வியாழன், 22 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போவரை 2

தோட்டத்து பள்ளிக்கூடம்
தஞ்சோங் மாலிம் வட்டாரம்

நெடுஞ்சாலையிலிருந்து டோல் கட்டி தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் நுழைந்தால் முழுமையான ஒரு கிராமத்திற்கு வந்த சூழல் நம்மை ஆட்கொள்ளும். மலாய் பாரம்பரியம் மாறாத சில வீடுகளையும் காணலாம்.

தமிழ்ப்பள்ளிக்கூடம் ஒன்று கவனத்தை ஈர்க்க என் புருவம் சுருங்குவதைச் சிவா பார்த்துவிட்டார். அடுத்த நிமிடம் வண்டி அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்தது. ‘கத்தோயாங் தோட்டம்’ அது. பத்துவீடுகள் இருக்குமா எனத் தெரியவில்லை. அதில் எத்தனை இந்தியக் குடும்பங்கள் இருக்கும் என்றும் தெரியவில்லை. ஒரு சகோதரி மாங்கு மாங்கு என்று தெருவை கூட்டிக்கொண்டிருந்தார். சில அந்நிய நாட்டு தொழிலாளர்களையும் அங்குப் பார்க்க முடிந்தது. வீடுகள் பழைய தோட்டத்து வீடுகள்தான், எதையும் புதுப்பிக்கவில்லை. தோட்ட அலுவலகம், தமிழ்ப்பள்ளி பாலர் பள்ளி என்று இருந்திருந்தாலும் என் மக்களை அங்குக் காண முடியவில்லை.
தோட்டத்து வீடு
தோட்ட வாழ்க்கை என்பது அந்தக்காலக் கதை என்று ஆகிவிட்ட பிறகு, தமிழர்களை அங்குத் தேடுவது தேவையில்லாத வேலைதான். இருந்தபோதும் அதன் பாரம்பரித்தை நினைக்கும்போது சில தோட்ட நினைவுகள் தாலாட்டவே செய்கின்றன. குறிப்பாகக் கோயில் திருவிழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்தாற்போல் நடக்கும் கலை இரவும் இன்று காண கிடைக்காத ஒன்றாகவே ஆகிவிட்டது. அதோடு நான் தோட்டத்தில்தான் இன்னும் வசிக்கிறேன் என்று இன்று யாரும் சொல்லிகொள்வதுமில்லை. அதை விரும்புவதுமில்லை.

தோட்டத்துப் பள்ளிக்கூடத்தில் எத்தனை பிள்ளைகள் கற்கிறார்கள் என்று தெரியவில்லை. வெறிச்சோடிவிட்ட தோட்டங்களை என்னும் வட்டமிருகிறது என் ஆறு வயது பால்யம்.
தோட்டத்து அலுவலகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக