளங்களை வெட்டியடுக்க உத்தரவு பிறப்பிக்கிறார்.

மனித உடலுக்குள் நுழைகின்ற கொரோனா வைரஸ், ஏற்கனவே உடலில் உள்ள நோய்களை எப்படிப் பெரிதாக்குகிறதோ, அதேபோல, தான் நுழைந்த நாடுகள் மற்றும் சமூகங்களில் ஏற்கனவே நிலவும் கட்டமைப்பு ரீதியான ஊனங்களையும் நோய்களையும்கூட கொரோனா பெரிதாக்கி விடுகிறது. அநீதி, குழு மனப்பான்மை, நிறவெறி, சாதிவெறி அனைத்துக்கும் மேலாக வர்க்க ஏற்றத்தாழ்வு ஆகிய அனைத்தையும் இந்த வைரஸ் ஒரு பூதக்கண்ணாடியைப் போலப் பெரிதாக்கிக் காட்டியுருக்கிறது.

அரசு அதிகாரத்தின் உறுப்புகள், இதுகாறும் ஏழைகளின் பால் அலட்சியம் காட்டியவை. ஏழைகளுடைய துன்பத்தை அதிகப்படுத்தும் திசையிலேயே செயல்பட்டவை. அவை இன்று ஒரு புதிய எதார்த்தத்தை சந்திக்கின்றன.  ஏழைகள் நோயில் வீழ்வது இப்போது செல்வந்தர்களுக்கு அச்சுறுத்தலாகிவிட்டது. இந்த நிலைமையை அரசுகள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்தத் தீயிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் தடுப்புச்சுவர் ஏதும் இப்போதைக்கு இல்லை. சீக்கிரம் வந்து விடும். அது தடுப்பு மருந்து என்ற வடிவத்தில் வரலாம். ஆதிக்க சக்திகள், தாங்கள் பிழைத்திருப்பதற்கான பாதுகாப்பை எப்படியோ தேடிக்கொள்வார்கள்.  அப்புறம் மறுபடியும் பழைய ஆட்டம் தொடங்கும் – “பணமிருப்பவனே வாழ்வான்” என்ற சமூக டார்வினிய விதிப்படியான ஆட்டம்.

ஏற்கனவே உலகம் கற்பனைக்கெட்டாத அளவில் வேலையிழப்புகளை சந்தித்து வருகிறது. சிகாகோ ஹே மார்க்கெட் படுகொலை நடந்த 131 ஆண்டுகளுக்குப்பின், 8 மணி நேர வேலை என்ற கோரிக்கைக்காக தொழிலாளி வர்க்கம் போராடிய நாளான சர்வதேசத் தொழிலாளர் தினத்தன்று இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தொழிலாளர்கள் உரிமை என்பதில் மிச்சமிருப்பதையும் ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், 12 மணி நேர வேலைநேரத்தை அனுமதிக்குமாறு இந்திய தொழில்துறை முதலாளிகள், அரசை நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

இப்போது நாமெல்லாம் அடைபட்டிருக்கிறோம். அவர்களோ வெகு வேகமாகத் தங்கள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எதேச்சாதிகார அரசுகளைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸ், அவர்களுக்குக் கிட்டியிருக்கும் ஒரு பரிசு.  பொலிவியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், துருக்கி, இந்தியா – என அடுத்தடுத்து ஒவ்வொரு நாட்டிலும், அரசுகள் தங்களை விமர்சிப்போரை நசுக்குவதற்கு இந்த ஊரடங்கு சூழலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று யாரெல்லாம் அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் முக்கியமானவர்களாகத் தென்பட்டார்களோ, அவர்களெல்லாம் ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கப்படக் கூடிய கொடிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்யப்படுகிறார்கள். யாரெல்லாம் இந்த அரசின் இந்து தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்கிறார்களோ அவர்கள், எத்தகைய வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும், அதிர்ச்சி தரத்தக்க குற்றங்களை இழைத்திருந்தாலும், அவர்கள் சீராட்டப்படுகிறார்கள், பதவி உயர்வு அளிக்கப்படுகிறார்கள்.

மனிதகுலத்துக்குப் பெருந்தொற்றுகள் புதியவை அல்ல. ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் இதுதான் முதன்முறை. தேசிய அளவிலான எதேச்சாதிகாரிகள், பேரழிவில் லாபம் பார்க்கும் சர்வதேச முதலாளிகள், தரவுகளைச் சலித்து ஆய்வுக்குள்ளாக்கும் நிறுவனங்கள் – ஆகிய சக்திகளின் நலன்கள் ஒருமுகப்படுகின்ற சூழலை நாம் காண்கிறோம். இந்தியாவில் இது வெகு வேகமாக நடக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் வலைப்பின்னலான ஜியோ நிறுவனத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் தன்னிடமிருக்கும் 40 கோடி வாட்ஸ் அப் பயனாளிகளின் தரவுகளை அது ஜியோ வுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறது. கிடைக்கிற வாய்ப்பு எதுவானாலும், அதில் லாபத்தைக் குவிக்கலாம் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டுகிறார் பில் கேட்ஸ்.

சுகாதாரப் பராமரிப்பு என்ற பெயரில், மோடி பரிந்துரைத்த ஆரோக்ய சேது என்கிற வேவு பார்க்கும்  செயலியை, 6 கோடி மக்கள் தரவிரக்கம் செய்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. பொது தணிக்கைக்கு உட்படுத்தப்படாத பி.எம்.கேர்ஸ் என்ற மர்மமானதொரு நிதிக்கு அரசு ஊழியர்கள் அனைவரும் தமது ஒருநாள் ஊதியத்தை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.
கொரோனாவுக்கு முன் ஒரு கண்காணிப்பு அரசினை நோக்கி நாம்  தூக்கத்தில் மெல்ல நடந்து சென்றோமெனில், இன்று ஒரு மீப்பெரும் கண்காணிப்பு அரசின் கைகளுக்குள் நம்மை ஒப்படைப்பதற்காக, பீதியில் ஓடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தனியுரிமை, கவுரவம், சுதந்திரம் ஆகிய அனைத்தையும் கைவிடுமாறும், தனது நுண் நிர்வாகத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் நம்மை ஒப்புக்கொடுத்து விடுமாறும் அந்த அரசு கோருகிறது. ஊரடங்கு நீக்கப்பட்டு விடலாம்.  ஆனால் விரைந்து செயலாற்றத் தவறினால், நாம் நிரந்தரமாகச் சிறை வைக்கப்படுவோம்.
இந்த எஞ்சினை செயலிழக்கச் செய்வது எப்படி? இதுதான் நம் முன் உள்ள சவால்.

00000

புரொகிரசிவ் இன்டர்நேசனல் என்ற அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கும் அருந்ததி ராயின் அறிக்கை, https://progressive.international/wire/2020-05-02-arundhati-roy-our-task-is-to-disable-the-engine/en   நாள் 11.5.2020

மொழியாக்கம் – மருதையன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக