வியாழன், 8 செப்டம்பர், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 6

 ஜோக் ஜகார்த்தாவில் பார்த்த சண்டிகளில் ‘சண்டி மெண்டுத்’ பற்றிச் சொல்லவேண்டும். மூன்று மிகப்பெரிய புத்த விக்கிரகங்களும், சண்டியின் உச்சி மூன்று அடுக்குகளாகவும் அதில் 48 குட்டி குட்டி விக்கிரகங்களும் கொண்டதாக இருக்கிறது.

மெண்டுத் சண்டியில் புத்தர், சக்யமுனி என்ற பெயரில் மூல சிலையாகத் தர்மசக்கரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கிறார். வலது புறத்தில் இருக்கும் சிலைகளுக்குப் பத்மபனி என்றும் இடது புறத்தில் இருக்கும் சிலைக்கு வஜ்ரபனி என்றும் பெயர் சொல்கிறது விக்கிபீடியா தகவல்.
1836-ஆம் ஆண்டுக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புத்த ஸ்தலம் 1897 ஆண்டு முதல் 1904 ஆண்டு வரை சீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், அது திருப்திகரமாக அமையவில்லை. மீண்டும் 1908 ஆம் ஆண்டு அச்சண்டி திரும்பவும் புதுப்பிக்கப்பட்டது.


‘சண்டி மெண்டுத்’ புத்த விஹாராவாக அறியப்பட்டாலும் சில கல்வெட்டுகளில் இந்திய பாரம்பரியம் சிற்பங்கள் அங்கும் பொறிக்கப்பட்டுள்ளது அல்லது புகுத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது. கருங்கல்லில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் புத்த சிலைகள் ஒவ்வொன்றும் நம் எதிர்பார்க்காத விதத்தில் இருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
பழங்கள், பூக்களைப் படைத்தும் ஊதிவத்தி கொழுத்தியும் புத்தரை வணங்குகின்றனர். நான் அதுவரை சென்ற எந்தப் புத்த ஸ்தலத்திலும் இதுபோல வணங்கும் முறையோ அல்லது படையல் முறையோ இல்லை.
பெரிய ஆலமரம் ஒன்று சண்டியின் பக்கத்தில் இருந்தது; புத்தருடைய போதிமரம் போல அத்தனை பிரமாண்டம் அதன் விழுதுகளில். அதன் மடியில் அமர்ந்து கதை பேசினோம். ஞானம் பிறந்ததாக உணரவில்லை. அதையும் தாண்டிய சொல்ல முடியாத உணர்வு. நானும் சந்துருவும் மரத்தின் கீழ் புகைப்படம் எடுத்து கொண்டோம்.




சற்று நேரத்தில் சந்துரு ஏதோ வரைய தொடங்கியிருந்தார். கலைஞர்களின் மனதில் உள்ளதை யாரால் அறிய முடியும்? அவர்களின் உலகத்தில் அத்துமீறி நுழைவதும் அநாகரிகமான ஒன்றாக நான் கருதுவதால் நான் அவரைத் தொந்தரவு செய்யாமல் புகைப்படம் மட்டும் எடுத்தேன்.


ஜோஜ் ஜகார்த்தா குறித்து நான் குறிப்பிட விரும்பும் தகவல்களில் மிக முக்கியமானது கல்வியாகும். ஜோக் ஜகார்த்தாவை சுற்றி மொத்தம் 134 பல்கலைக்கழகங்களும் 400-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கூடங்களும் இருக்கின்றன. கல்விக்குப் பேர் போன மாநிலமாக ஜோக்ஜகார்த்தாவை அம்மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். ஓர் ஆரம்பப் பாடசாலையில் நுழைந்து அதன் பொறுப்பாசிரியர் ஒருவரிடம் உரையாடவும் செய்தோம். ஆனால், அன்று பேசிய விஷயங்கள் ஏனோ என் நினைவில் இப்போது இல்லை.


அடுத்து நான் பார்த்து வியந்த மற்றுமொரு விடயம் சாலை போக்குவரத்தாகும். ஜோக் ஜகார்த்தாவின் சில முக்கியச் சாலைகளில் மாலை 5 மணிக்கு மேல் சொந்த வாகனங்களில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சா, மிதி வண்டி, குதிரை வண்டி போன்றவையே பயன்படுத்த முடியும். நல்ல ஆரோக்கியமான குதிரைகள் சாலைகளில் தங்கு தடையின்றிச் சவாரிக்கின்றன. தவிரவும் அங்கு மோட்டார் சைக்கிளும் டாக்ஸியாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல மோட்டார் சைக்கிள் டாக்ஸி பயன்பாடு தாய்லாந்திலும் பார்த்திருக்கிறேன்.

நான் ஜோக் ஜகார்த்தாவின் சாலையைப் பற்றிக் கூறுகையில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. சாலை சமிக்ஞையில் நிற்கும்போது பலதரப்பட்ட சாலை தொழிலாளர்களைக் காண முடிகிறது. அவர்கள் நம் அனுமதிக்காகவோ உத்தரவுக்காகவோ காத்திருப்பதில்லை. ஒரு துண்டு துணையை வைத்துக் கொண்டு விறுவிறுவென வாகனக் கண்ணாடியை துடைக்கிறார்கள். பின் கையேந்துகிறார்கள். நாம் கொடுப்பதை வாங்கிப் பார்க்ககூட அவர்களுக்கு நேரமில்லை. அவகாசமெல்லாம் சாலையின் சமிக்ஞை விளக்குப் பச்சை நிறத்திற்கு மாறும்வரைதான். அதற்குள் எத்தனை வாகன கண்ணாடியை துடைக்க முடியுமோ துடைக்கிறார்கள். அதிகமாக இந்த வேலையைச் செய்பவர்கள் சிறுவர்கள் என்பது வேதனையான விஷயம்.

இரவு நேரத்தில் நங்கைகள் தன்னை நடன கலைஞர்களாக அலங்கரித்து மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும் நேரத்தில் நடனம் ஆடுகிறார்கள். அதற்கு வாத்திய கருவிகளை இசைக்கும் கலைஞர்களும் இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு சாலையின் சிவப்பு விளக்கு எத்தனை நிமிடங்கள் நீடிக்கும் என்பதும் எங்கு ஆட்டத்தை நிறுத்தி பணத்தைப் பெற வேண்டும் என்பதும் தெரிகிறது.

ஒரு மின்னல் போல வருகிறாள். ஆடுகிறாள். அதே வேகத்தில் கையேந்தி நடக்கிறாள். சிலர் பணம் கொடுக்கிறார்கள். சிலர் நிராகரிக்கிறார்கள். எதைப் பற்றியும் யோசிக்க அவளுக்கு நேரமில்லை. சாலை சமிக்ஞை பச்சைக்கு மாறியதும் மீண்டும் அது சிவப்பு நிறத்திற்கு மாறும் வரை உற்சாகத்தோடு காத்திருக்கிறாள்.
இதைச் சிலர் பிச்சை எடுப்பதற்குச் சமம் என விமர்சித்தாலும் என்னால் அப்படிக் கூற முடியவில்லை. அந்த உழைப்பை பிச்சை என்று கொச்சை படுத்துவது அசிங்கம் எனக் கருதுகிறேன். அதற்குப் பின்னால் இருக்கும் உடல் உழைப்பிற்கு நிச்சயம் மதிப்பு உண்டு.

-தொடரும்.


3 கருத்துகள்:

  1. //நான் பார்த்து வியந்த மற்றுமொரு விடயம் சாலை போக்குவரத்தாகும். ஜோக் ஜகார்த்தாவின் சில முக்கியச் சாலைகளில் மாலை 5 மணிக்கு மேல் சொந்த வாகனங்களில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.// இந்தியாவிலும் பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினால் காற்று மாசுபடுவது குறையும், ஆனா மக்கள் சொந்த வாகனத்தில் செல்வதை கெளவரமாக கருதுகின்றனர்

    பதிலளிநீக்கு
  2. நீங்கல் சொல்லுல் இந்த சூழல் மலேசியாவுக்கும் பொருந்தும் என்றாலும், சில விஷயங்களில் மக்கள் விழிப்புணர்வோடுதான் செயல்படுகின்றனர்

    பதிலளிநீக்கு