ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தானின் காதல் கதை



மலேசிய சுல்தான்களில்  மிகவும் வெளிப்படையானவர் ஜொகூர் சுல்தாந்தான். தவிர மற்ற மாநில சுல்தான்ளைவிட  மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார், மக்களோடு அதிகம் நெருங்கி பழகக்கூடியவர். ஜொகூர் வாசிகளும் அதிகம்  தங்களது சுல்தானை ரசிப்பதையும் மதிப்பதையும்  காண முடியும்.  இன்னும் சொன்னால் சுல்தான்கள் இருக்கும் மாநிலங்களில் ஏதேனும்  உள்ளூர் பிரச்னை அல்லது மக்கள் பிரச்னை என்றால் மக்கள் நாடுவது சட்ட மன்ற உறுப்பினரைத்தான்.  ஆனால், ஜொகூர் மக்களின் பிரச்னை, சட்ட மன்றம் - நாடாளுமன்றம் போவதற்கு முன்பே சுல்தானின் பார்வைக்கு போய்விடும். அந்த அளவுக்கு தன் மக்களுக்காக முன்னிலையில் நிற்பார் ஜொகூர் சுல்தான்.

5 ஆண்டுகளுக்கு முன்பு  அதாவது 2015-ஆம் ஆண்டு சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரின் முடிசூட்டு விழா கோலாகலமாக அவரின் மாநிலத்தில் நடந்தது. 55 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பிரமாண்ட அரச  வைபவம் அது.  மாநிலமே விழாக்கோலம் பூண்டு அந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடியது.  அந்த நாளில் அவர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த, சந்தித்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி  மிகவும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.  அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்களில் அவரின் காதல் கதையும் அடங்கும். தனது துணைவியார் ராஜா ஸாரித் சோஃபியாவை, சுல்தான் கரம் பிடித்தக் கதையை முதல் முறையாக வெளியுலகிற்கு அவர் பகிர்ந்துகொண்டார். 

2015-ஆம் ஆண்டு ஒரு மலாய் பத்திரிக்கையில் வந்த செய்தியை தழுவி இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இந்தக்  காதலர்  தினத்தில் சுல்தானின் கதையை பகிர்ந்துகொள்கிறேன்.  



சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார், தனது துணைவியார் ராஜா ஸாரித் சோஃபியாவை எங்கு சந்தித்தார்? எப்படி காதலில் விழுந்தார்? எப்படி ராணியாரைக் கவர்ந்தார்? சுல்தானே அதை பேசுகிறார்…

“துணைவியார் ராஜா ஸாரித் சோஃபியாவை நான் முதலில் சந்திக்கவில்லை.   தொலைபேசி வழியாகத்தான் அவருடன் பேசினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் அவரின் தொலைபேசி எண்ணை கொடுத்து, பேசச்சொன்னார். ராஜா ஸாரித் சோஃபியாவை எப்படியும் கவர்ந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி கவர்ந்திருந்தால், அது எனக்கு பெரிய சாதனை.

நான் இளவரசி ராஜா ஸாரித் சோஃபியாவை அழைத்தேன். ஆனால், அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னிடம்  பேசவே இல்லை. என்னைக் கண்டுகொள்ளவும் இல்லை. பேசாமல் அவர் தொலைபேசியை வைத்துவிட்டார். நான் மீண்டும் அழைத்தேன். அவரோ, தொலைபேசியை எடுக்கவில்லை.  எனக்கு அவமானமாகிவிட்டது. தொலைபேசியில்  அழைப்பதை நிறுத்திக்கொண்டேன். ராஜா ஸாரித் சோஃபியாவை சந்திப்பதற்கு முன்பே நான் அவருடன் காதலில் விழுந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆறு மாதங்கள் கடந்திருக்கும். ஒரு நாள் அதே நபர், ராஜா ஸாரித் சோஃபியாவின் புதிய தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்தார். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த அவர் விடுமுறைக்காக வந்திருந்தார். ‘’அழைத்துப்பேசு’’ என்று என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தார். என்னால் மீண்டும் ஒருமுறை  ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, வெட்கமாக இருக்கிறது என எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அவர் விடுவதாக இல்லை. இறுதியில் அவரின் தொந்தரவு தாங்க முடியாமல் மீண்டும் ராஜா ஸாரித் சோஃபியாவை தொலைபேசியில் அழைத்தேன்.


மறுமுனையில் அவரின் குரல் கேட்டது. நான் பேசினேன், பேசினேன், பேசிக்கொண்டே இருந்தேன்.  நான்கு மணி நேரம். நான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன்.  அவர்  நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாரே தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை. பிறகு, ஒவ்வொரு நாளும், காலையிலும், இரவிலும் நான் அவரை அழைத்துப்பேசுவேன். சில சமயம், இரவில் அவர் தூங்கி விடுவார், ஆனால், நான் மட்டும் பேசிக்கொண்டே இருப்பேன்.

சில தினங்களுக்குப் பிறகு, நான் என் தந்தையுடன் ஜொகூரில் உள்ள தீவுகளைச் சுற்றிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் கைபேசி இல்லையே. ஆகவே, ஜொகூர் திரும்பியதும், உடனே அவரை நான் அழைத்தேன். மறுமுனையில் அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அப்படியே புல்லரிக்க வைத்தது. “உங்கள் பேச்சை கேளாமல் நான் எவ்வளவு உங்களை “மிஸ்” பண்ணேன் தெரியுமா?  என்று  கேட்டாரே….  அந்தக் கனமே அவரின் காதலைப் புரிந்துகொண்டேன்.

இப்படியே தொலைபேசியில்தான் எங்கள் காதல் வளர்ந்தது. ஒருநாள் இரவு,  ராஜா ஸாரித்துடன் பேசிவிட்டுத் திரும்பினேன். அங்கே என் தந்தை நிற்பதைக் கண்டு ஒரு வினாடி உறைந்துபோனேன். நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை அவர் கேட்டுக்கொண்டிருந்தார் என்பதை நான் உணரவில்லை.

யாரிடம் பேசுகிறாய்? என்று கேட்டார். நானும்,  அவர் பேராக் சுல்தானின் மகள் என்று சொன்னேன். அவரைச் சந்திக்க விரும்புவதால் வீட்டிற்கு அழைத்துவரும்படி என் தந்தை சொன்னார். தொலைபேசியில் பேசி-பேசி இறுதியில் வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டார். எனக்கு ஒரே மகிழ்ச்சி.


சிங்கப்பூரின் கொம்பி மலையில் எங்களுக்கு ஓர் அரண்மனை உள்ளது. அங்கு ஒரு குடும்ப நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து, ராஜா ஸாரித்தை  அங்கு அழைத்து வரும்படி என் தந்தை சொன்னார்.  விருந்தினர்கள் அனைவரும் அங்கிருந்து சென்ற பிறகு, ராஜா ஸாரித்தையும் என்னையும் தான் அமைந்திருந்த மேஜைக்கு வரும்படி என் தந்தை சைகை காட்டினார்.  நாங்களும் அங்குச் சென்றோம்.  அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இதுதான். “ இன்னும் ஏன் காத்திருக்கிறாய்? திருமணம் செய்துகொள்ள கேட்கவேண்டியதுதானே? “ என்றார்.  நான் ஒன்றும் செய்வதறியாது, சிரித்துக்கொண்டே… “ நாம் இது பற்றி யோசிக்கிறேன்” என்று மட்டும் சொன்னேன்.  ராஜா ஸாரித்தை அந்தச் சமயத்தில் இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்றியாக வேண்டுமே!

ராஜா ஸாரித்தை அவரின் வீட்டில் விட்டு விட நான் சென்றேன். நான் வீடு திரும்ப அதிகாலை 3 மணியாகிவிட்டது. நான் புறப்படும்போது என் தந்தை எங்கு அமர்ந்திருந்தாரோ , அதே இடத்தில் அப்போதும் அமர்ந்திருந்தார்.  எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர்  என்னைப் பார்த்து கேட்டார்.

“நீ புகிஸ்தானே”?

“ஆமாம், நான் புகிஸ்தான்”

“ஒரு கோழையான புகிஸாக இருக்காதே. உண்மையான நோக்கத்துடந்தான் நீ அவருடன் பழகுகிறாயா ”

“ஆம், உண்மையாகத்தான் பழகுகிறேன். “ என்று நான் சொன்னதும் , உடனே ராஜா ஸாரித்தின்  வீட்டிற்குச் சென்று அவர் என் மனைவியாகத் தயாரா? என்று கேட்கச்சொன்னார். அந்த அதிகாலை வேளையில் நான் ராஜா ஸாரித்தின் வீட்டிற்குச்சென்று, அவரை  திருமணம் செய்துகொள்ளும் என் ஆர்வத்தைச் சொன்னேன். அவரின் சகோதரி உடனே அவர்களின் தந்தையான பேராக் சுல்தானை அழைக்க, அவரும் சம்பதம் தெரிவித்தார்.

 

இதனை முடித்துக்கொண்டு  நான் வீடு திரும்பும்போது பொழுது விடிந்துவிட்டது. என் தந்தை அதே இடத்தில்தான்  இன்னமும் அமர்ந்திருந்தார்.  ராஜா ஸாரித் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்று நான் சொன்னதும், மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் விமானம் மூலமாக ஈப்போ சென்று, அங்கு தயார் நிலையில் இருக்கும்

 ஹெலிகாப்டரில் ஏறி கோலகங்சார் சென்று, சுல்தான் இட்ரிஸ் ஷாவை அவரின் அரண்மனையில் சந்தித்து, அவரின் அனுமதி பெறுமாறு என் தந்தை உத்தரவிட்டார்.

அதன் பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அது 1982-ஆம்  ஆண்டு நடந்தது.  ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் ராஜா ஸாரித் படித்துக்கொண்டிருந்ததால், அவர் பட்டம் பெறும்வரை, ஓராண்டுக்கு அவரைச் சந்திக்க எனக்கு அனுமதியில்லை. அதற்கடுத்த ஆண்டில் எங்களுக்கு திருமணம் நடந்தது. கடவுள் புண்ணியத்தில் எங்களுக்கு அழகான ஆறு செல்வங்கள் பிறந்தனர் என்றார் சுல்தான் இப்ராஹிம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக