புதன், 24 ஆகஸ்ட், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 4

திதின் அம்பிகை

ஜோக்ஜகார்த்தாவில்  நான் பார்த்த மனிதர்கள் மலேசிய மலாய்க்காரர்களைவிட வேறுபட்டிருந்தனர். வேறுபட்டிருந்தனர் என்பதை அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நான் கூறும் வேற்றுமை உருவத்தில், உணவில், பழக்கவழக்கத்தில், மட்டுமல்ல தமது மதத்திலும் அவர்கள் அத்தனை பிடிப்பானவர்கள் அல்ல என்பதைக் காணமுடிந்தது. ஒரு வேளை என் புரிதல் தவறாகக்கூட இருக்கலாம். 12 பொழுதுகளை வைத்து பெரிதாக எதையும் கூறிவிடமுடியாதுதான்.

ஜோக்ஜகார்த்தாவில் நான் சென்ற எல்லா இடங்களில் செராய்-இஞ்சிக் கலந்த பானத்தைப் பருகக் கொடுத்தார்கள். அந்தத் தண்ணீர் எனக்குச் சற்றும் பழக்கமில்லாவிட்டாலும், முதல் தடவை சற்றுச் சிரமப்பட்டுக் குடித்துவிட்டேன். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அந்தத் தண்ணீரை குடித்தே ஆக வேண்டிய சூழல் நேர்ந்ததால் அதைக் குடிப்பதற்குப் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன்.

 இந்த மாதிரி எந்தவித பூர்வீக பானத்தையும் மலாய்க்காரர்கள் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை. மேலும் வெகுவிரைவாக மேற்கத்திய பாணியை அவர்கள் பின்பற்ற தொடங்கிவிட்டனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது. கோடுக்கப்பட்ட அந்த பானம் சற்று நேரத்தில் நம்மை சோர்விலிருந்து உற்சாகம் படுத்துவதை உணரலாம்.  முகம் துடைக்க ஐஸ்பெட்டியிலிருந்து வைத்து எடுக்கப்பட்ட  கைதுண்டை கொடுக்கிறார்கள்.  முகம் மட்டும் அல்ல உள்ளமும் குளிர்ந்துவிடுகிறது. 

2013-ஆம் ஆண்டின் மூன்று நாள் பயணத்தில், நான் ஜோக்ஜகார்த்தா சென்றடைந்ததிலிருந்து, மறுபடியும் ஜோக்ஜகார்த்தா விமான நிலையத்திற்கு வரும் வரை என்னுடன் இருந்தவள், எங்களின் வழிக்காட்டியான திதின் எனும் இந்தோனேசிய பெண். ஜோக்ஜகார்த்தா பெண்கள் பாத்தவரைக்கும் அழகிகளாக இருந்தனர். அவர்களிடம் அந்த மண்ணின் மனம் கலந்து வீசியது. என்னதான் அங்கும் நவீனம் நுழைந்து விட்டாலும் அதில் அவர்களின் கலாச்சாரத்தைச் சரிபாதி கலந்துதான் வைத்திருந்தனர்.

ஆனால் திதின் ஒரு பேரழகி அல்ல. குள்ளமானவள். பற்கள் சற்று எடுப்பாக இருந்தது. ஆனால் அவளிடம் அந்த மண்ணுக்குண்டான பாரம்பரியம் இருந்தது. போரோபுடூர், பிரம்மனன் போன்ற 7-ஆம், 8-ஆம் நூற்றாண்டு கலைகோயில்களின் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் எனும் பெருமையும் கர்வமும் அவளின் பேச்சிலும், எங்களிடம் அதனைப் பற்றி விளக்கம் கொடுக்கும்போதும் தெரிந்தது. ஆனால் திதினிடம் ஓர் இனிமையான குணமும் இருந்தது. அதை அவளிடம் பழகுபவர்களால் உணர முடிந்தது. அவள் என் வயதை ஒத்தவளாக இருந்தபடியால் எங்கள் இருவருக்கும் பலவிஷயங்கள் ஒத்துப்போனது.

நாங்கள் இருநாடுகளுக்குண்டான பல விஷயங்கள் குறித்துப் பரிமாறிக்கொண்டோம். மலேசியாவில் வியாழன் கிழமை மட்டும் கட்டாயம் அரசு துரையைச் சார்ந்தவர்கள் பாத்தேக் துணியிலான ஆடையை அணிய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் அங்குத் தினமும் பாத்தேக் துணியைத்தான் அணிகிறார்கள். அது நவீன உடையாக இருந்தாலும் கட்டாயம் பாத்தேக் வகையிலான துணியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி நானும் திதினும் வெகுநேரம் சிலாகித்துக்கொண்டிருந்தோம். அவள் ஆங்கிலம் சரளமாகப் பேசினாள். ஆனால் ஆங்கில மொழிக்கு அவளின் நாக்கு பழக்கப்படவில்லை என்பது தெரிந்தது.

எங்கள் ஜோக்ஜகார்த்தா மற்ற மாநிலங்களைவிட மிகவும் சிறந்தது. அங்கு 134 பல்கலைக்கழகங்களும் 400-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கூடங்களும் இருக்கிறது. கல்விக்குப் பேர்போன மாநிலம் எங்களின் மாநிலம்என்றாள். அந்தப் பெருமையில் கொஞ்சம், தமிழர்களுக்கே உண்டான ஆணவம் தெரிந்தது. (தமிழர்கள் என்றால் ஆணவமா? என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி எழுப்பினால், அதற்கு நான் பொறுப்பல்ல. நான் கூறும் ஆணவம் தமிழன் என்று கூறும்போது ஏற்படும் கம்பீரத்தை)
நான் கேட்டேன், “ திதின் இங்கு, நான் காண்பவர்கள் அனைவரும் இந்தோனேசியர்களாக இருக்கிறார்களே? இந்தியாவிலிருந்து வந்து வாழும் தமிழர்கள் இங்கு இல்லையா?”

இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகப்படியாகப் பாலியில்தான் வசிக்கிறார்கள். இங்கே மிகவும் குறைவு. ஆனால் இந்து மதத்தைத் தழுவிய இந்தோனேசியர், அவர்களின் பரம்பரைகள் என நிறையபேர் ஜோக்ஜகார்த்தாவில் இருக்கிறார்கள்என்றாள்.
கொஞ்ச நேரம் மௌனித்த திதின் பிறகு பேசினாள், “ நானே ஓர் இந்துதான். சமீபத்தில்தான் நான் இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொண்டேன்என்றாள். “உன் பெயர் என்ன?
திதின்
இஸ்லாம்  தழுவுவதற்கு  முன்பும்- பிறகும் இருந்த பெயர்கள் என்ன?”
“எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு முன்பும் பின்பும் என்று பெயர்கள் மாற்றுவதில்லை. நாங்கள் பிறக்கும் போது, இருக்கும் மதத்தைக் கொண்டுதான் எங்களுக்குப் பெயர் வைக்கிறார்கள். பிறகு நாங்கள் மதம் மாறினாலும் அதே பெயரோடுதான் இருக்கிறோம். பெயர் எங்களின் அடையாளமாகிறது. மதம் மாறியதற்காக நாங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்வதில்லை”  என்றாள் திதின்.

 “நீ ஏன் மதம் மாறினாய்?” என்றேன். காதல் திருமணத்தில் மதம்மாற வேண்டிய சூல்நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவள் கூறினாள். அப்படி என்றால் உனது முழுப்பெயர் என்ன என்றேன். அவள் சிரித்துக்கொண்டு திதின் அம்பிகை என்றாள். கோயிலுக்குப் போவாயா என்று எனது குழந்தைத்தனமான கேள்வி முடிய, அவளுக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. ‘அதில் ஐகிரி நந்தினி நந்தித மேதினிஎன்று மஹிஷாசுர மர்த்தினி மந்திரம் ஒலித்தது. நான் மீண்டும் எனது கேள்விகளை அவளிடம் கேட்கவில்லை.

2 கருத்துகள்:

  1. //எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு முன்பும் பின்பும் என்று பெயர்கள் மாற்றுவதில்லை// செருப்படி

    மேலும் அந்த பெண் நிர்பந்தத்தின் பேரில் மதம் மாறினாலும் தன் இயல்பு மாறாமல் இருப்பது ரிங்டோன் காட்டி கொடுத்துருச்சு. அவரின் துணை ஏற்றுக்கொண்டதும் இதில் சிறப்பு தான்.

    பதிலளிநீக்கு