வியாழன், 7 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 3

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை


(தொடர் 3 )மாலை 7 மணிக்கெல்லாம் இரவு 9 மணிபோல் இருட்டிவிடுவதால் மலையக பயணத்திற்கான சுற்றுவட்டார அழகை ரசிக்கமுடியவில்லை. பனி மெல்ல வாகனத்தின் உள் படரத் தொடங்கியது.

மலேசியாவில் இருப்பதைப் போன்ற தெருவிளக்குகள் மலையகத்தில் அவ்வளவாக இல்லை. வளைவுகள் அதிகம் உள்ள அந்தச் சாலையில் தெருவிளக்குகள் இல்லையே என்ற ஐயம் மனதுக்குள் இருந்தது. இருட்டில் எதையும் சரியாக பார்க்க முடியவில்லை. நாங்கள் வந்த வேன் ஒரு மாபெரும் தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருக்கும் தங்கும் விடுதியில் நிறுத்தப்பட்டது. தொலைவில் அருவி தண்ணீரைக் கொட்டிக்கொண்டிருக்கும் சத்தம் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
எங்களை சந்திரலேகா மற்றும் கிங்ஸ் லியும் வரவேற்றார்கள். சந்திர லேகா, கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்ச்சி கலாசாலை மையத்தின் இயக்குநர். ஆனால், பார்ப்பதற்க்கு அத்தனை எளிமையான மனுஷி. தோற்றத்தை மட்டும் வைத்து அவரின் ஆளுமையை எடைபோட்டுவிட முடியாது. ஒரு முறை பேசி பார்க்க வேண்டும். அவரின் இயக்கத்தின் கீழ் இருக்கும் பயிற்சி மாணவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். ஏன் கொடுத்து வைத்தவர்கள் என்ற காரணத்தை பிறகு சொல்கிறேன். எங்களுக்காக நாள்முழுவதும் காத்திருந்த பரிதவிப்பு சந்திரலேகா மற்றும் கிங்ஸ்லியிடம் பார்க்க முடிந்ததுவேடந்தாங்கல்  பறவைகள் தனது சொந்தக்கூட்டை அடைந்ததும், அங்கே ஒரு தாய்க்குருவி இருந்தால் அதன் கொண்டாட்டநிலை எப்படி இருக்கும் என்று நம்மால் விவரிக்க முடியுமா? அந்தக் கொண்டாட்ட நிலையைத்தான் நான் சந்திரலேகாவிடம் பார்த்தேன்.


 நாளை (25 ஏப்ரல்) பெண்கள் சந்திப்பில் பங்கெடுக்கும் பெண்கள் தங்குவதற்கான இடவசதிகள் குறித்தும், நிகழ்வைக் குறித்தும் சந்திரலேகா உடனே கதைக்க தொடங்கினார். இந்த நாளுக்காகத்தானே இத்தனை மாதம் காத்திருந்தேன் என்பதைப் போல அவர் தாய்மை நிலையிலிருந்து இறங்கி குழந்தையாக மாறி ஓடி ஓடி ஒவ்வொரு அறையையும் காட்டினார். றஞ்சி தனது பொறுப்பிலிருந்து விவரங்களை சந்திரலேகாவிடம் பரிமாறிக்கொண்டிருந்தார். நான் வெறும் பார்வையாளினியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனோ எனக்கு கொண்டாட்ட நிலையிலிருந்து மனம் விடுபடவில்லை. என்னுடன் வந்த ஓவியா, ரஜனி, நர்மதா, புதிய மாதவி ஓய்வு எடுத்துக்கொள்ள தங்களுக்கான அறைக்குப் போய்விட்டார்கள்

நானும் விஜயலெட்சுமியும் றஞ்சி-சந்திரலேகாவுடன் இருந்தோம். யாழி தனது கல்லூரித் தோழியுடன் கூடடைந்தாள். தேயிலை தோட்டத்தில் பனி மிதப்பதை பார்க்க முடிந்தது. ஜில்லென காற்று எனக்கு மலேசியாவின் பிரேசர் ஹீலை ஞாபகப்படுத்தியது. சுற்றியிருந்த வனம், என்னை யட்சியாக சொல்லி தூண்டிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் சந்திரலேகா நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு போய் பார்க்கலாமா என்றார். அப்போது இரவு 12 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. றஞ்சி சரி என்றார். நானும் விஜியம்மாவும் உடனே தயார் ஆனோம். நாங்கள் தங்கவிருக்கும் விடுதிக்கு மிக அருகில்தான் அந்த கலாச்சாலை உள்ளபடியால் அவ்வேளையில் போவது எந்த சிரமத்தையும் எங்களுக்கு கொடுக்கவில்லை.

நாங்கள் மலையகம் வந்த மாமாவின் வேனிலேயே அந்த ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்குப் போனாம். சாலையை ஒட்டி ஒரு குட்டி மேட்டின் மேல் வேன் ஏறியது. நெடுக்க நடப்பட்டிருந்த மரங்களை சமீபத்தில்தான் நட்டதாக சந்திரலேகா சொன்னார். ஆமாம், இதற்கு முன் வந்த போது இந்த மரங்கள் இல்லையே என்று றஞ்சி சொன்னார். எனக்கு இரு நிஜமும் நிழலுமாக இரு காட்சிகளும் வந்து போயின. வேன் நின்றது. நின்ற இடம் ஓர் அரசு ஆசிரியர் பயிற்சி கலாச்சாலையாக எனக்குத் தோன்றவில்லை. மலேசியாவில் நான் படித்த ஆரம்ப பள்ளியை எனக்கு அது நினைவுப்படுத்தியது. சாதாரண கட்டிட அமைப்பு. பெரிய வசதிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், கட்டடம் அமைந்திருக்கும் இடம் தனித்துவமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

சந்திரலேகா நிகழ்வு நடக்கும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். 200 பேர் தாராளமாக அடங்கக்கூடிய மண்டபம். மேடையில் பெண்கள் சந்திப்புகானபேனர்தொங்கவிடப்பட்டிருந்தது. பெண்கள் அமர்ந்து பேசுவதற்கு நாற்காலிகளும் மேஜையும் போடப்பட்டிருந்தன. அருகில் மைக் செட் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் பார்ப்பதற்குக் கீழே நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டிருந்தன. 'எல்லாம் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கா' என்று சந்திரலேகா கேட்டார். றஞ்சி சொன்னார், 'மேலே போடப்பட்டிருக்கும் மேஜை நாற்காலிகளை கீழே இருக்குங்கள், எந்தப் பிரிவினையும் இருக்கக்கூடாது. நாம் நம் பெண்களோடு கலந்தே இந்த நிகழ்ச்சியை செய்து முடிப்போம். எந்த வேற்றுமையும் இதில் இல்லை' என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், இந்தச் சிந்தனை எல்லாருக்கும் வந்துவிடாது இல்லையா? சந்திரலேகா 'சமையல் நடக்கும் இடத்தைப் பார்க்கிறீர்களா' என்றார். சரி என அங்கே போனோம்

ஒரு வகுப்பறையை ஒதுக்கி வைத்து சில வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சமைக்க வந்த
சகோதரரிடம் எங்களை அறிமுகப்படுத்தினார் சந்திரலேகா. டீ வேண்டுமா என்றார் அவர்
  நான் முதல் ஆளாகபால் போட்ட டீஎன்றேன். (விஜயா அம்மா, சிரிக்காதிங்க) நிமிஷம் பெறவில்லை, அந்த நேரத்திற்கு அவ்வளவு சுவையான சுகமான டீ கிடைத்தது பாக்கியம். இங்கே எனக்கு டீ போடுவதைத் தவிர சலிப்பான விஷயம் இல்லை. தேயிலை வெந்து, அதை வடிகட்டி, பிறகு பால்கலந்து என பெரிய வரலாற்றை எழுதுகிறோமோ என்று தோன்றும். இவர்கள் நாட்குறிப்பு போன்று படாரென்று டீ கொடுத்துவிடுகிறார்கள். அது இன்னும் எனக்கு ஆச்சரியம்தான் பிரமிப்புதான். சமையல் செய்ய வந்த சகோதரர் நல்ல உயரமான மனிதர். கனிவான முகம் அவரது. நாளை ஒரு 200 பேருக்கு 5 வேளை உணவை சமைக்க போகிறோம் என்ற எந்த களைப்பும் சோர்வும் அவரிடத்தில் இல்லை. இயல்பாக பேசிக்கொண்டிருந்தார். நான் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் கிட்டதட்ட அனைவருக்குமே என்னிடம் பேசுவதற்கு ஆர்வம் இருந்தது. அதற்குமேல் என்னிடம் கேட்பதற்கு அவர்களிடத்தில் கேள்விகள் இருந்தன. சமையல் செய்யும் சகோதரர் சொன்னார், 'எப்போ டீ வேண்டுமோ, என்னிடத்தில் கேளுங்கள்' என்று. இந்த ஜென்மத்தை எவ்வளவு மகிழ்ச்சிகரமாக கடந்துக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது. நேரம் இரண்டாம் ஜாமத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது

 (தொடரும்)


2 கருத்துகள்:

  1. நல்லா போயிட்டிருக்கு யோகி. அருமையான ஈர்ப்புள்ள நடை. உங்க பென்ட்ரைவ்வில் இருந்த படங்கள் அனைத்தையும் பார்த்து முடித்த போது இன்னும் என்னென்ன எழுதுவீர்கள் என்று யூகிக்க முடியுமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    -முஸ்டீன்-

    பதிலளிநீக்கு