வியாழன், 23 அக்டோபர், 2014

என்னைப் பற்றி

நான் என்ற யோகி இப்படியானவள்...


நான் யோகி. மலேசியாவின் பேராக் மாநிலத்திலுள்ள  சின்ன கிராமமான தெலுக் இந்தானைச் சேர்ந்த பெண். என் எழுத்து பேசும் அளவுக்கு நான் பேசுவதில்லை. சிறு வயதில் பெற்ற என் அனுபவங்களையும், தற்போது பெற்றுவரும் அனுபவங்களையும், எது எது என்னை தொந்தரவு செய்கிறதோ அதை இலக்கியத்தின் ஊடே  எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன். என மனதின் டைரியை புரட்டும் போதெல்லாம் ஏதோ ஒன்று என்னை பாதித்திருப்பதை நான் உணர்கிறேன். நான் கம்பத்தில் வாழ்ந்த பெண் என்பதால், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும், அடுக்கு முறைகளையும் சந்தித்திருக்கிறேன். சுகாதாரம் குறித்துக்கூட விழிப்புணர்வு இல்லாத கம்பத்து வாசிகள் இன்றும் என் கம்பத்தில் இருக்கிறார்கள். என் வீட்டிலும் இருக்கிறார்கள். அவர்களிடத்திலிருந்து நான் மாறுபட்டு வெளிவருவதற்கு ஏகப்பட்ட சவால்களை சந்தித்திருக்கிறேன். அவர்களிடத்தின் என்னால் வாழ முடியாமலும், பிரிய முடியாமலும், அவர்களை தாண்டி வர முடியாமலும் நான் கொள்ளும் அவஸ்தைகளும் வேதனைகளும் என்னால் எழுத்தில் மட்டுமே சொல்ல சாத்தியப்படுகிறது. ஒரு கட்டத்தில் நான் எனக்கான பாதையை வகுத்துக்கொண்ட போதும், விவாதத்திற்கு தயாரான போதும் என்னைச் சார்ந்தவர்களால் என்னை தடுத்து நிறுத்த முடியாமல் போனது. எனது வாழ்கையை நானே வாழ்ந்து கொள்கிறேன். எனது பாதையில் நானே நடந்து செல்கிறேன் என்ற எனது வரி என்னை சார்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் தெளிவாகிக்கொண்டேன்.

எனது விருப்பங்கள்

பாடல், இசை, ஓவியம், இயற்கை, சினிமா, தனிமை, காடு, சுற்றுலா, வாசிப்பு, புகைப்படம் எடுத்தல், தேடல். இயற்கையோடு உறவாடுவதும் வரலாற்றை தேடுவதும் என் வாழ்க்கையில் முக்கிய அம்சமாக இருக்கிறது. பயணத்தில் நான் காணும் ஒவ்வொரு காட்சியும் படிமங்களாக பதிவு செய்ய விரும்புகிறேன். படிமங்கள் காலத்தை தாண்டியும் சாட்சி கூறுபவை எனவும் நம்புகிறேன்.

பிடிக்காதவை

யார் காலிலும் விழுவது பிடிக்காது. பிடிக்காததை ஏற்றுக்கொள்ள சொல்வது பிடிக்காது. சில சமையம் சமரசம் பிடிக்காது. வன்முறை சுத்தமாக பிடிக்காது. காரணமே இல்லாமல் தோற்றுப்போவதும் பிடிக்காது. ஆனால், எப்போதாவது  சொந்த பந்தம் ஒன்று கூடும்போது எனது கொள்கைகளை சற்று தளர்த்திக்கொள்வதில் நான் குறைந்துவிட மாட்டேன்.  (அதனால், குடும்பத்தார் சந்தோஷம் அடைவார்கள் என்றால்)

காதலி 

நான் துன்பம் கொள்ளும் வேளையிலும், மனக்குழப்பம் அடையும் வேளையிலும் பாரதி பாடல்களை கேட்கிறேன். பாரதி என் மனதுக்கு நெருக்கமானவன். ஏன்? எப்படி ? என்றெல்லாம் கேள்வி கேட்ககூடாது. சில கேள்விகளுக்கு என்னிடத்தில் பதிலை பெறமுடியாது. பாரதி எழுதிய கண்ணம்மா பாடல்களில், அந்த கண்ணம்மாவாக நான் பல நாள்கள் வாழ்ந்திருக்கிறேன். குழப்ப வேளையில் அவனின் வரிகள் கொடுக்கும் ஆதரவை இதுவரை வேறு எதிலும் நான் பெற்றதில்லை.  அவனின் வரிகள் எனக்காக எழுதப்பட்டவையாக நான் நம்புகிறேன். நான் அவனின் காதலி என்பதை அவனிடத்தில் தெரியபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நான் அவனின் காதலி இல்லை என்று சொல்லும் அதிகாரமும் எவரிடத்திலும் இல்லை. அது எனது மனதின் ரகசியம்...

கொள்கை

நான் மதவாதி அல்ல. இனவாதியும் அல்ல. மனிதம் மட்டுமே எனக்கு பெரிது. கடவுள் நம்பிக்கை அல்ல. ஆனால், கோயிலுக்கு போவேன். பிரசாதம் வாங்குவேன். கோயில் சிலையையும் பத்தர்களையும் வேடிக்கை பார்ப்பேன். அது எனது விருப்பம்.
பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். மகள், மனைவி, தோழி, உட்பட பணி செய்யும் இடம் வரைக்கும் அவளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நீ, வா, போ, டி போன்ற ஒறுமை எழுத்தில் அழைக்கும் ஆண்களை அந்த இடத்திலேயே உங்களுக்கு மரியாதை தெரியாதா என பல பேரிடம் கேட்டிருக்கிறேன். பெண்கள் ஆண்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை முழுதாக நம்புகிறேன். பெண்களுக்கு ரௌத்திரம் தெரிய வேண்டும்

 இதுவே நான் என்ற யோகி

7 கருத்துகள்:

  1. ஹ்ம்ம் ஒங்கள சொல்லி ஒன்னும் தப்பில்ல... சரியா யோகின்னு பேரு வச்சாருல்ல பெரியசாமி அவரத்தான் சொல்லனும் :P

    பதிலளிநீக்கு
  2. உங்க அறிமுகம் கிடைத்தபோது வாசிக்க வேண்டியதை இப்போதுவாசிக்க கொடுத்தால்...பரவாயில்லை...
    Better late than never

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ha...ha..
      அன்பு சௌரி தோழர். என் அறிமுகம் உங்களுக்கு முன்பே கிடைத்திருந்தாலும் என்னைப் பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை தானே. ந்ண்பர்களாக இருந்தாலும் சில விஷயங்களை அவ்வப்போது புதிதாக சொல்வதில் தனி த்ரில் இருக்கத்தானே செய்கிறது.

      நீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

    பதிலளிநீக்கு