புதன், 27 அக்டோபர், 2021

யஸ்மின் அஹ்மாட்டும் பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரங்களும்

 

மலேசியர்கள் மத்தியில், தீபாவளி மத்தாப்பை கொழுத்தி போடுவதாக இருந்தது தீபாவளி விளம்பரங்கள்தான். பெருவாரியாக உணவு பொருள்களான Planta, பால் மாவு, மிளகாய்த்தூள், நல்லெண்ணை உள்ளிட்ட நிறுவனங்கள், தீபாவளிக்கான விளம்பரங்களை வியாபார நோக்கத்தோடு வெளியிட்டாலும், அவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இன்னும் சில நாட்களில் நாம் பெருவிழாவை கொண்டாடப்போகிறோம் அல்லது அதற்கு தயாராகிகொண்டிருக்கிறோம் என்பதை நினைவு படுத்தும்படியே இருந்தது. அந்த நினைவூட்டல் உண்மையில் மகிழ்சியான சூழலையும் மலேசிய மக்கள் மத்தியில் கொடுத்தது உண்மைதான்.ஆனாலும், மலேசியர்கள் மத்தியில் ஒரு விளம்பரம் எப்படி சொல்ல வேண்டும் என்று நமக்கு பாடம் எடுக்காமல் கற்று கொடுத்தவர் நிச்சயமாக மறைந்த யஸ்மின் அஹ்மாட் மட்டும்தான். மலேசிய கலாச்சாரத்தோடு பிணைந்திருக்கும் நமது பாரம்பரியத்தை, கொஞ்சம்கூட பிசகாமல் ரசிக்கும்படி கொடுத்தவர் இயக்குனர் யஸ்மின். அதுவும் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் பெட்ரோனாஸ் நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு பெரிய பண்டிகைகளின் விளம்பரங்களை யஸ்மின் அஹ்மாட் இயக்கினார். அனைத்து விளம்பரங்களும் இனம் மொழி பாராமல் மலேசியர்கள் மத்தியில் பாராட்டை பெற்றதோடு பேசுபொருளாகவும் மாறியது.

பெட்ரோனாஸ் நிறுவனத்தினோடான இயக்குனர் யஸ்மினின் முதல் தீபாவளி விளம்பரம் 1996-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ‘Duelling Masseurs’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட அந்த 1 நிமிட விளம்பரம், தீபாவளி அன்று காலையில் இரு பையன்களுக்கு எண்ணை தேய்துவிடுவது தொடர்பாகவும், பின்னணியில் பாரம்பரிய இசையோடு அவர்கள் மகிழ்ந்திருப்பதையும் காட்சி போகும். இடையில் நவீன இளைஞர் அந்த இசையை மாற்றி வைக்கும்போது இந்த ரம்மியமான காட்சியை ரசித்துக்கொண்டிந்த வீட்டின் மூத்த அம்மா, கையில் வைத்திருந்த பேப்பரில் ஒரு அடி கொடுப்பார், நவீன இளைஞர் மீண்டும் ஒலியலையை மாற்றிவிட்டு பழைய சூழலை மீண்டும் கொண்டு வருவார். பெட்ரோனாஸ் நிறுவனம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் தீபாவளிக்கு இந்த விளம்பரத்தையே பயன்படுத்தியது.

1998-ஆம் ஆண்டு யஸ்மீன் இயக்கத்தில் You Are My Universe  என்ற தீபாவளி விளம்பரத்தை பெட்ரோனாஸ் நிறுவனம் தயாரித்தது. பாட்டியும் பேத்தியும் தீபாவளி ரங்கோலி கோலம் வரைந்துகொண்டிருப்பார்கள். ஒரு மாம்பழத்திற்காக மயிலோடு உலகைச் சுற்ற கிளம்பிய முருகன் மற்றும் தாய் தந்தையைச் சுற்றிவந்து அந்தக் கனியைப் பெற்றுகொண்ட வினாயகன் குறித்த கதையை விளக்கும் கோலத்தை வரைந்துகொண்டே பாட்டி கதையைச் சொல்லி முடிப்பார். ''நீங்கள் கூட என் உலகம்தான்'' என பேத்தி சொல்லிமுடிய விளம்பரமும் முடியும்.


2000-ஆம் ஆண்டு I See என்ற தீபாவளி பெட்ரோனாஸ் விளம்பரம் வெளிவந்தது. ஏற்றி வைத்த தீபங்களை விளையாட்டுத்தனமாக குறும்புக்கார சிறுவர்கள் அணைத்து இருளாக்கிவிடுவார்கள். கண் தெரியாத ஒரு முதயவர் சிமினி விளக்கோடு வந்து தன்னை பரிகாசம் சிறுவர்களிடம் பேசுவார். அவரின் அறிவுரையை கேட்டு சிறுவர்கள் மீண்டு விளக்கை ஏற்றுவது அந்த விளம்பரம் அமைந்திருந்தது. இந்த விளம்பரம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை, என்றாலும் யஸ்மினுடைய அந்த பாணி கவனிக்ககூடிய ஒன்றாக இந்த விளம்பரம் அமைந்திருக்கும்.


2002-ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் வெளியிட்ட தீபாவளி விளம்பரத்தின் தலைப்பு Light ஆகும். யாஸ்மின் தயாரித்த 4-வது தீபாவளி விளம்பரம் அது. மலேசிய மக்களிடத்தில் குறிப்பாக இந்திய சமூகத்தில் நல்ல வரவேற்பு பெற்றது அந்த தீபாவளி விளம்பரம். இசை பின்னணிக்கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன், தன் தாய் தந்தையை இழந்த பிறகு, உடன் பிறந்த 4 உடன்பிறப்புகளுக்காக தன்னை தயார் படுத்திகொள்வதை விளக்கும் காட்சிகளை கொண்டது. வாழ்க்கையோடு முட்டிமோதி, தன்னுடைய இசை ஆர்வத்தையும் வளர்த்துகொள்ளும் ஒரு சராசரி இளைஞனை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிகாட்டியிருப்பார் யஸ்மின். அந்த காட்சியில் வரும் ராஜூ அண்ணன்களைப்போல நம்மில் எத்தனை அண்ணன்களும் அக்காக்களும் வாழ்ந்திருக்கிறார்கள்? இரண்டு நிமிடத்தில் ஒரு குறும்படத்தையே காட்டியிருப்பார் யஸ்மின். நிச்சயமாக அதில் மலேசிய பண்பாடோடு நாம் இணைந்திருப்பதையும் உயிர்ப்போடு சொல்லியிருப்பார்.


2003- ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Boys In The Hood- தீபாவளி விளம்பரம் இதுவரை மலேசியாவில் வந்த தீபாவளி விளம்பரங்களிலேயே பெரும் புகழ்பெற்றதாகும். அதன் புகழை முறியடிக்க வேறு எந்த விளம்பரத்தாலும் முடியவில்லை. 4 நவீன இளைஞர்களின் நவீன உடல்மொழி தனது பாட்டியைப் பார்த்ததும் அடங்கிபோகும். முனியாண்டி சின்னத்துறை என்று பாட்டி தனது பேரனை அழைக்கும்போதும் என்னப்பா.. சேம்..சேம் வேற நல்ல பேரு இல்லையா என்று பாட்டி கேட்கும்போதும் நகைச்சுவையாக இருந்தாலும், அந்த இளைஞர்கள் பாட்டிக்கு கொடுக்கும் மரியாதைதான் முக்கியமாக கவனிக்க கூடியதாக இருக்கும். என்னப்பா.. நெஞ்சு சளியா என்று பாட்டி கேட்கும் காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். அனைத்து இன மக்களிடமும் பாராட்டைப் பெற்ற அந்த விளம்பரத்தைபோல இன்னொரு விளம்பரத்தை யஸ்மின் அஹ்மாட்-டால்கூட கொடுக்க முடியவில்லை.

யஸ்மின் அஹ்மாட் தீபாவளி விளம்பரத்தில் கவனமாக கவனித்தால் அதில் அவர் மூத்தவர்களுக்கும் இளையர்வர்களுக்கும் சிறுவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரத்தை இயக்குவது புலப்படும். அவர் காட்டிய பெரியவர்களிடம் இளைஞர்கள் மதித்து நடக்ககூடியவர்களாக இருந்தார்கள். மலேசியாவில் இந்தியர்களின் வாழ்க்கை வாழ்கிறபடியே காட்டப்பட்டிருக்கும். கேமரா ஒளிப்பதிவுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்து பேசலாம். அந்த அளவுக்கு நுட்பமாக இருக்கும்.

இன்று பெட்ரோனாஸ் நிறுவனத்தின் விளம்பரங்கள் எடுபடுவதே இல்லை. குறிப்பாக தீபாவளி விளம்பரங்கள் வருகிறதா என்று கேட்கும் அளவுக்கு பின் தங்கிவிட்டது. 2012-ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் கொண்டுவந்த டப்பாங்குத்து தீபாவளி விளம்பரம் பலரின் கண்டனத்திற்குள்ளானது குறிப்பிடதக்கது.

அதனைத் தொடர்ந்து 2013, 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வந்த பெட்ரோனாஸ் விளம்பரங்கள் கொஞ்சம் கவனிக்ககூடியதாக இருந்தது. இருந்தாலும் அது பெரிய அளவில் வரவேற்ப்பு பெற்றதா என்பது சந்தேகம்தான்.

இன்று தீபாவளி விளம்பரங்கள் குறித்து யாரும் பேசுவதே இல்லை. மலேசிய மக்களுக்கு, விளம்பரங்கள் வழி வாழ்த்து சொல்ல எந்த நிறுவனங்களும் மெனக்கெடுவதுமில்லை. அவசர காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு பண்டிகைகளும் அவசர அவசரமாகவே முடிந்துபோய் விடுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதும்போது மீண்டும் ஒருமுறை யஸ்மின் அஹ்மாட்  இயக்கிய எல்லா பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரங்களையும் பார்த்தேன். கடந்துபோன எனது தீபாவளி நினைவுகள் அந்த விளம்பரங்களில் ஒளிந்திருந்தன. உங்கள் நினைவுகளும் அதில் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக