திங்கள், 16 டிசம்பர், 2019

மறைக்கப்பட்ட தொழிற்சங்கப் போராளிகள்.. பி.வீரசேனன் - எஸ்.ஏ.கணபதி


மலேசிய வரலாற்றில் தமிழர்களுக்காக குரல் கொடுத்த அல்லது விடுதலைக்காக குரல் கொடுத்த  தலைவர்களை பட்டியலிடும்போது, சுபாஷ் சந்திரபோஸ், பாவலர் பெரிஞ்சித்தனார், தந்தை பெரியார் உள்ளிட்டவர்களை நினைவுக்கூர்ந்து பெருமிதம் கொள்ளும் மலேசிய தமிழர்கள்,  இந்தியாவிலிருந்து கூலியாட்களாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களுக்காகவும் , உள்நாட்டு தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காக  போராடிய தொழிற்சங்கப் போராளிகளான பி.வீரசேனன் மற்றும் எஸ்.ஏ.கணபதி குறித்து ஏன் பேசுவதில்லை என்ற காரணத்தை தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.  
 
மிக சமீபத்திலிருந்துதான் மலேசிய சோசலிசக் கட்சி இம்மாதிரியானவர்களின்  வரலாறுகளை பொது மக்கள் மத்தியில்  கொண்டு வந்ததுடன்  அப்போராளிகள் குறித்த கருத்தரங்கையும் தொடர்ந்து  ஏற்பாடு செய்து வருகிறது.   
இளம் வயதிலேயே தன்னிகரற்ற மாவீரர்களாக உயிரை விட்ட தோழர்கள் பி.வீரசேனன் மற்றும் எஸ்.ஏ.கணபதி இருவருரின் நினைவாக வருடத்திற்கு  ஒரு முறை காற்பந்தாட்டப் போட்டியையும் நடத்தி இவர்கள் யார் என்ற வரலாற்றை ஒரு பரப்புரையாகவும் செய்து வருகிறது பி.எஸ்.எம் . ஆனாலும், நம்மில்  பலருக்கு இவர்கள் குறித்து பேசுவதற்கு இன்னும்  அடையாளச் சில்கல் இருக்கவே செய்கிறது. 

பி.வீரசேனன்


பி.வீரசேனன் இவர் எஸ்.ஏ.கணபதியின் நண்பரும் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட பொதுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் ஆவார். 1946-லிருந்து மலாயாவில்,  எஸ்.ஏ.கணபதியோடு இணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்.  1943-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூருக்கு வருகை தந்து இந்திய சுதந்திரக் கழகத்தையும், இந்தியத் தேசிய இராணுவத்தையும் அமைத்தபோது அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் தமிழர்களை இந்திய தேசிய இராணுவத்தில் சேர்க்க தோழர்களுடன் இணைந்து பணியாற்றினார்.  கணபதி அவர்களை  தூக்கில் போடுவதற்கு ஒரு நாள் இருக்கும்போது அதாவது மே 3-ஆம் தேதி 1949-ஆம் ஆண்டு  இங்கொரு காட்டில்  இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் நடந்த நேரடிச் சண்டையில் பி.வீரசேனன் சுட்டுக்கொல்லப்பட்டார். மாவீரர் தியாகி  பி.வீரசேனன் சகாத்தம் அதோடு முடிவடைகிறது.  இவரின் பூர்வீகம் மற்றும் இதர விவரங்கள் குறித்து இன்னும் தெளிவான வரலாறு கண்டறியப்படவில்லை.

                                                                                                                        
எஸ்.ஏ.கணபதி



1912-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் தம்பிக்கோட்டை கிராமத்தில் எஸ்.ஏ.கணபதி பிறந்தார்.  தனது பத்தாவது வயதில் சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்ததுடன் தொடக்கல்வியை சிங்கப்பூரிலேயே   மேற்கொண்டார். இயற்கையாகவே வர்க உணர்ச்சி கொண்டவரான  கணபதி கம்னியூச கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.  

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, மலாயாவில்  மீண்டும் காலனிய ஆதிக்கம் ஏற்பட்டபோது ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக மலாய்க்காரர்கள், சீனர்கள், தமிழர்கள் சினங்கொண்டு எழுந்தனர்.     
உலகில் அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டிஷ், டச்சு, போர்த்துகீசிய பிரான்சு  உள்ளிட்ட நாடுகளிலும் விடுதலை புரட்சி தொடங்கின. உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் 'உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்ற முழக்கத்தின் கீழ் , 1945- பிற்பகுதியில் உலக தொழிலாளர்கள் சங்கம் அமைத்தனர். இப்படித்தான் சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவானது.
மலாயாவை பொறுத்தவரை இந்தத் தொழிற்சங்கம் துரித வளர்ச்சி கண்டது. அதோடு அனைத்து மாநிலங்களிலும், அரசாங்க சட்டப்படி பதிவு செய்து  பொது தொழிலாளர் சங்கங்கள் அமைக்கப்பட்டன.
தபால் தந்தி தொழிலாளர் சங்கம், ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம், இரும்பு தொழிலாளர் சங்கம், பாமாயில் தொழிலாளர் சங்கம், மருத்துவமனை தொழிலாளர் சங்கம் என பல்வேறு சங்கங்கள் உயிர்பெற்று செயல்பட தொடங்கின. 
பின்னர் இம்மாநில சங்கங்கள் ஒருங்கிணைந்து அகில மலாயா ரீதியில் ''அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்' என்ற அமைப்பு உயிர் பெற்றதுடன் இதற்கு இந்தியர்களின் தலைவராக  கணபதியும், சீனர்களின் தலைவராக யாப்சீ லிம்-மும் , மலாய் தலைவராக அப்துல்லா, சித்தி, நூர் முகமது ஆயோரும்    தலைமை ஏற்றனர்.
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்திற்கு முன்னணி பாட்டாளி முரசு என்ற தமிழ் வார பத்திரிக்கை தொடங்கப்பட்டு அதன் ஆசிரியராகவும் கணபதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1946-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் தொழிற்சங்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தியதுடன் தங்கள் கோரிக்கைகளையும் முன் வைத்தனர். 

1. எட்டு மணி நேர வேலை
2. எட்டு மணி நேர ஓய்வு
3. எட்டு மணி நேர நித்திரை
4. கூலி என அழைக்காமல் தொழிலாளர் என அழைத்தல்
5. மே 1, தொழிலார் தினத்தில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு, ஒரு நாள் ஊதியத்துடன்  விடுமுறை
6. சம்பள உயர்வு 

இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி   நடந்த போராட்டங்களில் தொழிற்சங்க உதவியுடன் தொழிலாளர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. இந்த எழுச்சிக்கு பிறகு தொழிற்சங்கத்தின் குரல்கள் அங்காங்கே சத்தமாக ஒலிக்க தொடங்கியது. ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தில் இறங்கியது. இதனால் அசௌகரியம் அடைந்த ஆங்கிலேய அதிகாரிகள், தொழிற்சங்கவாதிகளை குறி வைத்தனர். தொழிற்சங்கங்களுக்கும் கம்யூனிச கட்சிக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக கருதிய ஆங்கிலேய அரசும் தோட்ட நிர்வாகங்களும் தொழிற்சங்கவாதிகளை கண்காணிக்க தொடங்கினர். கம்யூனிச கட்சியின் பலத்தோடு இயங்குவதாக கருதப்பட்ட தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கவாதிகளை போலீஸ் தொடர்ந்து கண்காணிக்க தொடங்கியது. தொழிற்சங்க அலுவலகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தொழிற்சங்கவாதிகள் தடுத்து வைக்கவும் பட்டனர்.

இந்நிலையில் தொழிலார் சங்கத்திற்கு தலைவராக இருந்த தலைவர் கணபதி மார்ச் மாதம் 1ஆம் தேதி 1949-ல்  பத்து அராங்- ரவாங்  அருகாமையில் இருந்த  'வாட்டர்பால்' தோட்டத்தில் துப்பாக்கியும் ஆறு வெடிமருந்துகளும்வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அன்றைய காலக்கட்டத்தில் நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலில் இருந்தது. அதோடு, ஆயுதம் வைத்திருப்போர்மீது கடும் நடவடிக்கைகளை ஆங்கிலேய அரசு முடக்கி விட்டிருந்தது. தாம் அதை கையளிக்கவே காவல் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தேன் என்ற கணபதி அவர்களின் வாக்குமூலத்தை அந்த ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொள்ளவே இல்லை. 

இந்தியா,பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்கங்க இயக்கங்களும் உலகத் தொழிலாளர் சம்மேளனமும் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. கணபதி கைதுக்குப் பிறகு நாட்டில் குறிப்பாக இந்திய மக்களிடையே  அமைதியில்லாத சூழல் ஏற்பட்டது.  சுபாஷ் சந்திரபோஸ் பரிந்துரையில்  இந்திய பிரதமரான நேரு இவ்விவகாரத்தில் தலையிட்டு, கணபதிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என பிரிட்டனுக்கான இந்திய தூதர் வி.கே.கே கிருஷ்ணன் மூலமாக கோரிக்கை விடுத்தார்.  டெலிகிராம் மூலம் அனுப்பட்டதாக கூறப்படும் அக்கோரிக்கைக்கு   இதுவரை  எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. 

4.5.1949 காலை 4 மணிக்கு மேல்..

இறுதியாக ஜெயில் சூப்பிரண்டன்டன், கணபதி அவர்களைப் பார்த்து நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா? வேறு யாருக்கும் செய்தி சொல்ல வேண்டுமா  என கேட்டார். லேசான புன்னகையுடன், மலாயா மண் மாற்றானிடமிருந்து விடுதலை பெறட்டும். மலாயா நாட்டு தொழிலாளர் வர்க்கம் வெற்றி பெறட்டும். மலாயா மக்களுக்கு புதிய வாழ்வு மலரட்டும். மலாயா மண்ணில் மட்டுமல்ல , உலகில் எந்த ஒரு பகுதியிலும் அடிமை எனும் கொடுமைக்கு முடிவுகள் கிடைக்கட்டும். இதுவே என் இறுதியான விருப்பம் என்றார் கணபதி. காலை 5 மணிக்கு 10 பேர் கொண்ட குழு முன்னிலையில் மாவீரர் கணபதி  தூக்கில் ஏற்றப்பட்டார்.
உலகில் இருபதாம் நூற்றாண்டில் அரசியல் காரணங்களுக்காக வெளிநாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் தமிழன்  கணபதி என்று வரலாறு சொல்கிறது.  

இந்த மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களை பதிவுகளாக வெளியிட்டனர். குறிப்பாக கலைஞர் கருணாநிதி 'கயிற்றில் தொங்கிய கணபதி என்ற நூலையும் , தூக்குமேடை அழைக்கிறது என்ற தலையங்கத்தை  தோழர்  அண்ணாதுரையும் எழுதினார்கள். காரிருளால் சூரியன் மறைவதுண்டோ ? என பாரதிதாசன் கவிதை எழுதினார். பெரியாரும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். 'கயிற்றில் தொங்கிய கணபதி' என்ற புத்தகத்தை நாடகமாக்கி , நடிகவேள் எம்.ஆர்.ராதா  தமிழகம் முழுவதும் கணபதி அவர்களின் சரித்திரத்தை பரப்பினார்.

இப்படியாக ஒரு மாவீரனின் சகாப்தம் மலேசிய மண்ணில் ஒரு முடிவுக்கு வந்தது. 

இந்த மாவீரர்களுக்காக ஒரு கல்லறையோ அல்லது நினைவு பீடமோ இருப்பதாக அறியமுடியவில்லை. நிச்சயமாக அதற்கு அரசும் அனுமதிக்க போவதில்லை என்பது நமக்கு தெரியாத ஒன்றா என்ன ?

-யோகி

தரவு : ‘’கடல் கடந்த தமிழன்’’ (புத்தகம்)

கொசுறு தகவல்

மலேசியாவில் எடுக்கப்பட்ட கபாலி திரைப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. படத்தின் தொடக்க காட்சியில் சிறைசாலை காண்பிக்கப்படும். பின் அவர் தூக்கிலேற்றப்படுவார். கதையின் ஓட்டத்தின் இடையில் தொழிலாளர்களுக்காக கபாலி பேசுவார்; தொழிலாளர்களிடமும் அவர்களின் உரிமைக்காக பேசுவார். இக்காட்சி எல்லாம் மலாயா கணபதியின் வரலாற்றோடு தொடர்புடையது என மலேசியாவில் பரவலாக சலசலக்கப்பட்டது. ஆனாலும், அந்த சலசலப்பானது கிளம்பிய வேகத்திலேயே அடங்கியும்  போனது.



1 கருத்து:

  1. கபாலி படத்திற்கும் மலாயா கணபதிக்கும் துளியும் தொடர்பில்லை.கபாலி குண்டர்கும்பல் பின்னணியில் கதை அமைந்திருக்கும்.மலாயா கணபதியின் போராட்டங்களில் துளியும் அதில் சொல்லப்படவில்லை.இந்தியர்களுக்கும் சரிநிகரான ஊதியம் வேண்டும் என்னும் விடயத்தை தவிர வேறு எதுவும் கபாலியில் மலாயா கணபதி குறித்தோ அவரது போராட்டம் தொழிற்சங்கம் எதுவும் அதில் இல்லை.இவ்வாறு இருக்க எப்படி கபாலியை மலாயா கணபதியோடு ஒப்பிட்டு பேசினார்கள் என தெரியவில்லை.

    பதிலளிநீக்கு