உலக உணவு தினம் என்றால் என்ன?
உங்களுக்கு பதில் தெரியமா? அன்றைய தினம் விதவிதமான உணவுகளை வாங்கி உண்டு மகிழ்வதா? அல்லது பார்ட்டி, கேளிக்கைகள் என்று கூட்டாக உணவுகளை வைத்து கூட்டமாக உண்டு கொண்டாடி மகிழ்வதா? 70 விழுக்காட்டினருக்கு உலக தினங்களைக் குறித்த பிரக்ஞை இல்லாதது அறியாமை என்று சொல்லிவிடமுடியாது. அது அறியாமையின் உச்சம். வெட்கப்படவேண்டிய விஷயம். சிலர் அர்த்தம் தெரியாமலும், ஏன் - எதற்கு என்ற காரணம் புரியாமலும் இதுபோல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துவிடுகின்றனர்.

வறுமை நாடுகளில் ஒருவேளைக்கு ஒரு பிடியளவு உணவுகூட கிடைக்காத நிலை உள்ளது. பசியின் கொடுமையால் மனித இறைச்சியை உண்ணும் நிலையும் சில நாடுகளில் நடந்துள்ளதும் இன்னும் நடந்துக்கொண்டிருப்பதும் அவ்வப்போது வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

மலேசியாவைப் பொருத்தவரை உணவு விஷயத்தில்
மக்களின் விழிப்புணர்வு எப்படி இருக்கிறது?
இங்கே 24 மணிநேர மாமாக் கடைகள், விரைவு உணவுக் கடைகள் என எந்த நேரத்தில் உணவு வேண்டும் என்றாலும் உண்பதற்கு அல்லது உணவை வாங்குவதற்குக் கடைகள் இருக்கின்றன. ஏழைகளும், பணக்காரர்களும் யாராக இருந்தாலும், உணவு விஷயத்தில் நேரம் காலம் எல்லாம் இங்கு பார்ப்பது இல்லை. சமையளுக்கான பொருள்கள் வாங்கும் கடைகளும் இங்கு 24 மணி நேரமும் இயங்குகின்றன.

இங்கே உணவை பசித்து உண்பது குறைவாகவே இருக்கிறது. பொழுது போக்கு நிலையில் தேனீர், பலகாரம் விளையாடுவதற்கு சதுரங்கம் என்ற களிப்பில் மாலை நேர தேனீர் நேரம் நகரும். அப்படியே பகல் நேரமும், இரவு நேரமும் அப்படியே, ஏன் காலை நேரம்கூட இப்படி அமைவது உண்டு. தேனீர் பலகாரங்கள் உணவு பட்டியலில் மலேசியர்கள் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். அது அவர்களுக்கு snack நேரம். பிறகு, உணவு நேரம் தனியாக. பசித்த வயிறு காண்பது அறிதாகிவிட்டது இங்கு. அதே நேரத்தில் நம்மளவிற்கு உலகத்தில் யாரும் உணவை விரயமாக்குகிறார்களா என்று தெரியவில்லை.
நமது நாட்டில் உணவைப்பற்றிய விழிப்புணர்வு எப்படி உள்ளது?
இதை அறிய பினாங்கு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பாராவை தொடர்புக்கொண்டேன். சுப்பாரவ் கடந்த 35 ஆண்டுகளாகப் பயனீட்டாளர் சங்கத்தின் வழி பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவர் பேசுகையில்...
![]() |
சுப்பாரவ் |

உணவு விரயமாக்குதல் நாடுகளின் கணக்கெடுப்பில் நமது நாட்டிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. உண்மையாக இருக்கும என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். கடந்த ஆண்டு பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வு நம்பமுடியாத ஒரு தகவலை நமக்குச் சொன்னது. அதாவது மலேசியர்கள் ஒரு வருடத்தில் விரயமாக்கும் உணவில் 25 இரட்டை மாடிக்கோபுரங்களைக் கட்டலாமாம்.
பெருநாள், பண்டிகை, திருவிழா திருமணம் போன்ற கூட்டு விழாக்களில் வழங்கப்படும் உணவை எடுப்பவர்கள் தங்கள் வயிற்றுக்குப் போதுமான உணவை எடுப்பதில்லை. அதற்கும் மேலாக மலைபோல் தட்டில் உணவைக் குவித்துவைத்து, அதை உண்ண முடியாமல், கோழி, இரையை கிளறி விடுவதுபோல் கிளறி அப்படியே வைத்து விடுவர். இப்படித்தான் பலபேர் உணவை விரையமாக்குகின்றனர்.


என்னிடம் சுப்பாராவ் கூறிய மற்றொரு விஷயம் உண்மையில் சிந்திக்கக்கூடியதே. அவர் சுட்டிக்காட்டியது இந்திய சினிமாவை. அதாவது இந்திய சினிமாவில் மட்டும்தான் உணவைக் காலால் எட்டி உதைக்கிற காட்சி, சந்தையில் சண்டையிட்டு உணவுகள் நாசமாகும் காட்சியெல்லாம் வைக்கப்படுகிறது. மற்ற நாட்டு சினிமாவில் இதுபோன்ற காட்சிகளைக் காண்பது அரிது. உணவு ஒரு கேளிக்கைப் பொருளல்ல என்று சுப்பாராவ் கூறினார். சிந்தித்துப் பார்த்தால் அதிலும் உண்மை இருக்கவே செய்கிறது.
நமது நாட்டில் நமக்கு உணவு மிக எளிமையாகக் கிடைக்கிறது. பசிக்கிறது என்று சொன்னால், யாராக இருந்தாலும் உணவு வாங்கிக் கொடுக்க இங்கு தயங்குவதில்லை. பிச்சைக்காரர்கள் கூட இங்கு பசியால் வாடுவதில்லை. இந்நிலையில் உணவு பிடிக்கவில்லை என்றும், ருசியாக இல்லை என்றும் நாம் சர்வசாதாரணமாக உணவைத் தூக்கியெறிகிறோம். பிடிக்காத உணவை ஏன் உண்ண வேண்டும் என்று சட்டம் பேசுகிறோம். உணவை வீசும் அந்த நேரத்தில் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் பட்டினிச் சாவு நடக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நாவின் ருசிக்குப் பழக்கப்பட்ட நாம், பசிக்கு ஒரு பருக்கை சோறு இல்லாதவர்களை நினைத்துப் பார்க்கத் தவறுகிறோம். இதனால் என்ன வந்துவிடப்போகிறது என்று இறுமாப்புக் கொள்கிறோம்.

என்னுடைய கணினி கோப்பில் சிலவருடங்களாக இரு ஒரு புகைப்படம் உள்ளது. உடல் ஒட்டிய நிலையிலும், ரத்தம் சுண்டிய நிலையிலும் இருக்கும் ஒரு சோமாலியா நாட்டைச் சேர்ந்த தாய், அதைவிடவும் மோசமான நிலையில் இருக்கும் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவார். அவரின் மார்பிலிருந்து காற்றுக்கூட வெளிப்படுமா என்று தெரியாத நிலையில் குழந்தை பால் அருந்தும்.கந்தக் காட்சி மனித உளவியலை ஒரு முறை அசைத்துப் பார்க்கக்கூடியது. அந்தப் புகைப்படத்தைக் கண நேரம்கூட பார்ப்பதற்கு திராணியற்றுப் போவேன் நான். அந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் உணவு குறித்த ஆர்வம் அருகதையற்றுப் பறந்தோடும் நிலை எனக்கு ஏற்படும். இந்தப் புகைப்படம் என் சேமிக்கு வந்த காலத்திலிருந்து இன்று வரை தினம் ஒரு வேளை சாப்பட்டைக் குறைத்துக்கொண்டேன். அதோடு வயிறு நிறைய என்றும் சாப்பிடுவதில்லை என்ற கொள்கையையும் வைத்திருக்கிறேன். இவை எனக்கு ஆரோக்கியம் தரும் விஷயம் தானே என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அப்படி நினைத்துக்கொள்வதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக