செவ்வாய், 5 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 1

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

(தொடர் 1​ )


பயணங்கள் என்னில் ஏற்படுத்தும் குதூகலத்தை நான் பலமுறை கூறியிருக்கிறேன். தேடல்களற்ற வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை  என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன். அதன் பொருட்டே பயணங்களைக்  கண்ணுக்கு விருந்தாக மட்டுமல்லாமல் என் தேடலுக்கும் உட்படுத்திவிடுவேன். அது ஒரு கள ஆராய்ச்சியாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதிலிருந்து கிடைக்கும் ஒரு விடயமும் எங்கோ இருக்கும் யாருக்கோ எப்போவாவது பயன்படட்டும் என்று நம்பிக்கை கொள்பவள் நான்.
இம்முறை நான் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டதற்கு முக்கிய காரணம் ஊடறுதான். ஊடறு பெண்களுக்காக பெண்களின் குரலுக்காக இயங்கும் ஒரு இணையத்தளம். அந்த இணையத்தளத்தில் ஒரு முறையாவது தங்களின் எழுத்து வெளிவராதா என்று பெண்ணியவாதிகள் காத்திருப்பது உண்டு. நானும் அவ்வாறு காத்திருந்தவள்தான். அப்படி இருக்கையில் பிப்ரவரி மாதம் இலங்கையில்  நடைபெறவிருக்கும் பெண்கள் சந்திப்பில் பங்கு பெறமுடியுமா என்ற செய்தி  என் முகநூலின் உள்பெட்டியில் ஊடறு மூலம் வந்தது.
எனக்கு அச்செய்தி அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், என்னால் வருவதற்கு சாத்தியம் குறைவு என்று கூறிவிட்டேன். அதற்குச் சில காரணங்களும் உண்டு.
என்னதான் இலங்கையில் போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் அது மகிழ்ச்சியானதாக அமையவில்லை என்பது உலகம் அறியும். அதே மகிழ்ச்சியின்மை மலேசியத் தமிழர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்குப் போவதும், அங்கிருக்கும் சுற்றுலாத் தளத்திற்கு ஆதரவு அளிப்பதும், பொருட்களை வாங்கி அந்நாட்டு பொருளாதாரத்திற்கு வளம் சேர்ப்பதும் கூடாத விஷயமாக பலர் கூறுவதையும் இன்றும் நான் பார்க்கிறேன். ( சிலர் ஈழமக்களுக்கு உதவுவதற்காகவே அங்கு போகிறார்கள். பல அரசு சாரா இயக்கங்கள் அதற்கு உதவுகின்றன. அது வேறுவிஷயம்)

இன்னும் ஒரு பதற்றமான சூழல் அங்கு இருப்பதால் நான் இலங்கை போவதை என் துணைவரும், என் குடும்பத்தாரும் விரும்பவே இல்லை. ஆனால், ஊடறுவிடமிருந்து “நீங்கள் வருவதற்கு முயற்சி செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம் என்ற ஒற்றை வரியில்  கிளம்புவதற்கு முடிவு செய்தேன்.
நான் இலங்கை செல்வதை  எனக்கு நெருக்கமானவர்களைத்தவிர பொதுவில் பகிரவில்லை.  ‘இலங்கையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்தும் பெண்கள் சந்திப்பில் நான் கட்டுரை படைக்க உள்ளேன்' என்ற விடயம் என்னைப் பொறுத்தவரையில் முக்கிய நிகழ்வாக இருந்தாலும்,  அதோடு அதுவே எனது முதல் வெளிநாட்டு உரையாக  இருப்பதில் என்னை பொறுத்தவரையில் வரலாறாகும். ஆனால், அதைப்  பொதுவில்  சொல்லாமல் இருப்பதே நல்லது என எனக்குப் பட்டது.
இதற்கிடையில்  ஊடறுவின் இயக்குநர் அன்புத் தோழி றஞ்சி, நிகழ்வின் ஏற்பாட்டு (குழு) தோழிகளோடு  சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து அவ்வப்போது தகவல்களை மின்னஞ்சல் வழி தெரியப்படுத்திக்கொண்டே இருந்தார். இது எனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

எனது பயண நாள் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கி,  மே 1- வரை திட்டமிடப்பட்டிருந்தது. சரியாக 8 நாட்கள். இது நான் தனியாகச் செல்லும் முதல் பயணம். முன்பு இருமுறை நான் தோழர்களுடன்  இந்தோனேசிய போன அனுபவம் இருந்தாலும்,  ஏர்போர்ட், அங்கு மேற்கொள்ளும்  நடைமுறை, போர்டிங் என அனைத்தும் எனக்குப் புதிய விஷயமாக இருந்தன.
இவைகளைக் கடந்து நான் இலங்கையில் இறங்கும் போது , ஒரு தெரிந்த முகமும்  அங்கு இருக்கப்போவதில்லை. முகநூல் நண்பர்கள் இருந்தாலும் யாரையும் நான் நெருக்கமாக உணரவில்லை. றஞ்சி (அவர் முகம்கூட எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. எல்லாம் மின்னஞ்சல்தான். ஒருமுறைகூட அலைபேசியிலும் பேசவில்லை)  அவரை நம்பியே

போய்க்கொண்டு இருந்தேன். 10 பெண்கள் சேர்ந்தால் கலவரம்தான் நடக்கும் என்ற பேச்சு வழக்கில் உண்டு. என் நிலைகுறித்த சரியான வரைவை, வரையவே முடியவில்லை. நான் விமானம் ஏறுவதற்கு முன்பு ஒரு படத்தை எடுத்து முகநூலில் போட்டேன். அதுவே எனது முதல் அதிகாரப்பூர்வ பயணத் தகவல்.  அதற்கு ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான யாழினி welcome to sriLanka .we waiting for u . ranji #yarlini <https://www.facebook.com/hashtag/yarlini?hc_location=ufi> என்று தகவல் போட்டார்.

எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் இல்லாமல் போனது. நான் இலங்கையின்  தலைநகர் கொழும்பில் இறங்கியதும் எந்தப்  பதற்றமும் எனக்கு இருக்கவில்லை. அதுவே எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது ஒரு அந்நிய மண்ணென எனக்குத் தோன்றவில்லை. அங்கு இருப்பவர்கள் தமிழர்களா சிங்களவர்களா என்ற ஆராய்ச்சியை நான் மேற்கொள்ளவில்லை. எல்லாருமே தமிழர்கள் மாதிரியே இருந்தார்கள். போர்டிங் விட்டு வெளியே வந்து ஒரு முறை சுற்றிப்பார்த்தேன். உள்ளே காத்திருப்பார்கள் என்பது என் எண்ணம். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

யாழினிக்குப் போன் செய்தேன். வந்து இறங்கிவிட்டேன் என்று. வெளியில் வாங்க என்றார் யாழினி. ஏர்போட்டில் தமிழ் எழுத்துகளில் குறிப்புகள் இருந்ததால் எந்தச் சிரமமும் இல்லாமல் வெளியில் போனேன். அங்கு றஞ்சியும், யாழினியும் ஆர்ப்பரிப்போடு நின்றுகொண்டிருந்தார்கள். றஞ்சி ஒரு குழந்தையைபோல்  குதூகலித்து நின்றுகொண்டிருந்தார். எனக்குள் எங்கிருந்துதான் அத்தனை உற்சாகம் வந்ததோ தெரியவில்லை. பூர்வ ஜென்மத்துச் சொந்தங்களைக் கண்டதுபோல ஓடிப் போய் வாரி அணைத்துக்கொண்டேன்.
இப்படித்தான் இலங்கை மண் என்னை வரவேற்று என் முதல் நாளைத் தொடக்கிவைத்தது.
(தொடரும்)

2 கருத்துகள்:

  1. நல்லவேல பதிவு போட்டுட்டீங்க....ஆள காணோமே ஒங்க பிளைட்டும் காணாம போயிடுச்சுன்னு நினைச்சேன்.... :P

    பதிலளிநீக்கு
  2. NATURAL BOND,FRIENDSHIP & AFFECTION ARE THERE AMONG 120 MILLION WORLD TAMILS AS ONE FAMILY!

    பதிலளிநீக்கு