வெள்ளி, 23 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 3











பெக்கான் துரோலாக் பாலம்

ஒரு காலக்கட்டத்தில் இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த இந்தத் துரோலாக் கிராமத்தில் இன்று விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்குகூட இந்தியர்கள் இல்லை என்று நண்பர் சிவா லெனின் கூறுகையில் அதிலிருந்த வருத்தம்  கவனிக்காமல் இல்லை.

இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த பிரிக்பீல்ஸ்ட் நூறு கோட்ரஸ், செந்தூல் பசார் கிராமம் , பெக்கெலிலிங் அடுக்குமாடி உள்ளிட்ட வீடமைப்புப் பகுதிகள் இல்லாமல் போய்விட்டது நினைவில் ஒரு நிமிடம் வந்து மறைந்தது.
யாரும் இல்லாத ஊரில் யாருக்காக டீ ஆத்தனும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் இந்தப் பெக்கான் துரோலாக் இடத்திற்குச் சிவா அழைத்து வந்ததற்கான காரணத்தை அவரே சொன்னார்.
துரோலாக் பாலம். அதைக் காட்டவே சிவா அங்கு அழைத்துப் போயிருந்தார்.

வரலாற்றுச் சுவடுகளைக் கொஞ்சம் கூர்ந்து நோக்க விருப்பம் கொள்வதாலும் அதைப் பற்றிக் கொஞ்சமாவது பேசவும் பதிவு செய்யவும் நான் விருப்பம் காட்டுவதாலும் அதைப் பற்றி எனக்குத் தெரிய படுத்துவதற்காக அங்கு அழைத்து வந்ததாகச் சிவா சொன்னார்.
மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டதாகவும், அதன் பயன்பாடு அந்தக் காலத்தில் மிக முக்கியமான தேவையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் அடையாளங்கள் கொண்ட பல கட்டிடங்கள் தற்போது நாட்டில் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதால் இன்னும் எத்தனை வரலாற்று அடையாளங்கள் மிஞ்சப்போகிறது என்று கேள்வி மிகக் கவலையுடன் நம்மை எட்டிப்பார்க்கிறது.

இருந்தபோதும் துரோலாக் பாலம் இன்னும் அதே பிரிட்டிஷ் கம்பீரத்துடன் நிற்கிறது. திடீர் வெள்ளம் ஏற்படும் அந்த வட்டாரத்தில், அந்த நேரத்தில் மட்டும் கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறது. பின் அது வரைப்படத்தில்கூட இருக்கிறதா என்று சந்தேகம் ஏற்படுத்தும் அளவுக்குப் பேச்சற்று கிடக்கிறது. வரலாறு இழந்துக்கொண்டிருக்கும் அந்தப் பாலத்தைப் போலவே...

1 கருத்து: