வெள்ளி, 29 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 17

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 17

எங்களின் யாழ்ப்பாண இரவு, ஒரு மாபெரும் இசைக் கச்சேரியோடு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. மிக ரகசியமாக, அதுவும் ஒடியல் கூழோடு.

நான் இலங்கைக்கு வருவதற்கு முன்பே ஒடியல் குறித்துச் சிறிய அறிமுகம் இருந்தது. அதாவது ஒடியல் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று என் பணியிடத்தில், வேலை செய்யும் இலங்கை பிரஜை ஒருவர் மிக அண்மையில் யாழ்பாணம் போய்த் திரும்பும்போது அதைக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்தார். குச்சியைப் போன்றும் கடித்து மெல்லுவதற்குக் கடினமாக இருந்த ஒடியல், பணி இடத்தில் வேலை செய்யும் யாருக்குமே பிடிக்கவில்லை. அதோடு, மலேசியர்களுக்கு ஒடியல் என்றால் என்ன என்றும் தெரியாது.
யாழ்ப்பாணத்தில் சாம்ராஜ்யம் செய்யும் பனைமரத்தின், கிழங்கில் ஒடியல் எடுக்கிறார்கள். அதாவது பனங்கிழங்கை அவிக்காது அதிலிருந்து ஒடியல் மாவு எடுத்து, மீன், நண்டு, இறால், பலாக்கொட்டை எனப் பல ஐட்டங்களைப் போட்டு ஒடியல் கூழ் தயாரிக்கிறார்கள். அதுவும் கிராமத்துக்குக் கிராமம் இந்தக் கீழ் தயாரிப்பது மாறுபடுகிறதாகக் கூறப்பட்டாலும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, ஒடியல் கூழ் அவர்களின் பாரம்பரிய பண்பாடோடு கலந்துவிட்ட ஒன்று.

இரவு உணவுக்கு ஒடியல் கூழ் இரவில் தயாரிக்கிறார்கள் என்று கூறியதிலிருந்தே, எனக்குத் தெரிந்துவிட்டது அதை உண்பேனா மாட்டேனா என்று. பொதுவாகவே நான் இரவு உணவு எடுத்துக்கொள்ள மாட்டேன் என்பதால் பசிக்கும் என்ற உணர்வு எழ வாய்ப்பு இல்லை. ஆனால், அம்மாவும், அம்மம்மாவும் எங்களுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கும் அந்த மண்ணுக்கே சொந்தமான பாரம்பரிய உணவைச் சுவைக்காமல் போனால் அவர்கள் சங்கடப்படுவார்களோ என்ற சங்கடம்தான் எனக்கு இருந்தது.

அம்மா ஒடியல் கூழை விறகு அடுப்பில் செய்திருந்தார். அதைத் தயாரிப்பதற்கான பொருட்களே சொல்லிவிடும் ஒடியல்கூழ் செய்வது சுலபம் இல்லை என்பதை. நாங்கள் வீட்டுக்கு போன நேரம் அம்மா சொன்னார். கூழ்த் தயாராக இருக்கிறது என்று. எனக்குப் பயமே வந்துவிட்டது. எப்படிக் கூழ் வேண்டாம் என்று சொல்லப்போகிறோம்? அல்லது குடித்துதான் பார்ப்போமா என்ற கேள்விகளை நானே கேட்டுக்கொண்டு அதற்கான விடையையும் தேடிக்கொண்டிருந்தேன்.

அதற்கு முன் அருகில் இருக்கும் றஞ்சியின் உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு வந்தோம்.
வீட்டிற்கு முன் இளைஞர்ப் பட்டாளம் குழுமியிருந்தது. எல்லாம் 20-22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். யார் என்று பார்ப்பதற்குள் அடையாளம் தெரிந்துவிட்டது. அன்று பெண்ணியச் சந்திப்பின் இரண்டாம் நாளில் கூத்துக் கட்டிய கலைவாணி கலைமன்றம் வடலியடைப்பு  சேர்ந்த இளைஞர்கள். அது அவர்களேதான். எல்லாரும் வந்திருந்தார்கள். எங்களைப் பார்க்கவும், எங்கள் யாழ்ப்பாணப் பயணத்தின் இறுதி இரவை மறக்கமுடியாத இரவாக மாற்றவும் வந்திருந்தார்கள்.

நிலா பாதியாகக் காய்ந்துக்கொண்டிருந்தது. காலையில் மரத்திற்கு மரம் தாவும் அணிலும், காக்கைகளும் எங்குப் போனதோ தெரியவில்லை. இளைஞர்கள் எங்களுக்குக் கச்சேரிதான் நடத்தப்போகிறார்கள் என்று பார்த்தால் தமிழர் பாரம்பரிய பழக்கத்தை அவர்கள் மறக்கவில்லை. இனிப்புப் பலகாரங்கள் வாங்கி வந்திருந்தார்கள். அதை வாஞ்சையோடு கொடுத்தார்கள்.
நாங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கிறோம்; கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற போது இளைஞர்கள் அவர்களுக்கு உள்ளே ஸ்டைலில் அதனால் என்ன என்று பேச்சை வேறு திசைக்கு கொண்டு போனார்கள். யாழ்ப்பாண இளைஞர்களைப் பார்க்க எனக்கு ஆச்சரியம் மட்டுமல்ல அதிசயமாகவும் இருந்தது. அவர்கள் மரியாதையுடன் நடந்துக்கொள்கிறார்கள். அவர்களின் பொறுப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரிகிறது. அதோடு போர் சூழல் அவர்களைப் பண்படுத்தியுள்ளது. பொதுவான விஷயங்களுக்குப் பிறகு, தொடங்கியது கச்சேரி

அதோ அந்தப் பறவைப்போல வாழ வேண்டும்என்று மேளதாளத்தோடு வாத்தியார் பாட்டுத் தொடங்கியது. அதற்குப் பிறகு, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் எனக் கச்சேரி நிலவுக்கே எட்டும் வரையில் ஒலித்துக்கொண்டிருந்தது. அத்தனையும் பழைய பாடல்கள்தான். இளைஞர்கள் பழைய பாடல்கள் அதுவும் தத்துவப் பாடல்களைதான் அதிகம் பாடுகின்றனர்; கேட்கின்றனர். சிறுவர்கள் மட்டுதான் கொஞ்சம் புதிய பாடல்களைக் கேட்கிறார்கள். நான் பார்த்தவரையில் அப்படிதான் அவர்களின் ரசனை இருக்கிறது. இதற்கு போர் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம்.  ரஜனிகூட மேல கூட வச்சிஎன்ற பாடலை பாடினார். அத்தனை நயமாக அவர் பாடுவார் என்பதே பெரிய ஆச்சரியம். எந்த வரியும் மறக்காமல் பாடி கிரேடிட்டை அள்ளிக்கொண்டார் ரஜனி. இன்று அந்தப் பாடலை கேட்டாலும், விஜய் சேதுபதியும், அந்தப் பாடலை பாடிய பிரசன்னாவும் கற்பனைக்கு எட்டாதவரை காணாமல் போய் ரஜனி மட்டுமே சட்டென நினைவில் வருகிறார்.
பிறகு, ஆட்டம் கொண்டாட்டத்தோடும் சுராங்கனி பாட்டோடும் கச்சேரி முடிவுக்கு வந்தது. அதே கொண்டாட்டத்தோடு ஒடியல்கூழ் வந்தது. குடும்பத்தோடும், இளைஞர்களோடும் ஒடியல்கூழை ருசிக்கத் தொடங்கினார்கள். அதை அள்ளி குடிப்பதற்கு இலையையே மடித்து அழகாக வைத்திருந்தார்கள். நான் எனக்கு வேண்டாம் என்றேன். அப்பா மீண்டும் மீண்டும்ஏண்டா கொஞ்சம் சாப்பிடு டாஎன்றார். இரவு சாப்பிட மாட்டேன் அப்பா என்றேன்.

மனிதர்கள் மனதை படிப்பதற்கு றஞ்சிக்கும் யாழினிக்கும் எப்படிதான் தெரிகிறதோ? சரி கொஞ்சம் சாப்பிட்டு பார், பிடித்தால் சாப்பிடு இல்லை என்றால் பரவாயில்லை என றஞ்சிதான் கொஞ்சம் ஊட்டிவிட்டார். தொண்டையைக்கூட நனைக்க வேண்டாம் என்று என் கேடுகெட்ட ரசனை மறுத்துவிட்டது. வேண்டாம் றஞ்சி. வற்புறுத்தி சாப்பிட்டுவிட்டால், பிரச்னையாகும் என்றேன். ஆனால், வந்திருந்த எல்லாரும் ருசித்துச் சாப்பிட்டார்கள். நல்ல வேளை, ருசி பார்த்தேனே என்ற திருப்தியாவது எனக்கு மிஞ்சியது.

விடிந்தால் நாங்கள் போர் நடந்த இடங்களான வன்னி, கிளிநொச்சி, முள்ளி வாய்க்கால் உள்ளிட்ட இடங்களைப் பார்த்துக்கொண்டே கொழும்பு போய்ச் சேர்வோம் என்ற விவரத்தை றஞ்சி சொன்னார். போர் நடந்த காலக்கட்டத்தில் பத்திரிகையில் செய்திபோட தேடும்போது இந்தப் பெயர்கள் என்னை மிகவும் துன்புறுத்துபவையாக மட்டுமல்ல, பயமுறுத்துபவையாகவும் அந்த இடத்தின் பெயர்கள் இருந்தன.
கொஞ்சம் இயல்பு நிலை என்னில் தப்பி இருந்தது. சற்றுமுன் இருந்த கொண்டாட்ட நிலை இப்போ, போரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக