சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை
மழை விட்ட தூவானம் |
தொடர் 5
பெண்ணியச் சந்திப்பின் முதல்நாள் நிகழ்வில் 4 அமர்வுகள் இருந்தன. முதல் அமர்வில் முதல் அமர்வு அறிமுகம் மற்றும் கலைநிகழ்ச்சியோடு முடிவடைய இரண்டாம் அமர்வு பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்துத் துவங்கப்பட்டது. அனைத்தும் கனமான தலைப்புகள். அதைச் சவால் மிக்கவர்களும், பெண்ணிய ஆளுமைகளுமான ஓவியா, சரோஜா சிவச்சந்திரன், ச.விஜயலட்சுமி, கெகிறாவ ஸஹான ஆகியோர் பேசினர். இந்நிகழ்வுக்கு ஸ்ரீ தலைமை ஏற்று நடத்தினார். படைப்பாளர்களை அவருக்கே உரிய பாணியில் ஸ்ரீ அறிமுகப்படுத்தினார்.
சில பெண் போலீஸ் அதிகாரிகள் உள்ளே அமர்ந்திருந்தனர். ( எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான்) இடையில் தேனீர் ஓய்வு இருந்தது. ஆனால், அதற்கென்று தனியே நேரத்தை ஒதுக்காமல், நிகழ்ச்சியின் போதே கொடுக்கப்பட்டது, நிகழ்வுக்கு கூடுதல் நேரத்தைச் செலவிட ஏதுவாக இருந்தது. கல்லூரி சகோதரிகள் சிரமம் பாராமல் அந்த வேலையைச் செய்தனர். இந்நிலையில் சூடான தலைப்புகளில் சூடேறிப் போயிருந்த அரங்கை, மழை, கொஞ்சம் நனைத்துவிட்டுச் சென்றது.
மூன்றாம் நிகழ்வும் காலம் தாழ்த்தாமல் துவங்கியது.
இதிலும் மிக முக்கியமான தலைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்த கட்டுரையை எஸ்தரும் , பாலர் கல்வியும் பெண்களும் என்ற தலைப்பில் செல்வி அரஃப் மன்சூரும், வெளி நாட்டுப் பணிப் பெண்களும் மலையகமும் என்ற தலைப்பில் யோகித்தா யோன் அவர்களும், மலையகப் பேச்சுத் தமிழில் பெண்ணியம் என்ற தலைப்பில் எஸ்.சுதாஜினியும் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வுக்கு கௌரி அம்மா தலைமைவகித்தார்.
இந்த இரண்டுநாள் நிகழ்வில் நடந்த அத்தனை அமர்வுக்கும் வெவ்வேறானவர்கள் தலைமை ஏற்றனர். ஆனால், எனக்கு கௌரி அம்மாவின் தலைமை பிடித்திருந்தது. காரணம் அவர் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் விதிமுறையைப் பின்பற்றுபவராகவும், சமரசத்திற்கு ஆளாகாதவராகவும் இருந்தார். படைப்பாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமை, கேள்வி கேட்பவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமை உட்பட்டு கேள்வி-பதில் நேரத்தில் அமளி-துமளிகளை கௌரியம்மா கையாண்டவிதம் என்னை மிகவும் கவர்ந்தது.
ஒருவேளை, நான் எந்த நிகழ்விலாவது தலைமை ஏற்றால் எனது முன்மாதிரி அவர்தான். சல்யூட் கௌரி மா.
நான்காவது அமர்வில் சிறுவர் தொழிலாளர்கள் என்ற தலைப்பில் மலையகம் சார்ந்த ஒரு பார்வையை டீ. சோபனாதேவியும், பெண்களும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் சுகன்யா மகாதேவாவும், சுற்றுச்சூழலியல் பெண்ணியப் பார்வை லுணுகலை ஸ்ரீயும் தங்கள் படைப்புகளைப் படைத்தனர். இந்த அமர்வுக்கு விஜயா தலைமை ஏற்றார்.
அன்றைய நாளில் நடந்த 4 அமர்வுகளில், 3 அமர்வுகள் மிக முக்கியமான தலைப்புகளில் பேசப்பட்டன. ஆனால், தமது படைப்புகளை முழுதும் படைக்கமுடியாமல் அல்லது பேச முடியாமல் போனது பல படைப்பாளர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. நேரம் போதாமை ஒன்றே அதற்குக் காரணம் என்பதைப் படைப்பாளர்களும் அறிவார்கள். இருந்த போதிலும் அகத்தின் அழகு முகம் தெளிவாகவே காட்டிக்கொடுத்தது.
இந்தப் பெண்ணியச் சந்திப்பில் முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் அமர்விலும் நான் முக்கிய மற்றும் தேவையான அங்கமாகக் கருதியது கேள்வி நேரத்தைத்தான்.
குறிப்பாக ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகு கேட்கப்பட்ட கேள்விகள் வெறும் காம-சோமா கேள்விகளாக இல்லாமல், பேசிய கருத்துக்கு ஏற்ற மாதிரி, தற்போது இருக்கும் உண்மை நிலையை கேள்வி கேட்கும் அல்லது போட்டு உடைக்கும் ஒரு அங்கமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக எல்லா பெண்களும் அங்கு கேள்வி கேட்டதும் பதிலளித்ததும்தான் இந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்பேன். நான் பெருமை கொள்ளும் விதமாக இருந்த மற்றும் ஒரு விடயம், கைக் குழந்தைகளை வைத்திருந்த படைப்பாளர்களும், நிகழ்ச்சியின் பார்வையாளர்களும் தங்களின் குழந்தைகளுடன் வந்திருந்ததுதான். சிலர் தங்களிடம் குழந்தைகளை வைத்துக்கொண்டே படைப்பைப் படைத்தனர். குழந்தைகள் தங்கள் மனம்போல் அங்கே இருந்தனர்.
கிங்ஸ்லி தனது துணைவி சந்திரலேகவுடன் |
அடுத்து கிங்ஸ்லி, உணவு இதர தேவைகள் அனைத்தையும் திரைக்கு மறைவில் இருந்து கவனித்துக்கொண்டார். புன்னகை மாறாத முகம் அவரது. குரலைக்கூட உயர்த்தியோ அழுத்தியோ அவர் பேசவில்லை. சின்ன ஸ்கூட்டியில் பலமுறை தேவையறிந்து ஓடிக்கொண்டிருந்தார். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவ்வப்போது என்னிடம் ஓரிரண்டு கேள்விகள் வேறு. யோகி சாப்பிடாயா? எதுன்னா வேணுமா? (நான் அப்போதும் மட்டுமல்ல, இப்போதும் அதை நினைத்து சிரித்துக்கொள்கிறேன். அவரின் விசாரிப்பது வெறும் கடமைக்காக இல்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.)
நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பும் சில பெண்களைப் பாதுகாப்பாக தனது ஸ்கூட்டியில் கிங்ஸ்லி போய்விட்டுக்கொண்டிருந்தார். உதவி வேண்டி நின்றவர்களையும், சந்திரலேகாவிடம் உதவி கோரியவர்களுக்கும் சேர்த்து அவர் சுழன்றுகொண்டிருந்தார். நான் விளையாட்டாக அண்ணா இது மன்மதா ஆண்டாமே என்றேன். ஆமாம்.. ஆமாம் என்றார் குழந்தையாக.
சில ஆண்கள் இப்படித்தான் வியப்பூட்டுகிறார்கள் என்னை.
(தொடரும்)
MORE TOPICS ON EDUCATIONAL,ECONOMICAL,CULTURAL,SPRITUAL NEEDS IN THE FUTURE!
பதிலளிநீக்கு