வெள்ளி, 23 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 4வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த தோழிகளை போன்றுதான் எனக்கும் பிரமாண்டத்தைக் கொடுத்தது பினாங்கு மாநிலம். நான்  4-வது முறையாக பினாங்கு மாநிலத்திற்கு சென்றாலும் சேர்ந்தார்போல ஒரு வாரம் தங்கியிருந்ததும் அந்த மாநிலத்தோடு உறவாடியதும் இதுவே முதல் முறை.


தோழிகள் அனைவரும் அமைதியான மனநிலையில் இருந்தனர். காத்திரமான உரையாடல்கள், விவாதங்கள் முரண்பாடுகள் தீர்ந்து  ஆசுவாசிக்கும்  மனநிலை அது.  மழைக்காக திரண்ட கருமேகங்கள் கலைந்து தெளிந்து  நீல மேகம் சிரிப்பதைப்போல. பரிசுத்தமான இரவில் களங்கமில்லாத பௌர்ணமி நிலைவைப்போன்ற மனநிலை அது.   
அனைத்து தோழிகளிடத்திலும் அன்றைய  நாள் செடியில் பூத்த முதல் பூவைபோல  மலர்ந்திருந்தது.  இலங்கை தோழியர்களில் சிலர்  தங்கள் சொந்த திட்டத்தில் கோலாலம்பூரை சுற்றிப்பார்ப்பதற்கு கிளம்பினர்.  வழக்கறிஞர் ரஜனியும் அவசர அலுவல் காரணமாக முதல் நாள் இரவே இந்தியாவுக்கு பயணித்திருந்தார்.


எங்கள்  15 பேருக்காக  பா.சிங்காரம் பதிவு செய்த அந்த அழகிய பினாங்கு மாநிலம், இத்தனை ஆண்டுகள்  காத்திருப்பதைப்போன்று பிரம்மை எழுந்தது.  என் தோழிகள் அனைவரும் வரலாற்றை திரும்பி பார்க்கவைத்த பார்க்க வைக்கப்போகும் பெண்கள்.  இன்றைய விடியலில் ஒன்றாக  இணைந்து பினாங்கு மாநிலத்தில் தன் மூச்சுக் காற்றை, காற்றில் கலந்துவிட்டு போவார்கள் என  யாரும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். 

நாங்கள் அனைவரும் அமரக்கூடிய ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்து பினாங்கை சுற்றிவர புறப்பட்டோம்.  அந்தப் பயணத்தை மணிமொழி திட்டமிட்டார். தொடக்கமாக நாங்கள்  பகோடா என்று சொல்லக்கூடிய Kek Lok si  சீனக் கோயிலுக்குச் சென்றோம். பினாங்கிற்கு வரும் சுற்றுப்பயணிகள் நிச்சமாக பார்க்ககூடிய  கோயில் அது. கோலாலம்பூர் முருக சிலையைப்போன்று மிக பிரமாண்ட  சீன தெய்வ உருவச் சிலைகளை அங்கு பார்க்கலாம்.  நாம் பினாங்கு சாலையில் பயணிக்கும்போதே அடர்ந்த மலை புதர்களுக்கிடையில் கோனியன்  எனும் சீன பெண் தெய்வ உருவசிலை நம்மை பிரமிக்க வைக்கும்.


கோயிலின் மிக குறுகிய  நுழைவாயிலில்  நுழைந்து மேலே நடந்தால் இருபுறங்களிலும் சுற்றுப்பயணிகளுக்கென்று நிறைய நினைவுச்சின்ன பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.  கைவினை பொருட்கள், ஆடைகள், அலங்கார பொருட்கள், சிலைகள் என பலதரப்பட்ட பொருட்களை  பேரம்பேசி அங்கு மலிவாக வாங்கலாம்.  
முதல்முறையாக அந்தக் கோயிலுக்கு செல்பவர்களுக்கு ஒரு குழப்பமான மன நிலை இருக்கவே செய்கிறது. மலைப்பாம்புபோல நீண்ட நெலிந்த பாதையில் திடீரென தோன்றும் இருவழிப்பாதைகள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.  நீண்ட தூரம் வந்தப்பிறகே  Kek Lok si  நுழைவாயிலை அடைந்தோம்.

வாசலில் உடற்பேறு குறைந்த சீனப்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரைக் கடந்து செல்லும்போது இன்னும் பல பேர் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டு  வரிசையாக அமர்ந்திருந்தனர். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. நாட்டில் பணபலம் கொண்டவர்கள் சீனர்கள்தான். தங்கள் சமூதாயத்தை மேம்படுத்த அவர்களுக்குள்ளாகவே  நிறைய உதவி செய்துக்கொள்வார்கள். அதோடு பினாங்கு மாநிலம் எதிர்கட்சி அரசாங்கத்திடம் இருக்கும் மாநிலம்.  அதை கிட்டதட்ட சீன அரசாங்கம்  நடத்தும் மாநிலம் என்றே மலேசிய மக்கள்  விமர்சிப்பார்கள். மேலும் பினாங்கு, சீனர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலமும் கூட. இத்தனை அம்சங்கள் இருந்தும்  நிறைய பிச்சைக்காரர்கள் இருப்பதும் அதுவும் அவர்கள் சீனர்களாக இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு சங்கடத்தையும் ஏற்படுத்தியது.

அவர்களை கடந்து போகையில்  கோயிலின் சிலைகளும்  வழிபாட்டுத்தலங்களும் காண  கிடைக்கிறது.  மிக பிரமாண்டமான அந்த கோயிலை அவசர அவசரமாக பார்த்துவிட்டு வர முடியாது.  மலைமேல் இருக்கும் அந்த  கோயிலை மிக ரசனையோடு பார்த்தோமானால் இயற்கையோடு ஒன்றியிருப்பதை அறிய முடியும்.

தங்க நிறச் சிலைகளுக்கு முன் எரிந்துக்கொண்டிருக்கும்  ராட்ஷச ஊதிவத்திலும் மெழுகுதிரிகளும் விளக்குகளும்  முடிய முடிய எரியபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். நமக்கு மூட நம்பிக்கைகள் இருப்பதைப்போன்றே சீனர்களுக்கும் மூட நம்பிக்கைகள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்கு நம்மை காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது எனலாம்.  வாஸ்து சாஸ்திரம், சகுனம், இறைவழிபாடு, ஆவி வழிபாடு உள்ளிட்ட விஷயங்களை அவர்கள் விளையாட்டாக நினைப்பதே இல்லை.  வண்ண வண்ண ரிப்பன்கள் தொங்கிக்கொண்டிருந்த மரத்தைப் பற்றி அதில் ஆர்வமாக ரிப்பன் கட்டிக்கொண்டிருந்த சீனரிடம் விசாரித்தேன். ஒரு வெள்ளி ஒரு ரிப்பன். மனதில் நினைப்பதை அந்த ரிப்பனில் எழுதி நன்றாக பிரார்த்தனை செய்த பிறகு கட்டச் சொன்னார். 'வேதம் புதிது' சத்தியராஜ் மாதிரி பகடியாக கேள்வி எழுப்பும் சமாச்சாரத்தை எல்லாம் நான் சீனர்களிடம் வைத்துக்கொள்வது இல்லை. முன் விளைவு பின் விளைவு எல்லாம் முன்னமே கொஞ்சம் பார்த்துள்ளதால் என் கேள்வியை நிறுத்திவிட்டு ரிப்பன்களை ஒரு பார்வையிட்டேன். எத்தனை எத்தனை ஆசைகளும் வேண்டுதல்களும் ரிப்பனாக தொங்கிக்கொண்டிருக்கிறது என்று பிரமிப்பாக இருந்தது. 
தோழிகளும் சமத்தாக அதிக கேள்விகளை எழுப்பாமல் கோயிலை ரசித்தனர். 

அந்த மலை கோயிலை கண்டு கழித்த நாங்கள் அடுத்து தெரு ஓவியங்கள் அமைந்திருக்கும் சாலைக்கு சென்றோம். பினாங்கில் இந்த தெரு ஓவியங்களை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருந்தனர். நவீன பினாங்கை இந்த  தெரு ஓவிய விளம்பரங்கள் உண்மையில் அலங்கரிக்கத்தான் செய்கிறதா? 


(தொடரும்)

4 கருத்துகள்:

 1. கோவிலில் எழுதி வேண்டி கொள்வது எல்லா நாட்டிலும் உண்டோ இந்தியாவில் மட்டும் தான் மூட நம்பிக்கை உண்டு என நினைத்தேன்

  பதிலளிநீக்கு
 2. பணக்கார மற்றும் பிச்சைக்கார சீனர்கள்..
  வள்ளுவர் தான் வராரு நினைவுக்கு...
  இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
  பார்தாக்கப் பக்கு விடும்.
  (இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது,இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் மோதினால் நொறுங்கிவிடும்)
  கோனியன் சிலை போட்டோ இருந்தால் போட்டுவிடுங்க தோழர்."பினாங்கு" குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பெண் தெய்வமான கோனியன் சிலை வேறுபாடுஉடையது. நான் நம்ம ஊர் கோணியம்மன் சிலை போல என்று நினைத்துவிட்டேன்.இரு வேறு அழகுகள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் யோகிம்மா..

  பதிலளிநீக்கு