செவ்வாய், 19 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 11

மாத்ராலையில் வாழ்க்கையை தொலைத்த வீடு
சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 11

நான் கொஞ்சம் வீட்டை விட்டு வெளியில் வந்தேன். வானத்தின் நீலம் எத்தனை அழகு. எங்கும் பனைமரங்களையும் காண முடிந்தது. உயர உயரமாகப் பாக்கு மரங்களைப் போன்று பனை மரங்கள். இலைகள் விரிந்து செழிப்பாக இருந்தது. கள்ளெடுக்க மரம் ஏறும் ஒருவர் மிதிவண்டியில் வந்துக்கொண்டிருந்தார். நான் அவரை நிறுத்தினேன்.

நிருபர் மூளையில்லையா? அவரிடம் கேட்பதற்கு எனக்கு நிறையக் கேள்விகள் இருந்தன. றஞ்சி பேச்சுகுரல் கேட்டு அங்கு வந்துசேர்ந்தார். கள்ளு ஆரோக்கியப் பானம் இல்லையா? நான் அவரிடம் எனக்குத் தெரிந்த, 'ஒத்த மரத்துக் கள்', 'அந்தி கள்', வகைகளைப் பற்றிகூறி பெரிய பில்டப் செய்துக்கொண்டிருந்தேன். அவர் ரொம்பக் கூலாகப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தார். காலில் செருப்பு இல்லை. ஆனால், பட்டைபோல் ஒன்றை அணிந்திருந்தார். அதை அணிந்து கொண்டு மரம் ஏறினால் விரைவாக ஏறலாம் என்றார். அரிவாள், கத்தி, காலி பாட்டில்கள் என அவரின் மிதி வண்டியைச் சுற்றி என்னென்னவோ இருந்தன. அவரைப் பார்ப்பதற்கே வேறுமாதிரி இருந்தார்.

“உங்கள் பெயர் என்ன?”
“தேவன்”
“என்ன வயது”
“60”
“எத்தனை வருடம் இந்தத் தொழிலில் இருக்கிறீர்கள்?”
“30 வருடத்திற்கு மேல்”
“ஏன் இந்த வயதிலும் வேலை செய்ய வேண்டும்?”
“இறைவன் கொடுத்த கைகால்கள் நல்லா இருக்கும் போது, நான் ஏன் ஓய்வு எடுக்க வேண்டும்.”

கள் மரம் ஏறும் தேவன்
பிறகுதான் நான் உணர்ந்தேன், தவறான ஆளிடம் இப்படிக் கேட்டுவிட்டேன் என்பதை. சில பேர், அப்படிதான். அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் எதையாவது செய்துக்கொண்டிருப்பார்கள். தேவனுக்கு, பிடித்துச் செய்யும் வேலை அது, அவரே நிறுத்தினால் ஒழிய அந்தத் தொழிலிருந்து அவரால் விடுபட முடியாது. இலங்கையில் கூடுதலாகப்,  'பனை மரத்துக் கள்' வேறு கிடைக்கிறது. தேவன் பனைமரத்டிலும் ஏறுவாராம். பேச்சில் மட்டுமல்ல தோற்றத்திலும் கம்பீரம் குறையாதவர். ஆனால், ஒரு கேள்விக்கு நிற்காமல் பல பதில்கள் வந்துக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் றஞ்சி மிக லாவகமாக உரையாடலை முடிவுக்குக் கொண்டுவந்தார். (அப்பாடா தப்பித்தேன்.)

அடுத்து நான் பார்த்தவர் யாழ்ப்பாணத்து தபால்காரர். இவரும் மிதிவண்டியில்தான் வந்தார். யாழினிக்கு ஏதோ அரசாங்க கடிதம் வந்திருந்தது. தபால்காரருக்கான எந்த அடிப்படை லட்சணமும்  இல்லாதவர் மாதிரி இருந்தாலும், வேலைகள் சரியாக நடந்துக்கொண்டிருக்கின்றன. நான் தபால்காரரோடு பேசவே இல்லை. எதுக்கு வம்பு.

இன்றைய தினத்தில் நாங்கள் யாழ்பாணத்தில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் செல்வதற்குத் திட்டமிட்டிருந்தோம். யாழினி புதிய மாதவியை ஏற்றிக்கொண்டு பைக்கில் வர மற்ற நால்வரும் ஆட்டோவில் ஏறினோம். இதுவே எனது முதல் ஆட்டோ சவாரி. நால்வர் வசதியாக உட்கார்ந்து வர முடியாவிட்டாலும், எங்களுக்குள் இருந்த நெருக்கம், அந்த நெருக்கத்தைச் சமன் செய்துக்கொண்டது. ஒரு கட்டத்தில் விஜயா அம்மா, என்னை அவர் மடிமீது அமரவைத்துக்கொண்டார்..
தேவன் அணிந்திருந்த கால் பட்டை
நாங்கள் வடலியடைப்பிலிருந்து, நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் செல்வதாக முடிவெடுத்தோம். எங்குப் போனாலும் முருகன் கோயிலுக்குக் குறைவில்லை என்று மட்டும் தோன்றியது. அந்தக் கோயிலுக்குப் போவதற்கு எந்தச் சிறப்புக் காரணமும் எங்களிடத்தில் இல்லை. அதைவிடவும் நுட்பமான கலைவடிவங்கள் வேலைபாடுகள் கொண்ட கோயில்கள் இந்தியாவில் இருக்கிறது அல்லவா? ஆனால், யாழ்பாணத்தமிழர்கள் கொண்டாடும் அளவுக்கு அந்தக் கோயிலில் என்னதான் இருக்கிறது. மேலும், அந்தக் கோயிலை புதுப்பிக்க உலகம் முழுவதும் இருக்கும் பல இந்தியர்கள்  இந்தக்கோயிலுக்காக நன்கொடை வழங்கியிருந்தனர் என்று எங்கோ படித்த ஞாபகம்.

நல்லூருக்கு போகும் போது ஆட்டோ கடந்து சென்ற சாலை, போரினால் பாதிக்கப்பட்ட நிலபரப்பாகும். மாதகல் என்ற பெயர் கொண்டது அந்த பரப்பு. சுமார், 9 ஆண்டுகள் போக்குவரத்திற்கும், மக்கள் பிரவேசத்திற்கும் தடைவிதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்சி மாற்றத்தில், இலங்கையின் புதிய அதிபர் சிறீசேனாவின் உத்தரவின் பேரில் தடையை நீக்கியது. அதனைத்தொடர்ந்து மக்கள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில், இன்னும் அது மயான அமைதியிலிருந்து மீளவில்லை என்பது முதல் பார்வையிலேயே உணர முடிந்தது.

முள் வேலிகள், சுறுட்டப்பட்டு அங்காங்கு கிடந்தன. போரினால், சிதிலமடைந்த வீடுகளில் மக்களின் கனவுகள் இன்னும் மிதந்துக்கொண்டே இருந்தன. றஞ்சி சொன்னார், இன்னும் முற்றிலும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்று. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சந்தேகத்துடன் எடுத்துவைக்கும் போது, இன்னும் மக்கள் குடி புகாமல் இருப்பதற்குக் காரணம் தானாகவே நமக்கு விளங்கியது. சாலையைக் கடந்தோம். அங்கே ஒரு கோயில் இருந்தது. மக்கள் அந்த கோயிலுக்கு வந்து போவதற்கான எந்தத் தடயத்தையும் பார்க்க முடியவில்லை. அது என்ன கோயில் என்று தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் எனக்கு இல்லை. எந்த நம்பிக்கையில் கோயிலை கட்டினார்களோ, அந்த நம்பிக்கையெல்லாம் பொய்த்துப் போனது தானே? கும்பிட்டவர்களை கைவிட்டவர்தானே இந்தக் கடவுள்?  என்ன கோயில் என்று தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் எனக்கு எழவில்லை.

கோயிலுக்கு அருகே ஒரு சின்னக் குளத்தைக் கட்டியிருந்தார்கள். கோயில் தேவைக்காக இருக்கலாம்.  இன்னும் கொஞ்சம் நடந்து போனோம். போரில் பாதியை இழந்த வீடுகளும், தரையோடு தரைமட்டமான வீடுகளும் இருந்தன. எங்கும் புதர்கள்  மண்டி கிடந்தன.
றஞ்சி சொன்னார், உண்மையில் இதுதான் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் என்று. விஜயா அம்மா,  எந்தத் தருணத்தையும் இழந்துவிடாமல் அனைத்தையும் தனது வீடியோ கேமராவில் பதிவு செய்தார். மனதளவில் எங்களுக்குள் ஓர் இறுக்கம் வந்து புகுந்துக்கொண்டது. ஆட்டோவில் ஏறுவதற்குத் திரும்பினோம். மீண்டும் அந்தக் கோயிலை கடந்தேன். சாலையோரம் ஒரு காவல் தெய்வமும் இருந்தது. எதிரே ஓர் அம்மா எதையோ விற்றுகொண்டிருந்தார்.
இந்தக் கோயிலுக்கு யாருமே வரமாட்டார்களா?  மீண்டும் எனக்குள் கேள்வி எழுந்தது. யாராவது இன்னும் விளக்கேற்றிவிட்டுதான் போககூடும். எனக்குத் தெரியும். மனிதன் சில சமயம் கடவுளைவிட அதிக நம்பிக்கை கொண்டவன்.
(தொடரும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக