வியாழன், 3 செப்டம்பர், 2026

வரதராஜூ எனும் நான் - நேர்காணல் (2022)

தோழர் வரதராஜூ அவர்கள் 29/8/2026  அன்று இயற்கை எய்தினார். அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவும் அடுத்த தலைமுறைக்கு அவரின் அறிமுகம் தேவை எனும் நோக்கத்திலும் கடந்த 2022- ஆம் ஆண்டு  செய்யப்பட்ட நேர்காணலை மீண்டும் எனது அகப்பக்கத்தில் பகிர்கிறேன். தோழருக்கு செவ்வணக்கம். 


இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் சமூக செயற்பாடுகள் மற்றும் களப்போராளிகளை சந்திக்கும்போ
து, அவர்களில் சிலர் என்னை விசாரிக்கும் ஒரு நபராக இருப்பவர் தோழர் வரதராஜூ. நமது நாட்டில் வரைக்குறித்து யாரைக்கேட்டாளும் அவர் யார்? என்று திருப்பி நம்மிடமே கேட்பார்கள். வெளிநாட்டு தோழர்கள் மத்தியில் நன்கு  அறிமுகமாகியிருக்கும் நமது நாட்டின் தோழர் வரதராஜூவை நான் எப்போது சந்தித்தேன் தெரியுமா?

நான் அப்போது ‘நம்நாடு’ தினசரி பத்திரிகையில் நிருபராக பணியில் இருந்தேன். 2013- ஆம் ஆண்டு, பாகான் டத்தோ தோட்ட தொழிலாளர்களின் வீடு முறைக்கேடு தொடர்பான வழக்கில் அப்பாட்டாளிகளுக்கு ஆதரவாக நின்ற தோழர் வரதராஜூவை நான் கோலாலம்பூர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தேன். அதற்கு முன்பு அவரைப்பற்றிய அறிமுகம் இருந்தாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புகளோ அல்லது தொடர்புக்கொள்ளும் வாய்ப்புகளோ மிக கடினமாக இருந்தது. காரணம் கடைநிலைப் போரளியான அவர் முகனூல், தொலைப்பேசி உள்ளிட்ட சாதனங்களிலிருந்து தள்ளியே இருந்தார். அவரைச் சந்தித்த முதல்நாளில் அவருக்கு என்னைப்பற்றிய விவரங்கள் தெரிந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது என் எழுத்துக்குண்டான அங்கிகாரம் என இப்பவும் நம்புகிறேன்.

இந்தப் புகைப்படம் முதல் சந்திப்பில் எடுத்தது

அந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரனையைச் செய்தியாக்க மற்ற எந்தப் பத்திரிகையிலிருந்தும் நிருபர்கள் வரவில்லை. ஒரே நிருபராக அன்றையதினம் நான் மாலைவரை அவருடன் உரையாடி செய்திகளைச் சேகரித்தேன். அந்தச் சந்திப்பிலிருந்து எங்களின் நட்பு அவரின் இறுதிகாலம் வரையில் தொடர்ந்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு (2022) தோழர் வரதராஜூவை சந்தித்து ஓர் இதழுக்காக நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணலுக்கு தமிழ்நாட்டின் மிக முக்கியமான தோழரும் எழுத்தாளருமான தோழர் எஸ்.வீ.ஆர், தோழர் வரதராஜூவுக்கு கொடுத்திருக்கும் அறிமுகத்திலிருந்து ந்த நேர்காணலை நான் தொடங்கினேன். அதை இப்போது உங்களோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.  

 

தோழர் எஸ்.வீ.ராஜதுரை

சுற்றுச்சூழல் தொடர்பாக  பினாங்கில் 1987-ஆம் ஆண்டு நடந்த  ஒரு சர்வதேச மாநாட்டின்போது தோழர் வரதராஜு எனக்கு அறிமுகமானார். குறிப்பிடத்தக்க கல்விப்புலம் எதனையும் பெற்றிராத அவர், தம் நாட்டு நடப்புகளை, குறிப்பாக மலேசியாவில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நிலையை, மிகக் கூர்மையாக அவதானித்து வந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் எங்களுக்கிடையே தொலைபேசி வழியாக நடந்த உரையாடல்களையொட்டி, அவரது அழைப்பின் பேரில் 1990-இல் மீண்டும் மலேசியாவுக்கு வந்து அவருடன் ஒருமாத காலம் தங்கியிருந்தபோது இரப்பர், செம்பனைத் தோட்டங்கள் சிலவற்றைப் பார்வையிடவும் அங்குள்ள தொழிலாளிகளின் ( அவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்) அவல நிலையைப் பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்தத் தொழிலாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அந்த நாட்டில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்த ஒரே தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த நாராயணன் என்ற மலையாளி எப்படியெல்லாம்  தொழிற்சங்கத்தின் நிதி ஆதாரங்களைச் சுருட்டிக் கொண்டிருந்தார் என்பதைப்  பற்றிய ஏராளமான தகவல்களையும் ஆவணங்களையும் தனியொரு மனிதராகத் திரட்டி வைத்திருந்தார் தோழர் வரதராஜு. பின்னர் அவர் ஆவணப்படுத்தி வந்தவற்றை ஒரு நூலாகக் கொண்டுவரும் பொருட்டு சென்னைக்கு வந்திருந்தார்.

அந்த நூலாக்கத்தில் அவருக்கு உதவி செய்ததுடன் அதற்கான முன்னுரையையும் எழுதித் தந்தேன்.  2002-ஆம் ஆண்டில் சென்னை வாழ்க்கையை முடித்துக் கொண்டு கோத்தகிரியில் நானும் என் துணைவியும் குடியேறினோம். 2007-2008 -இல் நான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த போது அங்கு ஒருமுறை வந்திருந்தார் தோழர். இந்த இடைக்காலத்தில் அவர் மலேசியாவில் வர்க்கரீதியாகவும் சாதிரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியாருடைய உதவியுமில்லாமல் அவரே சில நூல்களை எழுதினார்.

மலேசியாவில் அவருடன் ஒரு மாத காலம் நான் தங்கியிருந்தபோது, முக்கியமான ஒரு சட்டத்தரணிஆங்கில நாளேடொன்றின் முக்கிய நிருபர் உட்பட படிப்பறிவு மிகுந்த பலர் தோழர் வரதராஜுவை மிக உயர்வாக மதித்து வந்ததைக் கண்டேன். தொழிலாளிவர்க்கக் குடும்பமொன்றில் பிறந்து சுய முயற்சியாலும் நேரடி அனுபவங்களாலும்  உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற்றிருந்த  தோழர் வரதராஜு சற்று முன்கோபம் உடையவர். நேர்மைக் குறைவுடையவர்களைச் சட்டென்று தூக்கியெறிந்துவிடுவார். ஆனால், அவரது இலட்சியங்களுடன் உடன்படுவர்கள் மீது அவரது இதயத்திலிருந்து எப்போதும் வற்றாத அன்பும் கருணையும் பாசமும்  பீறீட்டு வந்து கொண்டிருக்கும். மலேசியாவிலுள்ள முற்போக்காளர்களிடையே அவருக்கு உரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று கருதுகிறேன்.’

-எஸ்.வி.ராஜதுரை 

இனி தோழர் வரதராஜூ அவர்களுடனான உரையாடாலிருந்து..

யோகி: தோழர் வரதராஜூ என்பவர் யார்? உங்களின் பின்னணிதான் என்ன?

தோழர் : நான் ஒரு சாமானிய மனிதன். என் பின்னணியும் தோட்டத்திலிருந்தே தொடங்குகிறது. பெரிய கல்வித்தகுதியும் எனக்கில்லை. அம்மா என் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். உடன்பிறப்புகள் ஐவர். நான் இரண்டாவது பிள்ளை. அப்பாதான் எங்களை கவனித்துக்கொண்டார்.

குடும்பத்தின் வருமை காரணமாக குழந்தை தொழிலாளியாக 13 வயதில் புக்கிட் ஜெலுத்தோம் தோட்டத்தில்வேலைக்குச் செல்ல தொடங்கினேன். 4 ஆண்டுகள் தோட்டத் தொழிலாளியாக செம்பனைக் காட்டில் வெளிக்காட்டுதொழிலாளியாக வேலை செய்தேன். ஒரு நாளைக்கு 0.80 சென் சம்பளம் அப்போது. என் குடும்பம் வருமையின் பிடியிலிருந்து மீளமுடியாத நிலையில் சூழல் இன்னும் மோசமடைந்தது. தோட்டத்து கிராணி வழியாக மாற்றுவேலையை வேண்டினேன். அவர் எனக்கு செம்பனைக் குழையை தூக்கும் வேலையை மாற்றிக்கொடுத்தார்.

1964-களில் செம்பனைக் குழைகளை தள்ளுவண்டியில் வைத்துதள்ளிக்கொண்டுப்போகும் வசதிவரவில்லை. கூடையில் தூக்கிவைத்து தலையில் சுமந்துச் சென்று முச்சந்தியில் இறக்க வேண்டும். சாதாரணமான வேலையில்லை அது. 40-50 கிலோவரை அது கனக்கும். பிறகு அதிலிருந்து செம்பனைக்குழையை அறுக்கும் வேலையையும் பழகிக்கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் கூலியாட்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிமைகளைப்போல நடத்துவார்கள். சுய மரியாதை சுடுபடுவதை ஜீரணிக்கமுடியாமல் அதை எதிர்க்கும் குணம் என்னிலிருந்து வெளிப்பட்டது. எனக்கு எந்தச் சித்தாந்தமும் படிப்பினையும் இல்லை என்றாலும் இயற்கையாகவே இருந்த தன்மானம் அவர்களிடம் குரலை உயர்த்தியது. பின் ஒருமுறை அது கைகளப்பில் முடிந்தது. இதன் காரணமாக தோட்டத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். பின் தோட்டத்திலிருந்து வெளியாகி நான் Sungaiway -யில் இருக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றேன். அப்போது அந்த இடத்தை 10-ஆம் கட்டை என்று சொல்வார்கள். அந்த இடத்தில் ஒரு கிராமம் இருந்தது. அங்கே நண்பருடன் தங்கிக்கொண்டேன். தற்போது அந்த இடத்தில் மோட்டோரோலா நிறுவனம் இருக்கிறது

அதன்பிறகு சீன நிறுவனத்தின் ஈயக்கப்பலுக்கு வேலைக்குச் சென்றேன். அந்தக் கப்பலில் சில தொழில்நுட்ப வசதியிருந்தது. பூமியில் எங்கு ஈயம் இருக்கிறது என அந்தக் கப்பல் கண்டறியும். அங்கே ஈயத்தை தோண்டியெடுத்து, அங்கேயே ஈயத்தையும் கழிவுகளையும் பிரித்தெடுக்கும் பணி. 1968-ஆம் ஆண்டுவரை அங்கு வேலைசெய்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் பொருளாதார மந்தநிலை நாட்டில் ஏற்படுகிறது. ஈயம் படுவீழ்ச்சிக் கண்டது. அதன்பிறகு அங்கிருந்தும் பணிநிறுத்தம் செய்யப்பட்டேன். திரும்பவும் தோட்டத்தையே நாடி வந்தேன். அந்தக் காலக்கட்டத்தில்தான் சென் ஜோசப் எனும் கிருஸ்துவ மதப்போதகர் எனக்கு அறிமுகமானார். அவரின் வழியே எனக்கு தோட்டத்து கெமிக்கல் தொழிற்சாலையில் வேலைகிடைத்தது. 1972-ல் திராவிடக் கழகத்திலும் இணைந்தேன். இதோடு எனக்கு இடதுச்சாரி சிந்தனைக் கொண்ட நண்பர்களும் அறிமுகமானார்கள்என் வாழ்க்கை இப்படியாகத்தான் தொடங்கியது.   

யோகி : அந்தக் காலக்கட்டத்தில் இடதுச்சாரி புரிதல் இல்லாத உங்களுக்கு, அவர்களின் உரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் எவ்வாறான தாகத்தை ஏற்படுத்தின?

தோழர் : தொடக்கமாக அது எனக்கு ஒத்த சிந்தனையாகத்தான் தெரிந்தது. இன்னும் அதை சரியாக விளங்கிக்கொள்ள எனக்கு புத்தகங்கள் உதவியாக இருந்தன. இடதுச்சாரி சிந்தனைக் கொண்ட அல்லது மாற்றுச் சிந்தனைக்கொண்ட புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். நண்பர்களும் சில புத்தகங்களை பரிந்துரைத்தார்கள். வர்கம், மற்றும் கொள்கை ரீதியாக புரிதல்களில் எனக்கு ஒரு தெளிவு உண்டானது. நண்பர்களின் கலந்துரையாடல்கள் மேலும் எனக்கு புரிதல்களை அதிகப்படுத்தின. 

யோகி : ஒருபுறம் மார்க்சிய சிந்தனைக்கொண்ட தோழர்கள்;  மறுபுறம் திராவிடத் தோழர்கள் இரண்டிலும் ஒருசேர உங்களால் பயணிக்க முடிந்ததா? 

தோழர் : தொடக்கத்தில் கழகத்தில் சில பூசல்கள் வரவே செய்தன. என் மீது ஒரு புகாராகவே அதை வைத்தார்கள். கழகத்தின் தலைவரான கே.ராமசாமி என்னை அழைத்து விசாரித்தார். நான் அப்போது கிளைத்தலைவராக இருந்தேன். மிகத்தெளிவாக எனக்கு எது தேவையோ அதையே நான் செய்கிறேன் என்று கூறிவிட்டேன். என்னால் இடதுசாரி தோழர்களின் நட்பை புறக்கணிக்கவே முடியவில்லை. 

இன்நிலையில் மே கலவரத்திற்கு பிறகு 1 டிசம்பர் 1969-ஆம் ஆண்டு புதியதாக ஒரு கலைகொல்லி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றேன். ங்கு 13 ஆண்டுகள் வேலைசெய்தேன். அங்குதான் கேடு விளைவிக்கும் அந்த பாசாணத்தை நான் தெரிந்துகொண்டேன். சீனர்களின் தொழிற்சாலையான அதிலும் பல ஒடுக்குமுறைகள் இருந்தன. 

இந்நிலையில் பினாங்கு மாநிலத்தில் செயற்பட்டு வந்த மண்ணின் தோழர்கள் கழகத் தோழர்களுடன் இணைந்தேன். மெத்தப் படித்தவர்கள் மற்றும் ஆங்கில அறிவுக்கொண்டவர்கள் கொண்ட அமைப்பு அது. அறிக்கைகள் உட்பட அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் தயாரிக்க வேண்டும். முறையான கல்வி மற்றும் ஆங்கில புலமையில்லையென்றாலும் அந்த அமைப்பில் என்னை இணைந்துக்கொள்ள கேட்டார்கள். என்னை முழுநேர ஊழியனாக இணையச் சொன்னார்கள். 

தொழிற்சாலை வேலையை விடுவதற்கு முன்பு, அங்கு ஒரு தொழிற்சங்கத்தை அந்தச் தொழிற்சாலையில் அமைத்தேன். அது மிகவும் சவாலாக இருந்தது. முதலாளிக்கு பயந்து ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறைவாக இருந்தது. அந்தத் தொழிற்சங்கத்திற்கு நானே முதல் தலைவனாகவும் ஆனேன். சில ஒப்பந்தங்கள் பரிந்துரைகளை எப்படி கையாளவேண்டும் என்பதை நானே பயிற்சி எடுத்துக்கொள்ளும் களமாக அது அமைந்தது. பின்  பினாங்கில் செயல்பட்டுக்கொண்டிருந்த மண்ணின் தோழர்கள்கழகத்தோடு இணைந்து முழுநேர ஊழியனானேன். சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாக அந்த அமைப்பு குரல் எழுப்பியது. இருந்தாலும் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதைத்தான் என் மனம் விரும்பியது. 

இரண்டு நிலையிலும் ஈடுபாடுகாட்டினாலும் தொழிலாளர்கள் நலனில் கூடுதல் அக்கரை காட்டத்தொடங்கினேன். மண்ணின் தோழர்கள் கழகத்தோடு வேலை செய்த அனுபவம்தான், ஆய்வுகள் செய்வது எப்படி? பிரச்னைகளை அணுகுவது எப்படி என்ற நுணுக்கங்கள் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. 

குறிப்பாக கலைகொல்லி மருந்தின் பாதிப்பினை அறிந்து அதை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தீவிரமும் மண்ணின் தோழர்கள் கழகத்தில் இணைந்தப்பிறகுதான் வந்தது. கலைக்கொல்லி (Paraquat) ரசாயணத்தை தடைசெய்யக்கோரி அக்கோரிக்கையை சர்வதேசிய நிலைக்கு கொண்டுச்சென்று அதன் பயன்பாட்டை முடிவுக்கொண்டு வந்தேன். சில தன்னார்வ அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் சுயலாபம் தேடிக்கொண்டது வேறுக்கதை. 

அந்த மருந்தின் சீர்கேட்டை மக்களுக்கு தெரியப்படுத்த எண்ணி, முழு ஆய்வுக்குப் பிறகு அது தொடர்பான புத்தகத்தை எழுதினேன். கலைகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைசெய்திருந்த அனுபவம் இருந்ததால் என்னால் அது குறித்து தீவிரமாகவே எழுதமுடிந்தது. மண்ணின் தோழர்கள் கழகத்தில் இருந்தபோது மக்கள் பிரச்சனைகள் குறிப்பாக தோட்ட மக்கள் பிரச்னைகள் முறைகேடுகள் தொடர்பாக 5 புத்தகங்களை கொண்டு வந்தேன். 1995-ஆம் ஆண்டு இந்த அமைப்பிலிருந்தும் நான் வெளியேற வேண்டிய சூழல் உண்டானது. 

யோகி : ஒரு நீண்ட பயணத்தில் வரதராஜூ என்பவர் தோட்டப் பாட்டாளியாக வர்க போராளியாக மேலும் பொதுமக்கள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தக்கூடியவராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டீர்கள். உங்கள் போராட்டமானது மக்களின் பார்வையில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது? மக்கள் எவ்வாறு உங்களை ஏற்றுக்கொண்டனர்?

தோழர்:  சில பாட்டளி பிரச்னைகளுக்கு மக்கள் நேரடியாகவே என்னை அணுகியிருக்கின்றனர் கோல்பீல் தோட்டம், கேரித் தீவு தோட்டம் உள்ளிட்ட சில தோட்ட மக்களுக்காக நான் நேரடியாகவே களமிரங்கினேன். பெருவாரியாக நான் குழுவாரியாக இயங்கவில்லை. அவரவர் பிரச்னையை அவரவர் கையிலெடுக்க வேண்டும் என்று அவர்கள் மத்தியில் நின்று தூண்டுகோலாக இருப்பேன். என்னைத் தேடி வரும் மக்கள் பிரச்னைகளை நான் இவ்வாறுதான் கையாண்டிருக்கிறேன். சுயமாக அவரவர் பிரச்னையை அவரவர்தான் போராட வேண்டும் என்று சொல்லித்தர அப்போது யாருமில்லை. நான் அதைச் செய்தேன். 

யோகி: யாருடைய உதவியும் இல்லாமல் தோட்ட மக்களால் போராட முடியாததற்கு என்ன காரணம்? ஏன் அவர்களுக்கு யாருடைய கையோ அல்லது தோளோ தேவையாக இருக்கிறது?

தோழர் : ஆதிக்கத்தின் மீதிருந்த பயம்; இயலாமை போன்றவற்றை காரணமாக சொல்லலாம். அதோடு ஒரு தோட்டத்தில் பிரச்னை நடந்துக்கொண்டிருக்கும்போது பக்கத்து தோட்டத்தில் இருப்பவர்கள் ஆதரவுக்கு வரமாட்டார்கள். கள்ள மௌனத்தில் இருப்பார்கள். இந்த நிலையானது இன்றுவரை தொடர்ந்துக்கொண்டுதானே இருக்கிறது. காலம் மாறினாலும் தோட்ட மக்களின் மனநிலையிலும் வாழ்கை முறையிலும் எந்த மாற்றமும் இல்லை. அடிமைச் சமூகமாக இன்றும் இருக்கின்றனர். 

யோகி : இப்படி நீங்கள் சொல்வதற்கு வேறு ஏதும் அனுபவ ரீதியான காரணம் இருக்கிறதா?

தோழர் : நிறைய இருக்கிறது. குறிப்பாக புக்கிட் ஹாசான் தோட்டப் பிரச்னை. வெளியில் இருந்து வந்த எஸ்.என்.ராஜா, அங்கமுத்து போன்றவர்கள்தான் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து பாட்டாளிகளுக்காக தீவிரமாக கொண்டுச் சென்றார்கள். தோட்ட பாட்டாளிகள் அவர்களுக்கு பின்னாடிதான் நின்றுக்கொண்டிருந்தார்கள். நீங்கள் பழைய பத்திரிக்கை செய்திகளை மீள்பார்வைச் செய்தால் உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும். 

யோகி: தோட்ட மக்களுக்காக நீங்க முன்னெடுத்தப் போராட்டங்களுக்கு அதிகாரவர்கத்தின் எதிர்ப்பை அல்லது தாக்கத்தை எவ்வாறு சமாளித்தீர்கள்?

-எந்த நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு நான் காரியங்களில் இறங்குவதில்லை. 

யோகி: இதுவரை 7 புத்தகங்கள் எழுதியிருக்கும் நீங்கள், அடுத்தப் புத்தகம் ஏதேனும் வெளியிடும் எண்ணம் உண்டா?

தோழர் : நிச்சயமாக இருக்கிறது. அதற்கான களப்பணிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மலேசியாவில் சாதியம் குறித்து ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறேன். தோழர் யோகியும் மலேசிய சாதியம் குறித்த அனுபவங்களை பேசியிருக்கிறீர்கள். அதை நான் அறிவேன். மலேசிய பத்திரிகைகளில் வந்திருக்கும் சில விவரங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். மிக நீண்ட நாளாக போய்க் கொண்டிருக்கும் பணி இது. பலரின் முகத்திரை இந்தப் புத்தகம் கிழிக்கும். 

முற்றும்.