வெள்ளி, 24 அக்டோபர், 2014

கட்டங்களில் அமைந்த உலகு ...1


துடைக்கப்படாத இரத்தக் கறைகள்


 தொடர்ந்து நான் என் நினைவுகளையும் அதன் வசப்படாமல் ஒளிந்திருக்கும் நடந்து முடிந்தசம்பவங்களையும் பதிவு செய்வதால் எழுதிக்கொண்டே இருக்கும் சாத்தியம் கிடைத்திருக்கிறது. எழுத்து சொல்லும் அளவுக்கு பேச்சு சொல்வதில்லை. என் நினைவுகளை கிண்டிக் கொண்டே இருப்பதால் இதுவரை மறந்திருந்த நினைவுகள் கூட ஒரு சுமையானநீரூற்று போலபொங்கிப் பெருகஆரம்பித்துவிட்டன. தொந்தரவு செய்யும் நினைவுகளை பதிய பதிய சுமை குறைந்தப்பாடில்லை. பேனாவை விரலின் இருக்கையில் அமர்த்தும் போதெல்லாம் சுமை இரட்டிப்பாகி விடுகிறது. குறைந்த பட்சம் மனதின் டைரியை புரட்டுகிறேன் என்ற திருப்தியோடுதான் சிந்திக்கவும் எழுதவும் வேண்டியுள்ளது.

சம்பாத்தியம் புருஷ லட்சணம் என்றொரு பொதுமொழி வழக்கில் உண்டு. அப்படியென்றால் ஒரு பெண்ணுக்கு சம்பாத்தியம் என்பது என்ன? அவளின் சம்பாத்தியம் எந்த லட்சணத்துக்கு வித்திட்டு இருக்கிறது? அழகுசாதன பொருட்களுக்கு உடை, காலணி, நகைகளுக்கு மட்டும் தான் ஒரு பெண்ணின் சம்பாத்தியம் செலவழிகிறதா? அதனால் அவளுக்கு மட்டும்தான் லாபமா?ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை. ஒட்டி பிறந்த இரட்டையர் ஆயினும் இருவரும் ஒருவர் இல்லை. பெண்களும் அவ்வாரே.அவர்களின் சம்பாத்தியமும் அப்படியே.

முப்பது வயதுக்குள்ளான எனது உழைப்பை மூன்று பாகமாகப் பிரிக்கலாம்.அப்பாவின் இறப்புக்கு முன், இறப்புக்கு பின் மற்றும் திருமணத்துக்குப் பின் என பிரிகிறது அந்த மூன்று பாகமும். மூன்று பாகத்துக்குள்ளும் நான் மாறி மாறி செய்த வெவ்வேறு பணிகளுக்குள் வெவ்வேறு வகையான வாழ்வும் ஒளிந்துக்கொண்டு இருக்கின்றன.

ஒவ்வோறு பணிக்கு பின்னாலும் சில சுவாரஷ்மான மனிதர்களும் சுவாரஷ்யமான சம்பவங்களும் இருக்கின்றன. அதே வேளையில் மனதை நோகடித்த சம்பவங்களும் உழைப்பை சுரண்டிய முதலாளித்துவமும் இருக்கவும் செய்தன. சில பணிகளை விரும்பி செய்தேன்.சில பணிகளை பார்த்த மாத்திரமே நமக்கு சரிவராது என திரும்பி வந்திருக்கிறேன். சில பணிகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது. சில அநியாயத்துக்கு கொள்ளையடிக்கப்பட்டது. என் பதிவில் காலப்பிழைகள் இருக்கலாம்.எந்த நாளில் எந்த வருடத்தில் எனது எத்தனையாவது வயதில் என்று சொல்வதில் குழப்பமடைகிறேன். ஆனால் காட்சிப்பிழை இருக்காது.கடந்து வந்த பாதையில் தடங்கள் அப்படியே இருக்கின்றன. அதன் பசுமையோடும் ரணங்களோடும். அதில் மீண்டும் ஒரு தரம் சென்று பயணித்து வருவதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.

PMR தேர்வுக்குப் பிறகு, பகுதி நேரமாக என் தோழிகள் சிலர் அங்காடிக் கடைகளில் வேலை செய்துக் கொண்டிருந்தனர். எனக்கும் அவர்களோடு சேர்த்து வேலை செய்ய ஆர்வமாக இருந்தது. குறைந்தப்பட்சம் என் பள்ளி படிப்புக்கு, பள்ளி பேருந்துக்கு, புத்தகங்கள் வாங்குவதற்கு ,அடிப்படை செலவுக்காவது அப்பாவுக்கு உதவியாக இருக்கும் என்றெண்ணியிருந்தேன். ஆனால் பாதுகாப்பு கருதியோ,பாசத்தினாலோ இல்லை என் மேல் நம்பிக்கை இல்லாமலோ அப்பா என்னை அனுமதிக்கவில்லை. ஏன் என்ற காரணத்தை தெரியபடுத்தாமலேயே இறந்தும் விட்டார். பணத்தின் ருசியை கண்டுவிட்டால் படிப்பில் நாட்டம் செல்லாது என்ற குற்றசாட்டை மட்டும் அவ்வப்போது சுமத்துவது உண்டு. காலத்தின் கட்டாயம் அப்பாவை சம்மதிக்க வைத்தது. அப்பாவின் முடிவில் மாற்றத்தை காண்பது அத்தனை சுலபமல்ல. கடவுளே வந்து சொன்னாலும் யோசிப்பவர் அவரின் அண்ணன் சொன்னால் யோசிக்கவே மாட்டார். கோயில் மாடுபோலதலையை ஆட்டி விடுவார்.

பெரியப்பா பேசுவதையும் அப்பா வாயை மூடிக் கொண்டு கேட்பதையும் இப்போது கற்பனையில் நினைத்துப்பார்த்தால் 'வானத்தைப் போல' படம் பார்பதைப் போல இருக்கும். எங்களை அடக்க நினைக்கும் அப்பா, பெரியப்பா முன்னாடி அடங்கி, ஒடுங்கி இருப்பார். அப்பாவிடம் சாதாரணமாக கதைப்பதற்கு யோசிக்கும் நாங்கள் பெரியப்பாவை கட்டிப்பிடித்துக் கொள்வோம். என் தம்பி தங்கைகளும் பெரியப்பாவிடம் நெருக்கமாக இருந்தார்கள். வீட்டிற்கு வரும் பெரியப்பாவிடம் நாங்கள் நிறைய பேசுவோம். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் பெரியப்பாவின் மகள்கள் இருவரும் பகுதி நேரம் வேலைக்கு போவதாக சொன்னார். நானும் பகுதி நேர வேலை செய்ய விருப்பம் கொள்கிறேன், அப்பா அனுமதிக்கவே இல்லை என்று நாசுக்காக சொன்னேன்.  வேலைக்கு போவதால் படிப்பில் கோட்டை விட மாட்டியே என்று பெரியப்பா கேட்டார். கவனமுடன் இருப்பேன் என்று உறுதிக் கூறினேன். 'எங்கே வேலைக்கு போகப் போகிறாய்?' என்றார். அங்காடி கடைக்கு என்றேன். அங்கேயெல்லாம் வேண்டாம் சரிவராது என்றார். இவர்கள் எல்லாம் கூண்டோடு கைலாசம் போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று மனதில் கூறிக் கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து பெரியப்பா மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பா வழக்கம் போல 'வானத்தைப் போல' படம்  ஓட்டினார். இதுபோல சமயங்களிள்தான் நானும் என் உடன்பிறப்புகளும் கண்மொழியிலும் கைமொழியிலும் ஜாடையில் பேசிக் கொள்வோம். பிறகு சிரித்துக் கொள்வோம்.
அன்று பெரியப்பா எனக்கு ஒரு பகுதி நேர வேலையோடு வந்திருந்தார். என் வீட்டிற்கு பக்கத்து சாலையோரம் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனைக்கு தாதி வேலைக்கு பேசிவிட்டதாகவும் அவசரமாக அங்கே தாதி தேவைப்படுவதால் மறுநாளே வேலையில் சேர்ந்து விடுமாறு பெரியப்பா சொன்னார். எனக்கு ஆச்சரியம். நான் ஒரு நான்காம் படிவ மாணவி.17 வயது பெண். எப்படி தாதியாக முடியும்? தாதிக்கு பயிற்சி வேண்டாமா? அதற்கான கல்வி வேண்டாமா? மாணவர்கள் எல்லாம் தாதியாக முடியுமா? பரவாயில்லையே! நான் அந்த நிமிடமே கனவுக் காண தொடங்கி விட்டேன். வெள்ளை உடை ,தலையில் வெள்ளை தொப்பி. ஒரு படத்தில் சுகாஷினி தாதியாக வருவார். கனிவாக பேசுவார். இந்த உடை அணிந்து விட்டால் தனக்கு கோபமே வராது என்பார். அவரின் தாக்கம் என்னுள் குடியேறிகொண்டது. நான் part time nurse என்று சொல்லிப்பார்த்துக் கொண்டேன். எனக்கே பெருமையாக இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. அவரின் முகமே சொன்னது. பிள்ளையோட படிப்பு என்றார்? பிள்ளை காட்டு வேலைக்கு போகவில்லை. கொளரவமான வேலைக்கு போகிறாள். பிள்ளைகளுக்கு பணத்தின் அருமையையும் உழைப்பை பற்றியும் சொல்லிக் கொடுக்கணும். ஒவ்வொரு காசின் மதிப்பையும் உணர்த்தும் போது வீண்செலவு செய்யவதற்கு யோசிப்பார்கள். அப்பாவின் முகம் அப்படியே இருந்தது. உண்மைதான் நீங்க சொல்கிறது! என்பதைப் போல தலையை மட்டும் ஆட்டினார்.

பெரியப்பா தந்திரக்காரர். யார்யாரை எப்படி பராமரிப்பது என்பது அவருக்கு தெரியும். நம்ம செய்யும் தொழிலையே நம்ப பிள்ளைகளும் செய்யக் கூடாது. யாருக்குத் தெரியும். எதிர்காலத்தில யோகிக்கும் இந்த வேலையே அரசாங்கத்துல கிடைக்கலாம். இப்பவே பழகட்டும். அனுபவம் இருந்தால் இன்னும் வேலை சுலபமாக கிடைக்கும் என்றதும் என் அப்பாவின் முகம் மலர்ந்து; நீங்கள் சொல்வதுதான் சரி என்றார். நாளைக்கே வேலைக்கு போகட்டும். பக்கத்தில் தானே. நடந்து போனால் கூட ஐந்து நிமிடத்தில் கிளினிக் போய் விடலாம். பக்கத்திலேயே இருப்பதால் அவ்வப்போது போய் பார்த்தும் கொள்ளலாம் என்று கூறி ஆறுதல் அடைந்து கொண்டார்.பெரியப்பா என்னைப் பார்த்து நெற்றியை உயர்த்தினார். நான் தலையை ஆட்டி நன்றியை தெரிவித்தேன்.

அப்பாவும் பெரியப்பாவும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள். ஆனால் அப்பாவை விட பெரியப்பாவுக்கு இன்னும் கோபம் அதிகமாக வரும். தப்போ, சரியோ அவருக்கு சினமூட்டும் காரியம் செய்தால் கர்ஜனை எல்லாம் கிடையாது.வேட்டைதான். அடிக்கிர அடியில் ரத்தம் வந்து விடும். யார் வீட்டு பிள்ளை என்றெல்லாம் பார்க்கமாட்டார். அவர் ஒரு மினி நாட்டாமை போல் கொஞ்சம் செல்வாக்கு உள்ளவரும் கூட. பெரியப்பாவிடம் எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. விடைப்பெறும் போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பார். அப்படி என்றால் என் கவனம் உன் மேல் உண்டு. எச்சரிக்கையாக இரு என்று அர்த்தம். பெரியப்பா அதை என்னிடம் கூறிவிட்டுச் சென்றார். அப்பாவும் இதைப்போலவே மூன்று வார்த்தை சொல்வார். பொய், பித்தலாட்டம், தில்லு முல்லு எனக்கு பிடிக்காது என்பார். அப்படி என்றால் உன் பாட்சா என்னிடம் பலிக்காது என்று அர்த்தம். அப்பா என்னை அந்த தனியார் மருத்தவமனையில் இறங்கிவிட்டு இதைத்தான் சொன்னார். உள்ளே இழுத்த மூச்சை வெளியே விட்டுவிட்டு மருத்தவமனையினுள் நுழைந்தேன். சிறிய klinik தான். பெயர் பதியும் இடத்தில் என் வயது ஒத்த பெண் ஒருத்தி இருந்தாள். நான் பகுதி நேர வேலைக்கு வந்திருப்பதாக சொன்னேன். அவள் மருத்தவரிடம் என்னை அறிமுகம் படுத்தி வைத்தார். அவர் ஒரு சிடு மூஞ்சி மருத்துவர்.

“பேரு என்ன” என்றார்.
“யோகி” என்றேன்.
“ஒழுங்கா வேலை கத்துக்கோ” என்றார்.
அவ்வளவுதான் என்னுடைய நேர்முகத் தேர்வு.

மருத்துவரின் மனைவிதான் எனக்கு என்னென்ன வேலை, என்று சொன்னார்.
“மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பதுமணிவரை வரை வேலை. ஞாயிறுக்கிழமை மட்டும் காலையில் வந்து கிளினிக்கை திறக்க வேண்டும். மாதம் 250 வெள்ளி சம்பளம். மற்ற வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்” என்றார் மருத்துவரின் மனைவி. வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் மட்டும் பயணித்துக் கொண்டிருந்த எனக்கு புதிய ஆட்களின் அறிமுகமும் சந்திப்பும் ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால் நான் நினைத்தப்படி தாதி உடை இல்லை.வீட்டு உடைதான் என்றாலும் முழுக்கால் சிலுவாரும்,சட்டையும் அணிய வேண்டும். அது எனக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. நோயின் தீர்வுக்கான ஒரு தொழிற்சாலையாக அது எனக்கு தெரிந்தது. அதிகமான நோயாளியாக அங்கே சீனர்கள்தான் வந்தார்கள். வயிற்று வலி, காய்ச்சல், சளி, இருமல், வாந்தி போன்ற சொற்களை மட்டும் சீனத்தில் தெரிந்து வைத்துக் கொண்டு டாக்டர் நோயளிகளை அசத்தி விடுவார். சீனர்கள் மலாய் மொழியில் கொஞ்சம் மட்டம் என்பதால் சீனம் தெரிந்த மருத்துவரிடம் எளிமையாக வைத்தியம் செய்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு பரம்பரையையே அந்த கிளினிக்கில் பதிவர்.

டாக்டாரின் கிறுக்கு எழுத்து ஆரம்பத்தில் எனக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது. டாக்டாரோ இரண்டு நாட்களில் அனைத்தையும் கற்றுக் கொள்ள எதிர்பாத்தார். அதில் நான் தோல்வி அடைந்த போது திட்ட ஆரம்பித்தார். பிறகுதான் தெரிந்தது அவர் என்னை தெலுங்கில் ஏசுகிறார் என்று. சில சமயம் கெட்ட கெட்ட வார்த்தைகளும் தெலுங்கில் தூள் பறக்கும். நான் ஒரு வாரத்தில் அனைத்தையும் கற்று வசப்பாடலிருந்து காப்பாற்றப்பட்டேன். Termo meter நாக்கு அடியில் வைத்து, 1 நிமிடம் சென்று பார்க்கும் போது 120 degree அல்லது அதற்கு குறைவாக இருந்தால் காய்ச்சல் இல்லை. அதைவிட கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் காய்ச்சல் என தெரிவு செய்யப்படும். மூன்று வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அக்குலில் Termo meter-ரை வைத்து காய்ச்சல் கணக்கிட வேண்டும்.

நோயாளிகள் டாக்டரை மதிக்கும் அளவுக்கு தாதியர்களை மதித்தார்கள். எனக்கு அது பிடித்திருந்தது. விஷமமாக பேசும் ஆண்களும், காய்ச்சலை அளக்கும் போது கையை பிடிக்கும் பேர்வழிகளும் கூட கிளினிக்கிற்கு வந்தார்கள். திரைப்படத்தில் வந்த சுகாசினிப் போல என்னால் இருக்க முடியவில்லை. முகத்தில் எத்தனை கோபத்தை காட்ட முடியுமோ காண்பித்தேன். வேண்டும் என்றே அதிக நேரம் காத்திருக்க வைத்து மருந்து கொடுத்தேன். ஒரு தாதிக்கான இலக்கணத்தோடு என்னால் நடந்து கொள்ள முடியவில்லை. காலையில் கிளினிக்கை திறந்து முன் வாசலை கழுவி, கிளினிக்கை துடைத்து, கழிவறையை கழுவி, முடிந்த மருந்துகளை நிரப்பி, துண்டுகளை துவைத்து எனநான் செய்யும் வேலைக்கு குறைந்த சம்பளம் வாங்குவதாக நண்பர்கள் கூறினார்கள். ஆனால் நான் அதற்காக எல்லாம் வேலையை விடவில்லை.

அதற்கு வேறு காரணங்கள் இருந்தன. முதலாவதாக டாக்டர் வீடு அருகிலேயே இருப்பதால் அவர் அடிக்கடி வீட்டுக்குப் போய் விடுவார். நோயாளிகள் வரும் போது டாக்டரை தொலைப்பேசியில் அழைக்க வேண்டும். அனைத்து நோயாளிகளும் பொறுமையாக இருக்கமாட்டார்கள். சிலர் சத்தம் போடுவார்கள், ஏசுவார்கள். குறிப்பாக பெண்கள் காத்திருப்பதை விருப்புவதே இல்லை. மருத்துவர்கள் கடவுளாக பாவிக்க பக்தர்கள் பூசாரிகளை பந்தாடுகிறார்கள். கிளினிக் தாதிகளுக்கு நோயாளிகள் பணம் கொடுக்கும் முதலாளிகள் என்ற படியால் அனைத்தையும் முகத்துக்கு பின்னால் மறைக்க வேண்டி இருந்தது. அத்தனை இலகுவாக என்னால் நடிக்க முடியவில்லை.

இரண்டாவதாக, கிளினிக்கில் இருமல் மருந்தைப் போல ஒன்றும் விற்கப்பட்டது. அதை முன்னால் போதைப் பித்தர்கள் வாங்கி போவார்கள். ஆனால் அதை விற்கும் போது காகிதத்தில் சுற்றி கைமாறுவதை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும். அந்த மருந்தை அறையினுள் ஒளித்து தான் வைத்திருந்தார்கள். சந்தேகம் வலுப்பெற சகத்தோழியிடம் காரணத்தை கேட்டேன். அது தடைசெய்யப்பட்ட மருந்து என்றாள். சில சமயம் காவல் நிலையத்தில் இருந்தும் சோதனைகள் நடந்தது. அது என்னை அச்சத்தில் ஆழ்த்தியது. காவல் அதிகாரியை காணும் போது ரத்தம் உறைவது போலும், மயக்கம் வருவது போலும் ஒரு பிரம்மை இருந்தது. இந்த மருத்துவமனையில் வேலை செய்வதற்காக உன்னை கைது செய்கிறேன் என் ஒரு அதிகாரி கையில் விளங்கு மாட்டுவதைப் போல் கனவு எல்லாம் வந்த போனது. நோயாளியாக வரும் காவல் அதிகாரியைக் கண்டால் கூட உளர ஆரம்பித்து விட்டேன்.

ஆனால், மூன்றாவது காரணம் நான் வேலையை நிறுத்துவதற்கு போதிய அதிர்ச்சியைக் கொடுத்தது. பானை செய்யும் தொழிற்சாலையின் மருத்துவ உரிமையை எங்கள் கிளினிக் தான் பெற்றிருந்தது. தொழிலாளர்கள் இலவசமாக சிகிச்சை பெறுவார்கள். ஒரு முறை ரத்த வெள்ளத்துடன் ஒரு தொழிலாளரை துண்டில் சுற்றி கூட்டி வந்தார்கள். கிளினிக் அமலி துமளியாக இருந்தது. “டாக்டர் எங்கே” சீக்கிரம் பார்க்க சொல்லுங்கள்” என்று ஒரே படபடக்கும் குரல்கள். ரத்தம் துண்டை நனைத்து கீழே சொட்டியது. அடிப்பட்டவரின் நிலை மோசமாக இருந்தது. தெப்பமாக ரத்தத்தில் நனைந்து உயிருக்கு போராடும் மனிதரை அப்போது தான் பார்த்தேன். என் பேச்சு உடைந்து விழுந்தது.நான் பதற்றம் அடைந்த நிலையில் இருந்தேன். அவசரமாக டாக்டரின் அறையை திறந்து, 'டாக்டர் அவசரம்' என்றேன். என்னை அலட்சியமாக பார்த்து, ' போய் காப்பாத்து' என்றார். என் பதற்றம் குழப்பமாக மாற அப்படியே நின்றேன். டாக்டர் மிகவும் நிதானமாக போலிசில் புகார் கொடுத்தாச்சா? என்று அவர்களை பார்த்து கேட்டார். பிறகு இந்த கேசையெல்லாம் இங்கே பார்க்க வசதி இல்லையென கூறியவர், பெரிய மருத்துவமனைக்கு கொண்டு போக சொல்லிவிட்டார்.
ஒரு முதலுதவி கூடசெய்யாமல், அடிப்பட்டவரைப் பார்க்கவும் விரும்பாமல் டாக்டர் நிதானமாக என்னைப் பார்த்து கீழே கொட்டி இருந்த ரத்தத்தை கழுவி விட சொன்னார். வந்தவர்கள் விட்டு சென்ற மரண பயமும், கூப்பாடும் என்னையே சுற்றி சுற்றி வந்தது. நெஞ்சு வலித்தது. அழுதுக் கொண்டே ரத்தத்தை துடைத்தேன். நாசியில் ஏறிய ரத்த வாடை, என் அப்பா, தம்பி, என் உறவுகளின் இரத்தவாடையாய் இராட்சத உருவம் எடுத்து பயம் காட்டியது. கண்களை துடைத்துக் கொண்டேன். கைகளை கழுவிக் கொண்டேன். என்னை அறியாமலே Clinic Nurse Yogi என்று என் பெயர் பொறிக்கப் பட்ட பெயர் அட்டையை சட்டையில் இருந்து கழற்றி கையில் வைத்திருந்தேன். அதை அணிந்து கொள்ள தைரியம் வரவில்லை. கண்களுக்குத் தெரியாத மனித உயிர்களின் இரத்தச்சுவடுகள் ஏக்கமாக அதிலிருந்து வெளிப்பட்டு ஒத்தக் குரலாய் என்னைக் காப்பாற்ற அழைப்பது போல இருந்தது. எந்தமுறையான பயிற்சியும் இல்லாத நான் யாரை எப்படி காப்பாற்றுவதென காதுகளை இறுக்க மூடிக்கொண்டேன்.
அப்பாவை பார்க்கவேண்டும் போல இருந்தது. கவுண்டரில் பெயர் அட்டையை வைத்து விட்டு வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன். நான் வெளியேறியதும் அந்தக் கிளினிக் பரிதாபமானவர்களின் இரத்தங்களால் ஒரு கடலலையின் வேகத்தில் மோதித்தள்ளப்பட்டதாகத் திரும்பிப்பார்காமலேயே உணரமுடிந்தது.

-ஜனவரி 2011
(நன்றி வல்லினம் அகப்பக்கம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக