சனி, 9 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 4

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை
தொடர் 4

நான் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் கிட்டத்தட்ட அனைவருக்குமே என்னிடம் பேசுவதற்கு ஆர்வம் இருந்தது. அதற்குமேல் என்னிடம் கேட்பதற்கு அவர்களிடத்தில் கேள்விகள் இருந்தன. சமையல் செய்யும் சகோதரர் சொன்னார், 'எப்போ டீ வேண்டுமோ, என்னிடத்தில் கேளுங்கள்' என்று. இந்த ஜென்மத்தை எவ்வளவு மகிழ்ச்சிகரமாகக் கடந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது. நேரம் இரண்டாம் ஜாமத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது.

நாங்கள் மனநிறைவாக உறங்கச் சென்றோம். நான், றஞ்சி மற்றும் புதிய மாதவி ஓர் அறையில் தங்கிக்கொண்டோம். Queen Size மெத்தையில் நெருங்கியும் நெருங்காமலும், கொசுவலை மூடிக்கிடக்க உறங்கிபோனோம். தாமதமாகப் படுத்தாலும் எனக்கு வழமையாகவே அதிகாலையில் விழிப்பு வந்தது. எழுந்து கொஞ்சம் வெளியில் காலாற  நடக்கலாம் என நினைத்தேன். ஆனால், புதிய இடமாதலால் தயக்கமாக இருந்தது. ஆனால், எழுந்து வெளியில் வந்து பார்த்தேன். காலை 6 மணிக்கு எல்லாம் வெளிச்சமாக இருந்தது. சிலர் எழுந்து நடமாடிக்கொண்டிருந்தனர்.

 றஜனியும், ஓவியாவும்  தேனீர் கிடைக்காதா என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.   நல்ல வேளையாக தங்கும் விடுதிக்கான அந்த குட்டி உணவுக்கடை திறக்கப்பட்டது. அங்கு சுடச்சுடத்தேனீர் விநியோகம் நடக்குது என்றவுடன் நான் ஓடிப் போனேன் அங்கு.  அப்போதுதான் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்த அந்த நீர்வீழ்ச்சியைப் பார்த்தேன். தேயிலைத் தோட்டத்தை ஒட்டி அருவி கொட்டிக்கொண்டிருந்தது. யாரும் அங்கு குளிப்பதில்லை. அதிகப்படியான குளிர் அல்லது தண்ணியில் குளிர்நிலை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். காலையில் மனதை குளிர்விக்க அந்த அருவியை பார்ப்பது ஒன்றே போதுமானதாக இருந்தது.

றஞ்சி 
இலங்கையில் இரண்டாவது நாள்
மலையகத்தில்,  எனக்குப் பிடித்த தேனீரோடு  தொடங்கியது மேலும் ஒரு  நல்ல துவக்கமாக இருந்தது எனக்கு. அதற்குள் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிலர் தங்கும் விடுதியின்  வளாகத்தில் கூடத்துவங்கினர். நான் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் முஸ்டின், அவரது துணைவியார் ஷாமிளா, அவர்களது குட்டிக்குழந்தை  ஆகியோர்  தங்கியிருந்தனர். நான் தேனீர் அருந்திவிட்டு அறைக்குச் சென்ற வேளை, அவர்கள்  எல்லாம் விழித்திருந்தனர்.   குட்டிக்குழந்தை  மிகச் சமத்தாக எல்லார் கைகளிலும் தவழ்ந்துகொண்டிருந்தார்.  முஸ்டின்  மற்றும் ஷாமளா  தம்பதியரின் ஆளுமையை நான் அப்போது அறிந்திருக்கவே இல்லை.

நான்  முதல் நாள் அமர்வுக்காகப் கிளம்பி வெளியில் வரும்போது பொழுது நன்கு புலர்ந்து, சூரியன் எட்டிப்பார்க்கத் துவங்கியது. மலையகத்தின் வானம் கூட பல வண்ணங்களில் ஜாலம் காட்டியது. யாழினியிடம் சொன்னேன், இயற்கை என்னை இப்படி ஆட்கொண்டால் நான் என்ன ஆவேன் என்று. அவளுக்குப் புரியவில்லை. வானம் எத்தனை அழகுடி என்றேன். அவளை அங்கு நிறுத்தி ஒரு புகைப்படம் எடுத்தேன். மேலும், காக்கைகள் அதிகமாக அங்கு இருந்தன. மேலும் சில பெயர் தெரியாத பறவைகளையும் காணமுடிந்தது.
சுகன்யா மற்றும் லாவண்யா
நிகழ்வு நடக்கும் இடத்திற்கு நான், யாழினி,  பிறெளவ்பி இன்னும் சிலரும் நடந்தே போனோம். 10 நிமிடத்தில் மலையகத் தேயிலைத் தோட்டத்தைப் பார்த்துக்  கொண்டே வந்து சேர்ந்தோம். காலை பசியாற (காலை உணவு)  சுடச்சுட பரிமாறிக்கொண்டிருந்தார்கள். ரொட்டியும் - இடிப்பமும். தொட்டுக்கொள்ள  தேங்காய் துவையல்.  (சத்தியமாக இந்த ஒற்றுமையை நான் கேள்விப் பட்டதே இல்லை, மலேசியத் தமிழர்களுக்கு இது கொஞ்சமும் கற்பனைக்கெட்டாத உணவாகும்) நான் ஒரு மாதிரியாகப் பார்த்தேன் அந்த உணவை.

எல்லாரும் 3-4 பன் ரொட்டியோடு ஜாலியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். நான் ஒரு ரொட்டியை மட்டும் எடுத்து வைத்து பந்தா காட்டி தப்பிவிட்டேன்.
பெண்ணிய சந்திப்புக்கான முதல் நாள் அமர்வு அமர்க்களமாகத் தொடங்கியது. முதல் நாள் நிகழ்வில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஒரு புகைப்படக் கலைஞரும், மைக் செட் இயக்குனரும் இருந்தனர். றஞ்சி மிக நாசுக்காகச் சொன்னார். அவர்கள் எந்த உடல் மொழியையும் காண்பிக்கவில்லை. புகைப்படக் கலைஞர் கேமராவை கொடுத்துவிட்டு  வெளியேறினார். இதுவே மலேசியாவாக இருந்திருந்தால் அங்கே ஏற்பட்டிருக்கும் சலசலப்பைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்துக்கொண்டேன். அதைவிடவும் ஆண்கள் இல்லாத ஒரு அரங்கில் மலேசிய பெண்கள் நிகழ்ச்சி படைத்தார்கள் என்ற பதிவையும் நான் எங்கும் கேள்விப்படவில்லை. ஓரளவுக்கு வசதியிருந்தும், சாதித்துக் காட்ட முடியாத ஒன்றை, மலையகப் பெண்கள் எப்படி எந்த வசதிகள் இல்லாத நிலையிலும் நிகழ்த்துகிறார்கள் என்ற பிரமிப்புத்தான் இருந்தது.

சகுந்தலா மற்றும் சந்திரலேகா 
 நிகழ்வின் தொடக்கமாக வரவேற்புரை பின் தொடக்கவுரைக்குப் பிறகு கலைநிகழ்ச்சி என்று இருந்தது. மலேசியாவில் இருக்கும்போது கலை நிகழ்ச்சியை நான் அதைப் பெரிய நிகழ்வாக நினைத்துக்கொண்டேன். நான் நினைத்ததை விட தரமான ஒரு கலைநிகழ்ச்சி அது. இரு பாடகிகள் சுகன்யா மற்றும் லாவண்யா  சிம்பளான இரு இசைக் கருவிகளை வைத்து பாடத்தொடங்கிய நேரம் அரங்கமே ரசிக்கத் தொடங்கியிருந்தது. அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல் அனைத்தும் மலையகப் பாடல்கள்தான்.

சொந்த மண்ணின் வரிகளை உணர்ச்சி பொங்க அவர்கள் பாடிய விதம், ஒரு முறை கேட்டாலும் மனதில் தங்கிவிடும். அதுவும்  லாவண்யாவின்  குரலும், பாட்டிற்கு அவள் வெளிப்படுத்தும் உடல் மொழியும்,  அவளின் கண்கள் போடும் தாளமும் அந்தப் பாடலைப் பாடவே பிறந்தாளோ என எண்ணத் தோன்றியது. நிச்சயமாக சுகன்யா அவளுக்கு நல்ல இணை, கண்களால் குறிப்பறிந்து பாடலுக்கு வலுச் சேர்த்தாள்.

அங்கு என்னை அதிசயிக்க வைத்த இன்னொரு பாடகி  சகுந்தலா. எங்கள் ஊர் எஸ்டேட் அம்மா மாதிரி அவர் இருந்தார். ஆனால், அவர் பாடிய பாடலை எங்கள் அம்மாக்களால் பாட முடியாது.  எங்கள் அம்மா ஒன்று வெட்கப்படுவார்கள். அல்லது பாடமாட்டார்கள். ஆனால், சகுந்தலா பாடினார். அவருக்கே உரிய பாணியில் ஆடிக்கொண்டே பாடினார். அதில் மலையகப் பெண்களின் துயரத்தை உணர முடிந்தது. என் புகைப்படக் கருவி என்னால் சுமக்க முடியாத அளவுக்கு கனக்கத் தொடங்கியது. உட்கார்ந்து அவர் பாடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். சந்திரலேகா சகுந்தலா பாடுவதற்கு வசதியாக மைக்கை பிடித்துக்கொண்டிருந்தார். வாய்ப்பாட்டுக்கு இத்தனை சக்தி இருக்குமா?
தங்கும் விடுதி வளாகத்தில் தோழிகளுடன்  

(தொடரும்)


2 கருத்துகள்:

  1. சரளமான மொழியில் உணர்வுகள் சரிந்திடாது கனகச்சிதமாக கோர்த்து எழுத்தில் உங்களை வெளிப்படுத்தும்விதம் அபாரம் யோகி.

    பதிலளிநீக்கு