சனி, 24 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 4

பேராங் தோட்ட தமிழ்ப்பள்ளி


கோலாலம்பூரிலிருந்து ஈப்போ போகும் பயணத்தில் சில அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் உட்படப் பலரை சந்தித்தேன். இதில் முக்கியமான பிரமுகராக நான் கருதுவது பேராங் தோட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரான தா.செல்வராஜூ. ஒரு பள்ளிக்கூடத்தைப் பூங்காவைப்போல வடிவமைத்து குழந்தைகளை மலர்களைப் போல மலர விட்டுள்ளார்.

பள்ளிக்கூடத்தை மலர் தோட்டங்களாலும் காய்கறி மற்றும் பழத்தோட்டங்களாலும் பசுமையைகூட்டியுள்ளார். இது எப்படிச் சாத்தியமாகும் என்றால், ஆசிரியர்கள் நினைத்தால் முடியாதது இல்லை என நம்பிக்கையூட்டுகிறார். ‘ஓர் ஆசிரியர் ஒரு மரம்’ என்று பழமரங்களை நட்டுவைக்கப் பரிந்துரைத்து, இன்று ஆசிரியர்களின் மரங்கள் பழங்களாகக் காய்க்க தொடங்கி முதல் அறுவடையும் முடிந்துவிட்டது. பள்ளி நுழைவாயில் வளாகத்தில் வெண்டைக்காய், பயிற்றங்காய் எனக் காய்கறிகள் பள்ளிக்கு வரும் விருந்தாளிகளுக்குப் பரிசுபொருளாகிறது. அரசு அதிகாரிகளுக்கும் அதையே தலைமையாசிரியர் வழங்கி ஆச்சரியப்படுத்துகிறார்.
அனைத்தும் ரசாயானம் கலக்காத இயற்கை விவசாயம் என்பது மகிழ்ச்சியான விஷயமாகும். இயற்கையாகவே விவசாயத்திற்கான மண் வளத்தை கொண்டிருக்கும் பேராக் மாநிலத்திற்கு, செடிகள் செழித்து வளருவதில் பிரச்சனையை கொண்டிருக்கவில்லை.

மிக முக்கியமான விஷயமாக,  அந்த வட்டாரத்திலுள்ள எந்தத் தமிழ் பிள்ளைகளும் மலாய் சீன பள்ளிகளுக்குப் போகவில்லை என்பதும் அனைவரும் தமிழ்பள்ளிகளிலேயே கல்வி பயில்கிறார்கள் என்பதும் தானாக நடந்ததில்லை. அதற்குப் பின்னாடி தலைமையாசிரியரின் வெளியில் சொல்லாத சேவையும் இருக்கிறது.
அவரைச் சந்தித்துப் பேசும்போது பேச்சின் ஊடே ஒரு விஷயத்தைச் சொன்னார். சிறந்த கல்வியை வழங்க நாங்கள் இருக்கிறோம். ஆனால், இசைக்கல்விக்கு அதில் தேர்ச்சி பெற்ற ஒரு கலைஞரும், ஓவியக் கல்விக்கு அதில் தேர்ச்சி பெற்ற ஓர் ஓவியரும் பாடம் நடத்தினால் அது இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் அதை  ஆசிரியர்களே அவர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

கலை கல்வியைக் கடமைக்கு என்று நினைக்காமல் அனைத்துமே கல்வி என்பதை நான் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கிறேன். வெளியிலிருந்து பிரமுகர்களை அழைத்து மாணவர்களைச் சந்திக்க வைப்பதும் கல்வியில் சேர்ந்ததுதான் என்கிறார் இந்தத் தலைமையாசிரியர்.


அங்கேயே பிறந்து வளர்ந்து தோட்டத்து பள்ளியிலேயே கல்வி பயின்று தனது சேவையைப் பிறந்த மண்ணுக்கே வழங்கும் இவர், ஆசிரியர்கள், மாணவர்கள், தோட்டக்காரர்கள் என யாரிடமும் பாரபட்சமின்றிப் பழகுவதோடு முழுச் சுதந்திரத்தையும் வழங்கி பள்ளியை வழிநடத்துகிறார்.

அனைத்து பாடங்களிலும் A எடுப்பது எங்களின் இலக்கு அல்ல. அனைத்து பாடங்களிலும் எல்லா மாணவர்களும் தேர்ச்சியடைவதே எங்களின் இலக்கு. அதில் வெற்றியும் பெறுகிறோம் என்கிறார் இந்தத் தலைமையாசிரியர். ஒரு தோட்டத்து பள்ளியை பார்த்து நான் அதிசயித்ததும் பெருமைபட்டதும் நிச்சமாக இந்தப் பள்ளியை பார்த்துதான்.


மாதுளங்கொடி படர்ந்திருந்த பந்தலில் மீன் குளத்திற்கு அருகே கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். சிந்தனை எங்கேயோ போய்கொண்டிருந்தது.
பார்ப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் இன்னும் நிறையவே இருக்கிறது. அது சில சமயம் ஏட்டில் இருப்பதில்லை..

1 கருத்து:

  1. GREAT TO KNOW PERANG TAMIL SCHOOL & PRINCIPAL T.SELVARAJH! GREAT SERVICE TO TAMIL HUMANITY & ECO-FRIENDLY&NATURAL SCHOOL WITH FRUITS & VEGETABLES! WORLD TAMILS SHD FOLLOW THIS IN SL,INDIA ETC!

    பதிலளிநீக்கு