வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பெண்கள் ஏன் காமத்தைப் பேசவும் எழுதவும் தயங்குகிறார்கள்?


பெண்கள் ஏன் காமம் பேச தயங்குகிறார்கள்?
இந்தக் கேள்வியை நானே என்னைக் கேட்டுக் கொண்ட போது, ஒரு சராசரி பெண்ணாக அதற்கான பதில்கள் இதுதான் எனக் கூறிக்கொண்டேன்.

காமம் பற்றிப் பேசும் பெண் நிச்சயம் நடத்தை கெட்டவளாகத்தான் இருப்பாள்.
அவளுக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாம்.
வளர்ப்பு சரியில்லாதவள்.
பிஞ்சியிலேயே பழுத்திருக்கலாம்.
பலரோடு உடலுறவுக் கொண்டவளாக இருக்கலாம்.
காமம் பற்றிப் பேசும் பெண்களைச் சமூகம் தவறாக நினைக்கும்.
ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பர்.
ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் அணுக நேரலாம்.
சர்ச்சையில் சிக்க நேரிடும்.
மரபு மீறியவளாகக் கருதப்படுவாள்.
பெயர் கெட்டு விடும்.
அது குடும்பத்தில் உள்ளவர்களையும் பாதிக்கும்.
இன்னும் ...இன்னும் ...

அப்படியென்றால், இதுவரை பெண்கள் காமம் பற்றிப் பேசியதே இல்லையா? “பேசியதே இல்லை” என்று யாருமே சொல்ல முடியாது என்று தமிழ் இலக்கியம் படித்திருக்கும் அனைவரும் அறிவர். உடலின் வேட்கையையும் காமத்தின்தாகத்தையும் சங்க இலக்கியங்களில் பெண் புலவர்கள் பாடியதைக் காட்டிலும், அதனையடுத்து அத்தனை துணிவாகவும் வெளிப்படையாகவும் 20-ஆம் நூற்றாண்டுப் பெண்கள் வரை பாடியதும் எழுதியதும் குறைவு என்றே கூறலாம்.

சங்க காலத்தில் பெண் புலவர்கள் ஆக்கி வைத்திருக்கும் அந்தக் காமப் பெட்டகங்களைத் திறக்கும்போது, எவ்வித நெருடலுமின்றி தயக்கமின்றி சிலாகித்துப் புசிக்க யாரும் தயங்குவதில்லை. கூச்சப்படுவதிமில்லை.அதைப் பெண்களேகூட ஆய்வுக்கு உட்படுத்தும் போது, பிசுறு தவறாமல் பாடவும் அதைச் சிலாகிக்கவும் செய்கிறார்கள். பல நாள் பட்டினி கிடந்தவள் உணவுக்காக ஏங்குவதைப் போலப் பலவருடங்கள் அல்லது பல நாட்கள் உற்றவனின் வருகைக்காகக் காமப்பசியோடு தகித்துக் கிடந்தவளின் நிலை என்ன என்பதைச் சங்க பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன. தலைவனுக்காகத் தலைவியும் தலைவிக்காகத் தலைவனும் பாடும்படியான பலபாடல்களில் காமத்திற்குப் பிரதான இடமுண்டு.

தற்போதைய சூழலில் காமத்தைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல உறவின் இயக்கங்களைப் பேசக்கூட ஆண்கள் தயங்குவதும் கூச்சப்படுவதுமில்லை. அதை முகநூலில் நிலைத்தகவலாகப் பதிவிடுவதும், அதைக்குறித்து விவாதங்கள் செய்வதும், கிண்டலோடும் கேலியோடும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும் கண்ணுறும்போது அவர்கள் உலகில் அவர்கள் மட்டுமே இருப்பதைப் போன்று தோன்றும். அதே தகவலை ஒரு பெண்வெளிப்படையாகத் தெரியபடுத்த முனைகிறார் என்றால் அவரின் கேரக்டரிலிருந்து அது விவாதத்திற்கு உட்படுத்தப்படும்.
காமத்தைப் பொறுத்தவரை காமச் சூத்திரங்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக வைத்தாலும் அதை ஆணின் மூலமாகவே பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் அல்லது ஆண் இவ்விஷயத்தில் ஆள்பவனாகவும் பெண் அதை ஏற்பவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இது இந்தியச் சூழலில் தொடர்ந்து நிலைநிறுத்தவும் பட்டுள்ளது.

கடல் அன்ன காமம் உழந்தும்’ ( குறல் 1137)  என்று வள்ளுவர் சொல்கிறார்.
ஆணுக்கும் -பெண்ணுக்கு ஒரே மாதிரிதான் உழந்தும் என்பதைக்காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி’ (குறல் 1131)
என்று மற்றொரு குறளில் தெளிவுபடுத்துகிறார்.

ஆனால், ஒரு பெண் தன் துணையிடத்திலும் அவளின் தேவையையும் ஆசையையும் காமத்தின் ஐயப்பாட்டையும் தீர்த்துக்கொள்கிறாளா என்ற கேள்வியை வைத்தால் அங்கு மௌனமே மிஞ்சுகிறது. உடல் ரீதியில் தன்தேவையைப் பெறுவது இரண்டாமிடத்தில் வைத்து அது குறித்து அவள் மனம் திறந்து பேசுகிறாளா அல்லது தன் தேவைக்காகத் திருவாய் மலர்கிறாளா என்ற கேள்வியை முதலில் வைப்போம், இந்த இடத்தில் ஒரு பெண்ணாவது தேர்வாளா என்றும் தெரியாது. காமம் பேசுதல் இந்திய அல்லது தமிழ்ப் பெண்களிடையே ஒரு நெருடலான விடயமாகவே ஆகிவிட்டது


ஓர் ஆண் தன் காமத் தேவையை வெளிப்படையாகக் கேட்டு, ஒரு பெண்ணை அணுகுகிறான். ஆனால், ஓர் ஆணிடம் பெண், தன் உடல் தேவையை, தனது உடல் மொழியில் அல்லது பார்வையால் கூடத் தெரியப்படுத்தத் தயங்குவதற்கு என்ன காரணம்? திருமண ஜாதகத்தில் யோனிப் பொருத்தம் பார்க்கும் இந்தியச் சமுதாயம், என்றாவது பெண்ணின் உடல் தேவையின் சராசரி ஆசைக்காகச் சிந்தித்திருக்கிறதா?

தனது நியாயமான ஆசையை வெளிப்படுத்துவது வழி தனது குடும்ப வாழ்கையில் சிக்கல் ஏற்படும் என ஒரு பெண் யோசிக்கத் தொடங்கும்போது அந்த ஆசையைத் தியாகம் செய்யவே அவள் விரும்புகிறாள்.
அப்படியே, காமத்தைக் குறித்து அவள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கும்போது அதை ஆண்கள் எப்படி சீரணிப்பார்கள் என்ற ஆராய்ச்சிக்குப் போவதற்கு முன்னர், சக பெண்களுக்குள் காமம் குறித்தான உரையாடல்கள் எப்படி நடக்கிறது? அல்லது காமத்தைக் குறித்துப் பெண்கள் பேசிக்கொள்கிறார்களா?

காமம் குறித்துப் பெண்களின் புரிதல் எப்படி உள்ளது உள்ளிட்ட கேள்விகளை அடுக்கும்போது, அங்கே தன் தோழிகளினாலே அவள் விமர்சனத்திற்கு உள்ளாகும் சிக்கலும் தோன்றுகிறது. சக தோழிமார்களே அவதூறுகள் அவள்மீது கட்டவிழ்க்கிறார்கள் என்பது நிதர்சன உண்மையாகும்.


முத்தன்ன வெண் முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்'

புணர்வதோர் ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்தது
(நாச்சியார் திருமொழி)

என ஆண்டாள் பாடலை போல, பெண்ணிற்கான காம இச்சையை இந்தக் காலத்துப் பெண்களால் பதிவு செய்ய ஏன் முடியவில்லை? ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தஎன்பார்கள்.

காமத்தைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், தனக்கு எதுவும் தெரியாது எனப் பெண்கள் பொய் சொல்வதற்கான காரணம் என்னவாக இருக்கும்? கணினி யுகத்திலும், ரெட்டை அர்த்தங்கள் கொண்ட சினிமா வசனத்திலும், முதலிரவு மற்றும் பாலியல் வன்முறை காட்சிகளிலும் உடலுறவுக் குறித்தான இச்சையைத் தெளிவாகவே காட்டிவிடுகின்றனர். பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கே உடலுறவு குறித்த விஷயங்கள் தெரியும்போது சில பெண்கள் ஒன்றுமே தெரியாது என நடிப்பதைக் கண்டுபிடிக்க முடியாத அறிவிலியாகவா ஆண் இருக்கிறான்? ஆனால், அதைதான் அவன் விரும்புகிறான் என்பது என்வரையில் நகைப்பான ஒரு விஷயமாகவே இருக்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் கிளர்த்துதலுக்கு அப்பால் காமம் மனம் சார்ந்த விஷயமாக அமைகிறது. ஆனால், ஓர் எல்லைக் கோட்டுக்குள் வலிய தன்னை இருத்தி வைத்து கொள்வதுதான் பெண்னின் மனநிலையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. காமத்தைக் குறித்துப் பேசியவர்களில் ஓஷோ முக்கியமானவராகக் கருதப்படுகிறார். காரணம் ஓஷோ உடலை விடுதலை செய்யச்சொல்கிறார். காமத்தினால் உடல் வருந்தக் கூடாது என்பதை ஓஷோ வலுவாகப் பேசுகிறார்.

பேசவே படாத காமம் வன்மமாக மாறிவிடும் ஐயம் இருக்கிறது. இது எல்லாம் பெண்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவள் அதைப் பேசத் தவிர்க்கத்தான் செய்கிறாள். தங்களுக்குள்ளாகவே ஓர் அணையைப் போட்டு, முழுக்காமத்தையும் பார்க்காமலே மடிந்தும் போய் விடுகின்றனர்.
அண்மையில் காமம் சார்ந்த சில கவிதைகளைக் கவிதைச் சிற்றிதழ் ஒன்றுக்கு நான் வழங்கியிருந்தேன். அதை வாசித்த நண்பர் ஒருவர், நீங்கள் எப்படி அம்மாதிரியான கவிதைகளை எழுதலாம்? அதன் நோக்கம் என்ன?எல்லோரும் எழுதுகிறார்கள் என்பதற்காகத்தான் நீங்கள் ஏழுதுகிறீர்களா? பிறரால் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறீர்களா? எனக் கேள்விகளை எழுப்பினார்.

ஒரு பெண்ணுக்குச் சமுதாயத்தில் பிரச்சினை ஏற்படுகிறது, அவள் அதைத் தைரியமுடன் பேசுவதற்கு முன்வருகிறாள். ஒரு பெண்ணுக்குப் பசிக்கிறது; சாப்பிடுகிறாள். காதல் வயப்படும் ஒருப்பெண் அதைக் குறித்து அதே காதலோடு பகிர்கிறாள். குழந்தையைக் கருவுறுவதிலிருந்து, பெற்றுக்கொள்வது வரை அத்தனையையும் தயக்கமே இல்லாமல் தெரிவிக்கிறாள். அவள் மலடியாக இருந்தாலும் அந்த வலியையும் பேசுகிறாள். இயற்கையைக்கொண்டாடுகிறாள்.  முரண்படுகிறாள். இவை  எல்லாவற்றையும் போலத்தானே காமமும். ஏன் அதைப் பேசக்கூடாது என நண்பனிடம்  கேட்டேன்.

மகுடிக்கு மயங்கும்
பாம்பென
ஆட்டி வைக்கிறது காமம்
(படிகம், ஜூன் 2016)

நீங்கள் இப்படி எழுதியிருக்கும் இந்தக் கவிதை மாதிரியான உணர்வுதான் உங்களுக்கு ஏற்படுகிறதா? என்று தொடர்ந்து அந்த நண்பர் கேள்வியை எழுப்பும் போது, அவர் என் மீது வைக்கும் பார்வையை நான் உணராமல் இல்லை. எனக்குப் பசிக்கும்போது சாப்பிட்டால் பசி மயக்கம் வராது. பசியோடு இரண்டு நாள் பட்டினி கிடந்து, பிறகு சாப்பிட்டால் மயக்கம்தான் வரும். அப்படித்தான் காமமும் என்றேன்.

பெண்கள் காமம் குறித்துப் பேசுவதையே தயக்கத்தோடு பார்த்தால், அவள் அதிலிருந்து வெளிய வந்து எப்படி யோசிப்பாள்? ஒரு இரண்டாம் தர பார்வை தம்மீது விழும் என்ற மனத்தடையே அவளைக் காமம் குறித்துப்பேசவிடாமல் செய்துவிடுகிறது.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

(குறுந்தொகை)

நன்றி ஆக்காட்டி ஜூலை-செப் இதழ்

(குறிப்பு: ஆக்காட்டி இதழில் 
முத்தன்ன வெண் முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்தது

என்ற பாடல்களின் வரிகளின் கீழே ”அபிராமி அந்தாதி” என்று தவறாக குறிப்பிட்டிருந்தேன். ”நாச்சியார் திருமொழி” என்பதே சரியாகும்.             தவறுக்கு வருந்துகிறேன்.)  


6 கருத்துகள்: