வியாழன், 22 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போவரை 1

பேராக் மாநிலத்தின் தலைபட்டணம்தான் ஈப்போ. நான் பிறந்த மாநிலம் அது. ஆனால், நான் ஈப்போவிற்குக் கடந்த வாரம்தான் முதல் முதலாகச் சென்றேன். தோழர் நாகேந்திரனுக்கு அதற்காகச் சிறப்பு நன்றியை தெரிவித்தாகனும். ஆதவன் தீட்சண்யா அண்ணாவின் வரவையொட்டி ஈப்போ பயணத்தையும் அவர்தான் திட்டமிட்டிருந்தார்.

கோலாலம்பூரிலிருந்து ஈப்போவிற்கு நானும் என் அன்பு நண்பர் சிவா லெனினும் புறப்பட்டோம். எங்கள் இருவருக்கும் இலக்கிய முரண்பாடுகள், அரசியல் முரண்பாடுகள் என இருந்தாலும் அதையும் தாண்டி நல்ல நட்பு இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு ஊடகத்தில் ஒன்றாய் பணி செய்தவர்கள் என்பது அன்புக்கான இன்னொரு காரணம்.

கோலாலம்பூரிலிருந்து பேராக் செல்லும் நெடுஞ்சாலையானது அத்தனை நேர்த்திக் கொண்டதாகவும் இரு புறங்களிலும் மலைகள், மரங்கள் எனப் புறவுலகின் இயற்கை வர்ணங்களை இயற்கை அள்ளி பூசியிருப்பதையும் பார்க்கலாம். இன்னும் நன்கு உற்று நோக்கினால், நெடுங்சாலையில் தோன்றும் திதிவங்சா மலைதொடர் ஈப்போ எல்லைவரை நீண்டிருப்பதை அவதானிக்கலாம். தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையைப் போன்றது இந்த மலை. ஆனாலும் அந்த அளவுக்கு நீளமானது இல்லை.


காட்டுமரங்களின் பச்சை நிறத்திற்கு மத்தியில் ஆரஞ்சு பூக்கள் பூத்த காட்டு மரங்கள் நமது பார்வையை ஈர்ப்பதை நம்மால் தவிர்க்கவியலாது. யானை படுத்திருப்பதைப் போன்றும், கர்ப்பினி பெண்ணைப் போன்றும் கண்ணை ஏமாற்றும் மலைகளின் வரிசையில் விழுந்து எழும் சூரியக் கதிர்களை வார்த்தைகளில் வர்ணித்து விட இயலாது.

ஆனால், இந்த மலைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று தெரியவில்லை. தாப்பா வட்டாரத்திற்கு நெருங்கும் முன்பே சில மலைகள் வணிகத்திற்காகக் கரைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். ஒரு மலை அடியோடு காணாமல் போயிருக்கும் வேளையில் அருகிலிருக்கும் மற்றொரு மலை பணமாகிக் கொண்டிருப்பது பார்க்க வேதனையாகத்தான் இருக்கிறது. அது அதிகாரத்திற்கும் பணத்திற்கும் உள்ள அரசியல் என்பதால் யாரின் கூப்பாடும் செல்லுபடியாகாது என்று மனதை தேற்றிக்கொண்டால் நான் தாப்பா நெடுங்சாலையில் பெருமூச்சை விடுவோம்.



பாகுபாலியில் தமன்னா வெள்ளை உடையில் நீர்வீழ்ச்சி போல வருவாரே அந்தக் காட்சி நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்படியான தாவணியை அணிந்திருக்கும் அந்த அழகு நீர்வீழ்ச்சி. அந்த நெடுங்சாலையில் பயணம் செல்பவர்களுக்கு ஒரு முறைதான் அந்தக் காட்சி கிடைக்கும். தவறவிட்டால் அடுத்தப் பயணத்தில்தான் பார்க்க முடியும். அத்தனை உயரமான மலையிலிருந்து அந்த வெள்ளை தாவணி சரிந்துவிழும் அழகை நான் ஓரு முறைகூடத் தவறவிட்டது இல்லை. மழை பெய்திருக்கும் நாளில் ஆனந்தக் கூத்தாடும் அந்தத் தாவணி.

(தொடரும்)


2 கருத்துகள்: