புதன், 29 அக்டோபர், 2014

மலேசியாவில் இந்தியர்கள் மணல் மாதிரி வந்து மணலாகவே இருந்துவிட்டார்கள்..


 
தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் நேர்காணல் ....

தலைநகரிலிருந்து அரைமணி நேர பயணத்தில் வாகனங்கள், கட்டிடங்கள், பரபரப்பு என அனைத்தையும் தாண்டி ஓர் அமைதியான இடத்திற்குள் நுழைந்தது கார். குறுகிய பாதையில் அழகிய நிழல் மரங்களுக்கு மத்தியில் ஓர் அகண்ட நிலப்பரப்பில் கச்சிதமான ஆர்ப்பாட்டமற்ற அலங்காரங்களைக் கொண்டிருந்த எளிய வீடு. அவர் ஒரு தேசியவாதி என்பதற்கு எடுத்துக்காட்டாக வீட்டின் முன் பறந்துக்கொண்ண்டிருந்தது  ஒரு தேசியக்கொடி.

என்னைப் பார்த்ததும் அழகிய புன்னகையோடு வரவேற்றார். முதலில் அமருங்கள் என்று கூறியவர், பத்திரிகையிலிருந்து வந்திருப்பதை தெரிந்துக்கொண்டு சேலை உடுத்தி வந்து பேசத்தொடங்கினார். நீர்வீழ்ச்சியிலிருந்து கொட்டும் தெளிந்த நீரைப்போல பேசத்தொடங்கினார் அவர். அவரின் நியாபகங்கள் கொண்டிருக்கும் மனப்பதிவுகளை   பதிவு செய்வதற்கு ஒரு நாள் போதாது என்றுதான் நினைக்கிறேன்.
நாவலில் வரும் அத்தியாயங்களைப் போல அவர் தொடர்ந்து பேசி போய்க்கொண்டே இருக்கிறார்.


83 வயது; முதிர்ச்சி அவரின் நியாபக சக்திக்கு தடையாக இல்லை. நேற்று நடந்ததைப்போல அனைத்தையும் தன் கண்முன் கொண்டு வந்தார். அவரை சந்தித்து திரும்பிய பின்னும் நம் நாட்டின் சுதந்திரம் பற்றி பெருகிய நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. இங்கு பகிர்ந்துகொள்வது பழைய நினைவுகள்தான் என்றாலும், புதிய அறிதலின் மகிழ்ச்சியில் அவர் பேசுவதை வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவர்தான் ‘கூட்டுறவுத் தந்தை' என மலேசியர்களால் மதிக்கப்படும் துன்.வீ.தி.சம்பந்தனின் துணைவியார் தோ புவான் உமா சம்பந்தன். நான் பெற்ற அவரின் சுதந்திர நினைவுகளின் ஈரத்தை இனி  உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

யோகி: 31 ஆகஸ்ட் 1957-ஆம் ஆண்டு சுதந்திர நாளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

தோ புவான்: அந்த நாளை என்னால் என்றுமே மறக்கமுடியாது. முதல் சுதந்திர தினம் இருமாதிரியாகக் கொண்டாடப்பட்டது. முதலாவது ஆகஸ்ட் 30-ஆம் தேதி நல்லிரவில். அது ஒரு மரியாதைக்குரிய நிகழ்வு. வெள்ளையர்களின் கொடி இறக்கப்பட்டு நம்முடைய கொடி கம்பத்தில் ஏறிய முதல்நாள். நாட்டு மக்கள் அனைவருக்கும் அது ஒரு விசேஷ உணர்வு. அனைவரின் கண்களும் ஆனந்ததில் கண்ணீர் சிந்த சுதந்திரக் காற்று சுவாசித்த தருணம், மத இன வேறுபாட்டைத் தாண்டி அனைவரின் நெஞ்சத்திலும் விடுதலைச் சுதந்திர உணர்வு மட்டுமிருந்தது. இதைக் காப்பாற்றிட மலேசிய மக்களுக்காக துன் மட்டுமல்ல, துங்குவும் சிறப்புப் பிரார்த்தனை செய்தார். இரண்டாவது கொண்டாட்டமாக மறுநாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி சுதந்திரக் கொண்டாட்டம் நாடே கொண்டாடிட ஆரம்பமானது மலேசியாவின் முதல் நாள். 


யோகி: நாட்டின் 55 சுதந்திர தின கொண்டாட்டங்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவற்றில் உங்களால் மறக்க முடியாத சுதந்திர தினம் எது?

தோ புவான்: 1969 மே 13 சம்பவத்தைத் தொடர்ந்து அன்றைய வருடம் சுதந்திர தினம் கொண்டாடப்படவில்லை. இந்தச் சம்பவம் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைத்து இதயங்களையும்  கலங்கவைத்தது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகப் பாடுபட்டவர்கள் இந்தச் சம்பவத்தை (மே 13) நினைத்துக்கூடப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், இன்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி விளம்பரம் தேடிக்கொள்வதும். ஒவ்வொரு தேர்தலின்போதும் அதை நினைவுகூர்வதும் வேதனையளிக்கிறது. மே 13 சம்பவத்தைப் பற்றி பேசுவதை மலேசியர்கள் தவிர்க்க வேண்டும். 

யோகி: இன்றைய இளைய தலைமுறையினருக்கு சுதந்திரம் பற்றிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

தோ புவான்: நிச்சயமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை காரணம் சில தரப்பினர் நாட்டின்மீது பற்றோடும், சில தரப்பு அதற்கு எதிராகவும் இருக்கின்றனர். சில அரசாங்கத்தரப்பு அதிகாரிகளும்கூட நம்நாட்டின் கொடிக்குரிய மரியாதையைக் கொடுப்பதில்லை. கொடி கிழிந்துபோயும், வர்ணம் இழந்தும் இருப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் தன்னிச்சையாக இருக்க முடியவில்லை. சிலவேளையில் மலேசியக் கொடி மழையில் நனைந்துகொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அதைத் தெரியப்படுத்துவேன். நம்முடைய நாடு, நம்முடைய கொடி என்ற உணர்வு சொல்லி வரக்கூடாது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் அது இயற்கையாகவே ரத்தத்தில் இருக்க வேண்டிய ஒன்று.

அவர் பல பெண்கள் அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் தேசிய மகளிர் அமைப்புகளின் கவுன்சிலின் (NCWO) நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.


கே: துன் சம்பந்தனார் ஒரு சுதந்திரப்போராளி. ஒரு போராளியின் மனைவியாக நீங்கள் அவருக்குச் செய்தது என்ன?

ப: அவர் ஒரு டென்சனில்லாத மனிதர். நன்கு படித்தவர். எதையும் சிந்தித்து ஆராய்ந்து பொறுமையாகச் செய்யப் பழகிக்கொண்டவர். எந்தச் சவாலையும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குவதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். தவிர, சரித்திரம், தமிழ், அரசியல், தேசியம் என பல புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருப்பார், நான் ஒரு பட்டதாரியாக இருந்தாலும், அவருக்கு நான் எதையும் சொல்லித் தெரிவதில்லை. அவர் வீட்டில் இல்லாதபோது வீடுதேடி வரும் பாட்டாளிமக்களுக்கு உணவளித்து ஆதரித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, குறிப்பெடுத்து துன்னிடம் கொடுப்பேன். அது மக்களையும், அவர்களின் நிலை மற்றும் தேவைகளைக் கண்டறிய எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது. 

யோகி: நம் நாட்டின் இந்தியர்களின் வளர்ச்சி, அல்லது வீழ்ச்சி குறித்த கருத்தைக் கூறமுடியுமா? 

தோ புவான்: சத்து மலேசியா வருவதற்கு முன்பே மூவின மக்களும் ஒற்றுமை, பரஸ்பரம், புரிந்துணவுடந்தான் இருந்துதோம். ஆனால், நம்மிடையே வேற்றுமை ஏற்பட்டதற்கான வேரைத்தேடி அறுக்கத் தவறிவிட்டோம். இந்த நாட்டிற்கு சீனர்களும், இந்தியர்களும் அடிமைகளாகத்தான் வந்தார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால் சீனர்கள், மணல் மாதிரி வந்தார்கள், பாறையாய் மாறி பலப்படுத்திக்கொண்டார்கள். இந்தியர்களும் மணல் மாதிரி வந்து மணலாகவே இருந்துவிட்டார்கள். அதனால்தான் காற்றடிக்கும் பக்கமெல்லாம் சிதறி ஓடுகிற நிலை ஏற்பட்டது. நாமும் கண்டிப்பாகப் பலம் பெற வேண்டும். பாறையைவிட மலையாய் உயர்ந்து நிற்க வேண்டும். இன்னும் பழைய நண்டுக்கதை பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

யோகி: ‘மலைநாடு' தமிழ்ப்பத்திர்கை மற்றும் ‘மலேயன் டைம்ஸ்' ஆகிய பத்திரிகைகளை துன் நடத்தி வந்திருக்கிறார். இதனால், அவர் அடைந்த நஷ்டத்தை ஒரு குடும்பத்தலைவியாய் எப்படி எதிர்கொண்டீர்கள்?

தோ புவான்: பத்திரிகையைவிட ம.இ.கா-வை பலப்படுத்துவதற்குத்தான் அவர் நிறைய சொத்துகளை இழந்தார். நாட்டைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும், செய்திகள் வெளியிடவும், மக்கள் அதைத் தெரிந்துகொள்ளவும்தான் அவர் இரு பத்திரிகைகளை நடத்தினார். ஆனால், இரண்டுமே சொல்லிக்கொள்ளும்படி சரியாகப் போகவில்லை என்பது உண்மையே. 

யோகி: துன் காலமானபிறகு, தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக பத்து ஆண்டுகள் இருந்திருக்கிறீர்கள் அதைப்பற்றி சொல்லுங்கள்?

தோ புவான்: உண்மைதான் துன் காலமானபிறகு, தலைமைத்துவப் போராட்டத்தில் ஒருமுடிவைக் கையிலெடுக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தலைவராக இருந்து துன் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்து பின் விலகிக்கொண்டேன். இப்போது கூட்டுறவு அங்கத்தினர்கள் அதிகமாக இருக்கிறார்கள் எல்லாம். ஆரோக்கியமான விஷயங்கள்தான். 

யோகி: லண்டன் சென்று சுதந்திரப் பிரகண்டத்தில் கையொப்பமிட்ட தருணத்தைப் பற்றி துன் உங்களிடம் எப்படிப் பகிர்ந்துகொண்டார்?

தோ புவான்: தொலைபேசியில் அழைத்துப் பேசினார். நாடு திரும்பிய பிறகு அதன் விவரங்களைச் சொன்னார். அது ஒரு உன்னதமான தருணம். 


யோகி: துன் வேட்டி - ஜிப்பாவுடன்தான் லண்டன் வரை போய்வந்தார். அவர் போராட்டமும் அந்த உடையோடுதான் தொடர்ந்தது. பிரிட்டன் உயரதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதால்தான் துங்கு துன்னை லண்டனிலுள்ள ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்று மாற்று உடை வாங்கிக் கொடுத்ததாகவும் அவர் அதை அணிந்துகொண்டுதான் சுதந்திரப்பிரகடனத்தில் கையொப்பமிட்டு நாடுதிரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் பற்றி கூறமுடியாமா?

தோ புவான்: இங்கே ஒரு வரலாற்றுப்பிழை இருக்கிறது. அப்போதுவந்த Malay Mail பத்திரிகை வெளியிட்ட தவறான கருத்தாகும். துங்கு உடை வாங்கித்தந்தது உண்மைதான். ஆனால், துன் அதை அணியவில்லை. வேட்டி - ஜிப்பா அடிமைகளின் உடை என்று பிரிட்டிஷார் எண்ணியிருந்தனர். அது நமது கலாச்சார உடை என்று அவர்களுக்குத் தெரியாது. மேலும் துன் பாட்டாளி மக்களின் சார்பில் லண்டன் சென்றதனால், அவர் அந்த உடையை மாற்றிக்கொள்ளவே இல்லை. துங்கு வாங்கித்தந்த உடையை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளோம். 

யோகி: பிறகு துன் வீ.தி.சம்பந்தன் எப்போது துங்கு வாங்கித் தந்த உடையை அணிந்தார்?

தோ புவான்: 1963-ஆம் ஆண்டு தவிர்க்கமுடியாத காரணத்தினால் துன், தன் வேட்டி - ஜிப்பா கலாச்சாரத்தை மாற்றிக்கொண்டார். 

யோகி: கடந்த சில வருடங்களாகவே நாட்டில் தலைதூக்கியிருக்கும் ஹிண்ராப், பெர்சே போன்ற அமைப்புகள் குறித்த உங்களின் அபிப்பிராயம் கூறுங்கள்?

தோ புவான்: நான் இங்கே ஒன்றை முக்கியமாக கூற ஆசைப்படுகிறேன். பல அமைப்புகளும் இயக்கங்களும் எதற்காக உருவாகின்றன? நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையை செய்வதற்குதானே? நாட்டுக்கு உபயோகமான காரியங்கள் செய்யக்கூடிய எந்த இயக்கமும் ஆதரிக்கக்கூடியதுதான். அதே சமயம் நாட்டுக்கும் நன்மையை செய்யாமல் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் எந்த ஓர் இயக்கத்தையும் மக்களே புறக்கணிப்பர்கள்.

யோகி:பல ஆயிரம் பேர் வாக்காளர்களாக பதியாமலும், ஓட்டுரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும் இருக்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் சொல்வது?

தோ புவான்: மலேசியா, இங்கு பிறந்திருக்கும் அனைவருக்கும் சொந்தமான நாடு. அதை உறுதி செய்வதுதான் ஓட்டுரிமை. அதையும் இழந்து அல்லது விட்டுக்கொடுத்து விட்டால் இந்த நாட்டின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் என்ன? இங்கே அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால், பொதுமக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் இன்னும் கொஞ்சம் சிரமத்தை எடுக்க வேண்டும். 

வெளிநாடுகளில் குறிப்பிட்ட வயது வந்ததும் குடிமக்கள் வாக்காளர்களாக பதிவதற்கு சங்கங்களும் அதற்கான அமைப்புகளும் உள்ளன. இளைஞர்கள் அங்கே மிகவும் எளிய முறையில் வாக்காளர்கள் ஆகின்றனர். ஆனால், இங்கே அதற்கான விழிப்புணர்வு பயிற்சிகள் எதுவும் இல்லாததால் ஓட்டுரிமை பற்றிய புரிந்துணர்வே யாருக்கும் இருப்பதில்லை. 
இந்த நாட்டை வெள்ளையர்கள் ரப்பரை உற்பத்தி செய்யும் ஒரு காடாகத்தான் பார்த்தார்கள். நாட்டிலிருந்த மக்கள் பலவீனமானவர்களாகத்தான் வெள்ளையனின் கண்களுக்கு தெரிந்தார்கள். இத்தனையையும் தாண்டி போராடி, ரத்தம் சிந்தி, பல தியாகங்களுக்குப் பிறகுதான் விடுதலை என்ற சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்கும் 55 வயதாகிவிட்டது. இந்நிலையில், இன்னும் பலர் தங்களின் கடமையை மறந்து வாக்காளர்களாக பதியாமல் இருப்பது, அவர்களுக்கு நாட்டின் மீது உள்ள விசுவாசத்தையே சந்தேகிக்கும் அபாயம் ஏற்படுகிறது. 


யோகி: இறுதியாக நம் நாட்டு மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா?

தோ புவான்: துன் நாட்டிற்காக உழைத்தார்.  அரசு அலுவலகங்களில் அமைச்சராக இருந்தார். மக்களை நெருங்க அவருக்கு எவ்விதத் தடையும் ஏற்பட்டதில்லை. ஆனால், அவரை ம.இ.கா தலைவர் என்றே அறிமுகப்படுத்துகிறார்கள். இதை மாற்ற வேண்டும்.  துன் இந்த மலாயாவில் ஒரு நாள் முதல்வராக இருந்திருக்கிறார். இது இந்த நாட்டு மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும். அதுபோல, இப்போது, அந்த வாய்ப்பு நம்  இந்திய தலைவருக்கும் வழங்க படுமா?  அதற்கு நம் உண்மை வரலாற்றை மக்களுக்கு சொல்ல வேண்டும். இந்நாட்டு இளைஞர்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அவர்களுக்கு வலவலவென்று எதையும் சொல்லத்தேவையில்லை. சுதந்திர தினத்தில் சுதந்திர நாளைக் கொண்டாடும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் நாட்டுப்பற்று துளிர்விட்டு ஆலமரம் போல் ஓங்கி வளர வேண்டும்.  

(‘நம் நாடு' 2012 )

தோ புவான் உமா சம்பந்தன் பற்றி சில வரிகள்...

தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் 8 செப்டம்பர் 1929-ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை பொறியியல் துறை நிபுணர் சுப்ரமணியம். இவர் சிங்கப்பூர் கடற்படை பிரிவில் பணியாற்றிவந்தார். தாயார் ஜெயலட்சுமி. பெற்றோருக்கு இவரே தலைப்பிள்ளை. தோ புவான் முறையாக 7 ஆண்டுகள் வீணை மீட்டும் பயிற்ச்சியை மேற்கொண்டவர். அவரின் வீணை இன்றும் அவரின் பூஜை அறையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. ஒரு பட்டதாரியான அவர், 1956-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி துன் வீ.தி.சம்பந்தனை கரம் பிடித்தார். அவரின் அனுபவத்தில் மலேசியாவின் 6 பிரதமரின் தலைமைத்துவத்திலும் வாழ்ந்திருக்கிறார்.

நானும் தோ புவானும் (2014-ஆம் ஆண்டு)

அவரை நேர்காணல் செய்து 2 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கையில்

2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி தோ புவான் உமா சம்பந்தனுக்கு கோலாலம்பூர் இந்திய சங்கம் வாழ்நாள் சாதனை விருது வழங்கி சிறப்பித்ததுடன், அஞ்சல் தலையையும் வெளியிட்டது. அந்த நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை.

ஆனால், 2014-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி ம.இ.கா-வின் ஏற்பாட்டில் துன் வீ.தி.சம்பந்தனுக்காக முதல் முறையாக நினைவு விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் தோ புவான் உமா சம்பந்தன் தனது ஒரே மகளான தேவகுஞ்சரியுடன் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் செய்யப்படும் மாலை மரியாதை, பொன்னாடை எதையும் ஏற்றுக்கொள்ளாத மனுசி தோ புவான். என்னதான் வர்ப்புறுத்தினாலும் தன் கொள்கைக்கு எதிராக அவர் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சியில் பத்திரிகை செய்தியாளராக நான் கலந்துக்கொண்டேன். நிகழ்வை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த தருணம், தோ புவான் என்னை அழைத்தார். எதற்கு என்று தெரியாத குழப்பத்தில் போனேன். காரணம் அவரை முதன் முதலில் சந்திக்கும் போது 83 வயது. இப்போது அவருக்கு 85 வயது. என்னை நினைவில் வைத்திருக்க வாய்ப்பு இல்லை. எதற்காக என்ற முகபாவனையுடன் அருகில் போனேன்.
“உன் பெயர் என்ன?”
“யோகி”
“நல்ல பெயர். நீ நல்லப் பெண்.நான் உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். காரணம் தெரியவில்லை.  பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்; உன்னைபோல்தான்” என்று கூறியவர் நான் எதிர்பார்க்காதவாறு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அத்தனை பெரிய கூட்டத்தில் அதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் அதை கவனிக்கவில்லைதான். கவனித்த சில பேர் என்னை அதன்பிறகு மிகவும் மரியாதையுடன் பார்த்தனர். அந்த முத்தத்திற்கு என்ன  அர்த்தம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த ஈரம் காயாமல் நான் இன்னும் காத்துவருகிறேன்.

2 கருத்துகள்: