புதன், 20 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 12

நல்லூர் கந்தசாமி கோயிள் உட்புறம்
சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 12


விஜயா அம்மா, எந்தத் தருணத்தையும் இழந்துவிடாமல் அனைத்தையும் தனது வீடியோ கேமராவில் பதிவு செய்தார். மனதளவில் எங்களுக்குள் ஓர் இறுக்கம் வந்து புகுந்துக்கொண்டது. ஆட்டோவில் ஏறுவதற்குத் திரும்பினோம். மீண்டும் அந்தக் கோயிலைக் கடந்தேன். சாலையோரம் ஒரு காவல் தெய்வமும் இருந்தது. எதிரே ஓர் அம்மா எதையோ விற்றுக் கொண்டிருந்தார்.

இந்தக் கோயிலுக்கு யாருமே வரமாட்டார்களா? மீண்டும் எனக்குள் கேள்வி எழுந்தது. யாராவது இன்னும் விளக்கேற்றிவிட்டுதான் போகக்கூடும். எனக்குத் தெரியும் மனிதன் சில சமயம் கடவுளைவிட அதிக நம்பிக்கை கொண்டவன்.

இந்தச் சிந்தனையோடு நாங்கள் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குப் புறப்பட்டோம். பொட்டலான வயல்காடுகளைத் தாண்டி, பட்டணத்தில் நுழைந்து கந்தசாமி கோயிலுக்கு முன் ஆட்டோ நின்றது. நீண்ட நேரம் பயணம் செய்த சோர்வு இருந்தது. ஆட்டோ நின்ற இடத்திற்கு அருகில் பெரிய ஆலமரம்போல் ஒரு மரம்.

வெளிபார்வையிலே கவரக்கூடிய வகையில் கோயில் கட்டப்பட்டிருந்தது. ஆட்டோவை விட்டு நாங்கள் இறங்கக்கூட இல்லை. ஆனால், நிறையப் பேர் ஆண்கள் பெண்கள் எனப் பிச்சைக்காகக் கையேந்திக் கொண்டிருந்தனர். உண்மையில் எனக்கு மிக மிகச் சங்கடமாக போனது. எவ்வளவு கொடுக்கிறோம் என்பது அவர்களுக்கு முக்கியமில்லை, ஏதாவது கொடுத்தாலே போதும் என நினைத்து கொடுக்கும்வரை பின் தொடர்ந்தனர். என்னிடம் சில சில்லரை நாணயங்கள் மட்டுமே இருந்தது. மற்றவை இரு பெரிய நோட்டுகள்.

சில்லரை நாணயங்களைக் கோயிலை விட்டுத் திரும்பும்போது யாருக்காவது கொடுக்கலாம் என்று கோயிலுக்குள் சென்றேன். பெரிய வேலைப்பாடுகள் என்று எதுவும் இல்லை. மலேசியாவில் அதைவிடப் பிரமாண்ட முருகம் கோயில்கள் நிறைய உள்ளன. சுவரில் வரையப்பட்ட முருகன் சித்திரங்களும் கவரக்கூடிய வகையில் இல்லை. முருகன் அழகன் என்று கூறுவார்கள். அந்தக் கோயிலின் சித்திரங்களில் முருகனை பெண்போல் வரைந்திருந்தனர். கிட்டதட்ட எல்லா ஓவியங்களும் அப்படிதான் இருந்தன. ஓவியனின் துணைவி இல்லையா நான்? நிறைகளைக் காட்டிலும் குறைகளே கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன.

கோயிலின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்பது சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது. கேமரா புகைப்படத்தைப் பார்த்துதான் விவரத்தைத் தெரிந்துக்கொண்டோம். தமிழர்கள் வரும் கோயிலுக்குச் சிங்கள எழுத்தில் எச்சரிக்கை பலகையா என்ற கடுப்பு வந்தது. தொடர்ந்து தங்க முலாம் பூசிய தூண்கள் அழகாக இருந்தாலும், ஏனோ எனக்கு இரசிக்கக்கூடியதாக இல்லை. அந்தக் கோயில் என்னைக் கவராததற்கான காரணமே விளங்கவில்லை. உள்புறம் படிகள் வைத்துக் குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் எந்த விடயமும் கவரக்கூடியதாக இல்லை. கோயில் நடையைப் பார்த்தேன். நிறையப் பேர் வணங்கிகொண்டிருந்தனர்.

அபிஷேகம் நடந்துக்கொண்டிருந்தது. நடைக்கு நேராகப் பார்த்தேன்.. சிலர் வாசலுக்கு வெளியிலேயே நின்று பக்தியோடு வணங்கிவிட்டு போயினர். அதுவரை வந்தவர்களுக்கு உள்ளே வந்து வணங்கிப் போவதற்கு என்ன என்று தோன்றியது. பிறகு, அவர்களுக்கு என்ன அவசரமோ என்று நினைத்துக்கொண்டேன். கோயிலைப் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விடயம் பளிச்சிட்டது. ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்கம் இருப்பதாக அறிந்தேன். அதனால்தான், சிலர் உள்ளே வருவது இல்லை எனவும், அப்படியே வந்தாலும் சில குறிப்பிட்ட சலுகைகள் மறுக்கப்படுகிறது எனவும் பல்லக்குத் தூக்குவது, ரதம் இழுப்பது போன்ற விடயங்களில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டது.

ஆனால், இது ஒரு வாய்வழி தகவல்தான். ஒருநாள் பார்வையாளினியாக வந்து போகும் என்னைப் போன்றவர்கள் இந்தத் தகவலை வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது மட்டுமல்ல எந்தக் கருத்தையும் கூற கூடாது என்பதை அறியாதவள் அல்ல. அதனால், இந்த விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால், இந்தக் கோயிலின் மேல் எனக்கு ஒரு விமர்சனம்தான் இருக்கிறது. அதாவது ஈழப்போரில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தபோதும், தங்கள் உடமைகளை இழந்தபோதும், அங்கவீனர்களாக ஆன போதும், பொருளாதாரத்திற்கே கஷ்டபட்ட போதும் அவர்களுக்கு உதவாத பணம் இந்தக் கோயிலைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அப்படி என்ன அவ்வளவு பெரிய தேவை இந்தக் கோயிலுக்கு?

தமிழர்களின் அடையாளத்தைக் காட்டத்தான் இந்தக் கோயில் என்றால் அதுவே எனக்குப் பெரிய முரணாக இருக்கிறது. குறைந்தபட்சம் அந்தக் கோயிலுக்கு வெளியில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்காவது ஏதாவது பொருளாதார ஏற்பாட்டினை செய்து கொடுத்திருக்கலாம். கோயில் மணி மின்னியலில் அடித்துக் கொண்டிருந்தது. எனக்கும் மண்டையில் மணியடித்தது. கோயில் நடையைச் சாத்தும் நேரம் நெருங்கவே அர்ச்சகர் எல்லாரையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். நாங்கள் வெளியில் வந்தோம். மீண்டும் பிச்சைக்காரர்கள் ஆர்ப்பரித்தனர். றஞ்சி சில நோட்டுகளை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், எனது கருத்தில் பலருக்கு உடன்பாடு இருந்திருக்காது என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. தொடர்ந்து நாங்கள் யாழ் நூல்நிலையம் போனோம். அங்கு இராணுவத்தினர்… (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக