திங்கள், 18 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 10

  • சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

  • தொடர் 10


பாயை விரித்து அனைவரும் தரையில் படுத்துக்கொண்டோம். ஜன்னல் அடைக்கப்படவில்லை. யாழினியிடம் ஜன்னலை அடைக்கவில்லையா என்றேன். அடைக்கத் தேவையில்லை, இங்கே கொசு எல்லாம் வராது என்றாள். வெளியில் நிலா காய்ந்துகொண்டிருந்தது. எனக்குள்ளும்தான்.

எனது விடியல் ஈழமண்ணில் விடியும் என்பதை நான் ஒரு போதும் நினைத்ததில்லை. ஈழம் என்பது போர் பூமி என்றும், பல உயிர்கள் கொத்து கொத்தாய் பழிவாங்கப்பட்டு, சிங்கள அரசாங்கமும், சிங்கள சிப்பாய்களும் தமிழர்களின் ரத்தத்தை அள்ளி பருகி, போதைக்கொண்டு களியாட்டம் போட்ட பூமி என்றும்தான் நினைத்திருந்தேன். ஈழப்போர் என்று பத்திரிகையில் செய்தி வெளியிடும் போது, எந்தச் செய்தியை, எந்தப் படத்தைப் போடலாம் என வணிக ரீதியில் பேசிக்கொண்ட போதும், அச்சச்சோ, ஐயோ, பாவம், அடக்கடவுளே என்று இரங்க- பரிதாப வார்த்தைகளைக் கூறியபோதும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செய்திகளோடு செய்தியாக ஈழப்போர் விவரங்களைத் தெரிந்துக்கொண்ட போதும் நான் அந்நியப்பட்டே இருந்திருக்கிறேன். ஒரு துரும்பை அசைப்பதற்குகூட உதவாத என்னைப்போன்றோர் ஈழப்போரைப் பற்றி உணர்ச்சி பொங்க பேசும்போது, அவர்களைக் கொன்று விடுவதே எம்மின மக்களுக்குச் செய்யும் சாந்தி என்று எனக்குத் தோன்றும்.

செய்து முடி, அல்லது செத்து மடி’. ஈழப்போர் வீரர்கள் உடல் ரீதியிலும், எஞ்சியவர்கள் மன ரீதியிலும் செத்துதான் மடிந்திருக்கிறார்கள். அந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் போராளிகளாகவும், பொது மக்களாகவும் இருந்தபோது அனுபவித்தது எல்லாம் கற்பனைக்கு எட்டாத கொடுமைகள் அல்லவா. அவர்களுக்கு அதிகபட்சமாக நான் (நாங்கள்) என்ன செய்தேன்? ஈழமக்களுக்கு என்று சில அமைப்புகள் பணம் வசூலித்தபோது அதிகபட்சமாக 50 ரிங்கிட் கொடுத்திருப்பேன். அது தவிர எனது பங்களிப்பு என்ன? இந்தக் குற்ற உணர்ச்சி எனக்கு ஈழப்போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து இருக்கிறது.

ஆனால், எனது விடியல் ஈழ மண்ணில் விடிவதற்குக் காலம் வகைச் செய்திருக்கிறது. அந்த விடியலை நான் எப்படிப் பயன்படுத்தப் போகிறேன்? ஈழமண் எனக்கு எதையெல்லாம் காட்டியது? நான் எதையெல்லாம் பார்த்தேன்; பெற்றேன்?
சமையல் அறையில் வெங்காயம்
அது அழகான மிக அழகான ஓர் விடியல். நான்தான் முதல் ஆளாக விழித்தேன். வெளியில் அம்மா, அப்பா, அம்மாம்மா எல்லாம் விழித்திருந்தனர். நான் வெளியில் போனதும் எனக்கு டீ கொடுத்தார்கள். அப்போதுதான் எனக்கு ஒன்று தெளிவாகியது. இலங்கையில் எழுந்ததும் முதலில் டீ குடித்துதான் சோம்பலை முறிக்கிறார்கள். பிறகு, குளித்து முடித்துக் காலைஉணவு நடக்கிறது. அப்போது டீ அருந்துவதில்லை. நான் பல் துலக்க போனேன். குளியல் அறை வீட்டிற்கு வெளியில் தனி அறையாகக் கட்டியிருந்தார்கள். கிணறு இருந்தது. அங்குக் கிணற்றுத்தண்ணிதான் பயன்படுத்தினார்கள். நான் ஒரு வாளி தண்ணீரை இரைத்துப்பார்த்தேன். தடுக்கி கிணற்றில் விழுந்து விடுவேனா என்று கொஞ்சம் பயம் இருந்தது. அங்கு வீட்டிற்க்கு வீடு கிணறு இருந்தது எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. என்ன வளம் வாய்ந்த பூமி அது.
ஆனால், தண்ணீரின் சுவை அந்த அளவுக்கு எனக்கு உவப்பாக இல்லை. அம்மம்மா டீ கொடுத்தார். யாழினியின் அக்கா, தனது குழந்தையைப் பாலர் பள்ளிக்குக் கிளப்பிக்கொண்டிருந்தார். என்னையும் அழைத்தார். நானும் அவரோடு மோட்டார் வண்டியில் சென்றேன். பாலர் பள்ளியில் குறைவான மாணவர்களே இருந்தனர். டீச்சர் சேலை அணிந்திருந்தார். மிகப்பொறுப்பானவர் என்பது பள்ளியை பார்க்கும்போதே தெரிந்தது. என்னை டீச்சருக்கு அறிமுகபடுத்தினார் யாழினியின் அக்கா. டீச்சர் குழந்தைகளை எனக்கு வணக்கம் சொல்ல சொன்னார். பிறகு, மாணவர்களை ஒரு பாடல் பாடச்சொல்லி எனக்குக் காட்டச் சொன்னார். எனது காலை இத்தனை இன்பகரமாக அமையும் என நான் நினைத்து பார்த்ததில்லை. நன்றி கூறி விடைபெற்றேன். குழந்தைகள் பாடிய பாடல் இடைவிடாது எனக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.
யாழினியின் வீட்டு அடுப்பாங்கறை
வீட்டுக்கு திரும்பிய வேளையில் அனைவரும் விழித்திருந்தனர். நான் குளிக்கச் சென்றேன். சினிமாவில் வருமே, கிராமத்துப் பெண்கள் மாராப்புக் கட்டிக்கொண்டு குளிப்பார்களே? அப்படிதான் குளிக்க வேண்டும். எனக்கு நிஜமாகவே வெட்கமாக இருந்தது. ஆனால், இந்த வாய்ப்பை தவறவிட்டால் நான் எப்போது இப்படிக் குளிக்கப்போகிறேன். புடவைக்குக் கட்டும் உள்பாவாடையோடு, கிராமத்து கதாநாயகிமாதிரி ஆஜர் கொடுத்தேன். அது ஒரு கொண்டாட்ட மனநிலை.
நான் குளித்து வந்த நேரம், புதியமாதவி, விஜயா அம்மா, ரஜனி, றஞ்சி ஆகியோர் ஊரை  (தங்கியிருந்த ஊரை) சுற்றிப்பார்க்க போயிருந்தனர். நான் காலை உணவுக்காக அவர்கள் வரும்வரை காத்திருந்தேன். அப்போதுதான் சமையலறையைப் பார்க்கலாம் என அந்தப் பக்கம் போனேன். நாங்கள் வந்ததிலிருந்து எங்களை, அம்மாவோ அம்மம்மாவோ சமயலறைப்பக்கம் விடவே இல்லை. எங்களுக்கு வேண்டியதை கேட்காமலே செய்து கொடுத்தார்கள்.
அப்பத்தில் வைத்த கொடி இலை
அது நிஜமாகவே இயற்கை சார்ந்த ஒரு சமையல் அறை. விறகு அடுப்பு எரிந்துக்கொண்டிருந்தது, வெங்காயம் மண்ணோடு கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தது. பச்சை காய்கறிகள் ஒரு பக்கம் இருந்தன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எங்களுக்காகச் செய்து வைத்த பால் அப்பத்தில் இலை ஒட்டப்பட்டிருந்தது. அந்த இலையின் கொடி  மரத்தை வீட்டிற்குப் பின்புறம் பார்த்தேன்.
எதற்கு அம்மா  அப்பத்தில் இந்த இலை என்றேன்?  அப்பம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக என்றார்.

மலேசியாவில் எஞ்சி இருக்கும் தோட்டப்புறத்தில் கூட இயற்கையின் வாழ்கையைத் தொலைத்து நவீனத்திற்குப் போய்விட்டார்கள். ஆனால், வசதி-வாய்ப்புகள் இருந்தும் ஈழத்துத் தமிழர்கள் இயற்கையைத் தன் உள்ளங்கையோடு சேர்த்துப் பிடித்திருக்கிறார்கள்.
நான் கொஞ்சம் வீட்டை விட்டு வெளியில் வந்தேன். வானத்தின் நீலம் எத்தனை அழகு. எங்கும் பனைமரங்களையும் காண முடிந்தது. உயர உயரமாகப் பாக்கு மரங்களைப் போன்று பனை மரங்கள். இலைகள் விரிந்து செழிப்பாக இருந்தது.
கள்ளெடுக்க மரம் ஏறும் ஒருவர் வந்துக்கொண்டிருந்தார். நான் அவரை நிறுத்தினேன்.
(தொடரும்)


2 கருத்துகள்: