சனி, 1 நவம்பர், 2014

அந்த நாளில்

நான் தனித்திருந்த அந்த நாளில்
மழை பெய்து கொண்டிருந்தது
நான் ரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்
மழையோடு விளையாடிக்கொண்டிருந்தேன்
மழையில் குளித்துக்கொண்டிருந்தேன்
மழை என்னை தழுவிக்கொண்டிருந்தது
நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துக்கொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருக்கிறேன்

-யோகி
(2010, மௌனம் )


எனது இந்த கவிதைக்கு கெடா மாநில எழுத்தாளர் நண்பர் கே.பாலமுருகன் அவரின்   இணைய தளத்தில் எழுதிய விமர்சனம்

நவீன கவிதைகளில் இன்றளவும் அதிகமாகப் புனையப்படும் பேசுபொருளாக தனிமை இருக்கிறது. எத்துனைமுறை உதறினாலும் அறுந்து விழ முடியாத ஓர் உறுப்பு போல ஆகிவிட்டது தனிமை. அதை விழுங்கிக் கொள்வதன் மூலமே உளப்போராட்டங்களைக் கரைக்க முடியும் என்கிற அளவிற்கான சமரசங்கள் தேவைப்படுகின்றன. தனிமையைப் பற்றி மிக அருமையாகச் சொல்லக்கூடிய கவிதைகளில் தனிமை அகத்திற்கு வெளியே வைத்துப் பேசப்பட்டதில்லை, தனிமையின் கொடூரத்தை, இன்பத்தை, ஏதுமற்ற உணர்வை அகத்தின் குறியீடாகத்தான் பேசப்பட்டிருக்கின்றன.

யோகியின் இந்தக் கவிதை தனிமையைபற்றிதாக இருந்தாலும், அது தனிமையை உடைத்துக் கொண்டு மேலும் ஒரு தனிமைக்குள் அடைப்படுவதை பற்றி நம்மிடம் சொல்கிறது. கவிதையின் முதலிலேயே, ‘நான் தனித்திருந்த நாளில்என்பது மிகத் தெளிவாக இது தனிமையைக் குறிக்கிறது எனத் தெரிந்துகொண்டாலும் கவிதையின் இறுதியில் தனிமைக்கான அடுத்த வளர்ச்சி மையப்பாத்திரத்தை மேலும் தனிமைப்படுத்துவதையும் புரிந்துகொள்ள வேண்டும். (இதற்கு மாறாகவும் புரிந்துகொள்ளலாம்).

நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி


முதலில் அவள் உணர்ந்த தனிமையில் ஒரு மழை இருந்தது, அதனுடன் அவள் விளையாடினாள், அந்த மழை தன்னைத் தழுவுவதாகக் கற்பித்துக் கொண்டாள். ஆனால் மற்றொருநாளில் அதே மழை பெய்து கொண்டிருக்கிறது, அவள்  தன்னைத் தனிமையின் தனிமைக்குள் தனிமைப்படுத்திக் கொள்கிறாள்.
யோகி தனிமைக்கென சில குறிப்புகளைக் கவிதையில் தருகிறார். இது தனிமையின் அடர்த்தியைக் காட்டக்கூடியது.


 மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்”-யோகி

மழையோடு பேச என்ன இருக்கிறது? தன்னை ஆக்கிரமிக்கும் தனிமையிலிருந்து தப்பிக்க முயலும் செயலாக இதைக் கருதலாம் போல. அல்லது தனிமையைத் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட பின், தனிமை பழகிவிடுகிறது. அதிலிருந்து மீள இயலாமல் அதற்குள்ளே தொலைந்துவிடக்கூடிய குறிப்புகளாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். தனக்குப் பிடிக்காததையும் பிடித்தது போல காட்டிக் கொள்ள எத்துனை வீரியமான நாடகத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது? இரசனை, ஆர்வம், சுதந்திரம் எனத் தனிமைக்கு ஆயிரம் கற்பிதங்களை உருவாக்கிப் பார்த்தும் கடைசியில் அகம் தோற்று தனிமை தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.

நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி


இது கொஞ்சம் சவால்தான். எத்துனைத் தூரம் தனிமை தன்னை வலுப்படுத்தும் என்பதற்கான ஆதாரம். அதை மேலோட்டமாகச் சிக்கனமாக மட்டுமே யோகி காட்டியிருக்கிறார். இதற்கு மேலும் இந்தத் தனிமையை உணர்த்துவதற்குச் சொல் சிக்கனத்தை ஏற்படுத்த முடியுமா? நகுலன் இதைச் செய்திருக்கிறார்.
 
எனக்கு யாரும் இல்லை
நான்கூட” – நகுலன்

இதுவும் மிகக் கொடூரமான தனிமையின் வலியையும் நிதர்சனத்தையும் சொல்லிவிட்டு மௌனமாக நகரும் கவிதைத்தான். யோகி மேலும் முயன்றால் இன்னும் நல்ல கவிதைகளைத் தர முடியும். அதற்கான மொழி அவரிடம் உள்ளது. இதுதான் தனிமையைப் பற்றிய பேசிய மலேசியாவின் சிறந்த கவிதை என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, மேலும் இந்தக் கவிதைத்தான் யோகியின் கவிதை உச்சம் எனவும் நான் அடையாளப்படுத்தவில்லை. இது யோகியின் ஒரு கவிதை பற்றிய பார்வை மட்டுமே.

நம் அகத்தின் சலனங்களை மேலும் வலுவாகக் கலைத்தன்மையுடன் சொல்வதற்குக் கவித்துவமான பாய்ச்சல் கொண்ட மொழிநடை தேவைப்படுகிறது என நம்புகிறேன். நவீன கவிதைகள் ஏன் புரிவதில்லை என்கிற கேள்விகளுக்கு என்னிடமிருந்து ஒரே பதில்தான், இவை யாவும் முதலாம் ஆண்டு கட்டுரைகள் அல்ல, கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் மூலை உழைப்பும் இருந்தால், கட்டாயம் எந்தப் பிரதியையும் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி பாலமுருகன்.
http://bala-balamurugan.blogspot.com/2010/10/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக