சிதைந்த
கட்டடச் சுவரில் சாம்பற் பறவை
தொடர்
16
கீரிமலையில்
போர் நடந்ததற்கான ஆதாரங்கள் சொர்ப்பமாகத்தான் இருக்கிறது. 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு
வந்த போரின் தடயங்கள் வெகுவிரைவாகச்
சீர் செய்யப்பட்டு வருவதற்குக் கீரிமலை ஓர் உதாரணம்
எனத் தெரிகிறது. (இது எனது பார்வை
மட்டுமே. உண்மை வேறாக கூட
இருக்கலாம்.)
அடுத்து
நாங்கள் 'தம்பகொலபடுன' என்ற புத்த திருத்தலத்திற்குச்
செல்ல முடிவெடுத்தோம். அந்தப் புத்த ஸ்தலத்திற்குப்
போவதற்கான காரணம் நானாக கூட
இருக்கலாம். காரணம் புத்தனின் மேல்
எனக்கிருந்த பாசம் தான். பாசம்
என்பது வெறும் வாய் வார்த்தைக்கான
சொல்லாக இருக்கலாம். சிலரை காரணமே இல்லாமல்
பிடிக்கும். சிலரை எந்தக் காரணம்
இல்லாமலும் பிடிக்காது. மனித மனம் இப்படியாகத்தானே
இருக்கிறது.
ஆனால்,
புத்தனை எனக்குப் பிடித்ததற்கு ஒரே காரணம் தான்
இருக்கிறது. அவனின் முகம் பெண்மை
கலந்தது. அவனின் பேரமைதியை, நிலத்தோடு
ஒப்பிடலாம். நிலத்தைப் பெண்ணோடு ஒப்பிடலாமா என்று கேட்காதீர்கள்?
நான் இலங்கை பயணத்திற்குத் தயார்
ஆகும் போதே, 'இலங்கையில் உங்களுக்கு
எங்குச் சுற்றிப்பார்க்க விருப்பம்' என்று என் தோழி
லுனகல ஶ்ரீ கேட்டார். 'புத்த
தலங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்' என்றுதான்
சொன்னேன்.
ஆனால்,
நான் அங்குபோன பிறகு அதற்கான எந்த
முயற்சியையும் எடுக்கவில்லை. நான் சந்தித்த தமிழர்களே
படிப்பதற்கான விஷயங்களை நிறைய கொண்டிருந்தனர். புத்தனைவிட
ஆழமான பேரமைதியுடன் அவர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
என்னைப்
போல் புத்தனின் மீது ஆர்வம் கொண்ட
இன்னொரு நபர் புதியமாதவி. புத்த
தலத்திற்குப் போகவேண்டுமா என்று றஞ்சி கேட்டபோது
நாங்கள் இருவரும்தான் முதலில் 'இதுவரை வந்துவிட்டோம் அந்தத் ஸ்தலத்தையும் பார்த்துவிட்டுச் செல்லலாம்' என்றோம்.

அதனைத்
தொடர்ந்து எங்களை அங்குக் கூட்டிச்
செல்வதற்கு றஞ்சியும் யாழினியும் ஆட்டோ ஓட்டுனரிடம் பேசினார்கள்.
நாங்கள் அன்றைய நாளில் கடைசியாகப்
பார்த்த இடமும் அதுதான். அதற்கு
முன்பே நாங்கள் யாழ்ப்பாணம் வரும்போது
ஒரு புத்த விகாரை மேலோட்டமாக
வெளியிலிருந்து பார்த்துவிட்டுதான் வந்தோம். அந்தத் தலம் எங்க
நாட்டின் பத்துமலையிலுள்ள முருகர் சிலையை ஞாபகப்படுத்தியது. ஆம் அது மிகமிக வித்தியாசமான
புத்த கோயில். உட்பகுதியில் படுத்திருக்கும்
புத்தர் மிகவும் பிரமாண்டமானவர் என
றஞ்சி சொன்னார். ஆனால், உட்புகுந்து வெளியில்
வர நேரம் எடுக்கும் என்பதால்
நாங்கள் வெளியில் இருந்தவாறே பார்த்துவிட்டு வந்தோம்.
இந்த ஸ்தலத்தைக் கொஞ்சம் ஆசுவாசமாகப் பார்ப்பதற்கு
எங்களுக்கு நேரம் இருந்தது. அந்த
விகரைக்குச் செல்லும் போதே ‘தம்பகொலபடுன’ என்ற குறிப்புப் பலகை
வரவேற்கிறது. அது சிங்கள பெயர்
என்று இந்தத் தொடரை எழுதும்போதுதான்
தெரிந்துக்கொண்டேன். அதை ஜம்புகோணபட்டினம் என்று
தமிழர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். மாதகல் கிராமத்தின் ஒரு
பகுதியில் இந்த விகார் அமைந்துள்ளது.
இந்தத்
தலம் அமைந்ததற்கான காரணமே வெள்ளரச மரம்
தான். அதாவது, சங்கமித்தை என்ற
புத்த பிக்குனி, வெள்ளரச மரக்கன்றை,
ஒரு படகின் வழி அங்குக்
கொண்டுவர, அதைத் தேவானம் பியதிஸ்ஸ என்ற அரசன் பெற்றுக்
கொண்டதாகச் சொல்கிறார்கள். சங்கமித்தை ஒரு பெண் துறவி எனக் கூறப்படுகிறார். அந்த மரக்கன்று வழிபடும்
விடயமாக அங்கு வளர்ந்து நிற்கிறது. (அல்லது எங்கோ வளர்ந்ததை பிடுங்கி கொண்டுவந்து இங்கு நடப்பட்டிருக்களாம்) மேலும், அந்தக் காட்சிக்கான ஓவியங்கள்
வரையப்பட்டுள்ளதோடு, மாதிரி படகையும் நதியில்
மிதக்கவிட்டுள்ளார்கள். சில மாதிரி உருவச்சிலைகளும்
இருக்கின்றன. சுற்றிலும் கடல் சூழ, மத்தியில்
அமைந்திருக்கும் அந்த விகார், அவசரத்தில்
கட்டப்பட்டது போன்றுதான் இருக்கிறது. மரத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
எல்லாக்
குறிப்புகளும் சிங்களத்திலேயே இருந்தன. தமிழர்களுக்கும் புத்தனுக்கும் என்ன தொடர்பு என்று
சிங்கள அரசாங்கம் எண்ணிவிட்டதோ என்று எண்ண தோன்றியது
எனக்கு. ஆனால், விகாரின் உள்
புத்தன் சிலை இருக்கும் இடத்தில்
இந்து விக்கிரகங்களும் இருக்கின்றன. அதற்கான காரணம்தான் தெரியவில்லை.
நான் இந்தோனேசியா போனபோது, பார்த்த புத்த தளங்களும்,
புத்த சிலைகளும் இன்றுவரை மறக்க முடியாத முகங்களை
கொண்டவை. அந்தப் பெண்மையும் மென்மையும்
அந்த மண்ணுக்கே சொந்தமானவை.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எனது நண்பர் சொன்னார், நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த காலம் வரை இதுபோன்ற விகாரை மாதகலில் கேள்வி பட்டதே இல்லை எனவும் யாழ்ப்பாணத்தில் ஒரு விகாரும், நயினாதீவில் நாக விகாரும் மட்டுமே இருந்தது என்றார். இந்த விகாரை குறித்து எழுந்த சந்தேகத்திற்கு எல்லாம் அவரின் கூற்று பதில் சொல்லியது எனக்கு.
இந்தப் புத்த விகாரில் சுற்றி
இருக்கும் கடலைத் தவிர அத்தனையும்
போலியானவையாக அப்பட்டமாகத் தெரிவதை மறைக்க முடியவில்லை. நாங்கள் இந்த விகாரை
பார்த்து கொண்டிருந்த போது சில சிங்கள
புத்த பிக்குகள், சிங்கள பார்வையாளர்களுக்கு (சுற்றுலாப்
பயணிக்கு) விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அத்தனை அவசரமாக, எவ்வித
கனிவும் இல்லாத விளக்கம். முகத்தில்
ஒரு சாந்தமும் இல்லை, சிரிப்பும் இல்லை.
இப்படியான புத்த பிக்குகளை நான்
இலங்கையில்தான் பார்த்தேன்.
சூரியன்
மறையும் நேரம் நெருங்க அதன்
ஒளிக்கதிர் நதியில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது.
மனதை ஆசுவாசப்படுத்தும் விதமாக அதுமட்டுமே அந்த
விகாரில் நான் பெற்றேன்.
நாங்கள்
மறுநாள் காலையிலேயே கொழும்பு செல்ல முடிவெடுத்திருந்ததினால் விரைவில் வீட்டுக்குச்
செல்ல முடிவெடுத்தோம். விகாரைவிட்டு வெளியேறி நடக்கையில் சாலை ஓர வேப்பமரங்களில் வேப்பம்பூ அரும்பு விட்டிருந்தன. அதைக் கொஞ்சம் பிடிங்கியவாரே
சென்றோம். காவலுக்கு இருந்த சிங்கள ராணுவன்
ஒருவன் எங்களைப் பார்த்து புன்னைகைத்தான்.
ஆட்டோ ஓட்டுநரும் எங்களை
ஏற்றுவதற்குத் தயாராக இருந்தார். கிளம்பி வருகையில் அந்தச் சாலையின் முச்சந்தியில்
இருக்கும் ஒரு சிவன் சிலையைப்
பார்த்தேன். சினிவாவில் வரும் செட் போல
இருந்தது. அத்தனை கம்பீர சிலை.
ஆட்டோவை நிற்க சொல்லி ஒரு
புகைப்படம் எடுத்தேன். அந்தச் சிலையைப் பற்றிச்
சொல்வதற்கு வேறு இல்லை. என்
மௌனமே அதிகம் பேசிக்கொண்டிருந்தது.
எங்களின்
யாழ்ப்பாண இரவு, ஒரு மாபெரும்
இசை கச்சேரியோடு ஏற்பாடாகிக்கொண்டிருந்தது. மிக ரகசியமாக. அதுவும்
ஒடியல் கூழோடு.
பின்குறிப்பு:
சங்கமித்தை என்ற புத்த பிக்குனி, வெள்ளரச மரக்கன்றை, ஒரு படகின் வழி
அங்குக் கொண்டுவர, அதைத் தேவ நம்பிய தீசன் என்ற அரசன் பெற்றுக்
கொண்டதாகச் சொல்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். தோழர் முஸ்டின் அது குறித்து தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதாவது
திருத்தம்: தேவானம் பியதிஸ்ஸ என்றுதான் அந்த அரசனின் பெயர் வரவேண்டும். தேவ நம்பிய திஸ்ஸ என்று வர முடியாது. அது பிழை. தமிழில் சிலர் தேவ நம்பிய திஸ்ஸ என்று பழகிவிட்டார்கள். அதைக் கருத்திற் கொள்ளவும்.
தோழர் முஸ்டினுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.
யோகி ஒரு திருத்தமும் ஒரு சந்தேகமும் உண்டு.
பதிலளிநீக்குதிருத்தம்: தேவானம் பியதிஸ்ஸ என்றுதான் அந்த அரசனின் பெயர் வரவேண்டும். தேவ நம்பிய திஸ்ஸ என்று வர முடியாது. அது பிழை. தமிழில் சிலர் தேவ நம்பிய திஸ்ஸ என்று பழகிவிட்டார்கள். அதைக் கருத்திற் கொள்ளவும்.
சந்தகம்: அங்கு இருந்தது இந்தியச் சிலைகளா? அல்லது இந்துச் சிலைகளா? இந்தியச் சிலைக்கும் இந்துச் சிலைக்கும் நிறைய வேறுபாடு உண்டல்லவா அதுதான் சந்தேகம் தோன்றியது.
-நன்றி
-முஸ்டீன்-
தங்கள் கட்டுரையின் தறபோதைய பகுதிவரை ஒரே மூச்சில் படித்தேன். தமிழ் இலங்கையின் அழிவு நெஞ்சை பிழிகிறது . வயிற்றுக்காக கையேந்தி நிற்கும் ஆதரவற்றவர்களாக தமிழர்களை மாற்றிவிட்ட இலங்கையின் ஆதிக்க வெறியர்களை உலகம் என்று தண்டிக்குமோ தெரியவில்லை.
பதிலளிநீக்குதங்கள் கட்டுரையின் தறபோதைய பகுதிவரை ஒரே மூச்சில் படித்தேன். தமிழ் இலங்கையின் அழிவு நெஞ்சை பிழிகிறது . வயிற்றுக்காக கையேந்தி நிற்கும் ஆதரவற்றவர்களாக தமிழர்களை மாற்றிவிட்ட இலங்கையின் ஆதிக்க வெறியர்களை உலகம் என்று தண்டிக்குமோ தெரியவில்லை.
பதிலளிநீக்கு