செவ்வாய், 27 செப்டம்பர், 2022

மலேசியாவில் பெரியாரியம் எதற்கு?


ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் மேலும் வளர்கிறது. அவர்கள் என்றுமே விடுதலைப் பெறவே முடியாது என்கிறார் பெரியார். (‘குடியரசு’ – தலையங்கம் 12.8.1928)

94 ஆண்கள் கழித்து இன்று அந்தக் கூற்றை நான் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துகிறேன். எத்தனை தீர்க்க தரிசி இந்தப் பெரியார். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்பே அவர் கூறிய இந்தக் கருத்தானது நாகரீகம் அடைந்துவிட்டோம், பெண்களுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டோம் என கூறிக்கொண்டிருக்கும் அல்லது நம்பிக்கொண்டிருக்கும் அத்துனை ஜென்மங்கள் முகத்திலும் ஓங்கி அரைகிறது. என்னத் தோழர்களே வலிக்கிறதா? அடி பலமாக இருக்கிறதா? முகத்தை அழுத்தி தேய்த்துக்கொள்ளுங்கள். போக போக வலி இன்னும்கூட அதிகமாகலாம்.

மலேசிய திருநாட்டிலே பெண்ணியப் பேச்சு எதற்கு? பெரியார் சிந்தனைகள் எதற்கு? இங்குள்ளப் பெண்கள் எத்துனை சுதந்திரமாக இருக்கிறார்கள்? அவர்கள் இரவு வேலை செய்கிறார்கள். இரவெல்லாம் சமூக ஊடகங்களில் இருக்கிறார்கள். ஆபாசமாக உடுத்துகிறார்கள். எத்தனை எத்தனை சுதந்திரத்தை இந்தப் பெண்கள் இங்கு சுகமாக அனுபவிக்கும்போது, பெண் சுதந்திரம் குறித்த பெரியார் கொள்கைகளை இங்கே பேசுவது வீண்வேலை என்று கடந்த சில ஆண்டுகளாகவே பெரியார் எதிர்ப்பாளர்கள் பேசுவதை நான் செவிமடுத்து வருகிறேன். இன்னும் எத்தனை எத்தனையோ பிதற்றல் மத்தியில்தான் பெரியாருக்கு இந்த மலேசிய மண்ணில் இன்னும் விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தோழர்களே உங்களுக்குத் தெரியுமா? மலேசிய திருநாட்டிலே பாலியல் வன்கொடுமைக்கான சட்டம் இந்த ஆண்டுதான்(2022) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுவரை இங்கு அதற்கான சட்டமும் இல்லை,பாதுகாப்பும் இல்லை என்பது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமா?

ஒரு பெண் சமூக ஊடக மூலமாகவோ அல்லது அவதூறு மூலமாகவோ பாலியல் அச்சுறுத்தலுக்கோ அல்லது மிரட்டலுக்கோ ஆளாகும்போது அவளுக்கு துணையாகவும் ஆதரவாகவும் நிற்ககூடியவர்கள் யார் யார் என்று கொஞ்சம் பட்டியலிட்டுப் பாருங்கள். அவளைத்தவிர ஒருவர்கூட அவளோடு நிற்க வரமாட்டார்கள். மனதிடமுள்ள பெண்ணாக இருந்தால் துணிந்து போராடுவாள், இல்லையேல் தற்கொலை செய்துக்கொள்வாள். இதுதான் நடைமுறை எதார்த்தம்.

ஆனால், பெரியாரின் வார்த்தைகளை நம்பும் ஒரு பெண்ணாக இருந்தால் பெண்ணை வைத்து அரசியல் லாபம் பார்க்கும் வக்ரம் பிடித்த ஒவ்வொருவரையும் சந்தியில் நிற்க வைத்து கேள்விக்கேட்கும் துணிச்சல் அவளுக்கு வந்துவிடும். குறைந்த பட்சம் நான் யார் என்பதை ஒருவருக்கும் நிறுபிக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்று அவள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வாள். சுதந்திரம் என்பது ஒரு பெண்ணுக்கு யாரும் போடும் பிச்சையல்ல. தன்னோடு ஓர் உறுப்புபோல இருப்பதுதான் சுதந்திரம் என்பதை பெண் உணர்ந்து செயல்பட வேண்டும். தனக்கு எது கண்ணியம் என, அவளைத் தவிர வேறு யாரும் அவளுக்கு சொல்லிக்கொடுத்திட முடியாது.

ஆனாலும், இங்கிருக்கும் பெண் சார்ந்த அமைப்புகள், அரசியல் கட்சிகளில் இருக்கும் மகளிர் பிரிவினர், திராவிடர் கழகங்களில் இருக்கும் பெண்கள் உட்பட,  ஒரு பெண் தன்னை மனரீதியிலும் உடல் ரீதியிலும் தயார் படுத்திக்கொள்ள எவ்வாறு உதவுகின்றனர்? ஒரு பெண்ணுக்கு அநீதியோ அல்லது தீங்கோ நிகழும்போது இந்த அமைப்பைச் சேர்ந்தப் பெண்கள் எவ்வாறு பாதிப்படைந்த பெண்ணுக்கு குரல் கொடுக்கிறார்கள்?  சமயம் பார்த்து வஞ்சம் தீர்துக்கொள்வதற்கும் மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. 

இதைத்தான் பெரியார், “பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும்” என்கிறார். (பெரியார் இன்றும் என்றும் பக் 281)

கலாச்சாரக் காவலர்கள் வரையருத்து வைத்திருக்கும் ஒரு சட்டகத்திற்குள் பெண் சுதந்திரத்தை வைத்து, அவளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டோம் அவள் சுதந்திரமுடன் வாழ்கிறாள் என்பதெல்லாம் எத்தனை முரண் தோழர்களே? இதெல்லாம் பெண்களுக்குள் திணிக்கப்பட்ட ஆணாதிக்கத்தின் வெளிபாடு இல்லாமல் வேறென்ன? இவர்களை நோக்கி வீச என் போன்ற பெண்ணுக்கு கையில் கிடைப்பது பெரியாரின் வார்த்தைகளும்தான்.

பெண் சுதந்திரம் குறித்து வகுப்பெடுக்கும் பேர்வழிகள் மலேசிய திருநாட்டிலே குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் இன்னும்கூட நிறைவேற்றாத ஒன்றாக இருப்பதுக்குறித்து எங்காவது பேசியிருக்கிறார்களா? நாடாளுமன்றம் மன்றும் சட்டமன்றத்தில் கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. நாற்காலியில் இருக்கும் பெண்களும் பெண்களுக்காக பேசுவதுகூட கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. இதெல்லாம்கூட பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையை மேலே போட்டு மூடிவிட்டுப் பார்த்தால்,  மாடப்புறாக்கல் கட்டுப்பாடற்று புதந்திரமாக பறப்பதைப்போலத்தான் இருக்கும். இதெல்லாம் எத்தனைப் பெரிய ஏமாற்று வேலை தோழர்களே.

இந்தியாவின் பல இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்திய பெரியார்,  நமது நாட்டில்கூட 27 நாட்கள் தங்கியிருந்து இந்தியர்கள் தங்கியிருந்த ஊர்களுக்கும் தோட்டங்களுக்கும் சென்று, குடல் சம்பந்தப்பட்ட நோயோடு இந்தக் கிழவர் நாளுக்கு 3 முதல் 5 சந்திப்புகளில் பகுத்தரிவு உரை நிகழ்த்தி சிந்தனை மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இன்று இந்த மலேசிய மண்ணில் திராவிடர் கழகங்கள் நீடித்திருப்பதற்கும் இன்றுவரை தந்தை பெரியாருக்கு விழா எடுப்பதற்கும், இளைய தலைமுறையினர் பெரியாரின் கொள்கைகள் பரப்பு செயலாளர்களாக செயல்படுவதற்கும் அன்று அவர் நிகழ்த்திய வருகையும் சுயமரியாதைக் குறித்தான உரைகளும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பெரியார் பேசிய பகுத்தரிவை வெவ்வேறு காலக்கட்டங்களில் மறுபரீசீலனை செய்யலாம். அதைத்தான் பெரியாரும் சொல்கிறார். ஆனால், மலேசிய திருநாட்டில் பெரியாரின் போதனைகள் காலாவாதியாகிவிட்ட ஒன்று என்ற விதாண்டாவாதத்தையும், பள்ளிப்புத்தகங்களில்கூட பெரியார் படம் அச்சடிக்கக்கூடாது என்ற சிறுபிள்ளைத்தனத்தையும், பெரியாரின் பெண் சுதந்திர போதனைகள், மலேசியப் பெண்களுக்கு அவசியமில்லை என்ற மூடத்தனத்தையும் பெரியார் எதிர்ப்பாளர்களும் மத தீவிரவாதிகளும் நிறுத்திக்கொண்டு பெரியார் சொன்ன பகுத்தரிவு பார்வையில் அனுகப் பழகவேண்டும். இன்று எதற்கு எதிர்க்கிறோம் என்று காரணம் தெரியாமலேயே பெரியாரை வசைப்பாடும் கும்பல்தான் அதிகமாக இருக்கிறது.  

அதே வேளையில் பெரியாரிஸ் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு அவர் சொன்னதை எல்லாம், தனக்கு தேவையானபோது மிகச் சிறப்பாக ஏட்டில் எழுதியும், ஒலிவாங்கியில் பேசியும், கைத்தட்டல் வாங்கிக்கொண்டு, நிஜத்தில் அதற்கு எதிராகப் பேசிக்கொண்டும், சொந்தக் குடும்பத்தில்கூட மாற்றத்தை ஏற்படுத்தாத “எங்கள் வீட்டுப் பெண்களை நாங்கள் ஒரு லிமிட்டோடுதான் வைத்திருப்போம்” என்ற போலி கறுப்புச் சட்டை போராளிகளைவிட, சுயத்தோடு இயங்கும் பெரியாரியம் அறியாத பெண்களும் தோழர்களும் பெரியாரின் வாரிசுகளே.

-தோழர் யோகி பெரியசாமி

எழுத்தாளர், களச்செயற்பாட்டாளர்

(மலேசிய மாந்தநேயத் திராவிடக் கழகத்தின், தந்தை பெரியார் 144வது பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆண்டு மலரில் வெளிவந்தக் கட்டுரை. தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்டார். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக