ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

காட்டு பெருமாள் விட்டுச் சென்றப் போராட்டத்தை இன்றையச் சூழலுக்கேற்ப எவ்வாறு முன்னெடுப்பது?

'தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?'

என்ற பாரதியின் வரிகளை முன்னிறுத்தி எனக்கு இங்கு பேசுவதற்கு வாய்ப்பளித்த பி.எஸ்.எம் தோழர்களுக்கு முக்கியமாக தோழர் நாகேந்திரனுக்கு எனது அன்பை கூறிக்கொள்கிறேன்.

 ‘போராட்டம்’ என்பது என்ன என்பதே நாட்டில் பலருக்குக் குழப்பமாக இருக்கிறது. குழப்பம் என்ன செய்கிறது என்றால் மேலும் பல குழப்பவாதிகளை உருவாக்கி விடுகிறது. இந்தக் குழப்பவாதிகள் ஓர் அடிப்படைத் தேவைக்கான போராட்டத்தைத் தீவிரவாதம் அளவுக்குப் பேசுகிறார்கள் அல்லது அதில் உடன்படத் துணிகிறார்கள். 
போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பதுவரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . அதுவும் இரண்டாம் குடிமக்களாகக் கருதும் நமக்குதான் தொடர்ந்து எத்தனை போராட்டங்கள்? 

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் நேர்மையாக இல்லாமல் இருப்பதும் கூட ஒரு போராட்டம்தான் இல்லையா? ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பதற்கானசூழலும் , எல்லா நேரங்களிலும் நேர்மையாக இல்லாமல் இருப்பதற்கான சூழலும் யாருக்கும்அமைவதில்லை .தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக்கொள்ளப் போராட வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

அந்தப் போராட்டம் எதற்காக? யாருக்காக? அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன? நன்மை-தீமைகள் என்ன? தீர்வு எப்படி இருக்கும்? உள்ளிட்ட விவரங்கள் குறித்து எந்த ஆய்வும் செய்யத் தவறி விடுறாங்க. 
அரசாங்கத்தை எதிர்ப்பதை அதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இந்த அரசாங்கத்தையும் அதன் செயற்பாட்டையும் ஒருவர் எதிர்க்கிறார் என்றால் அதற்கு நியாமான காரணம் வேண்டும். இந்த அரசாங்கத்தின் மீது உனக்கு ஏன் கோபம் எனக் கேட்கும் போது, நிறையப் பேர் அரசாங்கத்தின் மீது எதிர்ப்பை காட்டுகிறார்கள், நானும் எதிர்க்கிறேன் என்று சொல்ல முடியாது தானே? பிறகு, அது நானும் ரௌடிதான் என்ற ரீதிக்குப் போய்விடும். 


சில தேசிய போராட்டங்களும் இப்படியாகத்தான் ஆகிவிட்டது. ஆனால், காட்டு பெருமாள் எப்படிப் போராட்டத்தை முன்னெடுத்தார் என்று பார்த்தோமானால், அவர் ஆயுத போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். தன்னை ஒரு கம்யூனிசப் போராளியாக ஆக்கிக்கொண்டு முதலாளித்துவத்தை எதிர்த்திருக்கிறார். அவருக்கு வேறு எந்தக் கொள்கையும் இருந்ததாக ‘காட்டுப் பெருமாள்’ என்ற புத்தகத்தில் யாரும் பேசவில்லை. 

- வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவேண்டும். 
- தொழிலாளர்களைச் சரியான வகையில் நடத்த வேண்டும் 
- தன் குழுவை அல்லது செயற்பாடுகளைக் காட்டிக் கொடுப்பவர்களைக் கொல்ல வேண்டும் 
- பெண்களிடம் முறைக்கேடாக நடந்து கொள்பவர்களை எச்சரிப்பதுடன் அவ்விவகாரம் மேலும் தொடர்ந்தால் அவர்களைக் கொல்ல வேண்டும். 

இப்படியாகத்தான் தொடர்ந்து காட்டு பெருமாளைப் பற்றிப் புத்தகத்தில் பேசுகிறார்கள். இப்படி இருக்கையில் காட்டு பெருமாள் விட்டுச் சென்ற போராட்டத்தை இன்றைய சூழலுக்கேற்ப எவ்வாறு முன்னெடுப்பது? 
நான் யோசிக்கிறேன்… இது சாத்தியமாகுமா? 

இன்று கம்யூனிஸ்ட் ஆதார கொள்கையே மாறிப் போய்விட்டது. முதலாளித்துவம்தான் உலகமெங்கும் ஆக்ரமித்திருக்கிறது. கியூபாவரைக்கும் இந்த நிலை மாறிவிட்டதை நாம் காண்கிறோம். 
பழங்குடி அல்லாத அனைவரும் இன்று முதலாளித்துவ அடிமைகளாதான் இருக்காங்க. அப்படியென்றால் கம்யூனிஸ்ட் போராட்டத்தை முன்னெடுக்க வழியே இல்லையா என்றால் சுதேசி கொள்கைதான் ஒரே வழியாக இருக்கும்ன்னு தோணுது. 

முடிந்தவரை உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி இறக்குமதிகளைக் குறைக்க வேண்டும். ஆனால், அதுவும் சாத்தியமில்லாத ஒன்றுதான். உலகமே ஒரு கூரையின் கீழ் வந்த பிறகு, ஒருவரை ஒருவர் சாராமல் வளர்ச்சியில்லை என்ற உண்மையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கு. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள்கூட இன்று பெயரளவில்தான் கம்யூனிஸ்ய நாடாக இருக்கிறது. 
எல்லாவற்றையும் ஆட்சி செய்வது முதலாளித்துவமாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய ஜனநாயகப் பூர்வமான தொழிலாள வர்கத்தால்தான் முடியும். ஆனால், அங்கு உழைப்புப் பகிர்வு நடைபெற வேண்டும். உழைப்பு, உற்பத்தி, லாபம் எல்லாம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். உழைப்பு ஒன்றாகவும் உற்பத்தி ஒன்றாகவும் இருந்து, லாபம் மட்டும் யாரோ சிலரை சேருமானால் அது ஆபத்தானது. 
இந்த ஆபத்தான விஷயத்திற்காகவும்தான் காட்டு பெருமாள் போன்றவர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர். அந்த எதிப்புக்கு அவரைத் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு உயிருக்கு விலையும் வைத்தது பிரிட்டிஷ் அரசு. 
ஆனால், இன்று நாம் என்ன செய்கிறோம் ? யாரோ ஒருவர் லாபம் அனுபவிக்கும் ஒரு ஆபத்தான விஷயத்திற்கு நம்மை ஒப்பு கொடுத்து விட்டோம். 


ஒரு நிர்வாகம், நான் உங்களுக்குப் போனஸ் கொடுக்க முடியாது, சம்பளம் மட்டும் வழங்குவேன் என்றால் அதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அப்படியே குரல் எழுப்பினாலும், அது எதுவரை போகும் என்றே தெரியாது. இருக்கும் வேலையும் பரிபோகும் அபாயம் அதில் இருக்கிறது. 

எனவே பழைய சித்தாந்தத்தைப் பாடமாக்க முடியாது; வாழ்க்கை சூழலுக்குள் நாம் போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். எந்தப் போராட்டத்திற்கும் ஒரு தேவை உருவாகனும். ஒவ்வொரு சிதைவின் போதும் புதிய சிந்தனை உருவாக வேண்டும். அதுதான் யதார்த்தம். 
புதிய தலைமுறைக்கு உழைப்பையல்ல லாபத்தின் விளைவுகளைச் சொல்லி கொடுக்க வேண்டும். லாபம்தான் சுரண்டலின் ஆதாரம். அதற்கு முடிவில்லை. ஒரு போராளி கம்யூனிஸ்ட் ஆகவிரும்பும் பட்சத்தில் , உழைப்பை கற்றுக்கொண்டு லாபத்தை மறுக்க வேண்டும். அதே வேளையில், முதலாளி வர்கத்தில் வாழவும் உழைப்பை பழக வேண்டும். இந்தச் சித்தாந்தம் இன்றைய இளைய தலைமுறைக்குப் புரிய வாய்ப்பு இல்லைன்னு தோணுது. எல்லாம் ஈசி மணியை எதிர்பார்த்து ஓடராங்க. 
அதைப் புரிந்துக்கொண்ட சிலரின் குரல்களும் போய் எட்ட வேண்டிய காதுகளுக்கு எட்டுவதுமில்லை. 

இன்று கம்யூனிசம் பேசும் மக்களிடையே நிறைய முரண்களும் அவர்களுக்குள் நிறையக் கருத்து வேற்றுமைகளும் நிறையப் பார்க்க முடிகிறது. வர்க பேதங்களை மட்டும் பேசும் ஒருவர் நல்ல போராட்டவாதியாக இருக்க வாய்ப்பு இல்லை. 

ஆகக் காட்டு பெருமாள் விட்டுச் சென்ற போராட்டம் எது? 
இன்றைய சூழலுக்கு அதை எவ்வாறு முன்னெடுப்பது என்ற கேள்வியை முன்வைக்கும் போது, அது ஒரு கேள்வியாகவே தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். 
போராட்டத்தை ஓர் உதாரணத்திற்கு ஆண்-பெண் பேதத்தில் பார்க்கலாம். 
இப்போ மலேசியாவில் 50 சதவிகித பெண்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு 50 விழுக்காடு சொத்துக் கையில் இருக்கிறதா? 50 விழுக்காடு அரசியல் அதிகாரங்கள் பெண்கள் கையில் கொடுத்திருக்காங்களா? ஒவ்வொரு துறையிலும் 50 விழுக்காடு பெண்கள் பங்கு வகிக்கிறார்களா என்று ஆராய்ந்தால் உண்மை நிலவரம் நமக்குத் தெரிய வரும். மக்கள் தொகைக்குத் தகுந்த மாதிரிதான் அதிகாரங்களையும் பிரித்துக் கொடுக்கனும். 

ஈக்குவாலிட்டியில், நீயும் நானும் ஒன்று எப்பதற்குக் கருத்தியலுக்கான போராட்டம் பேசப்படுகிறது. ஈக்குவிட்டியில் செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு. சம பங்கீடு கேட்பது. 
மலேசியாவை பொருத்தவரை எது போராட்டம்? யார் போராட்டவாதி என்ற கேள்வி முக்கியமானதாக நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட அமைப்பு முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்துக்கொள்பவர்கள் போராட்டவாதியா? அல்லது ஒரு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் போராட்டவாதிகளா? 

களத்தில் இறங்கி போராடாமல் நாம் என்ன பேசினாலும் அது எங்கும் எடுபடாமல்தான் போகும். ஒரு போராட்டம் என்பது fachion னாகச் சிலர் நினைக்கின்றனர். அது pasian. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது. போராட்டவாதி என்று சொல்லிக் கொள்வதற்கும் போராட்டவாதியாக வாழ்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கு. ஒரு போராட்டவாதியானவன் அப்படியே வாழனும். வாழனும் என்பது நாடகம் கிடையாது. அதில் செயற்கை இருக்ககூடாது. ஒரு பூசுதல் இல்லாமல் இருக்கனும். 

இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும்போது வாங்க தோழர் என்று அழைப்பவர்கள் எல்லாரும் போராட்டவாதிகள் ஆகிவிட முடியாது. தோழர் என்பவர்கள் கம்யூனிஸ்ட்வாதியும் ஆகிவிட முடியாது. எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் அதைக் கேள்வி எழுப்ப ஒரு கம்யீனிஸ்ட் இருப்பார். காட்டுப்பெருமாள் அப்படி இருந்தவர். இன்று அவரைப் போல யாரை கைகாட்ட முடியும்? 

மலேசியாவை பொருத்தவரையில் இன்று போராட்டங்கள் அதிகரித்துள்ளன. பங்கெடுப்பவர்கள் அனைவரும் போராட்டவாதிகள் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கிறார்கள். பின்னர் அந்தப் போர்வையை மடிச்சி வைத்து விடுகிறார்கள். இதில் உண்மையாகவே போராடியவர்கள் அடையாளம் தெரியாமல் ஒரு மறைவில் இருப்பாங்க. 

ஒரு போராட்டம் என்பதிலிருந்து கொஞ்சம் இறங்கி பிரச்சாரங்களின் பங்களிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். 
பிரச்சாரம் என்பது என்ன? 

- ஒரு கெம்பென் அல்லது ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல், 
- கூட்டம் கூட்டுதல், 
- பதாகை வைத்தல், 
- துண்டு பிரசுரங்களை விநியோகித்தல். 

இதுதான் பிரச்சாரமா? உண்மையில் இவை பிரச்சாரத்தின் முந்திய நடவடிக்கைகள் எனக் கொள்ளப்படுகிறது. இது பிரச்சாரம் கிடையாது. அப்படி என்றால் பிரச்சாரம் என்பதின் செயற்பாடு என்ன? 
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இருக்ககூடிய வளங்களை , இருக்ககூடிய தகவல்களை இருக்கக்கூடிய திறன்களைக் கொண்டு அதன் நோக்கத்தை அடைவதுதான் பிரச்சாரத்தின் யுக்தியாக நான் பார்க்கிறேன். 
இதற்கு ஒரு உதாரணமாகத் தேர்தல் கெம்பெனை வைத்துக் கொள்ளலாம். தேர்தல் கெம்பென் செய்வதின் நோக்கம் என்ன? தேர்தலில் வெற்றி பெறுவதுதான். வெற்றி பெற்ற பிறகு பிரச்சாரத்தின் நோக்கம் வெற்றி பெற்றுவிடும். அப்போ பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறிதிகளை எப்படி நிறைவெற்றுவார்கள்? 

அங்கு ஆள் பலம் இருக்கும், பணப் பலம் இருக்கும். அதோடு எதிரியாளியை வீழ்த்தக்கூடிய தகவல் பலமும் சேரும். இப்படி எல்லாம் சேரும்போது எதிரணியை வீழ்த்த முடியும். பிரச்சாரத்தின் நோக்கம் வெற்றி பெருவது இப்படிதான். 

போராட்டத்திற்கு முந்திய நடவடிக்கைகளை நாம் பிரச்சாரம் எனத் தவறாகக் கருதி சில போராட்டங்களைக் கோட்டைவிடுகிறோம். இங்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒரு போராட்டத்தில் கலந்துகொள்வதால் ஒருவர் போராட்டவாதியாகிவிட முடியாது. 
போராட்டத்தை வெற்றியாக மாற்றுவதில்தான் போராட்டவாதி உருவாகிறான். தன்னலம் பார்க்காமல் தியாக மனப்பான்மையுடன் தன்னை அர்ப்பணிக்கும் ஒருவந்தான் போராட்டவாதியாக முடியும். காட்டு பெருமாள் அப்படியான அர்பணிப்புக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் மட்டுமல்ல பெருமாளின் நண்பராக வரும் புட்டுமயமும் அதற்கு ஒரு நல்ல உதாரணம். 

காட்டு பெருமாள் விட்டுச் சென்ற போராட்டத்தை இன்றைய சூழலுக்கேற்ப எவ்வாறு முன்னெடுப்பது? என்று ஆராயும் போது முதலில் நாம் யாருக்காகப் போராட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு போராட்டத்தின் தாகம் பெரிதாக இருந்தால் சேரும்கூட்டமும் பெரிதாக இருக்கும். கூட்டம் பெரிதாக இருக்க வேண்டும் என்று நினைத்து செயற்பட்டால் தாகம் இல்லாமல் போய்விடும். கூட்டமும் நிக்காது. 

இறுதியாக ஒரு போராட்டவாதியின் தியாகம் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று ஆவணப்படுத்தும் வகையில் இந்தப் புத்தகத்தை எழுதிய தேவ் அந்தோணி அவர்களுக்கும், அதைத் தமிழில் மொழி பெயர்த்த மேஜர் காளிதாஸ் மணியம் அவர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் கூறி கொள்வதுடன், இதுபோலப் பல போராளிகளின் உயிர் தியாகங்கள் ஆவணப்படுத்த வேண்டிய கடப்பாடும் நமக்கு இருக்கிறது. 

உதாரணத்திற்குச் சிபில் கார்த்திகேசு. ஒரு பெண்ணாகத் தன் உயிரை பணையம் வைத்துக் கம்யூனிஸ்ட் போராளிகளைப் பாதுகாத்து இறுதியில் மரணத்தைத் தழுவிக்கொண்டவர். இந்தியர்கள் பலருக்கு அவரைத் தெரியாது. ஆனால், சீனர்கள் அவரின் தியாகத்தை நினைவுகூறிக்கொண்டிருக்கிறார்கள்என்பது இங்குக் குறிப்பிட தக்கது. 

நன்றி. (செம்பருத்தி இணைய செய்தி இதழ். http://www.semparuthi.com/?p=138161)


1 கருத்து: