ஞாயிறு, 15 மே, 2016

ஆணோ பெண்ணோ யார் ஊதினாலும் அது புகை தான்புகை பிடிப்பது பாவச்செயலில்லை. இது ஆண்களுக்கான இலக்கணம். பெண் புகைபிடித்தால் அது மகா பாவமாமே? ஒழுக்கக் கேடாமே? திமிராமே? சுதந்திரம் என்ற பெயரில் அவர்களுக்கான குழியை அவர்களே வெட்டிக் கொள்கிறார்களாமே? 

புகைக்கும் ஆங்கிலேய பெண்களையோ அல்லது மேலைநாட்டுப் பெண்களையோ யாரும் ஒரு விஷயமாக எடுத்துகொள்வது இல்லை. ஆனால், பொட்டு வைத்திருக்கும் இந்தியப் பெண் ஒருவர் கையில் சிகரெட் வைத்திருப்பதைப் போல ஒரு புகைப்படம் கிடைக்குது என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். முகநூல், டிவிட்டர், வாட்சாப் என்று பதிவேற்றம் செய்யப்பட்டு விவாதப் பொருளாக அந்தப் புகைப்படம் மாறிப் போகும் இல்லையா? 

இப்போது பெண்கள் புகைப்பிடிப்பது குறித்து என்ன? இவ்வளவு பேசும் இவள் புகைப்பிடிப்பவளாகத்தான் இருக்கும் என்று எண்ணம் தோன்றுகிறதா? அதற்கு முன் இங்கே இரண்டு விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மிக அண்மையில் மலேசியாவில் நான்காம் படிவ மாணவர் ஒருவர் புகைப்பிடித்த காரணத்திற்குத் தங்கும் விடுதி வார்டனால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 
இரண்டாவது சம்பவம், நண்பர் நரன் முகநூலில் பதிவேற்றம் செய்த சத்ய ஜித்ரே மற்றும் அவரது திரையுலகத் தோழி நடிகை கீதாஞ்சலி  ராவ்-வுடன் புகைப்பிடிக்கும் நிழல்படம். அதற்குக் கீழே நண்பர் ஒருவர் சேகுவேராவுடன் அவரது போராளி தோழி ஒருவர் சுறுட்டு புகைக்கும் இன்னொரு நிழல்படம். 

இந்த இரண்டு விஷயங்களும் என்னை என் கடந்த காலத்திற்குக் கொண்டு சென்று யோசிக்க வைத்தச் சம்பவங்களாகும். நான் முதன் முதலில் எப்போது புகைப்பிடித்தேன்? எனக்கு அப்போது வயது என்ன?  என்னுடைய அப்பா சிவப்பு நிற பெட்டியைக் கொண்ட டன்ஹில் சிகரெட்டை புகைப்பவர். மாத கடைசியில் பொருளாதாரம் கையைக் கடிக்கும்போது 10 சென்னுக்கு 4 கிடைக்கும் பீடியை புகைப்பார். அதன் வாசம் ஒரு மாதிரி இருக்கும். டன்ஹில் சிகரெட்டின் மணம் கொஞ்சம் நல்லா இருக்கும். தொலைக்காட்சியிலும் அந்தச் சிகரெட்டைக் குறித்த விளம்பரம் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும். எனக்கு ஒரு முறையாவது அந்தச் சிகரெட்டை இழுத்துப் பார்க்க ஆசை. 
எனக்கு 17 வயது ஆகும் போது என் தம்பிக்கு 16 வயது. அவன் கொஞ்சம் சுதந்திரமாக வெளியில் போயிட்டு வருவான். அப்பாவுக்கு எப்போதும் அவன் செயற்பாடுகளில் ஒரு சந்தேகப்பார்வை இருக்கும். அம்மாவிடம், “அவன் மேல் ஒரு கண்ணை வைத்தே இரு” என்பார். எப்போவாவது சுதி (மது) கொஞ்சம் அதிகமாகும் காலங்களில் “உன் திருட்டு வேலைகள் எனக்குத் தெரியாதுனு நினைக்காதடா? எனக்கு எல்லாம் தெரியும்” என்பார். அவர் எல்லாம் தெரிந்து கொண்டுதான் இப்படிப் பேசுகிறாரோ என்று தோன்றும் எங்களுக்கு. நாங்கள் எப்போதுமே எதுவுமே செய்யாவிட்டாலும் எங்களுக்கு அப்பாமீது பயங்கரப் பயமிருக்கும். 

இப்படியான ஒரு சுபதினத்தில் அப்பாவின் அந்த வாசமான சிகரெட் பெட்டியிலிருந்து நான் ஒரே ஒரு வெண்சுறுட்டை சுட்டேன். வீட்டிற்குப் பின்னாளில் செடிகள் தாழைகள் மண்டியிருக்கும் ஒரு மறைவில் அமர்ந்து எனது முதல் சிகரெட்டை ஆயாசமாக இழுத்தேன். அத்தனை பயத்துடன், அத்தனை பரவசத்துடன் வெறும் புகையாகப் போகும் ஒரு சிகரெட்டை எந்தச் சுவையும் தெரியாமல் இழுத்து முடித்துவிட்டு இதில் ஒன்னும் இல்லையே என ஸ்டைலாகக் கீழே போட்டு மிதித்தும் நசுக்கிவிட்டு வந்தேன். அதன் பிறகு ஒரு முறை அப்பாவின் பீடியையும் சுட்டு இழுத்தேன். வாயெல்லாம் ஒரே கசப்பு. த்தூ! எனத் துப்பிவிட்டு வந்துட்டேன். அதன் பிறகு சிகரெட்டோ பீடியையோ நான் தொடவே இல்லை. 

அப்போது எனக்கு வயது 30 இருக்கும். ஒரு 4 நட்சத்திர தங்கும் விடுதியில் கணக்காய்வாளராக வேலைக்குச் சேர்ந்தேன். நான் அமந்திருந்த இடத்தில் சிகரெட்டின் நெடி அல்லும். அது சிகரெட் zone கொண்ட இடம். வேலைக்குச் சென்ற ஒரு வருடத்தில் எனக்கு ஆஸ்துமா நோய் உண்டாவதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. டாக்டரும் அதை உறுதிபடுத்த என்ன செய்யலாம் எனத் தோன்றியது. வேலையை விடுவதற்கு எண்ணமில்லை. முள்ளை முள்ளால் எடுக்கலாமே என்று தோன்றியது. 
என்னுடன் வேலை செய்யும் தலைமை கணக்காய்வாளர், மற்ற இரு மலாய் கணக்காய்வாளர் தோழிகள் அனைவரும் சாதாரணமாகவே புகைப்பவர்கள்தான். இங்கே இஸ்லாமியர்களான எனது மலாய் தோழிகள் புகைப்பிடிப்பது குறித்து கேள்வி எழலாம். பட்டணத்தில் இருக்கும் மலாய்ப்பெண்களுக்கு புகைத்தல் என்பது மிக சாதாரண விஷயமாக இருந்தாலும் பொதுதலத்தில் அவர்களின் கையில் சிகரெட்டோடு பார்ப்பது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இந்தியப் பெண்களை கையில் சிகரெட்டோடு காண்பதே அரிதாக இருக்கும். அப்படியே யாராவது கையில் சிகரெட்டோடு இருக்கும் பெண்களை பார்த்துவிட்டாலோ, இவள் எல்லாவற்றுக்கும் தயாரானவள் போலத்தான் இருக்கும் அவளை நோட்டமிடுபவர்களின் பார்வை. 

பணி செய்யும் இடத்தில் நான்அந்தப் பழக்கத்திற்கு ஆளாகாத வேளையில் அந்தப் போலியான நல்ல பெயரை காப்பாற்றிக்கொள்ள நினைத்தேன். யாருமில்லாத நேரத்தில் ஒரே ஒரு சிகரெட்டை இழுத்துவிட்டு வாயில் ஒரு மிட்டாயைப் போட்டு மறைத்துக் கொள்வேன். இந்த நடவடிக்கை நல்ல பலனைக் கொடுத்தது. எனக்கு வந்த ஆஸ்துமா பிரச்னை கட்டுக்குள் வந்தது. 
அந்தக் காலக்கட்டத்தில்தான் வல்லினம் இணைய இதழுக்கு தொடர் எழுத ஒப்புக்கொண்டேன். அந்தத் தொடர் என் கடந்த கால வாழ்கைப் பற்றியதும் நான் மறக்க வேண்டும் என்ற சம்பவங்களை உள்ளடக்கியதாகவும் இருந்ததால் பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது. அச்சம்பவங்களை மீட்டெடுக்கும்போது அத்தனை வலியிம் கண்ணீரும் நிம்மதியை இழக்கச் செய்ததுடன் அதைக் கடப்பதற்கான வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் புகைப் பிடிக்கும் எண்ணம் தாமாகத் தோன்றவே, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் புகைக்கத் தொடங்கினேன். ஒரு மாதிரி நிவாரணம் கிடைத்தது. அப்போதுதான் சிகரெட்டின் அருமை தெரிந்தது. 

நான் தொடரை எழுதி முடிக்கும் வரை எங்கெல்லாம் மனத்தடை ஏற்பட்டு ஸ்தம்புக்கிறேனோ அங்கெல்லாம் வெண்சுறுட்டு கைகொடுத்து என்னைத் தட்டிக் கொடுத்தது. 
ஒரு வருடத்தில் தொடரும் முடிந்து அது புத்தக வடிவில் வெளிவந்தது. நானும் தங்கும் விடுதியில் இருந்து வேலை நிறுத்தம் செய்திருந்தேன். அதோடு, புகைபிடிக்கும் எண்ணமும் அதற்கான காரணங்களும் எனக்கு வரவே இல்லை. அந்த வெண்சுறுட்டுக்கு நான் அடிமையாகாதது குறித்து எனக்கே சில சமயம் கேள்விகள் எழுவதுண்டு. அதை நான் ஓர் அனுபவமாகத்தான் பார்த்தேனேயொழிய அது என்னை எத்த விதத்திலும் அடிமையாக்கிக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால் என் நெருங்கிய தோழியும் என் துணைவரும் தவிர நான் புகைத்ததை இதுவரை யாருமே பாத்தது இல்லை. மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. நான் சிகரெட்டை தொட்டு. 

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே விற்பனைக்கு இருக்கும் சுருட்டுப் பொட்டலங்கள் சிகரெட்டுப் பொட்டலங்கள் தற்போது வெவ்வேறு சுவைகளில் கிடைப்பது பார்க்கும்போது ஆச்சரியமாகும். அதே வேளை எந்த ஒரு சங்கடமுமில்லாமல் வெளிநாட்டு யுவதிகள் அதை வாங்கிப் புகைத்துச் சிலாகித்துப் பேசும்போது அப்படி என்னதான் இதிலிருக்கிறது எனத்தோன்றும். ஆனால், இந்தியப் பெண்கள் அப்படியல்ல. தங்களின் மரபுக்குல் எப்போதும் பயந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதையும் மீறி சிலர் புகைப்பழகத்திற்கு ஆளாகும்போது அதை வைத்து மிகக் கேவளமாக அவர்களைச் சித்திகரிப்பது எதனால்? 

ஆணாக இருந்தாலும் அவர் யாராக இருந்தாலும் இருந்தாலும் புகைத்தல் என்பது உடல்நலத்திற்குத் தீங்கான விஷயம் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதை ஒழுக்கக் கேடான செயல் என்றும் பெண் குலத்திற்கே மாசு விளைவித்து விட்டதாகவும் கூறுவதுதான் புரியவில்லை. ஆண்கள் புகைப்பிடிப்பதற்கும் மது அருந்துவதற்கும் ஏதோ ஒரு காரணமும் இருப்பதுபோல ( இதில் மாணவர்களை இணைத்தல் கூடாது, அவர்கள் அந்தப் பழக்கத்தை விளையாட்டாகவும், தாங்கள் பெரியவர்கள் ஆகிவிட்டோம் என்ற சிறுபிள்ளை தனத்திலும் செய்வது) பெண்களுக்கும் ஒரு காரணம் இருக்கலாம் என்று ஏன் தோன்றுவதில்லை. 

புகைப்பிடித்த காரணத்திற்காக வார்டன் அந்தப் மாணவனை அடித்ததற்கான காரணம் வேறு ஏதும்கூட இருக்கலாம். நான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாளில் 12 வயதுக்கூட நிரம்பாத மலாய் சிறுவர்கள் ஒரே சிகரெட்டை நான்கைந்து பேர் புகைத்தபடி குதூகலமாகச் என்னைத் தாண்டிச் செல்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் இருக்கும் பள்ளிவாசல் திறந்துதான் இருக்கிறது. அதைத்தாண்டிதான் சிறுவர்கள் செல்கிறார்கள். இறைவனுக்கும் தெரியும் அதிலிருக்கும் எல்லாச் சிறுவர்களும் சிகரெட்டுக்கு அடிமையாக மாட்டார்கள் என்று. அனுபவக் கல்வி கொடுப்பதை விட ஏட்டுக்கல்வி பெரிதாக எதையும் கற்று கொடுத்துவிடுவதில்லை. 

-யோகி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக