சனி, 21 மார்ச், 2015

பயனீட்டாளர்கள் உரிமைகள் என்ன?


பயனீட்டாளர்கள் உரிமைகள் என்பது என்ன? அது எப்போது புழக்கத்தில் வந்தது?  நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் செலுத்தப்படும் வரி என்ன? எது எதுக்கு வரி இல்லை? ஏன் ரசீது பெற வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?  சில குறிப்பிட்ட பொருளுக்கு காலாவதித் தேதி அல்லது அவகாசத் தேதி இருக்கும். அதற்கு முன்பே அது பழுதடைந்தால் அல்லது கெட்டுப்போனால் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?  இப்படியான கேள்விகளுக்கு நம்மில் எத்தனை பேருக்குப் பதில் தெரியும்.

ஒரு கைத்தொலைபேசி வாங்குகிறோம். ஒரு வருடம் நமக்கு தவணை கொடுக்கப்படுகிறது. அந்த இடைவெளியில் கைபேசி பழுதாகிறது என்றால் நாம் என்ன செய்வோம். விதியே என நொந்துகொண்டு கடையில் போய் பழுது பார்ப்போம். காரணம் என்ன? அந்தப் பொருள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது, ஒரே நாளில் பழுது பார்த்து மீண்டும் பொருள் பெற்றுவிட தவிக்கிறோம்.. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பினால், நாள்கள் கடத்துவார்கள் என பயப்படுகிறோம். அல்லது அதற்கு நாமே ஏதாவது நியாயத்தை கற்பித்துக் கொள்கிறோம்.

இதற்கு ஏன் பயனீட்டாளர் சங்கம். பயனீட்டாளர் சங்கத்தின் தேவை என்ன? அவர்கள் எந்த வகையில் பயனீட்டாளர்களுக்கு உதவுகிறார்கள்? அவர்களின் செயற்பாடுகள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு நமக்கு எந்த அக்கறையும் இல்லை. அதற்கான பதிலை தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை. பணத்தைச் சம்பாதிக்க மெனக்கெடும் நாம், பணத்தைச் சேமிக்கவும், வாங்கப்படும் பொருள்களுக்கு மதிப்பளிக்கவும் தெரிவதில்லை. இதோ மீண்டும் ஒரு உலகப் பயனீட்டாளர் விழா கடந்த 15-ஆம் தேதி முடிவடைந்தது. எத்தனை பேருக்கு அது குறித்து தெரியும் என்பது தெரியாது. தெரிந்துகொள்ள நமக்கு நேரமும் இருப்பதில்லை. மலேசியாவில் பயனீட்டாளர்கள் நலன் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தினர்தான்.  பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செயலாளர் சுப்பாராவிடம் பயனீட்டாளர் உரிமைகள் குறித்து சில விவரங்களை கேட்டபோது...

யோகி: உங்களைப் பற்றியும், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க? 
சுப்பாராவ் : நான் சுமார் 32 வருடங்களுக்கு மேலாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் செயலாளராக இருக்கிறேன். இச்சங்கத்தின் வழி பல விஷயங்களையும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சங்கத்தின் வழி சேர்த்திருக்கிறோம். நமக்குத் தெரியாமல் உட்கொள்ளும் நட்சு உணவுகள் என்னென்ன? அவை எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும்? இயற்கை விவசாயம் என்பது என்ன? தடை செய்யப்பட்ட பொருள்கள் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அதன் ஆதாரத்தோடு அச்சி வடிவிலும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களிடத்தில் தெரிவிக்கிறோம். 

யோகி: உலகமுழுவதும் பயனீட்டாளர் தினம் மார்ச் 15-ஆம் தேதி கொண்டாடுகையில், மலேசியாவில் அது எப்போது கொண்டாடப்படுகிறது? 
சுப்பாராவ்:  மலேசியாவில் ஜூலை 26-ஆம் தேதி  பயனீட்டாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தில் பல ஆரோக்கிய விஷயங்களும், திட்டங்களும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறோம். மக்கள் அல்லது பயனீட்டாளர்கள் தாமே பங்கெடுத்து உணரக்கூடிய வகையில் சில நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறோம்.

யோகி: ஒரு பயனீட்டாளர், அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன?
சுப்பாராவ் : பயனீட்டாளர்களுக்கு அடிப்படையாக 8 பாதுகாப்பு உரிமை விதிகள் உள்ளன.
1. அடிப்படைத் தேவைகள் பெறும் உரிமை
2. பாதுகாப்புப் பெறுவதில் உள்ள உரிமை
3. பொருளின் தகவல் பெறுவதில் உள்ள உரிமை
4. தேர்ந்தெடுக்கும் பொருளில் உள்ள உரிமை
5. செவிமடுப்பதில் உள்ள உரிமை
6. இழப்பீடு பெறுவதில் உள்ள உரிமை
7. பயனீட்டாளர் கல்வி பெறுவதில் உள்ள உரிமை
8. ஆரோக்கியமான சுற்றுச் சூழல் குறித்த உரிமை

இந்த 8 உரிமைகளும் பயனீட்டாளர்கள் அடிப்படையில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களாகும். இந்த அடிப்படைத் திட்டங்களை 1962-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோன் கென்னடி மார்ச் பொதுச்சபையில் அறிவித்தார். வாடிக்கையாளர்களுக்கும் அல்லது பயனீட்டாளர்களுக்கும் தரமற்ற பொருளை விநியோகம் செய்யும் நிறுவனத்தின் மீது, பாதிக்கப்பட்டவர் நடவடிக்கை எடுப்பதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. இதுபோன்று துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சில பொறுப்பற்ற தரப்பினரின் ஏகபோக நடவடிக்கையைத் தடுக்க முடியும். 

யோகி: வியாபாரிகளின் அல்லது விநியோகஸ்தர்களின் சேவையில் அல்லது விற்பனையில் திருப்திகொள்ளாத பயனீட்டாளர்கள் எம்மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம்?
சுப்பாராவ்: பயனீட்டாளர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன் முதலில் சில விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர் அந்தப் பொருளை வாங்கியதற்கான ஆதாரம் தேவையாகிறது. அந்த ஆதாரம் எப்படிக் கிடைக்கும்? அங்குதான் பல பயனீட்டாளர்கள் தவறு செய்யும் இடம் உள்ளது. வாங்கும் பொருளுக்கு ஒரே ஆதாரம் ரசீதுதான். அந்த ரசீதை நாம் பெறவில்லை என்றாலும், தொலைத்து விட்டாலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் மீதோ விநியோகஸ்தர்கள் மீதோ நடவடிக்கை எடுப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ரசீதுகள், அரசாங்கத்திற்கு நாம் செலுத்தும் வரியை தெரிந்துக்கொள்ள உதவுவதுடன், தரமற்றுப்போகும் பொருளுக்கு நியாமான இழப்பீடு பெறுவதற்க்கும் நாம் தகுதி பெறுகிறோம் என்பதை ஒவ்வொரு பயனீட்டாளரும் நினைவில் கொண்டு ரசீது பெறுவதின் நன்மையை உணர வேண்டும். 

யோகி: நுகர்வோர் (பயனீட்டாளர்) பாதுகாப்புச் சட்டம் மலேசியாவில் எப்போது அமலுக்கு வந்தது?
சுப்பாராவ்: அந்த நாளைத்தான் நமது நாட்டில் பயனீட்டாளர் தினமாகக் கொண்டாடுகிறோம். அதாவது ஜூலை 26-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கான கோரிக்கை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சினால் வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையையும், அதில் இருந்த நியாயத்தையும் பரிசீலித்து, 15  நவம்பர் 1999-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால்,  கோரிக்கை வைத்த நாளான ஜூலை 26-ஆம் தேதியையே  பயனீட்டாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது 15  நவம்பர் 1999-ஆம் தேதிதான்.  இந்தச் சடத்தின் கீழ்தான் குறைதீர்க்கும் மன்றம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மன்றம் ‘எளிமையான, மலிவான, விரைவான' என்ற கருப்பொருளோடு பயனீட்டாளர் பிரச்னைகளுக்கு தனது சேவையை வழங்குகிறது. இந்தப் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டம் பயனீட்டாளர் பிரச்னைகளுக்குத் தீர்க்காண சிவில் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு கொண்டு வரப்பட்டதாகும். 

யோகி: நுகர்வோர் (பயனீட்டாளர்)  நீதிமன்றங்கள் குறித்து கொஞ்சம் விளக்கமும் அதன் செயற்பாடுகள் குறித்தும் சொல்லுங்க?
சுப்பாராவ்: நுகர்வோர் (பயனீட்டாளர்)  நீதிமன்றங்கள் நாட்டில் எல்லா மாநிலங்களிலும் இருக்கின்றன. பயனீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட எல்லா புகார்களையும் இங்கு கொண்டு செல்லலாம். ஆனால், இரு விவகாரங்களை மட்டும் கொண்டு செல்ல முடியாது. வீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும், மருத்துவம் அல்லது மருத்துவமனை சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் இந்த நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல முடியாது. 

காரணம், அந்தப் பிரச்னைகளுக்காகத் தனித்தனி சட்டங்கள் உள்ளன. இந்த நீதிமன்றத்தில் புகார் கொடுப்பவர்கள் சிந்தனையில் கொள்ளவேண்டிய மற்றுமொரு விஷயம் 25,000 வெள்ளிக்கு மேற்பட்ட பொருள்களுக்கு புகார் தெரிவிக்க முடியாது. அதற்குக் கீழ்ப் பட்ட எந்தப் பொருளாக இருந்தாலும் புகார் அளிக்க வேண்டும் என்றால் செய்யலாம். அதற்கான பாரங்களை 5 வெள்ளிகொடுத்து வாங்க வேண்டும். நாம் யார் மீது புகார் அளிக்கவிருக்கிறோமோ அவர்களுக்கும் ஒரு நகல் அனுப்புதல் அவசியம். 

உற்பத்தித் தரம், திருப்தியின்மை, பரிசுப் பொருள் கிடையாமை, இலவசமாகக் கிடைக்கும் என்ற பொருள் பெறாமை போன்ற அனைத்திற்கும் புகார் தெரிவிக்கலாம். 60 நாள்களில் பிரச்னைக்கான தீர்வைப் பெற்றுவிடலாம். முன்பை விட பயனீட்டாளர்களுக்கு திருப்தியளிக்ககூடிய நிலையில்தான் பயனீட்டாளர் நீதிமன்றங்கள்  செயல்பட்டு வருகின்றன. பாதிப்படையும் வாடிக்கையாளர்கள் நேரடியாகவே பயனீட்டாளர் நீதிமன்றத்தை அணுகி பிரச்னைகளை தெரிவிக்கிறார்கள். இது உண்மையில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய மற்றும் மனநிறைவளிக்ககூடிய விஷயமாகும். 

யோகி: பயனீட்டாளர் சங்கம் தொடர்ந்து இயற்கை விவசாயம் கூறித்துப் பேசி வருகிறது. அதற்கான முயற்சிகளையும் செயற்பாடுகளையும் பார்க்க முடிகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரை நீங்கள் அழைத்து வந்திருந்தீர்கள். அது குறித்துத் கொஞ்சம் சொல்லுங்கள்?
சுப்பாராவ்: இந்த மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அது இயற்கை விவசாயத்தால்தான் முடியும். இந்த மண்ணில் மண் புழு இல்லாமல் போய்விட்டது என்பதை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்? மண் புழு இருக்கும் மண்ணே செழிப்பான மண்ணாகும். ரசாயனத்தையும், பூச்சிக்கொல்லி மருந்தையும் தெளித்து, தூய்மையான சுற்றுச்சூழலை, சிறு உயிர்களான பூச்சியை விரட்டினோம்; உணவையும் விஷமாக்கிக் கொண்டோம். 
நமது இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் விதமாகத்தான் கோ.நம்மாழ்வாரை மலேசியாவுக்கு வரவழைத்தோம். அவர் இரு பண்பட்ட விவசாயிகளோடு வந்தார். கேமரன்மலையில் ஒரு வாரம் தங்கி, அங்கிருக்கும் விவசாயிகளுக்கு அவர் இயற்கை விவசாயத்தைச் சொல்லிக்கொடுத்தார். பிறகு, ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். பிறகு பந்திங்கிலும் அவர் விவசாயிகளுக்கு பயிற்ச்சிகள் வழங்கினார். அதில் அதிகமான சீனர்களும் கலந்துகொண்டனர். அவர் அளித்த பயிற்சியிலும் விளக்கத்திலும் அந்த சீன விவசாயிகள் அவரை ஒரு குருவாகவே ஏற்றுக்கொண்டனர். இன்று நம்மாழ்வார் நம்மிடையே இல்லை எனினும், அவர் விட்டுச்சென்ற விவசாய முறை இன்னும் அவரிடம் பயிற்சி பெற்றவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. பந்திங்கில் உள்ள சீன விவசாயிகள் அவரை வணங்கிய பிறகே விவசாயத்தைத் தொடங்குகின்றனர்.  

யோகி: பெரிய பெரிய அங்காடிக் கடைகள் மலேசியாவில் வந்துவிட்டன. இன்னும் வந்துக்கொண்டும் இருக்கின்றன. இதனால் சிறிய வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள் என்பது உண்மைதானே. இதில் உங்கள் கருத்து என்ன?
சுப்பாராவ்: உண்மையில் இது ஆதரிக்க முடியாத ஒரு விஷயமாகும். இதுபோன்ற அங்காடி கடைகளினால் சிறுதொழில் வியாபாரிகள் பெரிய பாதிப்படைந்து வருகிறார்கள், என்பது நிதர்சன உண்மை. அங்காடிக் கடைகளில் எல்லா பொருள்களும் இருக்கும்; வேலையை எளிதாக முடித்துக்கொள்ளலாம் என நினைத்தே வாடிக்கையாளர்களும் பயனீட்டாளர்களும் அங்காடிக் கடைகளை நாடிச் செல்கின்றனர். 

ஆனால், பொட்டலங்களில் இருக்கும் இருக்கும் பழங்கள், காய்கறிகள், இறைச்சிவகைகள் போன்றவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும் என என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதோடு அங்காடிக்கடைகளில் உறைநிலையாக்கப்பட்ட உணவுகள் மற்றும் இறைச்சி வகைகள் நிச்சயம் உடலுக்கு கேடான விஷயங்கள்தான். விலை மலிவு என்றும் அலைச்சல் இல்லையென்றும் அங்காடி கடைகளை நோக்கிச் செல்பவர்கள் பணம் கொடுத்து சுகாதாரத்தை விற்றுவிட்டு வருகிறார்கள் என்பதை உணர்ந்தாலே போதும்.  சிறுதொழில் வியாபாரிகள் அடையும் நஷ்டத்திற்காகவும் உளவியலுக்காகவும் பயனீட்டாளர் சங்கம் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதுடன் அதற்கான மகஜர்களையும் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டுச் செல்கிறது.

யோகி: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பயனீட்டாளர்களுக்காக எழுத்துப் பிரதிகளையும் வெளியிட்டு வருகிறீர்களே?
சுப்பாராவ்:  ஆமாம். குறிப்பாக ‘பயனீட்டாளர் குரல்' என்ற பத்திரிகையை கடந்த 25 ஆண்டுகளாக மாத பத்திரிகையாகக் கொண்டு வருகிறோம். அந்தப் பத்திரிகையில், பயனீட்டாளர் பிரச்னைகள், சுற்றுச்சூழல் மாசு, பயனீட்டாளர்கள் சங்கத்திற்கு வரும் புகார் குறித்த விவரங்களோடு மாணவர் பக்கங்களையும் தாங்கி வருகிறது. 

இது விளம்பரமில்லாத பயனீட்டாளர்கள் உரிமைக்காகக் கொண்டு வரப்படும் ஒரு பத்திரிகையாகும். இது இல்லாமல் சுமார் 25-க்கும் மேலான புத்தகங்களைப் பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. சீனி, உப்பு, உடல்பருமன் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற விவரத்தோடு எழுத்து வடிவமாகக் கொண்டு வந்திருக்கிறோம். மிகமுக்கியமாக விவசாயிகளுக்காக இயற்கை விவசாயத்திற்காக 3-க்கும் அதிகமான பிரத்தியேகப் புத்தகங்களைப் பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. 
நன்றி. 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக