புதன், 26 நவம்பர், 2014

ஏன் எனக்கு ஆண்களை பிடிக்காது



எனது inbox-க்கு வரும் சிலர் கேட்கும் கேள்வி, ஏன் உங்களுக்கு ஆண்களை பிடிக்கவில்லை என்பதுதான்.  நான் ஆண்களை பிடிக்காது என்று சொன்னதே இல்லையே. மேலும், ஆண்கள் இல்லாத வாழ்கையை எப்படி வாழ்வது? எனது அப்பா, சகோதரன், நண்பன், காதலன், துணைவன், தெரிந்தவன் என நீள்கிறது நான் விரும்பும்  ஆணின் பட்டியல்.

 10 ஆண்களிடம் வேலை செய்து விடலாம், 10 பெண்கள் இருக்கும் இடத்தில் வேலை செய்ய முடியாது என்று பொதுவாக சொல்வார்கள். அது உண்மைதான் என்று நானும் ஒப்புக்கொள்வேன். பெண்களுக்கே அவர்களின் பலமும் பலவீனமும் தெரியாத போது இது போன்ற விமர்சனங்களை ஏற்றுகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

எனது இந்த 34 வயதுக்குள் பலதரப்பட்ட ஆண்களை சந்தித்திருக்கிறேன். முதலாளித்துவ ஆண்கள், காமுகன்கள், நட்புக்கு இலக்கனமான நண்பர்கள், காதலன்கள், காதலிப்பது போல் ஏமாற்றிய ஆண்கள், கொஞ்ச நாள் காதலாக, பின் காரணமே சொல்லாமல் முகத்தை திருப்பிய ஆண்கள், காதலையும்-காமத்தையும் அடக்கி வைத்துக்கொண்டு ஒன்றுமே இல்லாதது போல் நடித்த ஆண்கள், கூட பிறக்காத சகோதரர்கள், ஆலோசகர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கும் அதிகமான ஆண்களிடம் நான் அறிமுகமாகி இருக்கிறேன். எனக்கும் அவர்கள் தங்கள் உண்மை அடையாளத்தை சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும்   காட்டியுள்ளனர்.

 ஒரே ஒரு காதல் தோல்வியைத் தவிர நான் எந்த ஆணிடமும் மனவருத்தம் அடைந்ததில்லை. அதே வேளையில் எந்த ஆண்களும் என்னை காயம் படுத்தும் அளவுக்கு இடத்தையும் நான் கொடுத்ததில்லை. நான் ஆண்களிடத்தில் கேட்கும் அல்லது வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்.

பெண்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்களை மரியாதையாக நடத்துங்கள். அவர்களின் சுதந்திரத்தை தட்டி பறிக்காதீர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்களே முடிவெடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்? உங்களுக்கு ஒரு நியாயத்தையும், பெண்களுக்கு ஒரு நியாயத்தையும் கற்பிக்காதீர்கள்.  பெண்களுக்கான முடிவெடுக்கும் அதிகாரத்தையும் நலிந்தவர்களிடத்தில் காட்டும் வீரத்தையும் உங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை. அவளின் அனுமதியின்றி அவளை நெறுங்க வேண்டாம். அவ்வளவே.

உண்மையில் நான் இந்தக் கோரிக்கைகளை வைக்கவில்லை. காலகாலமாக பெண் போராளிகளின் முன்வைப்பது இதுதான். கொடுமை என்னவென்றால் இன்னும் அதையே கேட்டுகொண்டிருப்பதுதான். தொடர்ந்து குரல் எழுப்புவதால்தான் பெண்கள் தங்களுக்கான குரல் வரும் திசையைப் பார்த்து கையை நீட்டுகிறார்கள்.  பெண்களுக்கு ரௌத்திரம் தெரிய வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்களுக்கு தைரியம் வேண்டும். முக அழகு ஒரு பெண்ணுக்கு அழகல்ல. ஒரு பெண்ணின் அழகு அவளது பேச்சில் இருக்கிறது. அவளது தைரியத்தில் உள்ளது. அவளது தன்னம்பிக்கையில் உள்ளது.

ஓர்  ஆண் அவளது காப்பாளன் அல்ல.
ஆண் அவளது தோழன்.
பெண் அவனது தோழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக