செவ்வாய், 28 ஜூலை, 2026

சர்வதேச அளவில் போராட்டங்கள் கவனம் பெற வன்முறைதான் வேண்டுமா?

டெல்லியில் நடந்த நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான போராட்டம் என்பது உலக மக்களின் கவனத்தை கடந்த வாரம்தான் பெரிய அளவில் பெற்றிருக்கிறது. மேலும், உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு  அதன் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் மாணவர்களின் போராட்டத்திற்கான நியாயத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றன. 


எல்லாம் சரிதான். ஆனால், இந்தப் போராட்டமானது எப்போது தொடங்கப்பட்டது? சோனம் அவர்கள் இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு எத்தனை நாள் உண்ணா விரதம் இருந்தார்?  யார் இந்த சோனம் வாங்சுக்? இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய கரப்பான் பூச்சி கட்சி அல்லது அமைப்புக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக சொல்கிறார்களே அது உண்மைதானா? 



இந்தப் போராட்டம் முன்னெடுத்தது  தொடர்பான காரணத்தையும் மேல் குறிப்பிட்டிருக்கும் சில கேள்விகளுக்கான விடையையும் முதலில் காண்போம். பிறகு உலக மக்களும் உள்நாட்டு மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் விஷயத்தை அடுத்து பேசலாம். 


டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற NEET தேர்வு முறைகேடு எதிர்ப்பு மாணவர் போராட்டம் சுமார் 36 நாள்கள் நடைபெற்றன. கடந்த மே மாதம் NEET தேர்வை மாணவர்கள் எழுதினார்கள். சில நாள்களில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் பகிரப்பட்டது. NEET தேர்வுகு முன்பே வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதை அவர்கள் அதற்கு காரணம் கூறியிருந்தனர். எழுதிய தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற விஷயம் அறிவித்த வேளையில் அதன் அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும்  தாங்கி கொள்ள முடியாத மாணவர்கள் சுமார் 12 பேர் தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த நீட் தேர்வு தொடர்பாக இதுவரை ஏறத்தாழ 22-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த உயிர் இழப்புகளை எதைக் கொண்டு ஈடு செய்ய முடியும்? இது வெறும் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டமாக இல்லாமல், இளைஞர்களின் எதிர்காலம், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை, மற்றும் மோடி அரசின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மாபெரும் போராட்டமாக உருவாகியுள்ளது.  


சோனம் வாங்சுக்



சுற்றுச்சூழல் குறித்து ஆழ்ந்த அக்கரைக் கொண்ட சூழலியல் ஆர்வளர்களுக்கு சோனம் வாங்சுக் புதியவர் அல்ல. காஷ்மீரை ஒட்டியிருக்கும் லடக்கை சேர்ந்த இவர் செயற்கை நீர் ஊற்றுகளையும் செயற்கை பனிப்பாறைகளையும் கட்டுபிடித்து அங்குள்ள மக்களுக்கும் விவசாயத்திற்கும் ஆற்றியிருக்கும் சேவைக்காக உலகலவில் பாராட்டையும் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருடைய சாதனைகளும் சேவைகளும் அது மட்டுமல்ல. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக SECMOL  என்ற அமைப்பை தொடங்கி வழிநடத்தி வருகிறார். மேலும்,  சோனம் ஒரு பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலராகவே அறியப்படுகிறார், தேர்தலுக்காகவும் அரசியல் லாபத்திற்கான வாதி அல்ல அவர். 



இவர் 2026 ஜூன் இறுதியில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய நீட் முறைக்கேடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். அவருக்கு இது முதல் முறை உண்ணாநிலை போராட்டம் அல்ல. 2024-ல் லடாக் சூழலியலைப் பாதுகாக்க 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து கல்வியில் சீர் திருத்ததைக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் இவர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தார். அது அந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியதோடு  மிகுந்த கவனத்தையும் பெற்றது. தேசிய தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கோரியும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியும் 26 நாள் உண்ணாவிரதம் இருந்தவரை கடந்த  ஜூலை 24  அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.  அவருக்கு  மாண்புமிகு கரப்பான் பூச்சி (Honourable Cockroach) என்று Cockroach Janta Party – CJP புகழாரம் சூட்டினர். 



‘காக்ரோச் ஜன்தா பார்ட்டி’ (Cockroach Janta Party) 




இது பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாகும். இதன் உருவாக்கமே கொஞ்சம் வினோதமானது, அது விஸ்வரூப வெற்றியடைந்தது. சுறுக்கமாகவும் விரிவாகவும் பார்ப்போம். 


இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த்,  வேலை வாய்ப்பில்லாத சில இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை "கரப்பான் பூச்சிகள்" (cockroaches) என்று ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இந்த வார்த்தை இளைஞர்களிடையே  கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவில் படித்த இந்திய இளைஞரான அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) என்ற இளைஞர் "எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்றிணைந்தால் என்ன?" என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.


அந்த பதிவு வைரலாகி,  அதன் பின்னர் Cockroach Janta Party (CJP) என்ற பெயரில் ஒரு இயக்கம் உருவானது. கரப்பான் பூச்சியை எளிதில் அழிக்க முடியாது. கடினமான சூழலிலும் அது உயிர்வாழும். அதுபோல, புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களும் தொடர்ந்து போராடுவார்கள் என்பதற்கான அடையாளமாக அதைத் தேர்ந்தெடுத்தோம் என்று "கரப்பான் பூச்சி" என்ற சின்னத்தை  தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் விளக்கி இருக்கின்றனர்.



மிக குறுகிய நாள்களிலேயே மிகப்பெரிய இளைஞர் போராட்ட இயக்கமாக வளர்ந்து இன்று ஒரு மக்கள் இயக்கமாகவும் மாறி இருக்கிறது இந்த "கரப்பான் பூச்சிகள்" இயக்கம் . இந்த அமைப்புக்கு எதிராக இருப்பவர்கள் இதை ஒரு கோமாளி அல்லது நையாண்டி அமைப்பு என்று கேலி பேசவும் செய்கிறார்கள்.  ஆனால், இந்த மாணவர் போராட்டத்தை பொறுத்தவரை இவர்கள் மேற்கொண்ட இந்த முதல் போராட்டமே வெற்றியில் முடிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பி.ஜெ.பி கட்சியை பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளில்  மக்கள் பிரச்னைக்கு பொறுப்பெடுத்து எந்த அமைச்சரும் பதவி விலகி வரலாறு இல்லை. ஆனால், இந்த முறை மாணவர்கள் கொடுத்த நெருக்கடியால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருக்கிறார். இதுவே தேசிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 


டெல்லியில் நடந்த போரட்டங்களான  நிர்பயாவுக்கு நீதி கோரி நடந்த  அறவழிப் போராட்டம் (2012), மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான  இந்திய விவசாயிகள் போராட்டம் (2020) ஆகியவை என் கவனத்தை ஈர்த்த மாபெரும் போராட்டங்களாகும். காரணம் இந்தப் போராட்டங்கள் தொடங்கிய காலத்திலேயே உள்ளூர் மக்களின் ஆதரவை பெற்று, உலக மக்களின் கவனத்தை பெற்றது. அதன் காரணத்தினாலேயே இந்திய அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. 




ஆனால், தற்போதைய இந்த மாணவர்கள் போராட்டம் கிட்டதட்ட 38 நாள்கள் நீண்டது. சோனாம் அவர்களின் உண்ணாநிலை போராட்டம் 26 நாள்கள் நீண்டது. அதுவரை இந்த விவகாரம் ஒரு உப்பு சப்பில்லாத விஷயமாகவே இருந்திருக்கிறது.   மாணவர்கள் மீதும், போராட்டவாதிகள் மீதும் போலீஸ் கண்மூடித் தனமாக அடிதடி நடத்திய பிறகுதான், உள்ளூர் மக்களுக்கும் உலக மக்களுக்கும் இந்தப் போராட்டம் போராட்டமாகவே தெரிந்திருக்கிறது.  அதன் பிறகே கண்டனங்கள் வழுத்தன. எனக்கு எழும் கேள்வி என்னவென்றால் ஒரு போராட்டம் கவனம் பெற அடிதடியோ, உயிர் சேதமோ, வன்முறையோ இப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கத் தான் வேண்டுமா? அப்போதுதான் அது கவனம் பெற வேண்டுமா?


அப்படி பார்த்தாலும் இற்போதைய இந்த  நீட் தேர்வு முறைகேட்டில் மனம் உடைந்து 12 உயிர்கள் தற்கொலை செய்து கொண்டனவே? ஏன் உலக மக்களின் இதயங்களை அது உலுக்கவில்லை? அனைத்தையும் பொறுமையாக வேடிக்கை பார்க்கும் மனநிலைக்கு மனித மனங்கள் இறுகி விட்டனவா? அல்லது உலக கோப்பையும் ஜனநாயகன் திரைப்படமும் மாதிரியான உதிரி சம்பவங்கள் போராட்டத்தைவிட முக்கியத்துவம் பெற்றனவா? 



இந்தப் நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்தில் நான் கவனித்த மிக முக்கியமான காட்சிகள் பெண்கள் தொடர்பானவை. போலீஸ்காரர்கள் வன்முறையை நிகழ்த்தியபோதும், மிரட்டியபோதும் அவர்கள் கொஞ்சம்கூட பின் வாங்காமல் களத்தில் நிற்கிறார்கள். ஒரு மாணவி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாப்பிட ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு பெண் போலீஸ் லாரியின் முன் துணிகரமான நின்று கைது செய்தவர்களை விடுவிக்க கோருகிறார், அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்; இன்னொரு பெண் சக மாணவர்கள் மீது லத்தியடி விழாமல் தடுத்து நிற்கிறார்;  பெண்கள் பலவீனமானவர்கள் என்றும் பெண்களும் போதை பொருள்தான் என்று ஏலனம் செய்பவர்களுக்கும் இந்தக் காட்சிகள் வேறொரு மாற்று புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கையாக இருக்கிறது. 

இறுதியாக எந்தப் போராட்டத்திற்கு அந்தந்த நேரத்தில் ஞாயம் செய்ய வேண்டும், நமது வசதியை பொறுத்து ஆதரவு அளிப்பது அது போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது அல்ல.  விளம்பரம் தேடிக் கொள்வது, அவ்வளவே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக