வியாழன், 11 பிப்ரவரி, 2021

வாழ்த்துகள் ''கருக்கு'' பாமா ம்மா…


2019-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்த ஊடறு பெண்கள் சந்திப்பில்தான் நான் பாமா அம்மாவை முதன்முதலில் சந்தித்தேன். சிங்கப்பூரின் கெடுபிடியான சட்டத்திட்டத்தில் எது செய்யலாம் செய்யக்கூடாது என்று புரியவே இரண்டு நாள் ஆனாது. இதில் 20 பெண்கள் ஒன்று சேர்ந்தால் சும்மாவா இருப்போம்?
யாராவது ‘’சத்தமாக சிரிக்காதிங்க, நேரமாச்சு. புகார் சொல்லிடுவாங்க’’ என்று எச்சரிக்கும் வரை எங்களை அடக்கவே முடியவில்லை. ஆனால், பாமா ம்மா மிக கவனமாக பேசினார், சிரித்தார். தம்மால் யாருக்கும் சிக்கலும் வரக்கூடாது என்பதில் அவர் மிக கவனமாகவே இருந்தார். ‘கருக்கு’ பாமா என அடைமொழியோடு அவரை தோழிகள் அழைக்கும்போது நான் அந்த நாவலை வாசிக்காதது கொஞ்சம் நெருடலாக இருந்தது. தேடும் பலப் புத்தகங்கள் இங்கே கிடைப்பதில்லை. இந்தியாவில்தான் வாங்க வேண்டியிருக்கிறது. நல்லகாலமாக பாமா அம்மாவே கையில் புத்தகங்களோடு வந்திருந்தார். அவருடைய சில புத்தகங்களில் கருக்கும் இருந்தது. நான் வாங்கிக்கொண்டேன். நான் அவர் இருக்கும்போதே ‘கருக்கை’ வாசிக்க தொடங்கினேன். முடிக்க முடியவில்லை.

ஆனால், பாமா அம்மாவோடு இருந்த ஓரிரு நாட்களில் அவரோடு பேசியது நான் எங்கும் பதிவு செய்யவில்லை. பதிவு செய்வதற்கு இது ஒரு சரியான தருணம் என எண்ணுகிறேன். பாமா ம்மாவுக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி நினைவாக அவருக்கு பெண் படைப்பாளுமை விருது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்து, ஒரு வெறியோடு படித்து, தன் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தவர் அடைந்த ஏமாற்றத்தை துளியும் ஒளிவு மறைவு இல்லாமல் கருக்கில் பேசியிருக்கிறார் பாமா ம்மா. எழுத்தில் உண்மையாக இருப்பவர் நேரிலும் அப்படியே இருக்கிறார். தலித்துகள் வாழ்க்கையில், சிக்கல்களை எதிர்கொள்வது குறித்து அவர் சிலநேரம் பேசும்போது ஏற்பட்ட வலியை இப்போதும் நினைத்துப்பார்க்கிறேன்.
விடியாத நாட்களாகத்தான் இன்றும் இருக்கிறது. ஆனால், நிச்சயமாக விடியும் என்று நம்பிக்கையாக இருக்கும் அவரை அணைத்துக்கொள்கிறேன்.
-யோகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக