வெள்ளி, 9 செப்டம்பர், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 7



 இதுவரை நான் சென்ற வெளிநாடுகளில் ஷோப்பிங் செய்வதற்குச் சிறந்த
இடம் என்றால் அது நிச்சமாக்க ஜோக் ஜகார்த்தாவைத்தான் கையைக் காட்டுவேன். புத்த சிலைகளும், பாத்தேக் துணிகளும், வெள்ளி நகைகளும், தோல் கருவிகளும் அத்தனை மலிவாக எங்கும் வாங்க முடியாது என்றே தோன்றுகிறது. மலேசியாவில் 70 ரிங்கிட்டுக்குப் பேரம் பேசிய ஒரு மரத்திலான குடும்பச் சிலைகள் அடங்கிய செட் அங்கு வெறும் 17 ரிங்கிட்டுக்கு மட்டுமே malioboro சாலையில்  வாங்கினேன்.

அதே போலச் சந்துருவுக்கு வாங்கிய ‘போங்கோ’ ரகத் தோல் இசைக்கருவி மலேசியாவில் 200 ரிங்கிட் வரை விலை போகும். நான் அதை 45 ரிங்கிட்டுக்கு மட்டுமே வாங்கினேன். இப்படிப் பல பொருள்களை உதாரணம் கூற முடியும். திறமையாகப் பேரம் பேசத்தெரிந்தவர்களுக்கு ஷாப்பிங் செய்ய ஜோக் ஜா சரியா இடம்.

அதே வேளையில், சாலையோர வியாபாரிகளின் பொருட்கள் விற்கும் பாங்கு வேறுவிதமானது. சண்டிகளைப் பார்ப்பதற்குச் செல்லும் முன்பே சாலை வியாபாரிகள் எங்களைச் சூழ்ந்து கொண்டனர். இந்த வியாபாரிகளுக்குள் அவர்களுக்குள்ளாகவே ஒரு நியாயத்தையும் வைக்கின்றனர். தொடக்கமாக முந்திக்கொண்டு அவர்களின் பெயரை நம்மிடம் கூறி அறிமுகம் செய்துக்கொள்கிறார்கள். பிறகு, நாம் சண்டிக்களைப் பார்வையிட்டு திரும்பும்வரை காத்திருக்கிறார்கள். முதலில் அறிமுகம் செய்து கொண்டவரிடம்தான் நாம் பொருள்களை வாங்க வேண்டும். இதற்கிடையில் வேறொரு வியாபாரியிடம் பொருட்களை வாங்க முற்பட்டால் அவர்களுக்கிடையே பெரிய வாக்கு வாதம் எழுகிறது. மேலும் நாம் கையில் வியாபார பொருள்களை எடுத்துவிட்டு பின்பு வேண்டாம் என்று நிராகரிப்பதும் சாமானிய காரியமல்ல. எனது வழிகாட்டியான திதின் இவ்விவரங்களை முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை செய்திருந்தாள். அவளும் உடன் இருந்ததால் அதிகச் சிரமத்திற்கு உள்ளாகவில்லை.


பொருள்களை வாங்கிய பின்பும், நம்மை விடாது துரத்தி வருகிறார்கள் வியாபாரிகள். ஈபூ (அம்மா) ப்பா (அப்பா) என்றும் டத்தின் என்றும் மரியாதையோடுதான் அழைக்கவும் அனுகவும் செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நான் ஜோக் ஜகார்த்தாவில் பார்த்த சுற்றுலா தலங்களில் ஆச்சரியமானதாகவும் அதே வேளையில் அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்று யோசிக்கும்  இடமாகவும் இருப்பது அந்நாட்டு அரசர் வாழும் அரண்மனையாகும். பழைய மடம்போலக் காட்சிக் கொடுக்கும் அந்த அரண்மனையில் பேரரசர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே பெரிய அதிர்ச்சியாக இருந்தது.


அரசர் நடமாடும் இடத்தை மட்டும் சுற்றுப்பயணிகள் நுழையாத வண்ணம் ஒதுக்கியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு பழைய கெடூன் (store room) போல உள்ள இடத்தை அவர்கள் அரண்மனை என்று சொல்வதை நம்பித்தான் ஆகக் வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

அரண்மனையின் உள் நுழையும்போது நமக்கு வழிகாட்டியாக 70 வயதை கடந்த பெரியவர்கள் தயாராக இருக்கிறார்கள். கட்டணம் கட்டி உள்ளே நுழைந்தாலும் அரண்மனை வழிகாட்டிக்கு கொஞ்சமாவது பணம் கொடுங்கள் என்று திதின் கேட்டுக் கொண்டாள். சில எண்டிக் பொருள்கள், பேரரசருக்கு கிடைத்த பரிசு பொருட்கள், சில அரச ஓவியங்கள், புகைப்படங்கள் எனக் காண்பதற்கு நிறைய இருந்தாலும் பெரிய சுவாரஸ்யம் கிடைக்கவில்லை. அந்நாட்டு அரசன் அங்குதான் வாழ்கிறார் என்ற அதிர்ச்சி மட்டுமே கடைசிவரை இருந்தது எனக்கு.

மன்னரை மகிழ்ச்சியூட்டும் இசைக்கூடமும் இசைக்கலைஞர்களும் என்னேரமும் இசை பயிற்சியில் இருக்கிறார்கள். அவர்கள் இசைக்கும் இசையும் வாத்திய கருவிகளும், மலேசிய மலாய் பாரம்பரிய இசை இங்கிருந்து கடன் பெற்றிருப்பதால், இசையிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. ஆனால், வயது முதிந்தவர்களே இன்னும் கலைஞர்களாக இருப்பதுதான் பார்க்க கஷ்டமாக இருந்தது.

நான் அந்த அரண்மனைக்கு இருமுறை சென்றிருந்தாலும் புதிய அனுபவம் என்று ஒன்றுக்கூடக் கிட்டவில்லை. அரண்மனை இப்படி இருக்க, அரசன் எப்படி இருப்பார் என்ற கேள்வியே என்னில் திரும்பத் திரும்ப எழுந்துக்கொண்டிருந்தது. இந்தோனேசிய மசாஜ் போனேன். தாய்லாந்து மசாஜ்போல இன்பம் சேர்க்கவில்லை. பெண்கள்தான் மசாஜ் செய்பவராக இருந்தாலும் அவர்களின் பிடி உடம்பு வலியை ஏற்படுத்திவிடுகிறது.


அனைத்தையும் தாண்டி ஜோ ஜகார்த்தாவின் மலையழகும் இயற்கை வளமும் சண்டிகளும் வாழ்வு முழுதும் நாம் பேசுவதற்குத் தரவுகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவங்களைப் பெற முடியும். நான் மலேசிய பெண்ணாக இருப்பதால் மலாய் மொழிக்கு இணையான இந்தோனேசிய மொழியைப் பேசுவதிலும் அதைப் புரிந்துக்கொள்வதிலும் பெரிய சிக்கல் இல்லை. இதன் காரணத்தினாலேயே நான் அவர்களோடு இணைந்து பேசுவதற்கு ஏதுவாகப் பயணம் அமைந்தது. அவர்களின் மொழியைப் பேசுவதாலும் இந்தியர்களாக இருபதாலும் நம்மீது அவர்களுக்கு இயற்கையாகவே இனம்புரியாத அன்பு வெளிபடவும் செய்கிறது. நிச்சயமாக அது பணத்தைக் குறிவைத்து அல்ல.


முற்றும்…

4 கருத்துகள்: