செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 7


நேரம் மாலையை நெருங்கிக்கொண்டிருந்ததால் தாமதிக்காமல் நாங்கள் கடாரம் நோக்கி பயணப்பட்டோம். பினாங்கில் இருக்கும் எங்களுக்குக் கெடா மாநிலத்தில் இருக்கும் லெம்பா பூஜாங் எனப்படும் பூஜாங் பள்ளத்தாக்கிற்குச் செல்வதற்கு இருவழி பாதைகள் இருக்கின்றன. கடல்வழி பயணத்தில் விரைவாகவும், விரைவு சாலை வழி சிலமணி நேரத்திலும் சென்றடையலாம். எங்களின் வாடகை வண்டி ஓட்டுனர், போகும்போது கடல்வழி பயணத்தையும் திரும்பும்போது சாலை வழிப்பயணத்தையும் தேர்ந்தெடுத்தார்.

கடல்வழி பயணத்தில் நாங்கள் பயணம் செய்திருந்த வாடகை வண்டி, நாங்கள் இறங்காமலேயே ஃபெர்ரில் ஏறியது. அது ஒரு நல்ல அனுபவம். நாங்கள் காரிலேயே அமர்ந்திருக்க ஃபெர்ரி அக்கரையை நோக்கி நகர்ந்தது. பின் நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி பினாங்கு கடலை பார்வையிட்டோம். எதிர்காற்று அடிக்க, புகைப்படங்களை எடுத்து கொண்டோம். இன்னும் நிறைய நிறைய ஃபெர்ரிகள், படகுகள், கப்பல்கள் என ரொம்பவும் பரபரப்பான கடல் அது. சில பறவைகளையும் காண முடிந்தது.

கரையை அடைந்து கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் பூஜாங் பள்ளத்தாக்கை அடைந்தோம். எனக்கு இது இரண்டாவது பயணமாக இருந்ததால் தோழிகளுக்கு விளக்கம் சொல்வதிலும், அது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்வதிலும் எனக்குச் சிக்கல் ஏற்படவில்லை.

மேலும், வந்திருந்த தோழிகளில் சிலர் டாக்டர் ஜெயபாரதி கடாரம் குறித்துச் செய்திருந்த ஆய்வு காணொலிகள் மற்றும் கட்டுரைகளை வாசித்திருந்தனர். குறிப்பாகப் புதியமாதவி (மா) க்கு இது குறித்த கூடுதல் தகவல்கள் தெரிந்திருந்தது. டாக்டர் ஜெயபாரதி வீட்டில் அறிய பல புத்தகங்கள் இருப்பதாகவும் அதைக் காண்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா எனக் கேட்டிருந்தார். நண்பர் பாலமுருகனை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசுகையில் டாக்டர் ஜெயபாரதியின் துணைவியார் வேறு மாநிலத்தில் மகன் வீட்டில் வசிப்பதாகவும் கெடாவில் தற்போது அவர் இல்லை என்ற
தகவல் கிடைத்தது.

கொஞ்சம் ஏமாற்றமான விஷயமாக இருந்தாலும் ராஜேந்திர சோழனுடையது எனும் சண்டிகளை நேரில் சென்று கண்டுவருவது என்ற திட்டத்தை எல்லோரும் ஆமோதித்திருந்தனர்.

கெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்தது எனவும் அதாவது, கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் தென் கிழக்காசியாவின் மீது படை எடுத்த போது, அந்நிலத்திற்குக் கடாரம் என்று பெயரிட்டதாகவும் அது சுத்தமான தமிழ்ப் பெயர் என்றும், அந்தப் பெயரே மருவி நாளடைவில் கெடா என்று பெயர் பெற்றதாகவும் இணையத்தளச் செய்திகள் கூறுகின்றன. அதோடு ராஜேந்திர சோழன் காலத்தில் சோழனால் அமைக்கப்பட்ட வியாபார மையமாகவும், ஆட்சி புரியும் இடமாகவும் விளங்கிய இடம்தான் பூஜாங் பள்ளத்தாக்கு என்றும் அறியப்படுகிறது.

‘பட்டிணபாலை' என்ற தமிழ் கவிதையில் இதுக்குறித்த விவரம் இருந்ததாகவும், சோழன் காலத்தில் கடாரத்திற்கு வந்துசென்ற சீன, அரபு உள்ளிட்ட நாடுகளின் நூல்களில் பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த நிறையத் தகவல்கள் இருப்பதாகவும், இத்தகவலை ஆராய்ச்சியாளர்களான Braddly மற்றும் Wheatly-தெளிவுபடுத்தியிருப்பதாகவும் இணையச் செய்திகள் ஆதரப்பூர்வமாக நமக்கு முன்வைக்கின்றன.

அதற்கு ஆதாரமாக 1980-ஆம் ஆண்டுக் கெடா மாநிலத்தில் கெடா மாநில சுல்தானால் திறந்து வைக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகத்தில் சில அகழ்வாய்வுச் சின்னங்கள், உடைந்த சிலைகள், கட்டட அமைப்புகள் போன்றவை இந்திய அடையாளங்களின் தொடர்பாகச் சாட்சியமளித்தாலும், புத்த வழிபாட்டுக்கான அடையாளங்களும் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளையும் காண முடிகிறது.

இது தொடர்பாக நான் 2015-ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையை
http://yogiperiyasamy.blogspot.my/2014/09/1.html
சொடுக்கி வாசிக்கவும்.

நாங்கள் சென்ற நேரத்தில் ஏதோ ஒரு கல்லூரி தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்ததால் தொல்பொருள் அருங்காட்சியகம் மூடப் பட்டிருந்தது. எங்களுக்கு உள்சென்று காணக்கூடிய வாய்ப்பு அமையவில்லை. கடாரம் ராஜேந்திர சோழனுடையது என்ற கருத்தில் நம்பிக்கை இருந்தாலும், அந்தச் சண்டிகள் குறித்த சந்தேகங்கள் நிறையவே இன்னும் இருக்கிறது எனக்கு. அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் பெண்கள் அணியும் அழகு ஆபரண மணிகள், பற்றிக் கூறிக்கொண்டிருந்தேன்.

இதுகுறித்து   புதிய மாதவி(மா) அனுப்பிய, டாக்டர் ஜெயபாரதி எழுதியிருந்த தகவலை இங்கே பகிர்வது உகந்ததாகும்.

கடாரச் சின்னங்கள் மியூசீயத்துக்குச்செல்பவர்கள் கூட்டம் அதிகமாகிவருகிறது. வருகிறவர்களில் பலர் இரண்டு மூன்று பஸ்களில் வருகிறார்கள். அதுவோ சிறிய இடம். ஒரே சமயத்தில் எண்பது பேர் உள்ளே நுழைந்து பார்த்து என்னத்தை அறிந்துகொள்ளப்போகிறார்கள்?
முதலில் விஷய ஞானம் உள்ளவர்கள் உடன் இருத்தல் மிகவும் அவசியம். அவர்கள் மியூஸீயத்தில் இருக்கும் அரும்பொருட்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லி விளக்கங்கள் கொடுக்கவேண்டும்

அந்த மியூஸீயத்தில் இந்து சமயம், பௌத்த சமயம் ஆகியவை சம்பந்தப்பட்ட சின்னங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் பின்னணிகள் இருக்கும்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மணிக்கற்களை அந்த வட்டாரத்தில் எடுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைச் சிறிய பாலிதீன் பைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் போகிற போக்கில் சற்று எட்டத்தில் இருந்து நகர்ந்தவாக்கில் பார்ப்பார்கள்; அல்லது பார்க்காமல் சென்றுவிடுவார்கள். அந்தக் கற்களில் பல மாதிரி உண்டு. அவற்றில் குறிப்பாகச் சொல்லப் போனால் சில நீலமணிக் கற்கள் இருக்கின்றன. அவற்றை Corundum கொருண்டம் என்று இங்கிலீஷில் குறிப்பிடுவார்கள்.  அந்தக் கற்களைத் தமிழில் குருந்தக் கல் என்று குறிப்பிடுகிறோம். அந்த வகைக் கற்கள் கொங்குநாட்டுப் பகுதியில் ஒரு மலையில் கிடைக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே யவனர்கள் அந்தக் குருந்தக் கற்களை மிகுதியாக வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

 12-03-2000-த்தில் கடாரம் சம்பந்தமாக டாக்குமெண்டரி எடுப்பதற்காக கோவாக்காரப் பெண்மணி ஒருவரின் தலைமையில் ஒரு குழு வந்திருந்தது.  சிங்கப்பூர் அரசுக்காக அந்த டாக்குமெண்டரி எடுக்கப்பட்டது. என்னைச் சந்திக்குமாறு சிங்கப்பூரில் யாரோ சொல்லி அனுப்பியிருந்தார்கள். பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. மியூஸீயத்தில் அந்த கோவாப் பெண் நீலமணிக் கற்களையே பார்த்தவாறு நின்றிருந்தார்.
நான் அந்தக் கற்களைப் பற்றி சொல்லி கொங்குநாட்டு நீலமலையைப் பற்றியும் சொல்லிக்கொண்டு வந்தேன். அங்கு மட்டும்தான் அந்தக் கற்கள் விளைந்தன. அந்தப் பெண் கவனமாகக்கேட்டுவிட்டு, "நான் இதே கற்களை அரிக்கமேட்டில் பார்த்திருக்கிறேன்", என்றார். அங்கும் டாக்குமெண்டரி எடுத்திருக்கிறார்கள்.

அரிக்கமேடு என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த பெரிய பட்டினம். அங்கு யவனர் குடியிருப்பு, வர்த்தகமையம் ஆகியவை இருந்தன. யவனர்கள் அரிக்கமேட்டை 'பொதுக்கே' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கடாரத்துக்கும் அந்த நீலமணிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவைதாம் மற்ற சிறு சிறு மணிக் கற்களுடன் அந்தப் பாலிதீன் பைகளில் கலந்து இருந்தனபாருங்கள்......, ஒரே ஒரு அயிட்டம். சின்னஞ்சிறு கற்கள். ஒதுக்குப் புறமாய்க் கலந்து கிடந்தன. ஆனால் அவற்றில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது.

- ref: Dr jeyabharathi

அந்தத் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு நீலக்கல் தமிழ்நாட்டின் அடிக்கமேடு என்ற பகுதியில்  மட்டுமே கிடைக்கக் கூடியது என்றும், அது ஒரு முக்கிய ஆதரம் என்றும் கூறினார். இது குறித்து புதிய மாதவி (மா) டாக்டர் ஜெயபாரதி எழுதியிருந்த பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார்.

 எனக்கு முற்றிலும் அது புதிய தகவலாக இருந்தது. மீண்டும் ஒரு முறை வரும்போது நிச்சயமாக அதைக் காண வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

வனத்தின் மத்தியில் இன்னும் ரகசியங்கள் முடிச்சுகளோடு இருக்கும் ராஜேந்திர சோழனின் கடாரம், என்றும் அவற்றை அவிழ்க்கபோவது இல்லை என்பது மட்டும் தெரிகிறது. ரகசியங்களின் புதையல்தான் கடாரம். எங்களின் கண்களும் ராஜேந்திர சோழனின் சண்டிகளைப் பார்த்தது. எங்களின் கால்களும் கடாரம் மண்ணில் பட்டிருக்கிறது என்று மட்டும்தான் இப்போது சொல்லும்படியாக இருக்கிறது.

(தொடரும்)

1 கருத்து: