சனி, 6 ஆகஸ்ட், 2016

யாருக்கும் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டுவதில்லை. ஓவியர் ஸ்டீவன் மேனன்

வரவேற்பறையில்,  வரைந்தும் வரைந்து முடிக்கப்படாமலும் சில ஓவியங்கள், பாதிக் குழப்பி மீந்து போயிருக்கும் வர்ணங்கள்.   சிதறி கிடக்கும்  பென்சில்கள், ஓவியத்தாள்கள் என முடியாத ஓவியம் மாதிரியே இருக்கிறது ஓவியர் ஸ்டீவன் மேனனின் வீடு.
ஓவியர் ஸ்டீவன் மேனன் மலேசிய ஓவியர்கள் மத்தியில் பிரபலமான ஓவியராக இருந்தாலும், மலேசிய இந்தியர்கள் மத்தியில் இன்னமும் அறியபடாதவராகவே இருக்கிறார். மிக மிக எளிய தோற்றமும், தோளில் ஒரு துணிப்பையும், முகத்தில் எப்போதும் ஒரு சிந்தனைக் கொண்டவராகவே இருக்கிறார் ஸ்டீவன்  மேனன்.  அவரின்  சோதனைகள் முயற்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துபவை.

 ஸ்டீப்பன் மேனன் குவாந்தான் பகாங்கில் பிறந்தவர். உடலியல் ஓவியர் என அறியப்படும் இவர், தாம் வரையும் ஓவியங்களில் புதிய முயற்சிகளைத் தொடர்ந்து செய்பவராகவே இருக்கிறார்.ஒவ்வொன்றும் அத்தனை நுணுக்கமாவை.  சில ஓவியங்களை வரைய அல்லது செட் செய்ய பலமாதங்களை எடுத்துக்கொள்கிறார்.




1990- களில் மலேசிய கலை காட்சியகத்தில் (நேஷனல்  கேலரிதனக்கு பிடித்த இரண்டு ஓவியர்களை சந்திக்க நேர்ந்ததாக கூறுகிறார்.  அந்தக் கண்காட்சியில்  ஓவியர் அம்ரோன் ஓமாரின்சுய ஓவியங்களை (போட்ரேட்) காணும் வாய்ப்பு  அவருக்கு அமைந்தது. மலாய் ஓவியர்களில் மத்தியில் மிகவும் பிரலமானவர் ஓவியர் அம்ரோன் ஓமார்.

அந்தக் கண்காட்சியில் அம்ரோன் ஒமார் இறுகிய முகத்துடன் பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி ஸ்டீப்பன் மேனனை வெகுவாக கவர்ந்ததுடன்  போட்ரேட் ஓவியம் மீதான ஆவலையும் தேடலையும் ஏற்படுத்தியது.   இதுவே அவரை ஓவிய உலகத்திற்குள் கொண்டு வருவதற்கான தொடக்கச் சம்பவமாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.
கோலாலும்பூர் கலைக் கல்லூரியில் குறிவரை வடிவமைப்புப் படிப்பு முடிந்ததும், அனிமேட்டராகப் பணிப்புரிந்து கொண்டே உடலியல் அசைவுகள் பிரதிபலிக்கும் ஓவியங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஸ்டீவன் மேனன். அதோடு அம்ரோன் ஓமாரை மானசீகமாகக் குருவாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அவருடனான சந்திப்பை ஏற்படுத்திக்கொண்டார்.  அந்தக் குரு பக்தி இன்றும் ஸ்டீவன் மேனனிடம் இருக்கிறது.



தன்னைத் தானே வரைந்துக்கொள்ளும் போக்கு  ஸ்டீவன் மேனனின் ஓவியங்களில்  மிகுதியாகக் காணப்பட்டாலும், அந்த ஓவியங்களில் அவரின் கண்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருக்கும். இது ஏன் என அவரிடம் கேட்டபோது, “நான் ஆண்டுக்கு ஒருமுறை இப்படி என் கண்ணைக் கட்டிக்கொள்வது மாதிரியான ஓவியத்தை வரைவேன். அப்படி வரையும் போது என்னுடன் இருக்கும் ஏதாவது ஒரு கெட்டப் பழக்கத்திலிருந்து நான் விடுபடுவேன். உதாரணமாக நான் கண்களைக் கட்டிக்கொண்டு புகைப்பிடிக்கும் ஓவியம் ஒன்றை வரைந்திருப்பேன்.  வரையும்போது நான் பிடித்த கடைசிச் சிகரெட் அதுதான்.  இப்படியே மற்ற புகைப்படங்களும் அமைகின்றன.''

முதன் முதலில் அவர் சிந்தனையில் தோன்றிய அந்த  கருத்தாக்கத்தை வரைந்து  ஒரு தனியார் கலைகாட்சி கூடத்தில் வைத்தார் ஸ்டீப்பன் மேனன். அவரை வறுமை கொஞ்சம் கொஞ்சமாக சரித்துக்கொண்டிருந்தது.  தனைது மனைவியின் நகையை அடகு வைப்பதற்காக சென்றவருக்கு வந்தது ஒரு தொலைப்பேசி அழைப்பு. அவரின் ஓவியங்கள்  கணிசமான விலையில் விற்று போயிருப்பதாக தகவல் வந்தது.

அன்றிலிருந்து ஸ்டீபன் மேனனுக்கு ஆரம்பமானது  நல்ல நேரம். பல சோதனைகள் வந்தாலும் இன்றுவரை  ஒரு நீரோடையைப் போல தெளிந்த நிலையில் சீராக பயணித்துக்கொண்டிருக்கிறார்.  




தனது 16 ஆண்டுகள் கலைப்பயணத்தில் 5-வது  சோலோ கண்காட்சியை
Portraiture Dialogue ( Tales from the faces)  என்ற தலைப்பில் கடந்த ஜூலை 24-ஆம்  தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை  மலாயா பல்கலைக்கழகத்தின்  Museum Of Asia Art-டில் தொடங்கியிருக்கிறார்  ஸ்டீபன் மேனன். 
‘கண்ணோடு கண்’, கேலிச்சித்திரம் வகைப்பட்டஇன்னும் தொடரும்உள்ளிட்ட தலைப்புகளில் பல ஓவியக் கண்காட்சிகளை அவர்  மலேசிய நாட்டில் நடத்தியுள்ளார். வெளிநாடுகளிலும்  கூட்டு முயற்சியில் அவர்  பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளதோடு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

“யாருக்கும் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டுவதில்லை. அதற்கான வாய்ப்புகளை தேடி போய்கொண்டே இருக்க வேண்டும்.  தற்போது ஓவியத்துறை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதுக்கு தகுந்த மாதிரி ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் புதுமை செய்ய வேண்டும். அதற்காக நிறைய உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நமக்கு மென்மேலும் பாடம் படித்துக் கொடுக்கும் என்கிறார் ஸ்டீபன்.




தற்போது நடத்தும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் பதிவுகள் மற்றும் தொடர் அடிப்படையில்  வரைந்திருக்கிறார் ஸ்டீபன். 

ஒவ்வோரு தொடரும் ஒவ்வொரு கதையை பேசுபவை. அதனால்தான் அதற்கு Portraiture Dialogue என தலைப்பு வைத்திருக்கிறேன்.  மேலோட்டமாக பார்த்தால் அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதலிருக்கும் விஷயங்களை குறித்து  சுயமாக கேள்வி எழுப்பினாலே  தற்கால சிக்கல்களும் அரசியலும் ஓவியத்தில் மறைந்திருப்பது  தெரியவரும் என்கிறார்  ஸ்டீபன் மேனன். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக