புதன், 3 பிப்ரவரி, 2021

பூவுலகின் கடைசிக் காலம்- கிருஷ்ணா டாவின்ஸி (புத்தக விமர்சனம்)


இந்தப் பூவுலகில் வாழக்கூடிய கடைசி மனித இனம் நாம் தான் என்றால் உங்கள் மன நிலை என்னவாக இருக்கும். அல்லது இன்றுதான் மனித வாழ்க்கையின் இறுதி நாள் என்றால்?  

பகீர்ன்னு இருக்கிறதா? நமது உயிரையும் வாழ்க்கையையும் சொத்தையும் நினைத்து நினைத்து கவலை படும் நாம், ஒரு மாபெரும் பிரபஞ்சத்தை அழித்துவிட்டு எப்படி சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்? 

அன்னை பூமி என்று சொல்லிக்கொண்டு, அன்னைக்கு செய்யக்கூடாத அத்தனை கேட்டையும் செய்துக்கொண்டு, அன்னைக்கு செய்யவேண்டிய எதையும் உருப்படியாக மனிதன் செய்வதில்லை. 

சுவாசிக்கும் காற்றுக்கு நாம் விசுவாசியில்லை. பருகும் தண்ணீருக்கு உண்மையாக இல்லை. நம்மை தாக்கிக்கொண்டிருக்கும் பூமி மீது துளியும் அன்பு இல்லை. பல்லுயிர் பெருக்கத்தின் காடு அழிக்கப்பட்டு வீட்டு நிலமாக மாறும்போது, அங்கே நமக்கு ஒரு வீடு வாங்க முடியுமா என்று யோசிக்கிறோமே தவிர, பல உயிர்களுக்கு வீடாகவும் நம் எதிர்கால சந்ததிக்கு அவசியமான  வனம் இல்லாமல் போவதுக்குறித்து எந்த சிந்தனையும் நாம் கொள்வதில்லை. 

என்னமாதிரியான ஜென்மம் நாம்?. 

இன்று உலகமே தள்ளாடி நிற்கும் கோறனிக்கும், நாம் இயற்கைக்கு செய்த கேடுக்கும் நெருங்கிய  காரணம் இருக்கிறது. இதற்கு முன்பு 'ஒரே உலகம்' குறித்த புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்று சொன்னேன். நாம் தவற விட்ட இயற்கை மீதான அன்பை,  நமது அடுத்த தலைமுறைக்காவது தெரிய வேண்டும். நாம் பார்த்த நமக்கு கிடைத்த நிறைய விஷயங்கள் அவர்களுக்கு இல்லாமல் போகப்போவது உறுதி. இருக்கப்போகும் மிச்ச மீதியின் அவசியத்தை உணர சில சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு அவசியம். நமக்குதான் விழிப்புணர்வே இல்லையே. அதை அடுத்த தலைமுறைக்காவது கொடுப்போம்.

இன்னுயிரை கொடுத்து இயற்கையைப் காப்பாற்ற போராடிய, இன்னும் போராடும் சிலரின் அறிமுகம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.. 

நைஜீரிய டெல்டா குறித்து உங்களில் எத்தனை பேருக்கும் தெரியும் என எனக்கு தெரியவில்லை. சூழலியல் சார்ந்து கவலைப்படுபவர்களுக்கும், அது சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கும் நைஜீரியா சூழலியல் போராளியும் எழுத்தாளருமான விவா-வை தெரியாமல் இருக்காது. விவா தொலைக்காட்சி தயாரிப்பாளர் மேலும் "சிவில், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளுக்காக  போராடினார். 


விவசாயிகளாக வாழ்ந்த தன் சொந்த ஊர்  மக்களுக்கு தங்களின் நிலத்திற்கு கீழே ஓடும் எண்ணெய் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால், அதை மோப்பம் பிடித்து, பல திள்ளுமுள்ளுகளை செய்து விவசாய நிலத்தை நாசம் செய்தது ஷெல் எனும் காப்ரெட் கம்பெனி.  ஒருக்கட்டத்தில் தன் போராட்டத்தில் வெற்றி பெற்று ஷெல் நிறுவனத்தை தன் கிராமத்திலிருந்தே விரட்டியடித்தார்கள் விவாவும் அவருடன் கைகோர்த்து நின்ற அவரின் ஆதரவாளர்களும். 

நிலத்தை திண்ணு கொழுத்து, பணம் பார்த்த நிறுவனம் எத்தனை நாள் சும்மா இருக்கும்?  உள்நாட்டு அரசு மற்றும் இராணுவ ஆதரவுடன் ஷெல் நிறுவனம் மீண்டும் விவாவின் கிராமத்தில் கலவரம் செய்து, கொலை பலியை விவா மற்றும் அவரின் ஆதரவாளர்களின்மீது போட்டது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கு அவருக்கு கிடைத்தப் பரிசு தூக்கு தண்டனை. 1995-ஆம் ஆண்டு விவா தூக்கிலிடப்பட்டார்.    

இப்படி சூழலியலுக்காக பாடு பட்ட இன்னும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இன்னும் சிலரை இந்தப் புத்தகம் அடையாளம் படுத்தியிருக்கிறது. அதைவிடவும் மேலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கேடு குறித்து துள்ளிய ஆதாரத்தோடு முன் வைக்கிறது. 

பச்சையான உண்மையைப் பேசுகிற இந்தப் புத்தகம் நமக்கு ஒரு ஆவணம். பாரதி புத்தகாலயம்  வெளியீடு செய்திருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக