புதன், 7 செப்டம்பர், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 5


எனது ஜோக் ஜகார்த்தா பயணத்தில் மறக்க முடியாத ஒரு ஸ்தலம் என்றால் அது ‘குனோங் மெராப்பி’ தான். ‘குனோங்’ என்றால் மலை; ‘மெராப்பி’ என்றால் நெருப்பு என்று பொருள் கொள்ளலாம். மத்திய ஜாவாவில் அமைந்திருக்கும் அந்த எரிமலைக்கு volcano என்று பெயர். இன்னும் உயிருடன் இருக்கும் அந்த எரிமலையின் சுவாசம் வெளியேறுவதைத் தொலைவிலிருந்தே நம்மால் பார்க்க முடியும்.
எரிமலையை ஏறுவதற்கு முன்பாக ‘mask’ அணிய அறிவுறுத்தப்படுகிறது. ஜீப்பில்தான் பயணம் செய்ய வேண்டும். அந்த ஜீப் குறித்தே தனிப் பதிவு எழுதலாம். டச்சுக்காரர்களும் ஜப்பானியர்களும் 1940களில் பயன்படுத்திய ஜீப்பை இந்த எரிமலையை ஏறுவதற்குப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவும் தரமாகவும் அந்த ஜீப் இருப்பது ஆச்சரியம்.

பல ஆபத்தான வளைவுகளை மிக அசாத்தியமாகத் தாண்டிச் செல்கிறது அந்த ஜீப். புழுதியிலிருந்து தற்காத்துக் கொள்ளவே நிச்சமாக அந்த முகக்கவசம் நமக்கு அவசியமாகத் தேவையும் படுகிறது. மேலும், எரிமலை குழம்பின் மணம் ஒருவகை அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதும் கூட. அமர்ந்திருந்தாலும்  முகுந்த சாகசத்தோடு ஜீப் சீறி பாய்ந்து கொண்டு வளைவுகளை எதிர்கொண்டபோது அதை நாங்களே இயக்குவதைப் போன்று ஒரு எண்ணம் எழவும் செய்தது. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துக்கொண்டும் சிரித்துக் கொண்டும் எரிமலையை நோக்கி முன்னேறிய வேளையில், ஒரு இடத்தில் எங்களின் ஓட்டுநர் ஜீப்பை நிறுத்தினார்.


எரிமலையின் சீற்றத்திற்கு இலக்காகி, வெறும் கூடு மட்டும் எஞ்சிய சில உயிரினங்கள், எரிந்து காட்சி பொருளாகப் பழுதாகி போயிருந்த சில பொருள்கள் எனச் சுற்றுப்பயணிகளுக்காகக் காட்சி படுத்தியிருந்த இடத்தில் சில நிமிடங்கள் செலவழித்தோம். உண்மையில் அது சந்தோஷிக்கும் இடமில்லை. யாரோ எப்பவோ வாழ்ந்த அந்தக் குடிலை எரிமலை குழம்பு முற்றாக அழித்திருந்தது. யாருடைய மகிழ்ச்சியோ, இன்ப நினைவுகளோ அந்தக் குடிலில் மிச்சம் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.

ஆனால், துர்சம்பவங்களை ஜோக் ஜகார்த்தா மக்கள் துர்சம்பவங்களாகக் கருதுவதில்லை. அது அவர்களின் பிளஸ்-சாகத்தான் பார்க்கிறார்கள்.
2010-ஆம் ஆண்டு அந்த எரிமலை பொங்கியதில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். அதன் எச்சம் இன்னும்கூட அங்கு இருந்தாலும் அதையெல்லாம்  தங்களுக்குச் சாதகமாக மாற்றியோசிக்கிறார்கள். சீற்றத்திற்குப் பின்பு ஏற்படும் மண்ணின் வளமும் இறுகிப்போன எரிமலையின் லாவாவும் அவர்களுக்கு வருமானம் ஈட்டித்தரக்கூடியதாக இருக்கிறது. கவலையை மறைத்துக் கொண்டோ அல்லது கவலையை மறந்தோ வாழ்வதற்கு  இயற்கை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது.



இன்னும் சொல்லப்போனால் சிரித்த முகத்தோடு, சீற்றத்தை  வரவேற்க பழகிக்கொண்டிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்ப்பவர்கள்' யாராவது இருப்பார்களேயானால் அது ஜோக்ஜகார்த்தா மக்கள்தான்.


எரிமலையின் லாவா, கற்களாக இறுகியப்பின் அதில்  சிலை செய்வது, பாறைகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவது என உபயோகிக்கிறார்கள். சாலையின் இரு வழியெங்கும் அதன் இறுகிப்போன எச்சங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன.


எரிமலையின் உச்சியில் சில இடங்களில் ஆவிபோலப் புகை கசிந்துக்கொண்டிருந்தது. எங்களின் வழிகாட்டி கையை வைத்து பார்க்க சொன்னார். உஷ்ணம் தாங்க முடியவில்லை. “எரிமலை தற்போது எங்களைப் பொறுத்துக்கொண்டு இருப்பதே பெரிய விஷயம்” என அரட்டை அடித்துக்கொண்டிருந்த போதே வழிகாட்டி அந்தத் துயர்மிகு சம்பவத்தைச் சொன்னார்.

2010-ஆம் ஆண்டு எரிமலை பொங்கியதில் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட புதைக்குழியின் இரும்பு கதவையும் தாண்டி லாவா உள்ளே சென்றதில் அடைக்கலம் அடைந்திருந்த அத்தனை உயிரும் பலிவாங்கப்பட்டது என்றார். நாங்கள் உள்ளே சென்று அந்தப் புதைக்குழியைப் பார்வையிட்டோம். அந்த மன உணர்வை அப்போது கடந்திருந்தாலும், volcano  எரிமலையைப் பற்றிச் செய்திகள் வரும்போதெல்லாம் கொஞ்சம் நடுக்கமும் பயமும் வருத்தமும்
ஏற்படத்தான் செய்கிறது.

எரிமலையின் பல பகுதிகளில் மக்களின் குடியிருப்பைக் காணமுடிந்தது. அபாயம் இருந்தும்கூட ஏன் மக்கள் அங்குக் குடிலை அமைக்கின்றனர் என்று வழிகாட்டியிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே சொன்னார், மரணம் மிக அருகில் இருப்பது தெரியும். அதனோடு வாழ பழக்கப்படுத்திக்கொண்டவர்கள் நாங்கள் என்றார்.

தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக