ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 6

ஆகஸ்ட் 30 ஆம் தேதி, அன்றைய நாள் உதயமாகும்போது எங்களுக்கு எந்தத் திட்டமும் இருக்கவில்லை. வெளிநாட்டுத் தோழிகளுக்கு எப்படிப் பினாங்கு ஒரு புதிய இடமோ அதே போலத்தான் எனக்கும். ஆனால், என்னிடம் மலாய் மொழி மட்டுமே கைவசம் இருந்தது. 

அன்றைய நாளை திட்டமிடுதல் குறித்த சுதந்திரத்தை தோழிகள் எனக்கு வழங்கியிருந்தனர். அறிமுகமாயிருந்த வாடகை கார் ஓட்டுனரை அழைத்து வண்டியை வாடகை எடுத்து சோழன் கண்ட கடாரத்தைக் காண செல்ல திட்டமிட்டோம். அதற்கு முன்பு பினாங்கில் எங்களுக்காகவும் எங்கள் பார்வைக்காகவும் இத்தனை ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்த அந்தப் புத்த ஆலயங்களுக்குச் செல்ல திட்டமிட்டோம். 



பர்மா சாலை என்று சொல்லக்கூடிய புகழ்பெற்ற பினாங்கு சாலையில் விழிப்பதற்காகவே உறங்கிகொண்டிருந்தார் Sleeping Buddha. அந்த ஆலயத்திற்கு எதிர்புறம் இருக்கும் Standing Buddha, நாங்கள் அன்னாந்து பார்ப்பதற்காகப் பல ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கிறார். அவர்களுக்கு உபாயம் வழங்க எங்கள் கால் அந்த மண்ணில் பட வேண்டிய அவசியம் கருதி மகிழ்ச்சியுடம் தொடங்கியது அன்றைய பயணம். 


சைய மங்களராம் புத்தர் எனும் உறங்கும் புத்தர்.. 

சைய மங்களராம் புத்தர் (Chaiya Mangalaram Buddhist Temple) எனும் உறங்கும் புத்தர் ஸ்தலம் 171 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. மே 30 ஆம் தேதி 1845 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாக அதிகாரப்பூர்வ பதிவு கூறுகிறது. பர்மா சாலையில் அமைந்திருக்கும் இந்தப் புத்த கோயில் பினாங்கின் அடையாளங்களில் ஒன்றாகும். 

தாய்லாந்தின் மத நன்மைக்காக மலேசியாவில் ஆலயம் அமைக்க நிலத்தை நன்கொடையாக வழங்கும் யோசனையை ஆளுனர் Mr W.I.Butterworthதான் முதலில் முன்னெடுத்தார். கிழக்கிந்திய கம்பெனி வாயிலாக மேதகு அரசி விக்டோரியா சார்பில் பௌத்த சமூகத்தின் பிரதிநிதியிடம் அதற்கான மான்யம் வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து  இன்று வரை அந் நிலம் அறக்கட்டளை அல்லது பொறுப்புரிமை  அமைப்பின் வசம் உள்ளது



இந்த உறங்கும் புத்தர் 108 fit நீளமும் 32 fit உயரமும் கால் பாதத்தில் சங்க சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது மலேசியாவிலேயே மிகப் பெரிய புத்த சிலையாகவும் உலகின் மூன்றாவது பெரிய புத்த சிலையாகவும் அறியப்படுகிறது. இந்தப் புத்த வடிவம் தாய்லாந்து புத்த வடிவ அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. கோயிலின் வெளிதோற்றமும் அங்கு அலங்கரிக்கும் சிலைகளும் தாய்லாந்தில் இருக்கும் சிலைகள் அமைப்பையே கொண்டதாக இருக்கின்றன. 


கோயிலின் சுவர்களில் புத்தரின் வாய்க்கை வரலாறுகள் சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன. அத்தனையும் பழைய ஓவியங்கள். பொழிவிழந்து இருந்தாலும் இன்னும் காண்பதற்கு உகந்த வகையில் தெளிவாகவே இருக்கின்றன. சுமார் 30,000 புத்த உருவங்கள், சிலைகளாகவும் , ஓவியங்களாகவும் கோயிலில் காணலாம். அதுவும் கம்போடியா, இலங்கை, வியட்நாம், சீனா, ஜப்பான், லோஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளிலுள்ள புத்த வடிவங்கள் அவை.


Standing Buddha

இந்த ஆலயத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கான எந்த வரலாற்று குறிப்புகளும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அது burmese buddhist temple என அடையாளப் படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்றமாதிரிதான் அதன் வடிவமைப்பும் இருக்கிறது. மிக அழகான கோயில் மட்டுமல்ல 'நிற்கும் புத்தரின்' முகமும்  பார்த்துக்கொண்டே இருக்ககூடிய அழகு. சிரித்த அந்த பால் முகம் நாம் எங்கிருந்து பார்த்தாலும் நம்மை பார்த்து சிரிப்பதை போல தோன்றும். கோயில் உட்புறம் முழுதும் பல புத்த சிலைகள் வெவ்வேறு முத்திரைகளோடு வரிசை கட்டி நிற்கின்றன. கோயிலின் புறம் இன்னும் பல
சிலைகளோடும் புத்த விக்கரங்களோடும்  இருக்கின்றன.  அவற்றுக்கு ஏதாவது கதை இருக்கலாம். ஆனால், அதை நாங்கள் அறிய தருவதற்கு அப்போது யாருமில்லை. 

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ஆழியாள் அங்கிருந்த பூமி பந்து சிலை மீது சாய்ந்து ஆஸ்ரேலியாவை மிஸ் பண்ணுவதாக சொன்னார். அந்த வார்த்தையில் இருக்கும் அர்த்தம் நம்பிக்கையும் நான் அறியாதவள் அல்ல.. 

பார்க்க பார்க்க பிரமிக்ககூடியதாக இரு ஆலயங்களும் கண்களில் நிறைந்திருந்தன. உலகம் சுற்றும் வாலிபன் திரையில் இந்த ஆலயங்களின் சில காட்சிகள் பதிவாகியிருக்கும் என்ற தகவலை கூறினேன். அது பலருக்கு தெரிந்த விஷயம்தான் என்றாலும் அந்த நேரத்தில் அது கூறவேண்டியது உவப்பான ஒன்றாகவே இருந்தது. 
அடுத்து நாங்கள் கடாரம் நோக்கி புறப்பட்டோம்.. 


(தொடரும்) 



4 கருத்துகள்:

  1. பினாங்கின் அடையாளம்,தகவல்களோடு நிறைய கேள்விகளை விதைத்துள்ளீர்கள், நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில்களை தேட ஆரம்பித்துவிட்டேன். உங்களுக்கு சிரமம் வேண்டாம். கேள்விக்கு நன்றி தோழர்

      நீக்கு