ஞாயிறு, 31 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 18

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 18

விடிந்தால் நாங்கள் போர் நடந்த இடங்களான வன்னி, கிளிநொச்சி, முள்ளி வாய்க்கால் உள்ளிட்ட இடங்களைப் பார்த்துக் கொண்டே கொழும்பு போய்ச் சேர்வோம் என்ற விவரத்தை றஞ்சி சொன்னார்.

போர் நடந்த காலக்கட்டத்தில் பத்திரிகையில் செய்திகள் போட தேடும்போது இந்தப் பெயர்கள் என்னை மிகவும் துன்புறுத்துபவையாக மட்டுமல்ல, பயமுறுத்துபவையாகவும் எனக்கு இருந்தன. உண்மைதான்கொஞ்சம் இயல்பு நிலை என்னில் தப்பி இருந்தது. சற்றுமுன் இருந்த கொண்டாட்ட நிலை, போரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் எனது காலை மிக இயல்பாக விடிந்தது. அப்பா காலையில் எழுந்துக்கொண்டு பரபரப்பாக எதையோ செய்துக்கொண்டிருந்தார். நான் முதல் நாளே அவரிடம் தாமதமாக வேலைக்குப் போங்க என்று கூறியிருந்தேன். நான் கூறாமல் இருந்தாலும் அவர் எங்களை வழியனுப்பாமல் வேலைக்குப் போயிருக்க மாட்டார். யாழினி, ஊறுகாய், மோர் மிளகாய், ஒடியல் கிழங்கு எனப் பொட்டலம் செய்துக்கொண்டிருந்தாள். எங்களுக்கு இடிச் சம்பலோடு, அவித்த மரவல்லிக் கிழங்குக் காலை உணவுக்கு ஒரு பக்கம் தயார் ஆகிக்கொண்டிருந்தது. அம்மம்மாவும் ஏதோ செய்துக்கொண்டிருந்தார். எல்லாம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தது.
அம்மா  காப்பிக் கொட்டையை வறுத்துக்கொண்டிருந்தார். அதில் மல்லி, இஞ்சிக் கலந்து ஒரு வித மனம், மனதுக்கு நிம்மதியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. நான் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து பார்த்தேன். அம்மா காப்பிக் கொட்டையை வறுப்பதற்குப் பயன்படுத்திய அகப்பைக் கொட்டாங்கட்சியால் செய்யப்பட்டது. அம்மா, ஆயாசமாக எல்லா வேலைகளையும் செய்யக்கூடியவராக இருந்தார். நான் அம்மாவோடும் அப்பாவோடும் அலவலாவ நிறைய நேரம் வாய்க்கவில்லை. என் வாழ்நாளில் ஒரு காலக்கட்டத்திற்கு மேல், என்னால் என்னைச் சார்ந்தவர்களோடு அணுகமுடியாமல் போகிறது. ஆனால், யாழினியின் அப்பா-அம்மா எனக்கு மிகமிக நெருக்கத்தில் இருந்தார்கள்.

நாங்கள் பயணப் பெட்டியோடு கிளம்புவதற்குத் தயாராகிக்கொண்டே இருந்தோம். பிரிவு நெருங்கிக்கொண்டிருந்தது என்பதை மனம் நன்றாக உணர்ந்தது. ஆனால், அதை யாருமே வெளியில் காட்டவில்லை. இயல்பாக அந்த நேரம் நகர்ந்துக்கொண்டே இருந்தது.  திரும்ப என் வாழ்நாளில் இலங்கைக்கு மீண்டும் வருவேனா? வந்தாலும் யாழ்ப்பாணம் வருவதற்கான வாய்ப்பு அமையுமா? யாழினியையும் அவள் குடும்பத்தையும் மீண்டும் சந்திப்பேனா? அப்பா-அம்மாவை அவர்கள் அன்பை மீளபெற இந்தக் காலம் எனக்கு இரண்டாவது வாய்ப்புக் கொடுக்குமா? இப்படியான கேள்விகள் என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. சட்டென உணர்ச்சி வசப்படும் ஆள் இல்லை நான். என்னையே  நான் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தேன்.

ஒரு முறை வீட்டையும், தோட்டத்தையும், கிணற்றையும் பார்க்க ஆசையாக இருந்தது. சுற்றிப்பார்க்கக் கிளம்பினேன். காக்கைகள் நிறைய வட்டமிடும் அந்த மரத்தில் வேறு ஒரு பறவை அமர்ந்திருந்தது. அது எனது சாம்பல் பறவையா? என்னைத் தேடி இங்கு வந்துவிட்டானா? ஓட்டமும் நடையுமாகச் சென்று எனது கேமராவில் படம் எடுத்தேன். அவன் என்னவன் இல்லை. ஆனால், என்னைத் தேடி வந்தவன் போலவே இருந்தது. நான் கிளம்பும் நேரத்தில் ஏன் அவன் என் கண்களில் பட வேண்டும்? சோகமான முகத்துடன் இருந்த அவன், சிதைந்த கட்டடச் சுவரை எண்ணிக்கொண்டிருக்கிறானா? அம்மம்மா எல்லாம் எடுத்து விட்டீர்களா என்று கேட்க, நான் திரும்பிப் போனேன்.

நாங்கள் பஸ்சில் பயணித்து யாழ்ப்பாணப் பட்டணத்தில் இறங்கி, அங்கிருந்து வேறொரு பஸ்சைப் பிடித்து றஞ்சி துணைவர் ரவியின் சகோதரி வீட்டுக்குப் போய் அங்கிருந்து ஒரு வாகனத்தைப் பிடித்துப் போர்ப் பூமிக்குச் செல்வதாகத் திட்டம். பஸ்சில் ஆட்கள் நிரம்பிதான் வந்தது. ஆனால், அனைத்தும் மினி பஸ் மாதிரியானவை. கட்டிபிடித்து, முத்தங்கள் பகிர்ந்துக்கொண்டு, டாட்டாக் காட்டி விடைபெற எந்தச் சர்ந்தப்பமும் கொடுக்காத பஸ் நிறுத்தங்கள்.

பஸ் நின்றதும் ஒரு நிமிஷம்கூடத் தாமதிக்காமல் ஏற, பஸ் போய்க்கொண்டே இருக்கிறது. பஸ் தாமதிக்கும் ஒவ்வொரு நேரமும், ஓட்டுநருக்குத் தண்டனை தொகை போடப்படுகிறதாம். எங்களால் தண்டனைத் தொகை போடப்பட்டதாகப் பஸ் நடத்துனர் சொன்னார். அதனால், அதற்கும் சேர்த்து நாங்கள் பணம் கொடுத்தோம்அடுத்தப் பஸ் எடுப்பதற்காக  நின்றுக்கொண்டிருந்தோம். முதல் நாள் எங்களை ஏற்றி அலைந்த ஆட்டோ ஓட்டுநர், எங்கிருந்தோ எங்களைப் பார்த்து ஓடி வந்தார். ஏன் இங்க நிக்கிறீங்க என்று ஒரு சகோதரைப்போல் கேட்டார்.. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்காகப் பஸ் நிற்கும் இடம், எத்தனை மணிக்கு கிளம்பும் போன்ற விவரங்களை அவர் எந்தச் சிரமமும் இல்லாமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் ஓடி போய் அறிந்துவந்து சொன்னார்.
 
அடுத்து நாங்கள் பயணிக்க வேண்டிய பஸ்சில் ஏறினோம். றஞ்சி விளக்கமாக நாங்கள் இறங்க வேண்டிய இடத்தைச் சொன்னார். நான் ஓட்டுநர் அருகில் உள்ள இடத்தில் அமர்ந்து கொண்டேன். பஸ் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. எனக்கு ஓர் ஆசையும் வந்தது. ஓட்டுநர் சீட்டில் உட்கார்ந்து வண்டி (பஸ்) ஓட்ட வேண்டும் என்றுதான். சும்மா இருப்பாளா யட்சி ?
ஓட்டுநரிடம் கேட்டேன். வண்டி ஓட்டி பார்க்கட்டா ? பாருங்களேன் என்றார். உட்கார்ந்தேன் ஓட்டுநர் சீட்டில். ஸ்தேரிங்கை பிடித்தேன். ஓட்டுநர் கேட்டார், வண்டி ஓட்டத்தெரியுமா? தெரியாது என்றேன். பிறகு, படங்கள் எடுத்துக்கொண்டேன்.

ஓட்டுநர் இளைஞர். மிகவும் பொறுப்பாக நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் கேட்டு இறக்கிவிட்டார். மலேசியாவில் வண்டியை ஓட்டும்போது பெண்களைப் பார்த்தால் ஹோன் அடித்துக் கலாய்க்கும் பழக்கம் இருக்கு. அங்கு இல்லை. பொறுப்பு மட்டுமே இருந்தது.
றஞ்சி போகும் இடங்களின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லிகொண்டே வந்தார். பெருவாரியாகப் போரில் பாதிக்கப்பட்ட இடங்கள்தான்.

நான் கேட்டேன், ஏன் பள்ளி வாசல்களே இல்லை. கோயில்களைப் பார்க்க முடிந்த அளவுக்குப் பள்ளிவாசல்கள் இல்லையே. றஞ்சி சொன்னார், புலிகளால் 1990-களில் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றிய பிறகு, போர் முடிந்த பிறகுதான் அவர்கள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அதற்குமேல் எனக்கே எல்லாம் புரிந்தது. ஆனால், இந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்கு எத்தனை பள்ளிவாசல்கள் அந்நாட்டு அரசாங்கம் கட்டி கொடுத்தது? மயானக்கொல்லைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. யாரிடமும் இதைக்குறித்து  கேட்கும் சூழல் அப்போது அமையவில்லை.


 ஜன்னல் ஓரம் காற்று என் முகத்தில் அறைந்து கொண்டே வந்தது. ஜன்னலுக்கு வெளியே நெல்வயல், தென்னை மரங்கள், மலைகள் இவற்றுக்கு மத்தியில் போரில் பாதிக்கப்பட்ட வீடுகள், கடைகள் என என்னைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது.
நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் ஓட்டுநர் இறக்கிவிட்டார். அது புலோலி பருத்திதுறை. ரவி அப்பாவின் மாமா எங்களுக்காகக் காத்துக்கொன்டிருந்தார்.
(தொடரும்)

2 கருத்துகள்:

  1. யாழ்ப்பாணத்தில் சோனகத் தெருவுக்கு ஒருக்க போய் வந்திருக்கலாம். அங்கு நிறையவே சிதைந்த பள்ளிகளைக் கண்டிருப்பீர்கள். 2002ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணம் போன போது நொறுங்கிப் போய் வீதியிலேயே அமர்ந்து விட்டேன். ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழும்ப அரைமணித்தியாளமாகி இருந்தது. முஸ்லிம்பாடசாலைகள் புலிகளின் முகாம்களாகச் செயற்பட்டிருந்தன.
    -முஸ்டீன்-

    பதிலளிநீக்கு
  2. many temples .churches,mosques were destroyed by sinhala plane bombings,artelleries/shells...many schools were used as army camps..!

    பதிலளிநீக்கு