திங்கள், 8 ஆகஸ்ட், 2016

எல்லாருக்கும் என்னைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை…!

நேர்காணல் : அம்பை
சந்திப்பு: யோகி

(குறிப்பிட்டிருக்கும் கேள்விகள் மலேசிய சூழலை மையப்படுத்தியவை. மலேசியாவில் வெளிவரும் ஜனரஞ்சக பத்திரிக்கைக்காக செய்யப்பட்டது. தீவிர இலக்கியவாதிகளுக்கானது இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன்) 

அம்பை 1960-களிலிருந்து இலக்கிய வெளியில் இயங்கி வருகிறார்.   ‘காட்டில் ஒரு மான்’, அம்மா  ஒரு கொலை செய்தாள்’  ‘சிறகுகள் முறியும்’ உள்ளிட்ட சிறுகதைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் நமக்கு  விரைவாக அடங்கக்கூடியது அல்ல. அம்பை வரலாற்றில் எம்.ஏ.பட்டம் பெற்றவர். அமெரிக்கன் கல்வியில்  முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். பல ஆவணப் படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பதோடு உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.  ‘சிறகுகள் முறியும்’ (1976),  ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988),’ காட்டில் ஒரு மான்’ (2000) ஆகியவை இவரது முக்கிய சிறுகதை தொகுதிகளாகும். 

அண்மையில் இரண்டு நாள் மலேசிய பயணம் மேற்கொண்டிருந்தவரிடம் நிறைய பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. மலேசிய சூழலில் அவரோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.  ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை.  அவருடைய மலேசிய வருகை பதிவு செய்யப்படவேண்டிய ஒரு விஷயம். அந்த வகையில் அவரோடு உரையாடியதிலிருந்து சில கேள்விகளைத்  தொகுத்திருக்கிறேன். சில கேள்விகளுக்கான பதிலை இணையம் வழி கேட்டுப் பெற்றேன்.  எல்லாத்தையும்விட அம்பையின் மலேசிய வருகையைப் பதிவு செய்வதே எனக்கு முக்கியமாக  இருக்கிறது.

இனி அம்பையிடம் கேள்வியும் பதில்களும்…


யோகி: .பல வருடங்களாக இலக்கிய வெளியில் இயங்கி வருகிறீர்கள்? ஆனாலும், இன்னும் பலருக்கு அம்பை யார் எனத் தெரியவில்லைஇந்த விமர்சனத்தை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
அம்பை: இதில் எதிர்கொள்ள என்ன இருக்கிறது? எல்லோருக்கும் என்னைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அளவுக்கு நான் பிரபலமான எழுத்தாளராக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவேயில்லை. நான் எழுத வேண்டும், அவ்வளவுதான். அதற்கான வெளி இருந்துகொண்டே இருக்க வேண்டும், எனக்குள்ளும் வெளியேயும், அவ்வளவுதான்.  

யோகி:  உங்கள் அனுபவத்தில் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களின் மலேசியப் பயணம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
அம்பை: மலேசியப் பயணம் தற்செயலாக அமைந்ததுதான். இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் மலேசிய வாழ்க்கையை இன்னும் உள்வாங்கியிருக்க முடியும். இப்போது சில இடங்களைப் பார்த்த திருப்தியும், சில நண்பர்களைச் சந்தித்த மகிழ்ச்சியும், மணிமொழி  சிறப்பாகக் கார் ஓட்ட, உங்கள் (யோகி)  இருவருடன் மனம் விட்டுப் பேசியபடி சுற்றியதும்தான் மனத்தில் மலேசியாவாக இருக்கிறது. விமானத்தளத்திலிருந்து அந்த நீண்ட 70 கிலோமீட்டர் கார் சவாரியும், சுற்றிலும் இருந்த பசுமையும் மனத்தில் இருக்கிறது. தேநீருக்குச் சொல்லும்போது பால் வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்வதும், தயிரில்லாத சாப்பாடும் சற்று அதிசயமாக இருந்தது.




யோகி: அம்பை ஒரு சிறுகதை ஆசிரியராக அறியப்படுகிறார்? அம்பை ஏன் கவிதை எழுதவில்லை ?
அம்பை: அம்பைக்குக் கவிதை எழுத வராது, அதனால்தான்!

யோகி:  உங்களின் முதல் சிறுகதை குறித்தும் அதன் அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அம்பை: முதலில் எழுதியது சிறுகதை இல்லை. குழந்தைகளுக்கான நாவல். கண்ணன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. முதல் சிறுகதை வாழ்க்கையை தளிர், இலைசருகு என்று பல கட்டங்களாகப் பிரிக்கும் தத்துவக் கதை. சிறு வயதில் நமக்கு வாழ்க்கையைப் பற்றி எல்லாமே தெரியும் என்று ஒரு மனோபாவம் வரும் இல்லையா, அத்தகைய மனோபாவத்தில் எழுதிய கதை. உலகத்தையே அறிந்து முதிர்ந்துவிட்டதுபோல் ஒரு கதை. சாதாரணக் கதை. 'ஆனந்தவிகடன்' பத்திரிகையில் வந்தது. 1961 அல்லது 1962இல் இருக்கலாம்.  

யோகி:  உங்கள் பெயரில் மலையாள தொடர்பு இருக்கிறது. நீங்கள் வசிப்பதோ மும்பையில்? தமிழிலும் எழுதுகிறீர்கள். அம்பை என்பவர் உண்மையில் யார்? பிற மொழிகளை எப்படிக் கையாள்கிறீர்கள்? அம்பைக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
அம்பை: தாய் வழியிலும் தந்தை வழியிலும் என் முன்னோர்கள் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். அப்பாவுக்கு அதிகம் மலையாளம்தான் தெரியும். பிறகு கோயமுத்தூரில் அவர்கள் குடியேறினார்கள். இப்போதும் உறவினர்கள் அங்குண்டு. தமிழ்நாட்டில் நான் வளரவில்லை. மும்பாயிலும் பெங்களூரிலும்தான் வளர்ந்தேன். பிறகு சென்னையிலும் டில்லியிலும் படித்தேன். ஒரு கட்டத்தில் மும்பாயில் குடியேறினேன். என் ஆரம்பக் கல்வி தமிழில்தான் இருந்தது. பிறகு இளங்கலை படிப்பு முடிக்கும்வரை தமிழ் ஒரு பாடமாக இருந்தது. அதனால்தான் தமிழில் எழுதுகிறேன். தமிழ், ஹிந்தி, கன்னடம் நன்றாகத் தெரியும். புரிந்துகொள்ளும் அளவு மலையாளம், தெலுங்கு, மராட்டி தெரியும்.




யோகி: தற்போதைய பெண்களின் எழுத்து குறித்த உங்களின் அபிப்பிராயம் என்ன?
காலகட்டப் பிரிவுகளாக எழுத்தைப் பிரித்து தற்காலம் முற்காலம் என்று பிரிப்பது எனக்கு உடன்பாடில்லை. இந்தக் கேள்வியில் நான் ஏதோ ஒரு காலத்தைச் சேர்ந்தவள் போலும், இப்போதைய எழுத்து குறித்து என் பார்வை வேறாக இருக்கும் என்றும் ஒரு தொனி இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. யோகி எழுதும் அதே காலத்தில்தான் நானும் எழுதுகிறேன், இல்லையா? மேலும், தற்போதைய பெண்கள் எழுத்து என்று ஏன் குறிப்பிட்ட கேள்வியாக இது இருக்கிறது? தற்போதைய ஆண்கள் எழுத்து குறித்துப் பெண்கள் பேசக்கூடாதா அல்லது பெண்களைக் குறித்துப் பெண்கள்தாம் பேச வேண்டும் என்று ஏதாவது விதிகள் இருக்கின்றனவா?
தற்போதைய எழுத்து என்று பொதுவாக எடுத்துக்கொண்டால் அது எனக்கு மிகவும் உற்சாகமளிப்பதாகவே இருக்கிறது. மகத்தான வெற்றிகள்பொறுத்துக்கொள்ள முடியாத தோல்விகள், தாங்கமுடியாத தட்டையான எழுத்து எனப் பல பெரும் தடங்களில் பலவாறு பிரிந்துஇவ்வளவு படைப்புகளா என்று வியப்பளிக்கும் வகையில் பலர் இதில் எழுதியபடி இருக்கின்றனர்.  

யோகி:  உங்கள் மீது தொடர்ந்து வைக்கும் பாப்பனிய பார்வை மனரீதியாக பலவீனம் செய்துள்ளதா? அல்லது அதை எவ்வாறு அணுகுகிறீர்கள்?
அம்பை: தமிழ்நாட்டில் என் எழுத்தை இப்படி மட்டுமே பார்க்கும் அனுபவம் இல்லை. இப்படியும் பார்ப்பவர்கள் உண்டுமலேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு மூத்த எழுத்தாளர்தான் நான் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் எழுதத் துவங்கிய வை.மு. கோதைநாயகியின் வாரிசுதான் என்றும் என் எழுத்தின் பின் ஓர் ஒன்பது கஜப் புடவை மாமி இருக்கிறார் என்றும் கனிவுடன் எழுதி அதை எனக்கு அனுப்பியும் வைத்தார். இத்தகைய விமர்சனங்கள் எப்படி நம்மைப் பலவீனப்படுத்த முடியும் அவை எவ்வளவு அபத்தமானவை என்பது நமக்கே புரியும்போது? எழுத்தின் மீது வைக்கும் விமர்சனங்களை நான் வெகு கவனமாகவே பார்க்கிறேன் காரணம் நானும் என் சக எழுத்தாளர்களின் எழுத்து குறித்து விமர்சிப்பதால். விமர்சனங்களில் எவை நம்மை முன்னே எடுத்துச் செல்லும் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். நம்மைக் கீழே தள்ளி மிதிக்கும் விமர்சனங்களையும் படிப்பதால் ஒன்றும் கெட்டுப்போய்விடாது.  

யோகி: 'ஸ்பாரோ' அமைப்பு குறித்தும் அதன் செயற்பாடுகள் குறித்தும் கொஞ்சம் சொல்லுங்கள்?
அம்பை: ஸ்பாரோ (Sound & Picture Archives for Research on Women (SPARROW)) ஒரு பெண்கள் ஆவணப் பாதுகாப்பகம். இதில் பெண்கள் வாழ்க்கை, பெண்கள் சரித்திரம் இவற்றை நாடு, பண்பாடு என்ற தறுவாயில் நோக்குவது. கலை, வெளிப்பாடு, தொழில், விஞ்ஞானம், கல்வி, சுற்றுச்சூழல், பல சமூகப் பெண்களின் வாழ்க்கை, அதிலுள்ள போராட்டங்கள், சட்டம், ஆரோக்கியம், உரிமைகள், போராட்டங்கள், இயக்கங்கள் இவைகளை வாய்வழி வரலாறு, புகைப்படங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள்ஓவியங்கள், பதாகைகள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள், நாடகங்கள், படங்கள் இவை அனைத்தும் மூலமாகப் பார்ப்பதற்கானத் தரவுகளை ஆவணமாக்குவது எங்கள் நோக்கம்.

எட்டு மொழிகளிள் விவரங்கள் சேகரிக்கிறோம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களைப் பற்றியக் குறிப்புகளையும் புத்தகங்களையும் பலதரப்பட்ட பெண்களுடனான உரையாடல்களையும் ஆவணப்படுத்தியுள்ளோம். 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறோம். பல ஆவணப்படங்களை எடுத்திருக்கிறோம். கண்காட்சிகள், பயிலரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள் எனப் பல வகைகளில் இயங்கி வருகிறோம். 23 மொழிகளில் எழுதும் 87 பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளுடன் அவர்களுடனான உரையாடல்களையும் ஐந்து தொகுதிகளாகக் கொண்டுவரும் முயற்சியில் நான்கு தொகுதிகள் வெளியிட்டாகிவிட்டது. ஐந்தாவது தொகுதிக்கான வேலைகள் நடந்து வருகின்றன. www.sparrowonline.org     என்ற வலைதளத்தில் எங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.    

யோகி:  பெண்களுக்கான தொழிற்கல்வி, மாலை பின்னுவது, கேக் செய்வது, திருமண அலங்காரம் செய்வது என தொடர்ந்து ஒரே பின்னளில் தொடர்கிறதே? அது காலத்திற்கு ஏற்ற மாதிரிதான் இருக்கிறதா?
அம்பை: ஒப்பனை, தையல், விசேஷச் சமையல், சில வகைக் கைவினைப் பொருட்கள் செய்தல் இவற்றைச் சுற்றியே பெண்களுக்கான அதிகப்படி கல்வி அமைகிறது. இதையே அவர்கள் தொழிலாகச் செய்ய முற்படும்போது பலத்த எதிர்ப்பு இருக்கிறது. சமீப காலங்களில்தான் பெரிய ஹோட்டல்களில் முதன்மைச் சமையற்காரராகப் பெண்கள் இருப்பது கூடியிருக்கிறது. பெரிய கல்யாணங்களில் சமைக்கும் பொறுப்புகளை ஏற்பது இப்போதும் பெரும்பாலும் ஆண்கள்தாம். சினிமாவில் ஒப்பனை செய்யப் பெண்களை அனுமதிக்கப் பெரும் எதிர்ப்பு இருக்கிறது. அவர்கள் கதாநாயகிகளின் முடியலங்காரம் செய்பவர்களாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மாற்றங்கள் வருகின்றன. ஆட்டோ, டாக்ஸி, ரயில் வண்டி, விமானம் என்று பல வாகனங்களை ஓட்டும் பெண்கள் இருக்கிறார்கள், மேஸ்திரி வேலை, மெக்கானிக் வேலை என்று பல வேலைகளைச் செய்யும் பெண்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் விதிவிலக்காகத்தான் இருக்கிறார்கள்.     

யோகி: . உங்கள் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களை பற்றிக் கூற முடியுமா? அவர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?
அம்பை: கதாபாத்திரங்களைப் பற்றிக் கூறுவது கடினம். காரணம் பலவகை நபர்களின் கலவை அவர்கள். பால்தன்மை பற்றிய குறுகலான விளக்கங்கள் கூடிய வாழ்க்கையில் நடமாடி இயங்கும் நபர்கள். நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களிலிருந்தும், செய்திகளிலிருந்தும் பிறப்பவர்கள்தாம்.

யோகி: தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் விவகாரங்கள் அதிகரித்துகொண்டே இருக்கிறதே?
அம்பை: ஆம். இது அதிகம் கவலை அளிப்பதாகத்தான் இருக்கிறது. பண்பாடு, போட்டிகள் நிரம்பிய வாழ்க்கைமுறை, பொருளாதாரச் சிக்கல்கள்வன்முறை, சமூகக் குரூரங்கள், சாதிய மனப்பான்மைபெண்களின் முன்னேற்றத்தை ஏற்க முடியாத மனநிலை, குறிப்பிட்ட அரசியல், ஊடகங்களின் செயல்பாடுகள் எனப் பல விஷயங்கள் இதில் இணைந்துள்ளன. இதை நீங்கள் கட்டாயம் ஆண் எழுத்தாளர்களிடமும் கேட்க வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை.  

நன்றி: தென்றல் வார இதழ் (14.8.2016 இதழ்)


2 கருத்துகள்: