ஞாயிறு, 19 அக்டோபர், 2014

கடாரம் ராஜேந்திர சோழனுடையதா? 4

‘எது மறைக்கப்படுகிறதோ அது பாவம், வெளிப்படுவதே புண்ணியம்'

பாகம் 4



(சென்ற வாரத் தேடலில்)

கூடாரத்திற்குக் கீழ் இருக்கும் அந்த வரலாற்றுப் பெட்டகங்கள் அனைத்தும்,  அகழ்வாராய்ச்சி  செய்தும், செய்துமுடிக்காத நிலையிலும் இருந்தன. பலத்த பாதுகாப்புடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். பார்வையாளர்கள் வந்தால் விளக்கம் கொடுக்க நமது நாட்டைச் சேர்ந்த ஓர் அலுவலக அகழ்வாராய்ச்சியாளர் மாணவர் இருந்தார். நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.  எனக்கு வேண்டிய தகவல்களை அவர் தந்தார். அனைத்தும் அதிர்ச்சிதரும் தகவல்கள்தான். ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு என்ன என்ற கேள்வியே என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. (இனி)

எனக்குக் குறிப்புகளை வழங்கிய அந்த அலுவலக அகழ்வாராய்ச்சியாளர் மாணவியின் பெயர் ஷேஹா. தற்போது அகழ்வாராய்வு நடந்துகொண்டிருக்கும் இந்த 43 சண்டிகளான பொக்கிஷங்களை பாதுகாத்து, குறிப்பு எடுத்து வைப்பதற்கான அலுவலகம் ஒரு பலகை கொட்டகையாக இருந்ததே எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த சங்கடம் அந்த மாணவிக்கு இருந்ததா என்று தெரியவில்லை.  மலேசியாவின் மிகப்பெரிய அகழ்வாராய்வுப் புதையலாக அறியப்படும் இந்த சண்டிகளின் நிலையை எண்ணிவாறு  நான் ஷேஹாவிடம் கேள்விகளை கேட்கத்தொடங்கினேன்.

யோகி:இங்கு எத்தனை சண்டிகள் தற்போது அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன?

ஷேஹா: 43 சண்டிகள். இன்னும் 90-க்கும் அதிகமான சண்டிகள் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தாமல் இருக்கின்றன.

யோகி: இந்த சண்டிகள் பூஜாங் சமவெளியோடு தொடர்பு கொண்டிருக்கிறதா?

ஷேஹா: ஆமாம். இங்கு கிடைத்திருக்கும் அதற்கான ஆதாரங்கள்  இந்த கூற்றுக்கு வலுசேர்க்கின்றன. மேலும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கு பலநூற்றாண்டுகள் மாபெரும் வர்த்தக சந்தையாக புகழ்பெற்று இருந்திருக்கிறது. அதோடு இங்கு கிடைத்திருக்கும் சில பொருள்கள் கி.பி.670-களில் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. 

யோகி: இந்த நிலப்பகுதியில் என்னென்ன பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன?

ஷேஹா: மணிகள், மண்பாண்டங்கள், செராமிக் பொருள்கள் என 4-ஆம் அல்லது 5-ஆம் நூற்றாண்டு காலத்து பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவை ஆராய்ச்சிக்கூடத்தில் வைக்கப்படுள்ளன.

யோகி: எப்போது இங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது?

ஷேஹா: தற்போது இருக்கும் அதிநுட்ப நவீன கருவிகளால் இது பண்டைய காலத்து பொருள்கள்தான் என்று  உறுதியாக கூறும் அளவுக்கு அகழ்வாராய்வு துறை வளர்ச்சியடைந்து உள்ளது. அதுபோன்ற நவீனக் கருவிகள் மூலமே இங்கு இருக்கும் சண்டிகள் அகழ்வாராய்வு பொக்கிஷங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு இதுபோன்ற கருவிகள் சுற்றியிருக்கும் பொக்கிஷங்களையும் அடையாளம் காணவல்லது. இப்படி 2007-ஆம் ஆண்டுக்கு முன்பே இங்கு வரலாற்றுப்புதையல் இருப்பது அடையாளம் காணப்பட்டு,  முறையாக திட்டம் வரையப்பட்டது.  அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழ்வாராய்வு 2009-ஆம் ஆண்டு வரை நடந்தது. இப்போது அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மீண்டும் தொடரலாம். 

யோகி: இதற்கு யார் யார் ஆதரவு அளிக்கிறார்கள்?

ஷேஹா: மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவனராக இருந்து செயல்படுவதோடு, தேசியப் பாரம்பரிய  இலாகா ஆதரவளிக்கிறது. 

யோகி:ஏன் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு அகழ்வாராய்வு நிறுத்தப்பட்டது?

ஷேஹா: காரணம் அகழ்வாராய்வு செய்வதற்கு மாணவர்கள் தற்போது  இல்லை. மாணவர்கள் வரும் பொழுது மீண்டும் அகழ்வாராய்வு தொடங்கும். 

அகழ்வாராய்ச்சி மாணவியும் தற்போது இந்த சண்டிகளின் பொறுப்பாளினியுமான ஷேஹா சொன்னது உண்மையில்  அதிர்ச்சியான ஏற்றுக்கொள்ள மறுக்கும் தகவல்கள்தான். 4-ஆம், 5-ஆம் நூற்றாண்டு பொக்கிஷங்கள் என்றுக்கூறப்படும் இந்த  அரிய சண்டிகளை அகழ்வாராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்வது எவ்வாறான எதிர்வினையைக்  கொண்டுவரும் என்பதை கணிக்க முடியவில்லை. அதோடு, அகழ்வாராய்ச்சி மாணவர்கள் வரும்வரை காத்திருக்கும் சண்டிகளின் எதிர்காலம் குறித்து நிறையக் கேள்விகளும், அதுகுறித்த கவலையும் எழவே செய்கின்றன. என்னைப்போன்ற வரலாற்றுத் தேடல் கொண்டவர்களுக்கு புதைகுழியிலிருந்து வெளிவராத பொக்கிஷங்கள் இன்னும் அகாலக் குழிக்குப் போய்விடுமோ என்ற அச்சமே மேலெம்புகிறது.
வெண்கலத்தால் ஆன புத்தர் சிலை
சோழன் வென்றதாகக் கூறும் கடாரத்தில் வங்காளத்தின் தாக்கம் நிறைய  இருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு சான்றாக வெண்கலத்தால் ஆன புத்தர் சிலை ஒன்றும் மியூசியத்தில் உள்ளது. சோழன் சண்டிகள் என்று சொல்லக்கூடிய கோயில்களை நிருவினான் என்றால் புத்தர் சிலைகள் அங்கு இருப்பதற்கான  காரணம் என்ன?  இங்கே நான் குறிப்பிடவிரும்பும்  மற்றொரு தகவல் என்னவென்றால் சோழன் கட்டியதாக நம்பப்படும் சண்டிகள் புத்த வழிப்பாட்டு தளங்களாகவும் இருக்கலாம் என நம்பப்படுவதும்தான். இதனால்,ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனத்தின் தாக்கமும் செல்வாக்கும் கடாரத்தை ஆட்டிப்படைத்திருக்கும் என்ற சந்தேகம் இங்கு வலுப்பெறுகிறது.
கடாரத்தை சுற்றியிருக்கும் சண்டிகளைக் காட்டிலும், நமக்கு அதிகம் கேள்விகள் எழும் பகுதியாக ஜெராய் மலை இருக்கிறது. கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் அந்த மலை 1,230 மீட்டர் உயரம் கொண்டது. அதனுள் புதைந்திருக்கும் ரகசியமோ பலகோடியை தாண்டுகிறது. அந்த மலையினுள் பலசிவன் கோயில்களும், அம்மன், விநாயகர் கோயில்களும்  நூற்றுக்கணக்கில் உள்ளதாக நிறைய கதைகள் உள்ளன. அந்த மலையின் ரகசியத்தை பூதம் காப்பதுபோல் அரசாங்கம் காத்துவருவதாக ஒரு குற்றச்சாட்டும் பலகாலமாக  வைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் ‘Deprecated area'-என அரசு அந்த மலையை அறிவித்துள்ளதோடு பலத்த பாதுக்காப்புக்கு உட்படுத்தியுள்ளதுதான்.
தேடலின் போது உடன் வந்த நண்பர்கள்
தொடக்ககாலத்தின் அந்த மலையிலிருந்து கிடைக்கப்பட்ட சில கோயில் சிதைவுகளைத்தான் மறு உருவம் கொடுத்து மியூசியத்தில் கட்டியிருக்கிறார்கள். ஆனால், அதற்குக் கொடுத்திருக்கும் குறிப்புகள் எதுவும் முழுமையானதாக மற்றும் ஆதாரமற்றவையாக இருக்கிறது. ஒரு வேளை, வரலாற்றுத் தேடலைக்கொண்ட ஆர்வலர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் அந்த மலையினுள் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தால் வெளிப்படும் ரகசியங்கள் குறித்து அறிய மனம் இப்போதே ஏக்கப்படுகிறது.
சோழ மன்னர்கள் கடாரத்தையும், சயாமையும் ஆண்டதாகக் கூறப்படுவதையும், முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்டதாகவும், கரிகாலச் சோழன் இலங்கையைக் கைப்பற்றியதாகவும் கல்வெட்டுகளிலும், இலக்கியக் குறிப்புகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு  நிகரான முரணான செய்திகளும் இருக்கவே செய்கின்றன.
‘மாறன் மகா வம்சம்' என்றொரு செய்தியை இணையத்தில்  வாசிக்க நேர்ந்தது.  ‘மாறன் மகா வம்சம்' என்பது பண்டைய கடாரத்தின் சரித்திர நூல் என்று சொல்லப்படுகிறது. மாறன் மகா வம்சம் கடாரத்தின் முதல் மன்னன் என்றும் இவன் பாண்டிய மன்னனின் வம்சாவளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷேஹா
கருட இனத்தவரின் தாக்குதலை முறியடித்து கடாரத்தில் இந்திய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய  முதல் மன்னன் என்று அந்த நூல் கூறுகிறது. ஆனால், அதற்கான எந்தச் சான்றும் நிரூபிக்கப்படவில்லை. செவ்வண்ணம் கொண்ட அந்த சண்டிகள் எதுவும் இந்திய மரபையோ அல்லது  எந்தளவுக்கு சிறப்பாக விளங்கியது? வழிபாட்டுத் தலங்களா? அல்லது பிரமிட்கள் மாதிரியான கல்லறைகளா? எந்தளவுக்கு அது புகழ்பெற்றிருந்தன போன்ற எந்தத் தகவலும் செய்தியும் ஏன் கட்டுக்கதைகள்கூட இல்லை.

என்னுடைய தேடலில் நான் கண்டுகொண்டது இதுதான்...

‘எது மறைக்கப்படுகிறதோ அது பாவம், வெளிப்படுவதே புண்ணியம்' என்கிறது பகவத்கீதை.
சோழனின் அடையாளங்கள் இங்கு மறைக்கப்பட்டுள்ளதோ அல்லது அழிக்கப்பட்டுள்ளதோ  சோழனுக்கே தெரிந்த ரகசியம் அது.
சோழன் இங்கு வாழ்ந்திருப்பான் என்பதை  மனம் ஏற்றுக்கொண்டாலும், கடாரத்தில் எந்தளவுக்கு அவன் புகழ்பெற்றான் என்பதற்கு சான்றுகள் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  ஆனால்,  இந்தியர்களின்  அடையாளங்களை  நிறையவே கடாரத்தில் காணமுடிகிறது. குறிப்பாக கெடாவின்  விவசாய முறையைக் கொள்ளலாம். இன்னொரு சிறப்பம்சமாக கெடா மலாய் பெண்கள் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்கள். காதோரத்தில் ஒற்றை  செம்பருத்திப் பூவையோ அல்லது  சரத்தையோ அவர்கள் பாரம்பரிய உடையணியும் போது வைத்துக்கொள்கிறார்கள்.  அதே வேளையில்,  வியாபார தொடர்பால் இங்கு ஆதியில் வாழ்ந்திருந்த மலாய்க்காரர்களின் வாழ்வுமுறை இந்தியமயமாகிவிட்டதாகவும், அவர்களின் இயற்கையான கலாச்சாரம் மாறிவிட்டதாகவும் வரலாற்றுக்குறிப்பில் எங்கோ படித்த ஞாபகம். ஆதலால், கடாரம் ராஜேந்திர சோழனுடையதா என்ற கேள்விக்கான பதிலை நான் வாசகரிடமே விட்டுவிடுகிறேன்.

குறிப்பு

1970-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு மறுசீரமைப்புச் செய்யப்பட்ட இந்த சண்டிகள் பல ஆண்டுகளாக செம்பனை பயிரிடும் தனியார் நிலத்தில் இருந்துவந்துள்ளது. இது புராதன பொக்கிஷங்கள் என்று தெரிந்ததும் அரசாங்கம் அதைப் பறிமுதல் செய்து, பாதுகாத்துவருகிறது. இதற்கிடையில்தான்  கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கெடா மாநில நில அலுவலகம் கொடுத்த அனுமதியின் பேரில் சௌஜானா செண்ட்.பெர்ஹாட் எனும் வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சண்டி இருப்பது தெரியாமல் இடித்துத்தள்ளினர். இதனால் அங்கு சர்ச்சை எழுந்தது. பின்பு சர்ச்சையும் கண்டனமும் காணாமல் போனது.  இன்று அனைத்து சண்டிகளும் பார்ப்பார் அற்றும் கேட்பார் அற்றும்  இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கப் போகின்றன. அதை நினைக்கும்போதுதான்... (தேடல் தீர்ந்தது)
யோகி





1 கருத்து:

  1. அனைவரும் வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
    உங்கள் கேள்வியும் அதற்கான பதில்களும்
    அருமை.

    பதிலளிநீக்கு