சனி, 17 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 2

 27 ஆகஸ்ட், சனிக்கிழமைப் பினாங்கில் எப்போதும் போலத்தான் சூரியன் எழுந்தது. ஆனால், அந்த விடியலுக்கு முன்பே சோம்பல் முறித்து எழுந்த ஊடறுவுக்கும் ஊடறு பெண்களுக்கும் அன்றைய நாள் மலேசில வரலாற்றில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக மாறும் என்று அந்தச் சூரியனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

புள்ளி வைத்துப் போட்ட ரங்கோலியைப் போல, கொஞ்சமும் பிசுறு இல்லாமல் நேர்த்தியாகத் தோழியர் தங்கள் வடிவம் உணர்ந்து அன்றைய விடியலை அலங்கரித்தனர். காலை 9.30 மணிக்குத் திட்டமிட்டபடியே பெண்கள் சந்திப்பின் முதல் அமர்வு தொடங்கியது.

எளிமையான அறிமுகத்தோடு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த நான்(யோகி), முதல் அமர்வை நடத்துவதற்குக் கவிஞர் புதியமாதவியை (அம்மாவை) அழைத்தேன். அதுவரை அவரின் அமர்வில் நடக்கவிருக்கும்  அமர்வு எதைக் குறித்து என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒன்றுகூடிய  தோழியரில் அதிகம் பேசாமல், காணும்  அனைத்தையும் உள்வாங்கும் பாத்திரம்தான் புதியமாதவி. அவர் ஏற்று நடத்தும் அமர்வில் எப்போதும் ஓர் எதிர்பார்ப்பு இருப்பது இயற்கையானது.
மைக்கைக் கையில் எடுத்தவர், இந்தச் சந்திப்பின் காரணகர்த்தாவான றஞ்சியை அழைத்தார். றஞ்சியும் அதைச் சற்றும் எதிர்ப்பார்க்காதவறாகப் புறம் வந்தார். மெல்லிய சிரிப்பை முகத்தில் கொண்டு, தொடர்ந்தார் புதிய மாதவி.

“வெற்றிகரமாக ஊடறு பல  பெண்கள் சந்திப்புகள் நடத்திய பிறகு, அதுகுறித்தான கேள்விகளும், சந்தேகங்களும் ஆரூடங்களும், கட்டுக் கதைகளும் கூடவே நம்பிக்கைகளும் வளர்ந்துவரும் வேளையில் சில கேள்விகளுக்கு இந்தச் சந்திப்பில் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  

நான் இதுவரை பார்த்த நேர்காணலில் மிக அழகான, ரத்தமும் சதையுமாக உணர்வுகளை முன்வைத்து பேசிய நேர்காணலாக அது அமைந்தது. சில பதில்கள்கள் கூடியிருந்த தோழிகளுக்கு ஆச்சரியத்தையும் அதே வேளையில் தெளிவுகளுக்கான கதவுகளையும்  திறந்துவிட்டது.  மனம் திறந்து றஞ்சி பதில் அளிப்பதும் அதன் தொடர்ச்சியான புதியமாதவி கேள்விகளும் இச்சூழலுக்குத் தேவையான ஒன்றாக அமைந்ததில் ஆச்சரியமில்லை என்றே தோன்றுகிறது.  றஞ்சி மற்றும் ரவி ப்பாவின் காதல் அனுபவம் மிக அழகு.  (செயற்பாட்டாளர்களின் காதல் கதைகளை கேட்க வேண்டும் தோழர்களே.  சினிமாத்தனம் இல்லாத காதலையும் திருமணத்தையும் அவர்கள் எப்படி கண்டடைந்தார்கள் என்பதையும் பதிய வேண்டும். ) றஞ்சியின் அனுபவப் பகிர்வுக்குப் பிறகு பெண்கள் உடையாடல் மிகுந்த உற்சாகமாகத் தொடங்கியது.

-பெண் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,
-பணியிடத்தில் பெண்களும் உரிமைகளும்,
-எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண்


என்ற தலைப்புகளில் காந்திரமான  கட்டுரைகளும்  உரையாடல்கள் தொடங்கப்பட்டன. அந்த உரையாடலுக்கு மாலதி மைத்திரி தலைமை ஏற்றார். இந்தச் சந்திப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது தங்கை பாரதியின் உரை. ஊடகத்துறையில் கல்வி பயின்றிருக்கும் பாரதி, ஊடறு சந்திப்புக்கு புதியவள் என்றாலும் எதிர்காலத்தில் தனக்கான இடத்தைத் தேடி பிடிப்பாள் என்ற நம்பிக்கை விதையை எங்களுக்குள் விதைத்தாள்.
மதிய உணவுக்குப் பின்பான, இரண்டாம் அமர்வை வழக்கறிஞர் ரஜனி மஹி வழிநடத்த,

-இலங்கை முஸ்லிம் பெண்களுக்கிடையே அதிகரித்து வரும் விவாகரத்து பிரச்சனைகளும், தீர்வு முன்மொழிவுகளும்,
-நானும் என் கவிதையும்,
-பெண்களின் வாழ்க்கையில் கலாச்சாரத்தின் தாக்கம்,
பாலியல்தொழில் மீதான பெண்ணியப் பார்வை

என்று இலங்கை தோழிகள்  மிக முக்கியமான தலைப்புகளில் பேசினார்கள்.


குறிப்பாக ஜஸீமா சாதாரணமாகப் பேசும்போது இருக்கும் கனிவு, தனது காந்திரமான படைப்பை வைக்கும்போது வேறொரு பெண்ணாக மாறி தெரிகிறார். குரலில் மாறும் கம்பீரம் யாரையும் முதுகை நாற்காலியில் அமர்த்திக் கதைகேட்க வைக்காது. நிமிர்ந்து அமர்ந்து புருவங்கள்  சுறுங்கி நெற்றி இறுகி பின் தளர்த்தியும் விடுகிறது.

( இந்த இடத்தில் என் அருமை தோழி லறீனாவையும் நினைவு கூறுகிறேன். கடந்தாண்டு ஊடறுவில் அவள் பேசிய விதமும் இவ்வாறானதுதான்).
இந்த அமர்வை மேலும் சுவையூட்டிய பெருமை நிச்சயமாக  வழக்கறிஞர் ரஜனியைத்தான் சேரும். தோழிகளின் படைப்புகளில் வைத்த ஆதங்கத்தில்  தற்போதுள்ள பெண்களின் அவலநிலையை அறிந்துகொள்ள முடிந்தபோது அதிலிருந்து சட்டென யாராலும் எழுந்து வர முடியவில்லை. ஆனால், ரஜனி இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்டு எங்களை மீட்டெடுத்து அடுத்தப் படைப்புக்குள் கொண்டு சென்றார். அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு தமிழ்நாட்டில் யாரும் கண்டிருக்கிறார்களா தெரியாது. ஊடறு பெண்களோடு அவர் இருக்கும்போது வெளிப்படும் அவரின் உடல்மொழியும் வாய் மொழியும் அதனோடு அவர் மிகச் சாதாரணமாகச் சொல்லும் விஷயங்களும் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட மாட்டார்கள்.

சந்திப்பின் மூன்றாவது அமர்வு மிக மிகப் பெர்சனல் விஷயங்கள் கொண்டதாகவும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் வெளிவராத ஓர் உருண்டையைப் பிடுங்கி வெளியில் எறியும் படியும் அமைந்தது. இப்படியான சந்திப்புகள் இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக அந்த அமர்வுக்குப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். வெளியில் கொட்டிய பிறகு மனம் அத்தனை லேசாகிறது. இனி என்னிடம் ஒலித்துவைக்க எதுவும் இல்லை என்ற  ஏதோ திருப்தி.


மனம் திறத்தல் அமர்வுக்குப் பிறகு அல்லது அமர்ந்திருக்கும் வட்டத்திலிருந்து வெளியேறிய பிறகு கேட்ட ரகசியங்கள்  காற்றோடு கலக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பெண்களிடம் ரகசியம் சொல்லக்கூடாது என்ற வார்த்தையை உடைத்து எறிவதற்கான காலம் இது எனத் தோன்றியது.

பெண்கள் தங்கள் பூதஉடலில் ஆடையணிந்து அலங்கரித்துக் கொண்டாலும், மனதின் சங்கடங்கள் அகற்றிய பிறகு அப்பழுக்கற்ற நிலையில் குழந்தைகளின் நிர்வாணத்தைப் போல அத்தனை அழகாக இருக்கிறார்கள்  அவர்களின் நிர்வாணத்துடன். அன்றைக்கு இரவில் வந்த நிலா இன்னும் கொஞ்சம் தேய்ந்திருந்தது.



(தொடரும்)


4 கருத்துகள்:

  1. "அமர்வு" காத்திரமாயிருக்கு

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி.நிகழ்வின் வடிவம் குறித்து குறித்து சுவையாக சொல்கிறீர்கள்.உரையின் சில வரிகள், பகுதிகள் என அமையும் பொழுது, வாசகர்களுக்கு நாம் புதிய திறப்புகளை செய்ய இயலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த சந்திப்பில் நீங்கள் சொல்வதை நினைவில் கொண்டு எழுத முயற்சி செய்கிறேன். நன்றி

      நீக்கு