ஞாயிறு, 17 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 9

  • சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

  • தொடர் 9


'வவுனியாவில் இறங்கலாம்' என்று றஞ்சி சொன்னார். எனக்கு டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது. சமயம் பார்த்து ரஜனியும் டீ கேட்டார். அப்போது அங்கே இறங்குவது உறுதியானது. ஓட்டுனரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் வண்டியை வவுனியாவில் நிறுத்தினார். நாங்கள் எல்லாம் இறங்கினோம். அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் எங்களையும் வண்டியையும் ஏற இறங்கப் பார்த்தனர். போலீஸ்காரர் ஒருவர் எங்களை நோக்கி வந்தார். ஆம், வண்டி நின்ற இடம் வவுனியா காவல் நிலைய எதிர்ப்புறம். அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் போலீஸ்காரர்கள். அனைவரும் சிங்களவர்கள்.
எனக்கு யாரைவிடவும் அந்த ஓட்டுனரின் மேல் கடுமையான கோபம் வந்தது. ஆனால், அவர் வண்டியை நிப்பாட்டிவிட்டு ரொம்பக் கூலாக நடையைக் கட்டிவிட்டார். பதற்றம் எல்லாம் எங்களுக்குத்தான். ரஜனி எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்தாரா தெரியவில்லை. காரணம் அந்தச் சூழலை கிரகித்துக்கொள்ள எங்களுக்கு சிலநிமிடங்கள் தேவைப்பட்டன. ரஜனி, அருகே இருந்த ஒரு பெயர்ப் பலகையைப்  படம் பிடித்துக்கொண்டிருந்தார். அதைப் போலீஸ்காரர்கள் பார்த்துகொண்டிருந்தனர். ஒரு போலீஸ்காரர் நடுவயதுத் தோற்றம். எங்களை நாடி வந்தார். பதற்றநிலை இருந்தாலும் யாரும் முகத்தில் காட்டவில்லை. வந்தவர் ஏதோ கேட்டார். அவர் பேசியதில் ‘Toilet’ என்ற வார்த்தைதான் காதில் விழுந்தது. வேறு எதுவும் எனக்குச் சரியாக விளங்கவில்லை.
பிறகு, றஞ்சி சிங்களத்தில் ஏதோ பதில் கொடுத்தார். ‘Toilet’ தேடி வந்திங்களானுதான் அந்தப் போலீஸ்காரர் கேட்டுள்ளார். காரணம் வண்டி நின்ற இடத்தின் பக்கத்தில் பொதுக்  கழிவறை இருந்தது. றஞ்சி ஆமாம் என்றார். அந்தப் போலீஸ்காரர் “நேராகப் போய் வலது பக்கம் போங்க” என்றார். நாங்கள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. வராத சிறுநீர்கூட வந்த மாதிரி உணர்வு ஏற்பட்டது. அந்தப் போலீஸ்காரர் எங்கள் திசையையே பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள், அந்தக் கழிவறையை நோக்கிப் போனோம். மலஜலக் கூடம் என்று எழுதியிருந்தது.
உள்ளே போனோம். அது பணம் கட்டிப் போகும் கழிவறை. ஓர் ஆளுக்கு 10 ரூபாய். நாங்கள் 6 பெண்கள் இருந்தோம். 60 ரூபாய் தரவேண்டுமா? 5 பேருக்கு ஒர் ஆள் இலவசமா போகக் கூடாதா? சும்மா கேட்டுதான் பார்த்தோம். அது எல்லாம் முடியாது என்றனர். சிங்களவர்கள்தான் அங்கு பொறுப்பில் இருந்தது. றஞ்சி ஒன்றும் கதைக்க வேண்டாம், கேட்பதைக் கொடுத்துவிடலாம் என்றார்.
எனக்கு அந்த இடத்தில் எஸ்.ரா. எழுதிய ‘100 கழிப்பறைகள்’ என்ற கதைதான் நினைவில் வந்தது. அதில் ஒரு வரி வரும், ‘ஒவ்வொரு துளி சிறுநீரையும் பணமாக்கணும்’ என்று. ஏனோ, அதை இவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்களோ என்று தோன்றியது. பிறகு, பணம் கட்டிப் போகும் கழிப்பறை பலநாடுகளில் இருக்கிறது. மலேசியாவில்கூட 20 சென் கொடுத்து கழிப்பறைக்குப் போகலாம். பிறகு 30 சென்னுக்கு விலை ஏறியது. சிறுநீர் என்னவோ ஒரே அளவாகதான் வந்தது. பிறகு 50 சென் ஆனது. இப்போது இடங்களுக்குத்  தகுந்தவாறு பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அங்கு 10 ரூபாய் என்பது மலேசிய ரிங்கிட்டுக்கு 27 சென் வரை வருகிறது.
வவுனியாவில் தொடக்கமே கொஞ்சம் கசப்பான அனுபவமாக இருந்ததால், டீ குடிக்கும் programme-மை ரத்து செய்துவிட்டு அந்த இடத்தைவிட்டு கிளம்புவதே தேவலாம் என்று இருந்தது.  ரஜனி குழந்தைத் தனமாக மீண்டும் 'டீ இல்லையா' என்றார்? வேறு எங்காவது பார்க்கலாம் என அனைவருமே கோரசாகச் சொல்ல அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினோம்.
கொஞ்ச நேரம் அங்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை வேனில் பேசிக்கொண்டே வந்தோம். எங்களின் வேன் வவுனியா வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்தது. றஞ்சி, அங்கு உறங்கிக்கொண்டிருக்கும் சிலரின் வாழ்கைக் கனவுகளைக் கலைத்துகொண்டிருந்தார்.
குறிப்பாக, ஶ்ரீலங்கா அரசாங்கம் போரின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வழங்கியிருந்த மானியத்தில் கட்டியிருந்த வீடுகளைக் காட்டினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. ஆனால், அது ஒரு வீட்டுக்கான லட்சணமாகத் தெரியவில்லை. பொட்டல் நிலத்தில், ஒருவர் மட்டுமே காவலுக்கு இருக்கக்கூடிய கொட்டகை அளவு கொண்ட வீடுமாதிரி இருந்தது. வெளிப் பார்வைக்கு அந்த வீடு கொடுக்கும் தோற்றம் அதுதான். ஆனால், சிங்களவர்களுக்கு அளவில் கொஞ்சம் பெரிய வீடு கட்டிக்கொடுத்திருப்பதைப் பார்க்க முடிந்தது.
இதில் இந்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வீடமைப்புத் திட்டம் எந்த லட்சணத்தில் இருக்கிறதோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. யாரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை. வவுனியா வனமும், அதைத் தாண்டி வந்த போர் பூமியும் இருளில் எங்களிடம் கடந்த காலத்தைப் பேசிச்சென்றன. ஆனால், நின்று பார்க்கக்கூடிய சூழல் அப்போது அமையவில்லை.
நாங்கள் யாழ்ப்பாணத்தை அடையும்போது நள்ளிரவு ஆகியிருந்தது. யாழினியின் வீட்டில் யாரும் உறங்கியிருக்கவில்லை. அப்பா ஓடிவந்து எங்களை வரவேற்றார். பெரிய அழகான வீடு. வீட்டிற்கு முன் பெரிய நிலம். எங்களுக்காக இரவு உணவு தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடியப்பம், புட்டு, சொதி, கோழிக்கறி, மீன்கறி, மீன் பொரியல், நண்டுப் பொரியல் என அசத்தியிருந்தார்கள். அம்மா, அம்மம்மா, யாழினியின் அக்கா, அவரின் குழந்தைகள் அனைவருமே விழித்திருந்து எங்களை உபசரித்தனர். ஆனால், என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. பயணக் களைப்பு, கடந்து வந்த நிலப் பரப்பு, போர் முடிந்தாலும் மக்களிடத்தில் மாறாத பதற்ற நிலை என என்னில் கொஞ்சம் பாதிப்பு இருந்தது. பாயை விரித்து அனைவரும் தரையில் படுத்துக்கொண்டோம். ஜன்னல் அடைக்கப்படவில்லை. யாழினியிடம் ஜன்னலை அடைக்கவில்லையா என்றேன். அடைக்கத் தேவையில்லை, இங்கே கொசு எல்லாம் வராது என்றாள். வெளியில் நிலா காய்ந்துகொண்டிருந்தது. எனக்குள்ளும்தான்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக