வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 7

Palong Tin Museum

 ஈப்போவில் கிடைக்கும் முக்கியக் கனிம பொருள் ஈயமாகும். ஈப்போ என்றாலே ஈயம்தான் பலரின் நினைவுக்கு வரும். ஈய உற்பத்தியின் போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சிலவற்றை Chin Pek Soo & Sons நிறுவனம் தன்னார்வ முறையில் வழங்கி Palong Tin Museum என்ற அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறது. ஈப்போ மாநில நகராண்மைக் கழகத்தோடு இணைந்து ஏற்படுத்தியிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் ஈயம் உற்பத்திக்கு பயன்படுத்திய இயந்திரங்களை வைத்திருக்கிறார்கள்.
ஆனால், அவ்வியந்திரங்கள் பயன்பாடு குறித்த எந்த விளக்கமும் அங்கில்லாதது கொஞ்சம் புரிதல் சிக்கலை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் நாங்களாகவே எங்கள் கற்பனைக்குத் தோன்றிய படி அந்த இயந்திரங்களுக்கு விளக்கம் கற்பித்துக்கொண்டிருந்தோம். அதுவும் நன்றாகவே இருந்தது.

அந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லும் வழி, ஒரு தொங்கும் பாலத்தில் தொடங்குகிறது. பாரிஸில் இருக்கும் பாலத்தைப் போன்று அதை வடிவமைத்திருக்கிறார்கள். அதோடு, அந்தப் பாலத்தின் நெடுகிலும் தொங்கவிட்டிருக்கும் காதல் பூட்டுகள், பல கதைகளைப் பேசக்கூடியதாகச் சாவிகளைத் தொலைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது.

இரவு நேரத்தில்தான் பல வண்ண விளக்குகளோடு தூங்கா நகரம்போல விழித்திருக்குமாம் அந்த இடம். அங்கேயிருந்த ஆலமரம் ஒன்றில் பல செடிகளும் கொடிகளும் அடைக்கலமடைந்து உயிர் பெற்று செழித்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. மிக ஆச்சரியமுடன் அதைப் பார்த்த ஆதவன் அண்ணா, இந்தச் செடிகள் அதற்கான நீரை எவ்வாறு பெறுகின்றன என்று தேடினார். ஆலமரத்தின் வேர் அதற்கான எல்லாப் பதிலையும் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக