ஞாயிறு, 15 டிசம்பர், 2019

ஒளிவேகச் சொல் (சிங்கப்பூர் புகைப்படக் கண்காட்சி)


உலகப் புகழ்பெற்ற புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர்களில் ஒருவரான  பெனே புர்ரி (Rene Burri) தன் கலையைக் குறித்து இப்படிச்  சொல்கிறார். " என்னைச் சுற்றி இருப்பவற்றைப் புகைப்படமெடுப்பதற்காக, என் கண்கள், மனம், மூளை அனைத்தையுமே இந்த உலகத்தின் ஒரு பகுதியாகவே பயன்படுத்த விரும்புகிறேன்,"என்று. இவர் போர் சூழலை புகைப்படம் எடுக்கும் ஒரு நிருபரும் ஆவர். நான் பெரிதும் விரும்பும் மற்றொரு புகைப்படக் கலைஞன் கெவின் கார்ட்டர்.

என்னால், என்னை இவர்களோடு ஒப்பிட முடியாது என்றாலும், புகைப்படம் எடுத்து தரும் எனது கருவி என்னை அப்படித்தான்  பயன்படுத்திக் கொள்கிறதோ என தோன்றுகிறது. நாடகத்தன்மைக் கொண்ட எதையும் என்னால் புகைப்படம் எடுக்க முடிந்ததில்லை. ஆனாலும்  நிர்பந்தம் என்னை அதில் கொண்டு போய் தள்ளி விடும்போதெல்லாம், அதனுடாக அதில் சேராத ஒன்றையும் என்னை அறியாமலே நான் தேடி அலைந்துக்  கொண்டிருப்பேன்.




''ஒளிவேகச் சொல்'' ஆங்கிலத்தில்  ''WORD AT THE SPEED OF LIGHT''  என்று சொல்லலாம்.  சிங்கப்பூரில் நடந்த ஊடறு பெண்நிலைச்  சந்திப்பில் ஓர் அங்கமாக இடம்பெற்ற எனது முதல் புகைப்படக் கண்காட்சிக்கு நான் இந்தப் பெயரைத்தான்   வைத்திருந்தேன். முதலில் இது என் கவிதையின் தலைப்பாக இருந்தது. பின் புகைப்படக் கண்காட்சிக்கும் தலைப்பாக தன்னை மாற்றிக் கொண்டது. எனக்கென்னவோ இதைவிட சிறந்த ஒரு தலைப்பு என்  கண்காட்சிக்கு இருக்காது  என்றுதான்  தோன்றியது.

இயற்கையாகவே நான் அதிகம் பேச தெரிந்தவள் இல்லை. இலக்கியத்தோடும், சூட்சமத்தோடும், அறிவார்ந்த ஒரு டெக்னிகள் பேச்சாளராக நான் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் என் எழுத்து பேசக்கூடியது. பல இடங்களில் அது உரக்க பேசியிருக்கிறது. என் புகைப்படங்களையும் நான் அவ்வாறுதான் ரகம் பிரிக்க நினைக்கிறேன். 2015-ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நடந்த பெண்கள் சந்திப்பின்போது, யாழ்ப்பாணம் செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. அப்போது போர் பூமியில் எடுத்த சில புகைப்படங்கள், அது தொடர்பாக என் அகப்பக்கத்தில்   பதிவிட்ட தொடரின் அனைத்து புகைப்படங்களும் பேசப்பட்டன. குறிப்பாக ஒரு வெளிநாட்டுப் பயணியாக என் பார்வையிலிருந்து இலங்கை எனக்கு என்னவாக இருக்கின்றது என்பதற்கு  அந்தப் புகைப்படங்கள் இன்று வரையில்  சாட்சியாக இருக்கிறது.




ஒரு நிருபராக  எடுக்கும் புகைப்படங்களுக்கும்,  இயற்கை மீது இருக்கும் தாகத்தோடு தேடி எடுக்கும் புகைப்படங்களுக்கும், வெவ்வேறு நாடுகளில் எடுக்கும் மனித வாழ்கைக்கும், அவர்களின்  முகங்களுக்கும்  நான் கொடுக்கும்
பெயர்கள்   வெவ்வேறாராக இருக்கலாம்.   ஆனால், அவை மனிதம் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைபவையாகும்.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சி தொடர்பாக, நேரம் போதாமை காரணத்தினால்  ஒரு கலந்துரையாடலோ அல்லது கருத்து பரிமாற்றமோ எதுவுமே நடைபெறவில்லை என்றாலும், என் வரையில் அது வரலாற்றுப் பதிவுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சட்டகத்தோடு கூடிய ஒரு புகைப்படத்தை 30 சிங்கப்பூர் டாலருக்கு விநியோகிக்கப்பட்டது. அந்தப் பணத்தை இரண்டு பாகமாக பிரித்து  தமிழகத்தில் ஆணவக்கொலையில் கொல்லப்பட்ட சகோதரர் தோழர் அசோக் குடும்பத்தினருக்கும், மறுபாகத்தை இலங்கை போராளிகளின் புனர்வாழ்வுக்காக கொடுக்க உத்தேசித்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்த அளவு, யாரும் புகைப்படங்களை வாங்காததால் கிடைத்த பணத்தை அப்படியே தோழர் அசோக் குடும்பத்தினருக்கு கொடுக்கச் சொல்லி, தோழர் ஜீவலெட்சுமியுடன் கொடுத்து விட்டேன்.





முதற் முயற்சி பெரிய வெற்றியில் முடியவில்லை என்றாலும் அது தோல்வியடையவில்லை என்பது எனக்கு பெரிய ஆறுதல். காட்சிக்கு வைத்த என் புகைப்படங்களில் ஒன்று,  வாரணாசி தெருவில்  பாசிமணிகளை விற்கும் ஒரு தாயையும் அவரோடு மணிகளை எடுத்து விளையாடிக்கொண்டு  இருக்கும் அவர் குழந்தையும் புகைப்படம் எடுத்திருப்பேன்.

விவாதத்திற்கு உட்படுத்தினால் மிக கனமான விஷயங்களை பேசக்கூடிய புகைப்படம் அது. தற்போது நான் அப்புகைப்படத்தில் இருக்கும் தாயா அல்லது சேயா என என்னையே தேடிக்கொண்டிருக்கிறேன் கையில் ஒரு புகைப்படக் கருவியோடு.

நன்றி...
இவ்வருட பெண்கள் சந்திப்பில் நான் கட்டுரை ஏதும் படைப்பதற்காக தயாராக இல்லாத போது, ஒரு பார்வையாளினியாகவும் புகைப்படக் கலைஞராகவும் மட்டும் செயற்படலாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்நிலையில்தான் ஏன் புகைப்படங்கள் கண்காட்சியை செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. ஊடறு றஞ்சி (மா) யிடம் இதைக்கூறும்போது , எத்தளத்தில் இயங்கினாலும் ஊடறு பெண்களுக்கு ஆதரவளிக்கும்.. யோகியை விட்டுவிடுவோமா என்றார். மரணத்தை நோக்கி மூழ்க்கிக் கொண்டிருக்கும் போது, ஒருவர் தன் கையை கொடுத்தால் எக்கி பற்றிக்கொள்வோம் இல்லையா அப்படி இருந்தது எனக்கு. நன்றி றஞ்சி மா.

இதற்கு சிங்கப்பூரில் ஆதரவளித்து அனுமதி பெற்றுத்தந்த தோழி ரமா மற்றும் சகோதரி அஸ்வினிக்கு என் அன்பு.

எவ்வளவு பண நெருக்கடியிலும் எனக்காக நான் யாரிடமும் பணம் கேட்டதே இல்லை. ஆனாலும், இந்தக் கண்காட்சிக்காக ஒரு சிறு தொகையை பினாங்கைச் சேர்ந்த என் உடன் பிறவா சகோதரர் ஹபிப் அண்ணாவிடம் கேட்டிருந்தேன். அவர் என் பயணத்திற்கும் சேர்த்து உதவி செய்தார். இது காலத்தில் செய்த உதவி. என்றும் மறக்க மாட்டேன். நன்றி ஹபிப் அண்ணா.

இந்தப் புகைப்படங்களில் இடம்பெற்றிருக்கும் பெருவாரியான இடங்களுக்கு அழைத்துச் சென்று என் பயண கனவுகளை சாத்தியமாக்கிக் கொடுத்த நண்பர்  பசுமை சாகுலின் உதவியையும் இன்நேரத்தில் பதிவு செய்வது அவசியம். நன்றி சாகுல்.

புகைப்படங்கள் வாங்கி உதவிய அன்பு உள்ளங்களுக்கு என் பேரண்பும் நன்றியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக