ஞாயிறு, 12 அக்டோபர், 2014

கடாரம் ராஜேந்திர சோழனுடையதா? 3

கடாரம் ராஜேந்திர சோழனுடையதா?
பாகம் 3

வரலாற்றுப் பொக்கிஷத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு என்ன?

-யோகி

(சென்ற வாரத் தேடலில்)

 ‘Deprecated area'-என அரசு அறிவித்துள்ள ஜெராய் மலைப் பகுதிகளில்  இன்னும் எம் சோழனின் அடையாளங்கள் புதைந்துகிடக்குமா? சுமார் 40-க்கும் அதிகமான சண்டிகள் பூஜாங் பள்ளத்தாக்கு சுற்றிலும்  அகழ்வாராய்வு செய்யப்பட்டு கண்டெடுக்கப்பட்ட மாபெரும் புதையலாக உள்ளது.  எனது தேடலுக்கான பதில் அங்கு கிடைக்குமா? (இனி)

அகழ்வாராய்வு செய்யப்பட்டு, கேப்பாரற்று இருக்கும் பொக்கிஷம்
பொதுவாகவே  வரலாற்றுத்தேடலில்  நம்மவர்களிடம் நிதானம் என்பது துளிகூட இல்லாதது எமது வருத்தம். ஆரம்பகாலத்தில் மலாய் தீவு மற்றும் தீபகற்ப்பம் தனக்கே உண்டான கலாச்சார நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது யாரும் மறுக்க இயலாது.  மலாய்க்காரர்கள் நாகரிகமடைந்ததற்கு  கடல் கடந்து வந்த இந்து-பௌத்த மதம் மட்டுமே முழுக்காரணம் எனக் கூறினால் அதனை நான் மறுக்க வேண்டியிருக்கும்.

ராஜேந்திர சோழனுடைய படையெடுப்பிற்கு முன்பதாகவே பார்பனியம் (இந்து)- பௌத்தம் இம்மண்ணில் விரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்து மற்றும் பௌத்தத்தை அக்காலத்தில் இவர்கள் ஏற்றியிருந்தாலும், இம்மதங்களில் அனைத்துக் கூறுகளையும் இவர்கள் ஏற்கவில்லையென்பதே உண்மை. இதற்குச் சான்றாக பாலித் தீவினரை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை
 கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை
மேலும், ராஜேந்திர சோழன் படையெடுத்து வந்ததாகக் கூறினாலும், அவரே படைக்குத் தலைமை தாங்கி வரவில்லையென்பது பலரது கருத்து. அவர் வந்தார் என்பதற்கான எவ்விதச் சான்றும் இங்கு கிடையாது. தஞ்சாவூர் கல்வெட்டில் இருப்பதை வைத்து அவரே படையெடுத்து வந்தார் எனும் முடிவுக்கு வருவது சரியானதன்று என நினைக்கிறேன்.

மலாக்காவின் சுல்தான் மன்சூர் ஷா தென்னிந்தியாவுடன் (14-ஆம் நூற்றாண்டு தொடங்கி மற்றும் 17-ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்த விஜயநகர அரசாட்சி) சகோதர உறவு கொண்டிருந்ததாக ஹிகாயாட் ஹங் துவா சொல்லும். ஆயினும், கிருஷ்ண தேவ ராயனை, கடல் கடந்து சென்று உறவினை மிளிர வைத்தது சுல்தான் அல்ல என்பதே உண்மை.

அலுவலகம்
மலாக்காவின் தூதுவனாக ஹங் துவா கடல் கடந்து சென்று தென்னிந்தாவுடனான சகோதர உறவினை வலுவுறச் செய்தார். இந்நிகழ்வினை பெரும்பாலும் வரலாற்றுக் குறிப்புகள் மலாக்கா சுல்தான் தென்னிந்தியாவுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறும். இதே பாணியில்தான் ராஜேந்திரனின் படையெடுப்பைக் கருதலாம்.
புஜாங் பள்ளத்தாக்கில் எனக்கான தேடல் முழுமை பெறாதது  வருத்தத்தை கொடுத்தாலும்,  சுங்கைக் பட்டாணி நகரை சுற்றிலும் 40-க்கும் அதிகமான சண்டிகள் அகழ்வாராய்வு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற செய்தி எனக்கு புத்துணர்ச்சியை வழங்கியது. அந்த இடத்தைத் தேடி நானும் நண்பர்களும் பயணிக்கத் தொடங்கினோம். புதிய இடம் என்பதால் இடத்தைக் கண்டு பிடிப்பதற்கு சற்று சிரமம் இருக்கவே செய்தது.

ஆனால், கெடா வாழ் மக்கள் இயற்கையிலேயே  மனிதாபிமானமும் நேசமும் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்கள் முகத்தில் புன்னகை குறையவில்லை. இடத்தைக் கண்டறிவதற்கு போலீஸ் நிலையம், மோட்டார் பட்டறை என பலமலாய்க்காரர்களைச் சந்தித்தேன். புன்னகை மாறாத அவர்களின் முகத்தில் போலியை பார்க்கமுடியவில்லை. தலைநகரைச் சேர்ந்த மலாய்க்காரர்களுக்கும் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்களைப் பார்க்க முடிந்தது. ‘சோழன் கால் பதித்த மண்ணல்லவா' என்கிறீர்களா?  உண்மைதான் அந்தக் குணம் அந்த மண்ணுக்கே உண்டான சிறப்புதான்.
இறுதியில் நாங்கள் தேடிய அந்த வரலாற்றுப் புதையல் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தோம். ஆனால், அங்கு எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது,  அதுவரை எனக்குத் தெரியவில்லை.
குறிப்புகளை கொண்டிருக்கும் பொக்கிஷங்கள்

கூடாரத்திற்குக் கீழ் இருக்கும் அந்த வரலாற்றுப் பெட்டகங்கள் அனைத்தும்,  அகழ்வாராய்ச்சி  செய்தும், செய்துமுடிக்காத நிலையிலும் இருந்தன. பலத்த பாதுகாப்புடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். பார்வையாளர்கள் வந்தால் விளக்கம் கொடுக்க நமது நாட்டைச் சேர்ந்த ஓர் அலுவலக அகழ்வாராய்ச்சியாளர் இருந்தார்.

கூடாரத்தின் கீழ் மௌனம் காக்கும் பொக்கிஷங்கள்


நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.  எனக்கு வேண்டிய தகவல்களை அவர் தந்தார். அனைத்தும் அதிர்ச்சிதரும் தகவல்கள்தான். ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு என்ன என்ற கேள்வியே என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது.

(தேடல் தொடரும்)
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக