சனி, 24 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 5

பினாங்கை சுற்றி பார்க்ககூடிய ஸ்தலங்களில், தெரு ஓவியங்களைக் காண வேண்டிய ஒன்றாகக் குறிப்புகள் இருக்கிறது. ஆனால், அவை தெரு ஓவியங்களுக்கான இலக்கணத்தில் சேர்ந்தவையா என்றால் நிச்சயமாக இல்லை. வியாபார நோக்கத்தில் போலியாக உருவாக்கியிருக்கிற தெரு என்றாலும் பார்ப்பதற்கு ஆழகாகவே இருக்கிறது. ஒரே வரிசை என்று இல்லாமல் ஓவியங்களை நாம் தேடி செல்ல வேண்டும்.

3 டி வகையைச் சேர்ந்த ஓவியங்கள் உயிரோட்டமாக வரையப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். புகைப்படம் எடுக்கும்போது தத்ரூபமாக அமைகிறது. தெரு ஓரத்தில் ஓவியர்கள், தெருவை சுற்றிவர சைக்கிள் வாடகைக்காரர்கள், பேட்சா ஓட்டுனர்கள் என நேரம் ஆக ஆகத் திருவிழா கோலத்தில் தெரு கலைகட்டுகிறது.

நாங்கள் ஓவியங்களோடு நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பாம்புக் கோயிலுக்குக் கிளம்பினோம். பார்த்த கோயிலில் ரொம்பச் சாதாரணமான கோயிலாக அது இருந்தது. ஆனால், பாம்புக்கோயிலைப் பற்றிய அறிவிப்புப் பலகைகள் பினாங்கின் முக்கியச் சாலைகளில் விளம்பரப்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.


நாங்கள் சென்ற நேரம் கோயிலை மூடும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் கோயில் வெறிச்சோடி இருந்தது. பாம்புகள் உண்ட களைப்போ என்னவோ தெரியவில்லை, ஆடாமல் அசையாமல் எளக்காரமாக உச்சியில் படுத்திருந்தன. அவை கூண்டில் அடைக்கப்படவில்லை என்றாலும் ஏதோ மயக்கம் அடைந்திருப்பதுபோலப் படுத்திருந்தன. தோலுரித்த அதன் ஆடைகள் ஆங்காங்கு விழுந்துகிடந்தது. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த மலைப்பாம்புகள் மூச்சு விடுவதும் நெலிவதுமாக இருந்தன. நாங்கள் பொம்மைகள் அல்ல என்று எச்சரிப்பது போன்று இருந்தது.

பாம்பு என்றதும் சௌந்தரி (மா) கோயில் வாசலைக்கூட மிதிக்கவில்லை. அவருக்குப் பாம்பு என்றால் பயங்கர அலர்ஜி என்று திரும்பத் திரும்பக் கூறி முகம் சுழித்தார். யாழினிக்குப் பாம்பு பயம் இருந்தாலும், அந்தப் பயத்தோடே புகைப்படங்களைச் சிரித்தபடி எடுத்துக்கொண்டாள்.
கோயிலைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கான கையேடோ அல்லது கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ இல்லாததால் அதற்குமேல் எதையும் அறிய முடியவில்லை.

கோயிலைப்பற்றி தெரிந்துகொள்வதற்கான கையேடோ அல்லது கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ இல்லாததால்  அதற்குமேல் எதையும் அறிய முடியவில்லை. ஆனால், வாசலில் இருந்த கோயில் அறிமுகப்பலகையில் இருந்த விவரம் இப்படி சொல்கிறது..சென்ற நூற்றாண்டில் சீன நாட்டிலிருந்து சாமியார் ஒருவர் ‘Chor Soo Kong’ என்ற கடவுளின் சிலையைக் கொண்டு வந்தார். அந்தச் சிலையின் மகிமையினால் தீராத நோய்கள் குணமானது. 1873 ஆம் ஆண்டுக் கெலுகோர் தோட்டத்தில் வசித்த David Brown என்பவருக்கு ஏற்பட்ட நோய் இந்தக் கோயிலுக்கு வந்த பிறகு குணமானது. அதற்கு உபாயமாக அவர் நிலத்தை வழங்கினார். மேலும் பொதுமக்கள் உதவியுடன் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
கோயில் கட்டி முடித்த பிறகு, தாமாகவே சில மர்ம பாம்புகள் கோயிலில் அடைக்கலம் அடைந்தன. Wagler’s Pit Viper இனத்தைச் சேர்ந்த இந்தப் பாம்புகள் 10 லிருந்து 15 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. 1 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இந்தக் கோயிலில் இருக்கும் 600 பவுண்ட் கொண்ட ராட்ஸச மணிகள் 1886 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது.கண்ணாடி பேழையில் ஆயுதங்களோடு நின்ற சீனகாவல் தெய்வங்கள் கவனத்தை ஈர்த்ததோ என்னவோ மாலதி மைத்திரி அதைப் புகைப்படம் எடுக்கக் கேட்டுக்கொண்டார். நமது காவல் தெய்வங்கள் கையில் இருக்கும் அரிவாள், சூலம் மாதிரி சீன தெய்வங்களும் பிரமாண்ட ஆயுதங்களைக் கையில் ஏந்தி பூதகணங்களாக அருள் பாலிக்கின்றன. ஒரு நீண்ட வரிசையில் சின்னச் சின்னச் சிலைகள் இருந்தன. நிச்சயமாக அவற்றுக்குத் தனித்தனி பெயரும் கதையும் இருக்கலாம். இந்திய தெய்வ புராணங்களுக்குக் கொஞ்சமும் குறைந்தது இல்லை சீன தெய்வ புராணங்களும். இருள் சூழும் நேரம் நெருங்கிவர நாங்கள் இரவு சந்தைக்குச் செல்வதற்குத் திட்டமிட்டோம்.

றஞ்சி (மா) ஒடியல் கூழ் வைத்துத் தருவதாகச் சொன்னார். அதற்கான பொருட்களை வாங்கவும் மலேசிய இரவு சந்தையின் அழகை ரசிக்கவும் ஓரு வாய்ப்பு அமைந்தது.

இப்படியாக எங்களின் முதல் நாள் பயணம் முடிவடைய மாலதி மைத்திரி, கல்பனா, விஜியலட்சுமி (மா), தங்கை பாரதி மற்றும் மணிமொழி ஆகியோர் இரவே கோலாலம்பூர் புறப்பட்டனர்.  நிலா மறைந்து தூவானம் தூவ தொடங்கியிருந்தது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக